(1)

sirthar thozar

சற்றொப்ப முப்பதாண்டு கழிந்து விட்டது. அம்பத்தூரில் தமிழ்நாட்டின் முதல் தாய்த் தமிழ்த் தொடக்கப் பள்ளியை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தோம். பள்ளி தொடங்குவத்ற்குப் பணம் வேண்டுமே? ஆளுக்கு ஒரு ரூபாய் தாருங்கள்! என்று நிதிதிரட்டத் திட்டமிட்டோம்.

ஓவியர் (ட்ராட்ஸ்கி) மருது வரைந்து கொடுத்த தாயும் குழந்தையும் படம் அச்சிட்ட ஒரு ரூபாய் வில்லைகள் அச்சிட்டு ஆளுக்கு ஒரு ரூபாய் கணக்கில் தண்டிக் கொண்டிருந்தோம். அந்த வகையில் கல்பாக்கம் அணுமின் நிலையக் குடியிருப்பிலிருந்து “நேரில் வாருங்கள்! எங்களுக்குக் கொஞ்சம் விளக்கம் தேவைபப்டுகிறது” என்று ஒரு நாள் அழைப்பு வந்தது.

அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டின் விசாலமான கூடத்தில் பாய்விரித்து உட்கார்ந்திருந்தோம். என்னைச் சுற்றி நால்வர் உட்கார்ந்திருந்தனர். அவர்கள் தங்களை ’பிளிங்க்ஸ்’ (BLINKS) என அழைத்துக் கொண்டனர். “ஏதாவது செய்ய விரும்புகிறோம், ஆனால் என்ன செய்வதென்று முடிவுக்கு வர முடியாமல் முழித்துக் கொண்டிருக்கிறோம்”  என்று விளக்கமும் அளித்தனர்.

அந்த நால்வரும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அறிவியலர்களாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர். நடராஜன், கோபால், கலாவதி, சிறிதர் என்ற அந்த நால்வரில் ஒருவராகத்தான் (அண்மையில் மறைந்த) சிறிதர் எனக்கு முதலில் அறிமுகமானார்.

விடிய விடிய உரையாடல் நீண்டது. தமிழ்வழிக் கல்வி என்ற ஒன்றைச் சுற்றி அடுக்கடுக்கான வினாக்கள். எல்லா வினாக்களுக்கும் பொறுமையாக விடை சொல்லிக் கொண்டிருந்தேன்.

ஆங்கிலத்தின் தேவை அல்லது தேவையின்மை குறித்து? அறிவியலுக்கும் தமிழ் அல்லது ஆங்கிலத்துக்குமான தொடர்பு குறித்து? சமூக நீதிக்கும் தாய்மொழிக் கல்விக்குமான இடையுறவு குறித்து? அரசு ஆதரவில்லாமல் அலல்து செல்வந்தர்கள் துணையில்லாமல் தமிழ்வழிக் கல்விக்கு ம்க்கள் ஆதரவு கிடைக்குமா? தமிழ்நாட்டில் வாழும் மொழிவழிச் சிறுபான்மையினரும் தாய்மொழியில் கல்வி பெற வாய்ப்புண்டா?

உரையாடலின் முடிவில் அவர்கள் தாய்த் தமிழ்க் கல்வியின் தெளிந்த ஆதரவாளர்களாக வென்றெடுக்கப்பட்டிருந்தனர். கடைசியாக ஒரு கேள்வி –நால்வரில் ஒருவர் கேட்டார்: மற்றவர்களும் ”அதானே?” என்று சேர்ந்து கொண்டனர்: “உங்கள் பள்ளியில் எந்தப் பெற்றோரும் தம் குழந்தைகளைச் சேர்க்க முன்வரா விட்டால்?”

