govt schoolகுருகுலக் கல்வியும், திண்ணைப் பள்ளிகளும் வர்ணாசிரமத்தின் கைகளில் கோலோச்சிய காலத்தில் உயர்ந்த சமூகப் படிநிலைகளில் உள்ளவர்களுக்கு மட்டுமே கல்விக்கனி உண்ணக் கிடைத்தது. கீழ்த்தட்டு மக்களுக்கு கல்வி எட்டாக்கனியாகவே இருந்து வந்ததுள்ளது.

வணிகம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள் நாட்டை ஆள காலூன்றிய போது, அவர்களுக்கு நிர்வாகப் பணிகளுக்கு ஆங்கிலம் தெரிந்த ஊழியர்களை உற்பத்தி செய்ய இங்கிலாந்திலிருந்து, இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டது தான் மெக்காலே கல்வித்திட்டம். இக்கல்வித் திட்டத்திற்கு மெக்காலே பல்வேறு விதமான வர்ணனைகளைக் கொடுத்து உயர்த்திப் பிடித்தார். ஆங்கில மொழிக்கு நிகரான இலக்கியங்களோ, அறிவியலோ, கலைவடிவங்களோ இந்திய மொழிகளில் இல்லை என்று உண்மைக்குப் புறம்பாக தம்பட்டம் அடித்துக் கொண்டார். 1835-ல் மெக்காலேயால் விதைக்கப்பட்ட மேற்கத்தியக் கல்வி முறையின் மோகம் இன்றும் நம்மை ஆட்டுவிப்பதுதான் கொடுமையிலும் கொடுமை.

நம் நாட்டின் விடுதலைக்குப் பின்னர் கல்வியில் முன்னேற்றம் காணவும் அனைவருக்கும் கல்வியை பரவலாக்கிடவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மத்திய பல்கலைக் கழக கல்விக்குழு (1948-49), இடைநிலைக் கல்விக் குழு (1952-53), கோத்தாரிக் கல்விக் குழு (1964-66) போன்ற அமைப்புகள் இந்தியக் கல்விக்கு உரமூட்ட ஏற்படுத்தப் பட்டவையே. தமிழகத்தில் கிராமங்கள் தோறும் பள்ளிகள் என்ற கனவை நனைவாக்கிய காமராசரை மறுதலித்துவிட்டு தமிழக கல்வி வரலாற்றை எண்ணிப் பார்க்க இயலாது. சென்னையில் சிங்காரவேலரால் ஒத்திகையாகத் தொடங்கி அழகு பார்க்கப்பட்ட மதிய உணவுத் திட்டத்தை தமிழகப் பள்ளிகள் முழுவதும் விடாப்பிடியாக அமல்படுத்திய பெருமை காமராசரைச் சாரும். அதற்குப் பிறகு முதல்வர்களாக பொறுப்பு வகித்தவர்கள் மதிய உணவுத் திட்டத்தை மெருகேற்றினர் என்பதை மறுப்பதற்கில்லை.

குடும்பங்கள் வறுமையோடு போராடினாலும் குழந்தைகளுக்கு உணவோடு கல்வியை ஊட்டிய பெருமை தமிழக மண்ணிற்கு உண்டு. அதனால் தான் அறிவியல் அறிஞர்கள், அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், ஆசிரியர்கள், பேராசிரியர்கள் என எத்தனையோ ஆளுமைகளை உருவாக்கி சரித்திரம் பேசுகிறது நமது அரசுப் பள்ளிகள். ஆரம்ப கால அரசுப் பள்ளிக் கட்டிடங்கள் பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்டு பளபளப்பாக காட்சி தரவில்லை. ஓலை வேயப்பட்ட கட்டிடங்களாகவும், ஓட்டுக் கட்டிடங்களாகவும் தான் இருந்தன. மணிக்கணக்கில் மாணவர்கள் மரத்தடியில் தான் கல்வி கற்றனர். மரத்தைப் போலவே கல்வியும் உயிரோட்டம் உடையதாகவே இருந்தது.

