வெளிநாட்டவர்களுக்கான சட்டம் 1946 மற்றும் தமிழ்நாடு பொது நலவாழ்வுச் சட்டம் 1939 ஆகியவற்றின் கீழ், எத்தியோப்பியா, பிரான்சு, பெல்ஜியம், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா மற்றும் பல ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளைச் சார்ந்த 12 மகளிர் உள்ளிட்ட  129 தப்லீக் ஜமாத் அமைப்பினர்,  கடவுச்சீட்டு அத்துமீறல் மற்றும் கொரோனா நோய் பரப்புதல் ஆகிய குற்றச் சாட்டுகளின் அடிப்படையில்,  2020  மார்ச்சு மாத இறுதியிலும், ஏப்ரல் முதல் வாரத்திலும் கைது செய்யப்பட்டனர். தமிழகத்தின் 15 காவல் நிலையங்களிலிருந்து பரவலாகப்  பெறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் தமிழ்நாடு காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட இவர்கள்,  சென்னை புழல் சிறை வளாகத்திலுள்ள சிறார்களுக்கான சிறையில் அடைக்கப் பட்டனர். வெளிநாட்டவர்களுக்கான தடுப்பு முகாம்கள், சிறை வளாகத்திற்குள் அமைந்திருக்கக் கூடாது என, 2019 சனவரி ஒன்பதாம் நாள் ஒன்றிய அரசால் அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பப்பட்ட "மாதிரி தடுப்புக்காவல் மையங்களுக்கான கையேடு "(Manual for Model Detention Centres / Holding Centres)  சுட்டுகிறது. எனவே இந்த வெளிநாட்டவர்கள்,  அடுத்ததாகச் சைதாப்பேட்டை கிளைச் சிறைச்சாலைக்கு மாற்றப் பட்டனர். ஆனால், அந்தச் சிறைச் சாலையும் வெளிநாட்டவர்களைத் தடுத்து வைக்கக் கூடிய சட்ட ஏற்புப் பெற்ற  சிறைச்சாலை அல்ல!
 
தப்லீக் ஜமாத் அமைப்பைச் சார்ந்த 98 வெளிநாட்டவர்களுக்குச் சொந்தப் பத்திரங்களின் அடிப்படையில் 12 வழக்குகளில்  சென்னை உயர்நீதி மன்றம் பிணை வழங்கியதோடு, அவர்கள் அனைவரும் மாநகர எல்லைக்குள்ளேயே தங்கி இருக்குமாறு அறிவுரை வழங்கியது. வெளிநாட்டைச் சார்ந்த இந்த முசுலீம்களை விடுதலை செய்து, நீதிமன்றத் தீர்ப்பை செவ்வனே நடைமுறைப்படுத்துவதற்கு மாறாக, கலக்கத்தையும், கவலையையும் உண்டாக்கத் தக்க வகையில், எட்டுப் பெண்கள் உள்ளிட்ட 98 பேரும் மீண்டும் புழல் சிறை வளாகத்திலுள்ள சிறார்களுக்கான சிறையிலேயே அடைக்கப் பட்டனர். 
 
30 முதல் 40 பேர் மட்டுமே தங்கக் கூடிய சிறிய இடத்தில், இந்த 98 சிறையாளிகளும் மிக மிக மோசமான நிலையில் "சிறப்பு முகாம்" எனப்படும் இவ்விடத்தில் இறுக்கி அடைக்கப்பட்டனர்.
 
ஒன்றிய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி, தடுப்புக் காவலில் உள்ளவர்களுக்குத்  தனியே சமைக்கப்பட்ட உணவினை வழங்க வேண்டும். ஆனால், புழல் மையச்சிறையில் சமைக்கப்பட்ட எளியஉணவே  இப்பொழுது இவர்களுக்கும் அளிக்கப்பட்டது. தவிரவும், முறையான காற்றோட்டம், சுகாதாரம், சூரிய ஒளி, கழிப்பிடம் மற்றும் குடிநீர் வசதி  ஆகியன தடுப்புக்காவல் மையங்களில் கட்டாயம் இருக்க வேண்டும்.  ஆனால் இது குறித்துத் தமிழக அரசின் அணுகுமுறையில் மனித நேயமே காட்டப்படவில்லை என்றே தோன்றுகிறது. இந்தக் கோவிட் 19 கிருமித் தொற்று உள்ள நிலையில், 90 நாள்களுக்கும் மேலாக இச்சிறையாளிகள் அனைவரும் பொருத்தமற்ற சூழலில் அல்லலுற்று வருகின்றனர்.
 
இதற்கிடையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை,  எஞ்சியுள்ள 31 பேருக்கு சூன் 12 ஆம் நாளன்று பிணை வழங்கியது. மேலும் இவர்கள் கொரோனா தொற்று நோயைப் பரப்பினார்கள் என்பதற்கு ஆதாரம் ஏதும் இல்லை எனக் கூறி அனைத்து வழக்குகளிலிருந்தும் இவர்களை விடுவித்ததோடு, கடவுச் சீட்டு அத்துமீறல் வழக்கில் அவர்கள் போதிய தண்டனையை அனுபவித்து விட்டார்கள் என அறிவிக்கை செய்தது.
 
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக்கிளை சுட்டிக்காட்டியபடி இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பிரிவு 21 (வாழ்வதற்கான உரிமை) வெளிநாட்டவர் உள்ளிட்ட அனைவருக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கதாகும். எனவே, தப்லீக் ஜமாத்  பிரதிநிதிகள் அனைவரும் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் எனவும், சட்ட விரோதமான அவர்களது சிறையடைப்பு ஒரு முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும் எனவும் மக்கள் சிவில் உரிமைக் கழகம் ( பியூசிஎல் ) கோருகிறது.
 
தப்லீக் ஜமாத் உறுப்பினர்கள் 98 பேர் மீது நிலுவையிலுள்ள பிற வழக்குகள்,  மனிதநேய அடிப்படையில் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும். வெளிநாட்டவர்களாகிய இவர்கள், தத்தம் நாட்டிற்கு அனுப்பப்படும் வரை, மதுரை உயர் நீதிமன்றக் கிளை குறிப்பிட்டது போல்,  இவர்கள் அனைவரும் சென்னை வண்ணாரப் பேட்டையிலுள்ள ஜாமியா குவாஸ்மியா அரபிக் கல்லூரியில்  தங்க வைக்கப்பட வேண்டும்.
 
கண. குறிஞ்சி, மாநிலத் தலைவர்
க. சரவணன், மாநிலப் பொதுச் செயலாளர்
 
பி.கு: 01.07.2020 அன்று PUCL வெளியிட்ட அறிக்கையின் தமிழ் வடிவம் இது.
 
தமிழாக்கம்: கண. குறிஞ்சி
Pin It