கடன்பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்பார் கம்பர். தமிழ்நாட்டு மக்களாகிய நாம் எவ்வளவு கடன்பட்டுள்ளோம் தெரியுமா? மாநில அரசின் கடன் மட்டும் கிட்டத்தட்ட 6 இலட்சம் கோடியாம்! பொதுத்துறை நிறுவனங்கள் பட்டுள்ள கடனையும் சேர்த்தால் 9 இலட்சம் கோடி வருமாம்! அதாவது கைக்குழந்தை முதல் தொண்டு கிழம் வரை ஒவ்வொரு தமிழர் தலையிலும் கட்டப்பட்டுள்ள கடன் கிட்டத்தட்ட ஒன்றேகால் இலட்சம்!
இத்துடன் இந்திய அரசு பட்டுள்ள பெருங்கடன் 147 இலட்சம் கோடியையும் சேர்த்துக் கணக்கிட்டால் நாம் ஒவ்வொருவரும் கிட்டத்தட்ட 3 இலட்சம் ரூபாய் கடன்பட்டிருப்பதை உணரலாம். இந்திய ஆட்சியாளர்களும் தமிழ்நாட்டின் ஆட்சியாளர்களும் நம்மைக் கேட்காமலே நம்மை இந்த அளவுக்குக் கடனாளிகளாக்கிக் கலங்கி நிற்கச் செய்துள்ளார்கள்.
இதோ வரப்போகிறது சட்டப் பேரவைத் தேர்தல்! இதில் போட்டியிடும் கட்சிகள், கூட்டணிகள், வேட்பாளர்கள் யாராவது நம்மைக் கடன் எனும் படுகுழியிலிருந்து மீட்பதற்கு உருப்படியான வழி சொல்லியிருக்கின்றார்களா? இல்லை.
வாக்காளர்களுக்குக் கையூட்டுப் போல் இலவயங்களும் சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மயங்கினால் நம்மை மேலும் கடன் வலையில் சிக்க வைத்து அயலானுக்குக் கொத்தடிமைகளாக்கி விடுவார்கள்.
கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பல இலட்சம் மனித உயிர்களை நோய்க்கு இரையாக்கியது மட்டுமல்ல, அவசரகோலமான ஊரடங்கு விதித்து, இயல்பு வாழ்வை முடக்கிக் கோடிக்கணக்கான மக்களைச் சோறும் நீருமின்றி நீண்ட நெடுந்தொலைவு நடையாய் நடக்க விட்டுப் பட்டினிச் சாவுகளுக்கு வழி கோலியது நரேந்திர மோதி தலைமையிலான பாரதிய சனதா அரசு!
பெருந்தொற்று நெருக்கடியையும் கூட உழைக்கும் மக்களை மேலும் மேலும் ஓட்டாண்டிகளாக்கவும், அம்பானி, அதானி போன்ற பெருமுதலாளிகளை உலகப் பெரும்பணக்காரர்களாக வளர்த்து விடவும் பயன்படுத்திக் கொண்டது நரேந்திர மோதி தலமையிலான பாசக அரசு!
உழவை அழித்து உழவர்கள் வாழ்வைக் கெடுக்கும் புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டுவந்து, அவற்றை எதிர்த்து மாதக் கணக்கில் போராடி வரும் உழவர்களை அடக்குமுறையாலும் அலட்சியத்தாலும் ஒடுக்கி வருவது நரேந்திர மோதி தலைமையிலான பாசக அரசு!
சிறுகுறு தொழில்களைச் சிதைத்துத் தொழிலாளர் உரிமைகளைப் பறித்து, வறுமையைப் பெருக்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை வளர்த்து பாரதத்தையே பட்டினி தேசம் ஆக்கி வைத்திருப்பது நரேந்திர மோதி தலைமையிலான பாசக அரசு!
பணமதிப்பு நீக்கத்தால் மக்களையும், ஜிஎஸ்டி எனும் சரக்கு சேவை வரியால் மாநிலங்களையும் சூறையாடி, சேம வங்கி இருப்புகளை ஒட்டச் சுரண்டி நாட்டின் பொருளியலையே நெருக்கடிகளின் நெருப்பு வளையத்தில் நிறுத்தியிருப்பது நரேந்திர மோதி தலைமையிலான பாசக அரசு!
இத்துணை நெருக்கடிக்கிடையிலும் பிரான்சிலிருந்து போர் வானூர்திகள், அமெரிக்க வல்லரசிடமிருந்து படைக்கருவிகள் என்று ஆய்தக் கொள்முதல் செய்து காசைக் கரியாக்கிக் கொண்டிருப்பது நரேந்திர மோதி தலைமையிலான பாசக அரசு!
மோதி அரசின் ஆதரவோடு ஆர்எஸ்எஸ் பரிவார அமைப்புகள் இந்துத்துவத்தின் பேரால் இந்து மதவெறியை வளர்த்து வருகின்றன. மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னுக்கு நின்று செல்வங்கொழிப்பதும் அவர்களே! மாட்டிறைச்சி வைத்திருந்தார்கள் என்று சொல்லி ஏழை எளிய முசுலிம்களை அடித்துக் கொல்லும் ’பசுக் குண்டர்களும்’ அவர்களே!
