தோழர்களே!

ஒரு பக்கம் ஈழம் ஓய்ந்துள்ளது. மறுபக்கம் நேபாளம் அடுத்த கட்டத்தை தொடங்கியுள்ளது. இதற்கிடையில் தெலங்கானா புயல் மிகவேகமாக வீசத் தொடங்கியுள்ளது. இது தமிழக அரசியற்களத்திலே பனிப்புயலாக வந்துள்ளது. ஏனெனில் பெரும்பகுதியினர் உறைந்து போயுள்ளனர். காரணம் தெலங்கானா தனிமாநிலக் கோரிக்கையை எவ்வாறு ஆதரிப்பது? இது தேசிய இனங்களை கூறு போடுவது அல்லவா என்ற குழப்பமே முக்கியமானதாக உள்ளது.

போதாதற்கு, ஒருபக்கம் “மார்க்சிய பெரியவாளின்” மடத்திலிருந்து (இ.க.க. (மா-லெ) போல்ஷ்விக்) “தனித் தெலங்கானாவை எதிர்ப்போம்”, “தேசிய இனங்களை பாதுகாப்போம்” என்று “அருளுரைகள்” வேறு வந்து கொண்டிருக்கின்றன.

மறுபக்கம், நிர்வாக வசதிக்காக தமிழ் நாட்டை பிரிக்க வேண்டும் என்று சாதியக் கட்சிகளின் கோரிக்கை வேறு ஒலித்துக் கொண்டிருக்கின்றன. கபடவேடதாரி கருணாநிதியும் பாசிச ஜெவும் முதன் முறையாக ஒரே குரலில் இக்கோரிக்கையை எதிர்த்துள்ளனர்.

இக்குழப்பமான சூழ்நிலையில்தான் என்ன முடிவெடுப்பது என்பதுதான் மார்க்சியர்கள் மற்றும் தமிழ் தேசியர்களின் நிலையாகும். இந்நிலைக்கு ஒன்று தெலங்கானா கோரிக்கையின் வரலாற்றை புரிந்து கொள்வதில் உள்ள சிக்கல். இரண்டு “பழைமைவாத மார்க்சியத்தின்” தேசியம் குறித்த தவறான புரிதல்கள். இவ்விரண்டுமே முக்கிய காரணங்களாகும்.

உலக வரலாற்றில் முதலாளித்துவத்துடன் இணைந்தே தேசம் என்ற வகையினம் உருவானது. இது முதலில் இனங்கள், பழங்குடிகளை உள்ளடக்கியதாகவே உருவானது. ஆனால், தேசிய இன ஒடுக்குமுறையின் எதிர்விளைவாக ஒரு தேசிய இன அடிப்படையிலான தேச விடுதலைப் போராட்டத்தை அயர்லாந்து உலகிற்கு அறிமுகப்படுத்தியது. பின்னர் அமைந்த பல்தேசிய இனங்களைக் கொண்ட கிழக்கு அய்ரோப்பாவிலும் காலனிய ஆதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளிலும் இயல்பான தேசிய வளர்ச்சிக்கு மாறாக, ஒடுக்குமுறைக்கெதிராகவே தேசிய இன மற்றும் தேச விடுதலைப் போராட்டங்கள் அமைந்தன.

இவை அரைநிலவுடைமை, அரைமுதலாளித்துவ நாடுகளிலும் காலனிய, அரைக்காலனிய நாடுகளிலும் தேசிய இன மற்றும் பழங்குடிகளின் வளர்ச்சியை ஒட்டியும் இவை மீதான பெருந்தேசிய இனவாத ஒடுக்குதல் என்பதின் எதிர்மறைக் கூறுகளாலுமே பெரும்பாலும் கிளர்ந்தன. இன்றும் கிளர்ந்துக் கொண்டிருக்கின்றன.

எந்த அடையாளத்தின் அடிப்படையில் தங்கள் மீது ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல் ஏவிவிடப்படுவதாக உணருகிறார்களோ அந்த அடையாளமாகவே கிளர்ந்தெழுகிறார்கள். தேசிய இன, பழங்குடி, மத, பிரதேச, நிற, சாதி என்ற அடையாளங்களுடனேயே தங்களுக்கான கல்வி, வேலை, அதிகாரம் என்ற கோரிக்கைகளை முன்வைக்கின்றனர்.