அறிவுப் பசியோடு கல்வி எனும் இரை தேடி வரும் பறவைகளுக்கு சரணாலயமாக அரசுப் பள்ளிகள் விளங்கின. ஏழை, பணக்காரன் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்ற பாகுபாடின்றி அனைவருக்கும் . கல்வி, விளையாட்டு, நற்பண்புகள் போன்றவை இயற்கையாகவே விதைக்கப்பட்டன. பெரும்பாலான அரசு உயர்பதவிகளை அலங்கரிப்பவர்கள் எல்லாம் அரசுப் பள்ளிகளின் வார்ப்புகளாகத்தான் இருந்தார்கள், இருக்கிறார்கள்…

ஆரம்ப காலந்தொட்டு ஆரோக்கிய நடை போட்ட அரசுப் பள்ளிகள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக நடை தளரக் காரணங்கள் யாவை? உடனே தனியார் பள்ளிகளின் வளர்ச்சியும், அதில் மக்களுக்கு ஏற்பட்ட மோகமும் தான் இதற்குக் காரணங்கள் என பெரும்பாலோனோரின் பதிலாக இருக்கும். அதை நாம் மறுப்பதிற்கில்லை. ஆனால் அதற்கான ஆணிவேர் எது? அதனால் என்ன பாதிப்புகள் வரும்? யாருக்கு லாபம்? போன்றவற்றை சமூக அக்கறை கொண்டு சிந்திக்க வேண்டும்.

1986ல் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக் கொள்கைக்கும் 1988ல் கொண்டு வரப்பட்ட தனியார் மய மற்றும் தாராளமயக் கொள்கைக்கும் அரசுப் பள்ளிகளை ஆட்டம் காணச் செய்ததில் பெரும் பங்குண்டு. 86ல் கொண்டு வரப்பட்ட கல்விக் கொள்கை தனியார் பள்ளிகள் தொடங்க முன்னுரிமை அளித்ததோடு நவோதய வித்யாலயா பள்ளிகள் தொடங்கவும் வாசல் திறந்தது. அதிலிருந்து தொடங்கியது தான் ஏழைக்கு ஒரு கல்வி வசதி படைத்தவருக்கு ஒரு கல்வி என்ற அதர்ம சித்தாந்தம். தனியார் மய, தாரளமயக் கொள்கை உலகளாவிய நுகர்வுக் கலாச்சாரத்திற்கு வித்திட்டது. அதில் கல்வியும் ஆட்பட்டதில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.

 எந்த ஒரு நாட்டிலும், கல்வியும் மருத்துவமும் அரசு கையில் இருப்பதுதான் பாதுகாப்பானது என அறிவார்ந்தவர்கள் சொன்னார்கள். ஆனால் இரண்டையும் தனியாருக்கு விற்று விட்டோம். அதனால் சமத்துவம் இழந்தோம். கல்வியை காசுக்கு விற்கும் கடைகள் திறக்கப்பட்டன. தனியார் மய தாராளமயக் கொள்கைகளை எதிர்த்து போர்க் கொடி உயர்த்திப் போராடும் அரசியல் கட்சிகளைப் பார்த்து, இந்த உண்டியல் குலுக்கிகளுக்கு வேறு வேலையே இல்லையென பாதிப்பின் விளிம்பில் இருக்கும் சில அப்பாவிகளும் கூறுவது தான் முரண் நகை. எந்த மக்கள் விரோதக் கொள்கையும் உடனே பாதிப்பை உணர்த்தவில்லை என்றாலும் அதைத் தொலைநோக்குப் பார்வை கொண்டு சிந்திக்க வேண்டும்