”என் மகளை நான் முதல் மாணவியாகச் சேர்ப்பேன். கட்டணமில்லாக் கல்வி கொடுப்பேன். இலவசக் கல்வி என்பதால் எப்படியும் சில குழந்தைகளையாவது சேர்ப்பார்கள். நானே ஆசிரியராக வேலை பார்ப்பேன். இரவு நேரத்தில் அச்சகத்தில் பணி செய்தால் மாதம் ஆயிரம் வரை கிடைக்கும். கட்டட வாடகைக்கு அது போதும்.”

”இந்த விளக்கமே போதும்”என்று கூட்டத்தை முடித்து வைத்தனர். ”ஆளுக்கு ஒரு ரூபாய்” என்று சொல்ல முற்பட்டேன். ”திரட்டித் தருகிறோம், இப்போது முன்பணமாக இதை வைத்துக் கொள்ளுங்கள்” என்று நால்வர் சார்பில் ப்த்தாயிரம் கையில் கொடுத்தனர். தாய்த் தமிழ்க் கல்விப்பணிக்குக் கிடைத்த முதற்பெரும் நன்கொடை அதுவே!

எனக்குக் கல்பாக்கம் தொடர்பு அப்போதுதான் தொடங்கியது. பிற்காலத்தில் கல்பாக்கத்திலேயே ஒரு தாய்த் தமிழ்ப் பள்ளி தொடங்கப் பெற்றது.

நடராஜன் தோழர் அமரந்தாவின் துணைவராகி, கியூபா, காஸ்ட்ரோ, சே குவேரா என்று பயணப்படுகிறார். தோழர் கோபால் மா-லெ இயக்கத்துக்காக அயராது உழைக்கிறார்.

சிறிதரும் கலாவதியும் கல்பாக்கத்தைச் சுற்றியுள்ள சிற்றூர்களில் ஏழை எளிய ஒடுக்குண்ட குழந்தைகளின் கல்விக்காக ஒயாதுழைத்து வந்தனர். சாதி மறுத்து இருவரும் வாழ்க்கைத் துணைவர்களாக இணைந்த பின் அவர்கள் வீடு குழந்தைகளால் எப்போதும் நிறைந்திருக்கும்.

ஐம்பதுக்கு மேற்பட்ட குழந்தைகளை வீட்டிலேயே தங்க வைத்துப் படிக்க வைத்தனர்.  மனிதவுரிமைத் தளத்தில் முனைப்புடன் செயல்பட்டனர், சிறிதர் இறுதி வரை பியுசிஎல் அமைப்பில் ஈடுபாட்டுடன் உழைத்து வந்தார்.

இடையிடையே மனிதவுரிமை தொடர்பான நிகழ்வுகளில் சிறிதரையும் கலாவதியையும் சந்திப்பதுண்டு. உட்கார்ந்து பேச நேரமிருக்காது. ஓடிக் கொண்டே இருப்பார்கள். சிறிதரின் ஓட்டம் இப்படித் திடுமென ஓயும் என்று எதிர்பார்க்கவே இல்லை. 2021மே 15ஆம் நாள்சிறிதர் சிறுநீரகச் செயலிழப்பால் உயிர்துறந்தார் என்ற செய்தி வந்த போது அதிர்ச்சியாக இருந்தது.

தோழர் சிறிதர்! நீங்கள் தாய்த் தமிழ்க் கல்விக்கு முதல் நீர் ஊற்றியவர்களில் ஒருவர்! கல்பாக்கத்தை ஒட்டிய சிற்றூர்களில் நீங்களும் கலாவதியும் ஆற்றிய கல்விப் பணி அந்த இளந்தளிர்களின் மனத்தில் ஓயாத அலைகளாக மோதிக் கொண்டே இருக்கும். அவர்தம் உள்ளமே நீங்கள் துயில் கொண்ட இல்லமாக விளங்கும். இன்னும் நிறையப் பணிகள் இருப்பதை மறந்து மீளா ஓய்வு கொண்டு விட்டீர்களே, இது நியாயமா?

செவ்வணக்கம் தோழர் சிறிதர்!