ஜெய் சிறிராம்! ஜெய் அனுமான்! என்று கத்தும் படி வேற்று மதத்தவரைக் கட்டாயப்படுத்தி, மசூதிகளை இடித்து, தேவாலயங்களை உடைத்து, வகுப்புக் கலவரங்களைத் தூண்டிக் குருதிச்சேற்றில் அரசியல் நச்சுப் பயிர் வளர்ப்பதுதான் ஆர்எஸ்எஸ் - பாசகவுக்கு வாடிக்கை.
வெளிப்படையாகவே இசுலாமிய மக்களை விலக்கிவைக்கும் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கும் தேசிய மக்கள்தொகைப் பதிவேட்டுக்கும் நாடுதழுவிய எதிர்ப்பு எழுந்தது. சிறுபான்மைச் சமுதாயங்களோடு குடியாட்சிய ஆற்றல்களும் இணைந்து போராடிய போதும் எல்லா வகையான சூழ்ச்சிகளையும் அடக்குமுறைகளையும் மோதி-அமித்ஷா வகையறா கையாளக் கண்டோம்.
மலைகளைப் பிளந்தும் காடுகளை அழித்தும் பழங்குடி மக்களை விரட்டியடித்தும் சுரங்கம் வெட்டி இயற்கை வளங்களைக் கொள்ளையிடப் பன்னாட்டுப் பெருங்குழுமங்களின் சுரண்டலுக்கு வழியமைத்துக் கொடுப்பதைத்தான் வளர்ச்சி என்கிறது பாசக.
மக்கள் நலன் குறித்தோ சுற்றுச் சூழல் நலன் குறித்தோ கொஞ்சங்கூட அக்கறை இல்லாமல் அணுமின் நிலையங்கள் - அனல்மின் நிலையங்கள் – துறைமுகங்கள் – பேரணைகள் – அனைத்தும் மென்மேலும் தனியார் துறையில் அமைத்துக் கொண்டே போகும் அழிவுக் கொள்கையால் தமிழ்நாடு உட்பட இந்தியத் துணைக்கண்டமே பாழாகிக் கொண்டிருக்கிறது.
காப்பீட்டுத் துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட முகன்மைத் துறைகள் பலவும் விரைந்து தனியார் மயமாக்கப்படுகின்றன. இடைத்தட்டு மக்களின் சேமிப்புகள் யாவும் பறிக்கப்பட்டு பெருமுதலாளிகளின் முதல்-திரட்டலுக்குத் தீனியாக்கப்படுகின்றன.
அனைவர்க்கும் கல்வி என்ற கொள்கையைக் கைகழுவி விட்டு பெருங்குழுமத் தேவைகளுக்கு ஏற்பவும் சமூகநீதிக்குப் புறம்பாகவும் கல்விமுறையை மாற்றியமைக்கும் முயற்சிதான் தேசியக் கல்விக் கொள்கையாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் புறக்கணிக்கப்படுவதும், இந்தியும் ஆங்கிலமும் சமற்கிருதமும் திணிக்கப்படுவதும் ஏழை எளிய ஒடுக்குண்ட மாணவர்களின் கல்விச்சாலைகளில் பள்ளம் தோண்டி வைப்பதே ஆகும்.
புதிய வேலைவாய்ப்புகள் தோற்றுவிக்கப்படவில்லை என்பது மட்டுமல்ல. இருக்கிற வேலைவாய்ப்புகளும் சுருங்கிக் கொண்டிருக்கும் அவலநிலை! பெருந்தொற்றுக் காலத்தில் வெடித்து வெளிப்பட்ட புலம்பெயர் தொழிலாளர் துயரம் என்பது வேலையின்மைச் சிக்கலின் முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தி விட்டது. இத்தனைக்குப் பிறகும் நரேந்திர மோதியின் வாய்வீச்சுக்கும் நிர்மலா சீத்தராமனின் திமிர்ப் பேச்சுக்கும் குறைவே இல்லை.
திகிலிய எதிர்ப்பின் பேரால் மனிதவுரிமைகளுக்கும் மாநில உரிமைகளுக்கும் எதிராக இந்திய அரசு – காங்கிரசாட்சியே – உருவாக்கிய தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) நிறுவனத்துக்கு மேலும் கடுமையான அதிகாரமளிக்கப்பட்டுள்ளது. இந்த அதிகாரப் பெருக்கத்துக்கு நாடாளுமன்றத்தில் திமுகவும் ஆதரவளித்தது வெட்கக்கேடு!
அடக்குமுறைச் சட்டங்கள் மேலும் கூர்தீட்டப்படுவதன் வழியில் ஊபா (UAPA) எனப்படும் சட்டப்புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டுப் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. பீமா கொரேகான் வழக்கில் கவிஞர் வரவர ராவு, அறிஞர் ஆனந்த் டெல்டும்ப்டே, அருள்தந்தை ஸ்டேன்சாமி, ஊடகர் கௌதம் நவ்லேக்கா வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், பேராசிரியர்கள் உள்ளிட்ட பலரும் அடுத்தடுத்து சிறைப்படுத்தப்பட்ட நிகழ்வுகள் போராடும் மக்களை நடுங்க வைக்கும் நோக்கமுடையவை.