தனியார் மயம், தாராளமயக் கொள்கைகள் அரங்கேறிய பின்பு நம் நாட்டில் தனியார் கல்வி நிறுவனங்கள் எப்படியெல்லாம் நஞ்சாகப் பரவியது என்பதை 'கற்க கசடற விற்க அதற்குத் தக!' என்ற நூலில் அதன் ஆசிரியர் பாரதி தம்பி மிகவும் மனம் நொந்து சமூக அக்கறையோடு நேர்த்தியாகப் பதிவு செய்துள்ளார். தனியார் முதலாளிகளின் கைகளில் கல்வி அளிக்கும் பொறுப்பு வழங்கப் பட்ட பின்பு, சேவையாக கல்வியை வழங்கும் சொற்ப எண்ணிக்கையிலான தனியார் பள்ளிகளைத் தவிர மற்ற அனைவருக்கும் கடைச் சரக்கும், கல்வியும் ஒன்றாகத்தான் தெரிந்தது. அவர்களுக்கு லாபம் மட்டுமே பிரதான. நோக்கம்.

தனியார் பள்ளிகளின் லாபத்தைத் தீர்மானிப்பதில் மனப்பாட மதிப்பெண்ணிற்கு முக்கிய இடம் உண்டு. குறிப்பாக மருத்துவம், பொறியியல் போன்ற உயர்கல்விக்கான இடங்களைப் பெறுவதற்கான ஓட்டப் போட்டியில் வெற்றியாளர்களை உருவாக்குவது மட்டுமே கல்வியின் பயன் என்ற தவறான சிந்தனை நம் மக்களின் மனதில் உருவாக்கப் பட்டுள்ளது. அப்படிப்பட்ட வெற்றியாளர்களையும் தனியார் பள்ளிகளால் மட்டுமே உருவாக்க இயலும் என்ற மாய பிம்பம் சமூகத்தில் திட்டமிட்டு உருவாக்கப் பட்டுள்ளது.

கல்வியின் நோக்கம் மதிப்பெண்ணை அறுவடை செய்வதால் மட்டும் நிறைவு பெறுவது இல்லை. தன்னையும், தான் வாழும் சமூகத்தையும் புரிந்து கொண்டு சமூகத்தோடு தன்னைப் பொருத்தி வாழப் பழகுதலே கல்வியின் முதன்மை நோக்கம். தன்னைச் சுற்றி அன்றாடம் பார்க்கும், கேட்கும் எதையும் மூடநம்பிக்கைகளுக்கு இடம் தராமல் அறிவியல் பூர்வமாக பகுத்தறிவுச் சிந்தனையோடு ஒப்பிட்டு ஆராயும் ஆற்றல், பாலின சமத்துவத்தைக் காத்தல், இயற்கையை நேசித்தல், வளங்களைப் பாதுகாத்தல், பாடநூல்களைத் தாண்டியும் உள்ள வாசிப்பு உலகத்தை உணர்தல் என கல்வி கற்பதன் நோக்கம் நீள்கிறது.

தற்போது மருத்துவப் படிப்பைப் பயில நீட் நுழைவுத் தேர்வை எழுதி, அதில் தகுதி பெற வேண்டியுள்ளது. பொறியியல் படிப்பிற்கான மோகம் குறைந்து மருத்துவப் படிப்பிற்கான போட்டிகள் களை கட்டியிருக்கின்றன. காரணம் மருத்துவம் படித்தால் படிப்பு முடிந்தவுடன் வேலைக்கான வாய்ப்புகள் கூடுதலாக இருக்கிறது. ஐந்து, ஆறு ஆண்டுகளுக்கு முன்புவரை பொறியியல் படிப்பிற்கான நம்பிக்கையும் அப்படித்தான் இருந்தது. தெருவிற்குத் தெரு பொறியியல் கல்லூரிகள் வந்தன. கல்லூரி முதலாளிகள் வசதியானார்களே தவிர, படித்த பல மாணவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை, அதனால் இப்போது மருத்துவப் படிப்பிற்கான மகத்துவம் அதிகரித்து விட்டது. நீட் நுழைவுத் தேர்வை எதிகொள்ளும் மாணவர்களுக்கு பயிற்சியளிக்க பல தனியார் பயிற்சி மையங்கள் இயங்கி வருகின்றன.