மேல்மட்டத்திலேயே இம்முரண்பாடுகள் நீடிக்கும் பொழுது முதலாளிய (அ) குட்டி முதலாளிய சக்திகளால் இச்சிக்கல்களை மக்கள்திரள்மயமாக்க முடிவதில்லை. ஆனால், அவற்றை ஆதிக்கசக்திகள் கல்வி, வேலை மற்றும் இதர வாழ்வாதாரங்கள் மீது தங்களது ஒடுக்கு முறையை நீட்டிக்கும் பொழுது, இச்சிக்கல்கள் மக்கள் திரள்மயமாகின்றன.

மேற்கண்ட வரலாற்று செல்திசையிலேதான் இந்திய துணைக் கண்ட சிக்கல்களையும் பார்க்க வேண்டியுள்ளது. இந்திய துணைக் கண்டத்தில் நிலவும் சாதிய-நிலவுடைமை சமூகம் தூக்கியெறியப்பட்டு இயல்பான முதலாளிய வளர்ச்சியும் பல்வேறு தேசங்களும் அமைவதற்குப் பதிலாக கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஏகாதிபத்தியத்தால் இயல்பான கூறுகள் அழிக்கப்பட்டு பிற்போக்கு முதலாளித்துவம் நிலைநாட்டப்பட்டது. இவர்கள் சாதிய-நிலவுடைமையை எக்காரணம் கொண்டும் மாற்றியமைக்க விரும்பவில்லை. இதன் தொடர்ச்சியே இங்கு இயல்பான தேசிய இன மற்றும் தேசங்களின் வளர்ச்சி இல்லாமல் போனது.

இதன் விளைவாகவே, பிரிட்டன் ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் வீறு கொண்டு இருந்த போதும், தேசிய இனங்கள் மற்றும் தனித்தேச போராட்டங்கள் மேலோங்கவில்லை. திராவிட நாடு (பெரியார்), தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனி நாடு (அம்பேத்கர்) போன்றவை மக்கள் திரள்மயமாக்கப்படாதவை. அதனால் அவை வெற்றி பெறவில்லை. ஆனால், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தால் ஏற்கனவே திட்டமிட்டு பிரித்தாளும் சூழ்ச்சியால் வளர்த்தெடுக்கப்பட்ட மதப்பிளவின் காரணமாக பாகிஸ்தான் வெற்றியை கண்டது.

அதிகார மாற்றத்திற்குப்பின், சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரா தனி மாநில கோரிக்கை எழுந்தது. இதை ஒட்டி இந்திய ‘ஒன்றிய’ அரசால் அமைக்கப்பட்ட ‘கமிசன்’ மொழிவாரி மாநிலங்களைப் பரிந்துரைத்தது. அதில், ஏற்கனவே, நிஜாம் மன்னனிடமிருந்து கைப்பற்றப்பட்ட தெலங்கானா பகுதிகள் தனியாகவே இருந்தன. அவற்றை தனிமாநிலமாகவே ஆக்கும்படி கமிசன் பரிந்துரைத்தது. ஆனால், தெலங்கானாவானது கம்யூனிஸ்டுகளின் கோட்டையாக இருந்ததால் காங்கிரசு அதை வலுக்கட்டாயமாக தெலங்கானா மக்களின் உணர்வு மற்றும் விருப்பத்தை மீறி ‘ஏக ஆந்திராவாக’ மாற்றியது.

இதன் தொடர்ச்சியாகவே, தொடர்ந்து தெலங்கானா போராட்டங்கள் வெடித்தன. சுமார் 300க்கும் மேற்பட்டவர்கள் தனிமாநிலக் கோரிக்கைக்கு உயிரைவிட்டனர். காங்கிரசு வழக்கம் போல் தெலங்கானாவைச் சேர்ந்த சென்னா ரெட்டியை (தமிழ்நாட்டின் முன்னாள் கவர்னர்) முதல்வராக்கிப் போராட்டத் தீயை அணைக்க முயற்சித்தது.

ஆனால், இத்தீ கனன்றுகொண்டுதான் இருந்தது. அவ்வப்பொழுது கோரிக்கைகளாகவும் போராட்டங்களாகவுமே இருந்து கொண்டிருந்தது. இப்பகுதியில் இ.க.க. (மா-லெ) மக்கள் யுத்தக் கட்சியுடன் வளர்ச்சி (இன்றைய மாவோயிஸ்ட்) இப்பகுதி மக்களிடையே பெரும் நம்பிக்கைகளையும் எதிர்பார்ப்பையும் உருவாக்கி இருந்தன. ஆனால், இவ்வமைப்பின் பின்னடைவும் அரசியல் கோரிக்கையை முன்னெடுக்கத் தெரியாத அதன் அரசியல் மலட்டுத்தனமும் ஒரு வெறுமையான சூழலையே ஏற்படுத்தி இருந்தன. இச்சூழலில்தான் தெலங்கானா ராஷ்டிர சமிதியின் தோற்றமும் அதைத் தொடர்ந்த சந்திரசேகர ராவின் சந்தர்ப்பவாத அரசியல் நாடகங்களும் இச்சிக்கல் காட்டுத்தீயாக மாற போதுமானதாயிருந்தது. நக்சலைட்டுகளின் கோட்டையாக இருந்த உஸ்மானியா, காகதீய பல்கலைக்கழகங்கள் தனித் தெலங்கானாவின் கோட்டைகளாகியுள்ளன.