தமிழ்நாட்டிலும் அண்மையில் ’மாவோயிஸ்ட்’ விவேக், பாலன், சீனிவாசன் உள்ளிட்ட தோழர்கள் ஊபா சிறையில் அடைக்கபட்டுள்ளனர். பேரறிவாளன் உள்ளிட்ட தமிழர் எழுவர் விடுதலைக்குத் தமிழக அமைச்சரவையே தீர்மானம் இயற்றிய பிறகும் ஆளுநர் முடக்கி அழிச்சாட்டியம் செய்வதற்கு பாசக ஆட்சியின் வஞ்சகமே அடிப்படை.
இருபதாண்டுகளுக்கு மேலாகச் சிறையில் வாடும் இசுலாமியக் கைதிகளுக்கு விடுதலையின் நம்பிக்கைக் கீற்று கண்ணுக்கு எட்டிய வரை தென்படவே இல்லை.
பாசிச பாசக அரசின் எடுபிடியாகவே தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது அதன் அழிவுத் திட்டங்களுக்கும் அடக்குமுறைச் சட்டங்களுக்கும் தொண்டூழியம் செய்யும் ஏவலாளாகவே இருந்து வருகிறது. வரப்போகும் சட்டப் பேரவைத் தேர்தலிலும் பாசகவின் பல்லக்குத் தூக்கியாகவே அதிமுக செயல்படுகிறது.
இந்திய அரசமைப்பில் மாநிலச் சட்டப் பேரவைக்கு இறைமை இல்லை, இவ்வழியில் அமைந்திடும் மாநில அரசுக்கு அரசுரிமை இல்லை. ஒரு விடுதலை இயக்கம் தன் குறிக்கோள்களை அடைவதற்கு இந்தச் சட்டப்பேரவை ஒரு கருவியாகப் பயன்பட வாய்ப்பே இல்லை.
இந்த நிலையிலும் பாசிச பாசக தமிழகத்தில் கால்பதிக்க இந்தச் சட்டப் பேரவைத் தேர்தலை ஒரு வழியாகப் பயன்படுத்த முற்பட்டிருப்பதால் அந்த வழியை மறிப்பதற்கு குடியாட்சிய ஆற்றல்களும் அதே தேர்தலைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.
இந்தத் தேர்தலில் பாசக தோற்பது மட்டுமே பாசிசத்தை ஒழித்து விடாது, மக்கள்-போராட்டங்களே பாசிசத்தை இறுதியாக வீழ்த்தும் வழி என்றாலும், பாசிசப் படையெடுப்புக்கு ஒரு தடைக்கல் அமைத்திட இந்தத் தேர்தலிலும் களம் காண்போம்!
குடியாட்சிய ஆற்றல்கள் தாமே தேர்தலில் போட்டியிட்டு பாசகவைத் தோற்கடிப்பதற்கான சூழலும் சொந்த வலிமையும் இல்லாத நிலையில் பாசகவைத் தோற்கடிக்கப் பொருத்தமான வழியை வாக்காளர்களே தேர்ந்தெடுத்துக் கொள்ளட்டும்!
பாசக போட்டியிடாத தொகுதிகளே பெரும்பாலானவை என்றாலும் அவற்றில் எந்த ஓர் அணியையும் (அல்லது கட்சியையும்) ஆதரித்தோ எதிர்த்தோ வாக்களிக்க வழிகாட்டுவது கொள்கையற்ற பதவி அரசியலுக்குத் தூபமிடுவதாகவும் போராட்ட அரசியலுக்குரிய விழிப்புணர்வைத் தளர விடுவதாகவுமே அமையும்.
எனவே யாருக்கும் வாக்கில்லை என்பதன் அடையாளமாகவும் புறக்கணிப்பின் முறைசார் வடிவமாகவும் நோட்டாவைப் பயன்படுத்தலாம்!
எதிர்காலத்தில் மக்கள் போராட்டங்களின் வலிமை கூடி அதனால் சூழல் மாறிச் செல்லும் போது அந்தப் போராட்டங்களின் நலனுக்கு ஏற்பத் தேர்தல் களத்தை வேறுவிதமாகப் பயன்படுத்திக் கொள்ளும் வழிகள் திறக்கப்படவும் வாய்ப்புண்டு என்பதை நாம் மறக்கவில்லை.
ஆனால் யாவற்றிலும் முதன்மையான உடனடிக் குறிக்கோளை மறவோம்! வரப் போகும் தேர்தலில் பாரதிய சனதா கட்சியை அது போட்டியிடும் ஒவ்வொரு தொகுதியிலும் வீழ்த்திட நம் தோழமை ஆற்றல்களுடன் ஒன்றுபட்டு உழைப்போம்!
- தியாகு