                                                            ++++++++++++++++++++++++++++++++++++++++++++++

(2)

மார்க்சியப் பார்வையில் தமிழ்த் தேசப் புரட்சியின் கருத்தியல் முன்னோடி - தோழர் சத்தியமங்கலம் நாகராசன்!

அரைநூற்றாண்டுக்கு மேலாயிற்று என்றாலும் பசுமை மாறாத நினைவுகள்: காவிரிக் கரையோரம்ஆடுதுறை அருகே பசிய வயல் வெளிகளுக்கும் வாழைத் தோப்புகளுக்கும் நடுவில் தொட்டில் கட்டியாடும் தியாகராஜபுரம் என்றொரு சிற்றூர். அந்த ஊரில்தான் ஒரு சுற்றுக் கட்டு வீட்டின் நடுக் கூடத்தில் சிபிஐ (மா-லெ) தமிழக முதல் மாநாடு வெகு கமுக்கமாக நடைபெற்றது.

மாநாடு என்றாலே பெருங்கூட்டங்களைப் பார்த்துப் பழகிய எனக்கு 50க்கும் குறைவானவர்கள் கூடிப் பேசும் மாநாடு என்பதே அதிசயமாகத்தான் இருந்தது. இது பிரதிநிதிகள் மாநாடு எனப்பட்டது, நான் பிரதிநிதி அல்ல என்றாலும் சற்று முன்னர்தான் படிப்பும் குடும்பமும் துறந்து புரட்சி இயக்கத்துக்கு வந்தவன் என்ற முறையில் என்னையும் கலந்து கொள்ள அனுமதித்திருந்தார்கள்.

அந்த ஊர் புலவர் எனப்பட்ட தோழர் கலியபெருமாளுக்கு உறவினர்கள் நிறைந்த ஊர் என்பதால்தான் மாநாடு அங்கு நடைபெற்றது. புலவரின் துணைவியார் அம்மா வாலாம்பாளும் பெரியம்மா அனந்தநாயகியும் மாநாட்டுக்கு வந்தவர்கள் அனைவருக்கும் உணவு படைத்து விரும்தோம்பினார்கள். வாழை இலையில் வாழைக் காய், வாழைப் பூ, வாழைத் தண்டு என்று எல்லாமே வாழை மயம்!

மாநாட்டை வழிநடத்திய இருவர் தோழர்கள் ஏஎம்கே (கோதண்டராமன்), எல்ஏ (அப்பு). மாநிலக் குழு உறுப்பினர்கள் ஆர்எம் (ஆர். மாணிக்கம்), பிவிஎஸ் (பிவி சீனிவாசன் ஆகியோரும் இருந்தனர். புதிய தலைமுறை ஏட்டில் (எனக்குப் பிடித்த வெண்மணிக் கவிதை உட்பட) நெருப்புக் கவிதைகள் எழுதிய புலவர் ஆதி அவர்களை (இராசியண்ணன்) அங்குதான் முதலில் கண்டேன்.

நெல்லித்துறை வழக்கில் அவரைப் பிடித்துப் போய் காவல்துறை செய்த சித்திரவதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். தலைமறைவாக இருந்த மூத்த தோழர்கள் சிலரால் மாநாட்டுக்கு வர முடியவில்லை என்று அறிவிக்கப்பட்டது.

மாநாட்டில் தோழர் ஏஎம்கே சில அறிக்கைகளை முன்வைத்து விளக்கமளித்துக் கொண்டிருந்தார். அவற்றுள் ஒன்று தோழர் சத்தியமங்கலம் எஸ்.என். நாகராசனின் நிலைப்பாடு பற்றியது. இந்தியக் கட்சி கூடாது, தமிழ்நாட்டுக்குக் கட்சி அமைக்க வேண்டும் என்கிறார், இது பிரிவினைவாதம், புரட்சிக்கு எதிரனது என்று தோழர் ஏஎம்கே கூறியதை மாநாடு ஏற்றுக் கொண்டது.