இலட்சக்கணக்கில் பணம் கட்டி பயிற்சியில் கலந்து கொள்ள பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள மக்களின் பிள்ளைகளால் முடியுமா? குறிப்பாக அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அது சாத்தியமா? சமூக அக்கறை கொண்ட கல்வியாளர்கள், ஒரு சில அரசியல் கட்சிகள் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்திப் போராடினார்கள். அதற்கு எந்தப் பயனும் இல்லை. தற்போது தமிழக அரசு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் உள் ஒதுக்கீடு வழங்க சட்டத் திருத்தம் மேற்கொள்வதற்கான வாய்ப்புகளை ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்திருப்பது, அரசுப் பள்ளியை நேசிப்பவர்களுக்கு சற்று ஆறுதலை அளிக்கிறது. அவ்வாறான இட ஒதுக்க்கீடு கிடைத்தால் அது சமூக நீதிக்கான வெற்றிகளில் ஒன்றாகப் போற்றப்பட வேண்டும். இந்த உள் ஒதுக்கீடு நடைமுறைப் படுத்தப்பட்டால் அரசுப் பள்ளிகளின் மீதான நம்பிக்கையும் மரியாதையும் அதிகரிக்கும்.

இன்றைய அரசுப் பள்ளிகளின் கள யதார்த்தம் எப்படி இருக்கிறது? பெரும்பாலும் அன்றாடம் வேலைக்குச் செல்லும், வறுமையோடு வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கும் பெற்றோரின் குழந்தைகளே, அரசுப் பள்ளின் சொத்து. அவர்களின் குடும்பச் சூழலையும், சமூகச் சூழலையும் உள்வாங்கும் ஒருவரால் மட்டுமே வெற்றிகரமான ஆசிரியராக விளங்க முடியும். பெரும்பாலான குழந்தைகள் அன்றாடம் ஆசிரியரால் கொடுக்கப்படும் வீட்டு வேலைகளை முடித்திருக்க மாட்டார்கள். அனைத்து வேலைகளுக்கும் பள்ளியில் தான் நாம் நேரம் ஒதுக்கித் தர வேண்டும். தனியார் பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் பெற்றோர்கள் மாலை வீட்டுக்கு வந்ததும் அன்றைய வீட்டுப் பாடங்களை நாட்குறிப்பில் குறிப்பிட்டபடி முடிக்க வழிகாட்டுவர். அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு அவ்வாறு வழிகாட்ட பெரிதும் வாய்ப்பில்லை.

அரசுப் பள்ளியைப் பின்பற்றி தனியார் பள்ளிகள் இயங்க வேண்டிய நிலை மாறி, தனியார் பள்ளிகளைப் போல் அரசுப் பள்ளிகளும் தேர்ச்சி, மதிப்பெண் இலக்கை நோக்கி நகர்கிறது. இலக்கியச் செதுக்கல், விளையாட்டுக்கள், புத்துண்ணர்வுகளை உண்டாக்கும் கலைக் கொண்டாட்டாங்கள் போன்றவை புறம் தள்ளப்பட்டு, பல மாணவர்களின் உண்மையான கனவுகளை சிதைத்துவிட்டு தேர்ச்சிக் கனவோடு இன்று பல அரசுப் பள்ளிகளும் அசுர வேகத்தில் பயணம் செய்வது ஆரோக்கிய கல்வி வழங்கலின் அடையாளம் அல்ல.