அரசியல் கட்சிகளைப் பொருத்தவரை புலிவாலைப் பிடித்த கதையாகி உள்ளது. ஆந்திர பெருமுதலாளி வர்க்கங்களும் ஏகாதிபத்திய நிறுவனங்களும் தெலங்கானா கோரிக்கையை நிராகரிக்கின்றன. ஆதலால், அரசியல் கட்சிகள் ‘ஏக ஆந்திராவிற்கு’ ஆதரவு தெரிவிக்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகின்றன.

இந்திய ‘ஒன்றிய’ காங்கிரசு அரசும் இதை நிச்சயம் கைகழுவும். மீண்டும் மாநிலங்கள் சீரமைப்பு இரண்டாவது கமிசன் அமைப்பது மூலமோ (அ) உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதின் மூலமோ முடக்கப்பார்க்கும். ஆனால், மாவோயிஸ்ட் கட்சியின் செயல்பாடு மிகமுக்கிய பங்கை வகிக்கும். இது ‘லால்கர்’ போராட்டத்தில் நடந்து கொண்டதுபோல் வெற்று வாய்ச்சவடால், கோமாளித்தனங்கள், தன்னுடைய அதிகாரத்தை நிலைநாட்ட முயற்சி செய்வது போன்ற வழக்கமான செயல்பாட்டில் ஈடுபட்டால், மீண்டும் ஆளும் வர்க்கங்களுக்கு அல்வா சாப்பிட்டது போல் ஆகும். நீர்த்துப் போகச் செய்வது, தனிமைப்படுத்துவது, ஒடுக்குவது என்பதன் மூலம் மீண்டும் ஆளும் சக்திகளே வெற்றிபெறுவர்.

இதற்கு மாறாக, மக்களின் படைப்பாற்றலை கட்டவிழ்த்து விட ஜனநாயக வெளியை ஏற்படுத்துவதும் கறாரான ஜனநாயக திட்டத்துடன் கூடிய தெலங்கானா மக்கள் ஜனநாயக முன்னணியை தலைமை ஏற்க வைப்பதன் மூலமுமே தெலங்கானா தனிமாநிலக் கோரிக்கையானது வெற்றியை நோக்கி நகர முடியும்.

ஒரு அரசியல் கோரிக்கையின் மூலம் மக்களை அணி திரட்டி அரசியல் இயக்கத்தை வெற்றி பெறச் செய்யும் பார்வையும் அனுபவமும் மாவோயிஸ்டு தலைமைக்கு இல்லை. இருப்பினும் இவ்வாய்ப்பை நழுவவிடாது இறுகப்பற்றி வெற்றி அடைவதே அவர் களின் இருத்தலுக்கு தேவையான நிபந்தனையாக மாறியுள்ளது என்பதே உண்மை நிலையாகும். இதைப் புரிந்துகொண்டு வரலாறு அளித்திருக்கும் வாய்ப்பை நழுவ விடாது பற்றிக்கொள்வது காலத்தின் தேவையாகும்.

அடுத்து, ‘தேசிய இனங்களை பாதுகாப்போம்’ என்பதற்கு வருவோம். கடந்த ஒரு நூற்றாண்டாக ஆளும் வர்க்கங்களால் ஏற்படுத்தப்பட்டு வந்த சீர்திருத்தங்களால் ஒவ்வொரு தேசிய இனத்திலும் கணிசமாக படித்த குட்டி முதலாளிய சக்திகள் வளர்ந்து வந்துள்ளனர். ஆனால், இச்சக்திகளில் பெரும்பாலோர் தேசிய அடையாளத்தை வளர்த்தெடுப்பதற்கு பதிலாக சாதிய அடையாளத்தையே முன்நிறுத்துகின்றனர். நிலக்கிழாரிய சக்திகளும் சாதி அடையாளத்தையே முன்னிறுத்துகின்றன. தங்களுடைய நலனின் விரிவாக்கத்திற்காகவே ஒருகட்டத்தில் தேசிய முழக்கங்களை முன் நிறுத்துகின்றனர். ஆனால், இவை வெற்று முழக்கங்களாகவே மாறுகின்றன. இதன் காரணமாக சாதியே கல்வி, வேலை, அதிகாரம் என்ற ஜனநாயக கோரிக்கைகளுடன் முதலாளித்துவ வடிவத்தை தொடர்ந்து எடுத்து வருகிறது.