எனக்கு அவ்வளவாக விளங்கா விட்டாலும் கூர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். தோழர் எல். அப்பு அழித்தொழிப்பின் தேவை பற்றி எடுத்துரைத்தார். எனக்கும் அதுதான் அவசரமாகப் பட்டது.

எஸ் என் என் கட்சியில் சேர்க்கபப்டவே இல்லை, அல்லது கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டார் என்றாலும் எஸ்.என்.என் என்ற பெயர் மட்டும் மனத்தில் பதிந்து விட்டது. இடையிடையே தோழர்களுக்குள்ளான உரையாடலில் அவர் பெயர் இடம்பெறும். ஆனால் அவரது நிலைப்பாடு பற்றி விரிவாக எதுவும் தெரிந்து கொள்ள முடியவில்லை. அவர் பேசுவது புரட்சியல்ல, பிரிவினைவாதம் எனப்பட்டது அவ்வளவுதான்!

1973ஆம் ஆண்டு சூலை முதல் நாள் தொடங்கி திருச்சிராப்பள்ளி மத்தியச் சிறையில் தூக்குக் கொட்டடிகளில் ஒரு கருத்துப் போராட்டம் (சிமிழுக்குள் ஒரு புயல்) வெடித்த போது இந்தியப் புரட்சிக்கும் சீனப் புரட்சிக்குமான அடிப்படை வேறுபாடுகள் பற்றிய விவாதம் நடைபெற்றது. சீனத்தின் பாதை எமது பாதை என்ற சாரு மசூம்தாரின் முழக்கம் பிழை என்று நான் வாதிட்டேன். இந்தியாவின் தேசிய இனப் பன்மையைக் கருத்தில் கொள்ளாமல் புரட்சி வெற்றி பெறாது என்றேன்.

இந்த விவாதத்துக்கிடையே தியாகராஜபுரம் மாநாட்டில் மறுதலிக்கப்பட்ட எஸ்என் பார்வையை நினைத்துப் பார்க்க வேண்டியதாயிற்று. எம்-எல் நிலைப்பாடுகள் அடிப்படையிலேயே தவறானவை என்ற முடிவுக்கு நானும் தோழர்களும் வந்தோம். சிபிஎம் கட்சியில் குறிப்பாக ஈழம் தொடர்பாகவும் பொதுவாகத் தேசிய இனச் சிக்கல் தொடர்பாகவும் விவாதங்கள் வந்த போது மீண்டும் எஸ்என் நினைவுக்கு வந்தார்.

1985 நவம்பரில் சிறையிலிருந்து விடுதலையாகி வெளிவந்த பின் எஸ்என்-ஐப் பார்க்க ஆவலாக இருந்தேன். சி பி எம்-இலிருந்து வெளியேறிய தோழர்கள் பெ. மணியரசன், கி. வெங்கட்ராமன் ஆகியோரிடம் எஸ்என் பற்றிச் சொன்னேன். அவரது அந்தப் புகழ்பெற்ற அறிக்கையும்கிடைத்து அவர்களோடு பகிர்ந்து கொண்டேன். அது தமிழ்நாடு கம்யூனிஸ்டுக் கட்சிக்கான அறிக்கை. சுயநிர்ணய உரிமையை வலியுறுத்துவதாக இருந்தது.  

ஒருமுறை வங்காளத்திலிருந்து இரு தோழர்கள் எஸ்என்-ஐப் பார்க்க வந்தார்களாம்! அவர்களை உள்ளூர் உழவர்களிடம் பேசச் சொல்லி அது முடியாமல் போன போது, இதற்காகத்தான் நாம் சேர்ந்து புரட்சி செய்ய முடியாது என்கிறேன் என்று எஸ்என் விளக்கமளித்தாராம்.