இன்றைய சமூகம் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் மீது பல்வேறு அதிருப்தியை முன் வைக்கிறது. பல ஆசியர்கள் பள்ளிக்கு வருவதில்லை, வந்தாலும் பாடம் எடுப்பதில்லை, மாணவர்களை அடிக்கிறார்கள் போன்ற குற்றச்சாட்டுகள் எழுகின்றன. அலுவலக வேலைகள், புள்ளிவிவரங்களை கணினியில் பதிவு செய்வது, மாணவர்களுக்கு அரசால் வழங்கப்படும் புத்தகங்கள், சீருடைகள், குறிப்பேடுகள் போன்றவற்றை அலுவலகங்களிலிருந்து எடுத்து வருதல் போன்ற வேலைகளை ஆசிரியர்களே செய்ய வேண்டி உள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இருப்பினும் அதனால் கற்பித்தல் பணிகள் தடைபடுவதை ஏற்பதிற்கில்லை. தவறிழைக்கும் ஆசிரியர்கள் மீது கல்வித் துறை அலுவலர்களால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒரு பள்ளியின் வளர்ச்சி என்பது ஆசிரியர்கள், மாணவர்கள், சமூகம் போன்ற அனத்து வளங்களின் கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியப்படும். சில பள்ளிகளில் ஆசிரியர்களிடையே ஒத்த கருத்து நிலவுவதில்லை. சாட்டை திரைப்படத்தில் தம்பி ராமையா உதவித் தலைமை ஆசிரியராக நடித்திருப்பார். அவர் எவ்வாறு தான்தோன்றித்தனமாக நடந்து கொள்வாரோ, அவரைப் பிரதிபலிக்கும் ஆசிரியர்களும் இன்றும் சில பள்ளிகளில் இருக்கத்தான் செய்கின்றனர். அப்பள்ளியில் அவர்கள் வைத்ததே சட்டம். அவர்கள் தலைமை ஆசிரியர் உள்ளிட்ட உயர் அலுவலர்களால் கட்டுப்படுத்த இயலா சில பின்புலங்களைப் பெற்றிருப்பர்.

மாணவர்களைப் பொருத்த வரையில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பெரிதாக ஒன்றும் சிக்கல் இல்லை. ஆனால் உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளிகள் சிலவற்றில் மாணவர்களிடையே சாதி, மத, ரீதியிலான குழுக்கள் இருப்பதும் அதனால் அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வி பாதிக்கப் படுவதும் வேதனையான ஒன்றாகும்.

ஒவ்வொரு பள்ளியிலும் பள்ளியின் வளர்ச்சியைக் கண்காணிக்க, தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோரைக் கொண்டு பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மைக் குழு போன்ற அமைப்புகள் ஏற்படுத்தப் பட்டுள்ளன. அது பல பள்ளிகளில் பெயரளவில் மட்டுமே இருக்கின்றன.

அரசுப் பள்ளிகளில் சின்ன சின்ன நிர்வாகக் குறைபாடுகள், வசதிகள் இன்மை போன்றவற்றைக் கருதாமல் பல அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிந்து வருகின்றனர். பலர் தனது சொந்தப் பணத்தைக் கூட பள்ளிக்கு கல்விப் பணிக்காகச் செலவழிக்கின்றனர். அவ்வாறு பணிபுரியும் ஆசிரியர்கள் பலருக்கு உரிய அங்கீகாரமோ விருதுகளோ கிடைப்பது இல்லை. அதற்குக் காரணம் நடுநிலை தவறும் அதிகாரிகள். தனக்கு வேண்டியவர்களைவிட உண்மையாக உழைப்பவர்களை அவர்கள் பெரிதாக நினைப்பதில்லை. இருப்பினும் மனச்சாட்சிக்கு விரோதமின்றி வாங்கும் ஊதியத்தை மனதில் கொண்டு பலர் விருதுகளையோ புகழுரைகளையோ எதிர்பார்க்காமல் பணிசெய்து கொண்டிருக்கின்றனர்.

அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களில் பலர் பல்வேறு அபாரத் திறமைகள் பெற்றுள்ளனர். அவர்களை சரியாக அடையாளப் படுத்த வேண்டியதும், உயர்கல்விக்கு வழிகாட்டவதும் ஆசிரியர்களின் தலையாய பணியாகும். என்னிடம் எட்டாம் வகுப்பு பயின்ற ஒரு மாணவனின் அதீத அறிவாற்றலைக் கண்ட நானும் மற்றொரு ஆசிரியரும் அடுத்த வகுப்பு பயில சரியான ஒரு மேநிலைப் பள்ளியை அடையாளம் காட்டி அதில் சேர்ந்து கொள்ள அறிவுறுத்தினோம். அதைக் கேட்டு அப்பள்ளியில் சேர்ந்த அந்த மாணவர் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்று, இன்று மருத்துவராக பணிசெய்கிறார். அவர் என்னைப் பார்க்கும் பொழுதெல்லாம் நான் மருத்துவர் ஆனதற்கு தங்களின் வழிகாட்டலே காரணம் என, பலர் முன்னிலையில் நன்றிப் பெருக்கோடு உதிர்க்கும் வார்த்தைகள் ஆசிரியர்களின் பணிக்கான உரமாகும். தொடக்க நிலையில் படிக்கும்போதே தந்தையை இழந்த அந்த மாணவனின் தாய் சித்தாள் வேலை செய்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

ஒராண்டிற்கு முன்பு எங்கள் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயின்ற பொருளாதாரப் பின்புலமற்ற ஒரு மாணவியின் ஓவியம் வரையும் திறன், கையெழுத்து, மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றை அடையாளம் கண்டு ஊக்கப்படுத்தி, கட்டுரை மற்றும் ஒவியப் போட்டிகளில் மாவட்ட அளவில் பல்வேறு பணப் பரிசுகளைப் பெற தலைமை ஆசிரியர் மற்ற ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு வழியமைத்துக் கொடுத்தேன். மற்றொரு சிறப்பெதுவெனில் மாநில அளவில் நடைபெற்ற கட்டுரைப் போட்டியில் பல தனியார் பள்ளி மாணவர்களையும் வீழ்த்தி இரண்டாம் இடம் பெற்று அவரின் அறிவாற்றலையும் திறமையையும் வெளிப் படுத்தினார். தொடர்ந்து தேசியத் திறனாய்வுத் தேர்வுகளில் எல்லாம் வென்று இன்று சிறப்பாக கல்வி பயின்று வருகிறார்.

இன்று தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் நடத்தும் பல வேலைவாய்ப்பு போட்டித் தேர்வுகளில் அரசுப் பள்ளிகளில் பயின்றவர்கள் பலர் வெற்றி பெறுகின்றனர். அந்தப் போட்டித் தேர்வுகளை நடத்துவதிலும் சமீப காலமாக ஊழல் கறை படிந்திருப்பது, நேர்மையாக போட்டித் தேர்வுக்குத் தயாராகும் பலரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.

ஆசிரியரின் பணியென்பது சேவைப் பணியாகும். குறிப்பாக அரசுப் பள்ளி ஆசிரியரின் பணி என்பது, மனித நேயத்தோடு பல தரப்பட்ட சூழலிலிருந்து வரும் குழந்தைகளை அரவணைத்து, ஒருங்கிணைந்த சரியான கல்வியைக் கொடுப்பதோடு, தகுந்த சமூக விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய முக்கியமான பணியாகும். சமூகத்தின் உழைப்பாளி வர்க்கத்தின் குழந்தைகளின் அறிவுப் பசியாற்றி வாழ்வின் சமூகப் பொருளாதார உச்சம் தொட உதவும் அரசுப் பள்ளி எனும் ஆலமரம், சமூகத்தின் முக்கிய அடையாளம் ஆகும்.

- கா.இரவிச்சந்திரன்

Pin It