மறுபக்கம், தேசியமாக இந்தியத் தேசியம் ஆளும் வர்க்கங்களால் புகட்டப்படுவதும் மிக முக்கியமானது. நடுத்தர வர்க்கத்தில் கணிசமான எண்ணிக்கையில் ‘இந்திய தேசியர்கள்’ உருவாகி உள்ளனர். இந்த இரண்டு சிந்தனைப் போக்குகளையும் அதாவது, ஏற்கனவே நிலவிவரும் சாதிய சிந்தனையையும் ஆளும் வர்க்கத்தால் போலியாக வளர்த்தெடுக்கப்படும் ‘இந்தியத் தேசியத்தையும்’ எதிர்த்து சொந்த தேசிய இன அடையாளத்தை வளர்த்தெடுப்பது மிக அவசியமாகும்.

எனவே, இங்கு தேசிய இனங்களை பாதுகாப்பதற்கு முன் வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. வளர்ச்சியின்மை காரணமாகத்தான் ஏற்கனவே உள்ள பிரதேச (அ) சாதிய கோரிக்கைகள் முன் வருகின்றன. இன்று இந்தியாவில் எழுந்துள்ள பல தனி மாநிலக் கோரிக்கைகளும் பழங்குடிகள், பிரதேச, மொழி என்ற அடிப்படையில்தான் எழுந்துள்ளன. நிர்வாக மொழியான இந்தி மொழி ஆதிக்கத்தின் காரணமாக ஒடுக்கப்பட்டிருந்த வட இந்திய மொழிகளின் வளர்ச்சிக்கேற்ப படிப்படியாக கோரிக்கைகள் எழுந்து கொண்டிருக்கின்றன. போஜ்பூர் தனிமாநிலக் கோரிக்கை அப்படிப்பட்டதுதான்.

எனவே, மக்களிடையே எழுகின்ற கோரிக்கையின் குறித்த தன்மையை புரிந்து கொள்வதுதான் மிக முக்கியமானது. அதில்லாமல், ஏகாதிபத்தியத்தை ஒழித்தால் எல்லா ஏற்றத் தாழ்வுகளும் தீர்ந்துவிடும் என்ற வரட்டு வெற்று முழக்கங்களால் எந்தப் பயனும் இல்லை. இது மடாதிபதிகள் தங்களின் ‘பார்ப்பனத் தூய்மையை’ பாதுகாத்துக் கொள்வதாக கூறிக் கொள்வதைப் போன்று இவர்கள் தங்களைத் தாங்களே சொறிந்து கொள்வதும் ஆகும்.

இன்றைய கட்டத்தில் சொந்த உட்கூறுகளின் இயல்பான வளர்ச்சியைவிட, தங்கள் மீது எந்த அடையாளத்தின் மீது ஒடுக்குமுறை ஏவப்படுகிறது மற்றும் தங்களது இருத்தலுக்கான தேவையான அடையாளம் என்பதிலிருந்தே மக்கள் கிளர்ந்தெழுகிறார்கள் என்பதை புரிந்துகொண்டு மக்களின் போராட்டங்கள் அணுகப்பட வேண்டும் என்பதே சரியானதாக இருக்கும்.

எப்படி இருப்பினும், ஈழத்தின் பின்னடைவு மிகச் சோர்வை தந்திருந்த சூழலில் தெலங்கானா மக்களின் கிளர்ச்சி ஒருசேர ஆறுதலையும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் தந்துள்ளது என்றால் மிகையாகாது.

தனித் தெலங்கானா மாநிலக் கோரிக்கை வெற்றிபெற வாழ்த்துக்களுடன்...

தோழமையுள்ள

ஆசிரியர்

துரைசிங்கவேல்

ஆசிரியர் குழு:
பாஸ்கர்
தங்கப்பாண்டியன்

தொடர்பு கொள்ள: 9003490422
மின்னஞ்சல் முகவரி: இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.

அச்சிட்டு வெளியிடுபவர்:
தங்கப்பாண்டியன்
11, கிருஷ்ணமூர்த்தி காம்பவுண்ட்,
சூலமங்கலம் முதன்மைச் சாலை,
மீனாட்சிபுரம், மதுரை - 625 002

Pin It