1990வாக்கில் கல்பாக்கத்தில்தான் தோழர் நடராஜன் இல்லத்தில் எஸ்என்-ஐநேரில் சந்தித்தேன். ஓர் இரவு முழுக்க அவரோடு பேசிக் கொண்டிருந்தேன். பெரும்பாலும் அவர் பேச நான் கேட்டுக் கொண்டிருந்தேன் என்பதே உண்மை. இறுதியில் நான் அவரிடம் கேட்டேன்:

:”இந்தக் கருத்துகளுக்காக நீங்கள் போராடியிருக்க வேண்டுமல்லவா?”

”போராடத்தான் செய்தேன். சிபிஎம் கட்சியிலேயேபோராடியிருக்கிறேன்.”

”நீங்கள் பி.ஆர். உடன் வாதிட்டதாகவே சொல்வார்க்ள். ஆனால் எம் எல் கட்சியில் என்ன போராட்டம் செய்தீர்கள்? எங்களுக்கெல்லாம் உங்கள் நிலைப்பாடுகள் தெரியாமலே போய் விட்டனவே?”

”உண்மைதான். நான் என்ன சொன்னாலும் இந்தப் பார்ப்பான் இப்படித்தான் பேசுவான் என்று சொல்லி விடுவார்கள்.”

”இதெல்லாம் ஒரு காரணமா? யார் என்ன சொன்னால் என்ன?”

”இன்னும் முக்கியமான ஒரு காரணம் உண்டு.”

”சொல்லுங்க.”

”அவனவன் உயிரைக் கொடுத்துப் போராடிக்கிட்டிருக்கும் போது குறை சொல்லிப் பேசறது கஷ்டமா இருந்துச்சு.”

”போகட்டும். இப்பயாவது வெளிப்படையா பேசுங்க.”

அமைப்பாகச் செயல்படுவது அவருக்கு மிகவும் கடினம் என்பதைத் தெரிந்து கொண்டேன்நிறைய எழுதுவார். ஓர் அஞ்சலட்டையில் நுணுக்கி நுணுக்கி ஒரு கட்டுரையே எழுதிவிடுவார். பேசினால் பேசிக் கொண்டே இருப்பார்.

தோழர்கள் மருதுபாண்டியன், கோவை ஞானி, பொன் சந்திரன், குறிஞ்சி, அறிவன் போன்ற தோழர்கள் அவருடன் நெருங்கிப் பழகியவர்கள். இவர்கள் எனக்கும் நெருக்கமானவர்கள் என்பதால் அவர் பற்றிய செய்திகள் எனக்கு வந்து கொண்டே இருக்கும். சில ஆண்டு முன்பு கோவையில் அவரது எழுத்துகள் தொடர்பான் ஒரு ஆய்வரங்கில் நானும் பேசினேன்.

சென்னையில் ததேவிஇ அலுவலகத்தில் ஒரு முழு நாள் அவரோடு தோழர்கள் கலந்துரையாட ஏற்பாடு செய்தோம். மகிழ்ந்து போனார்.நிறைய அவரிடமிருந்து கற்க வேண்டியிருப்பினும் உரையாடி ஒரு முடிவுக்கு வருவது கடினம், வயதும் கூட காரணமாய் இருக்கலாம். முதுமை என்பது இரண்டாம் குழந்தைமைஎன்று சொல்லி அவரை நேசிக்கத் தெரிந்து கொண்டேன்.

முதிர்பெரும் வயதில் மகுடை (கொரோனா) நோய்த் தொற்றால் அவர் மறைந்த போது சோசலிச மையத்துடன் இணைந்து தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் சார்பில் இணைய வழி நினைவேந்தலில் தமிழ்நாட்டையும் கேரளத்தையும் சேர்ந்த மூத்த தோழர்களை ஒன்றுகூட்டி அவருக்குச் செவ்வணக்கம் செலுத்தியது ஆறுதலும் நிறைவும் அளித்தது.

செவ்வணக்கம் தோழர் சத்தியமங்கலம் நாகராசன்!

- செங்காட்டான்

Pin It