மொழி வழி மாநிலப் பிரிவினையை எதிர்த்தவர் ஆச்சாரியார்!

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி)

1952 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் சென்னை மாகாணத்தில் 375 சட்டமன்ற உறுப்பினர்கள் இரு ந்தார்கள். அதில் காங்கிர°ஸ்கட்சியினர் 152 பேர் மட்டுமே வெற்றி பெற்றனர். பெரியார் அந்தத் தேர்தலில் கம்யூனிஸ்டு கட்சியையும் காங்கிரஸ் அல்லாத வேட்பாளர்களையும் ஆதரித்தார். தி.மு.க திராவிட நாட்டுக்கு ஆதரவாக  உறுதி கொடுத்த கட்சியை யும், வேட்பாளர்களையும் ஆதரித்தது.

ஆந்திர காங்கிரஸ் தலைவர் டி.பிரகாசம் 1950 இல் காங்கிரசை விட்டு வெளியேறி 1951 இல் ஐதராபாத் பிராஜா பார்டி, என்பதைத் தொடங்கினார். என்.ஜி.ரங்கா அதன் செயலாளராக இருந்தார். 1952 இல் கிருபாளனி தலைமையிலான கிஸான் மஸ்தூர் பிரஜா பார்ட்டி  (K.M.P.P)  விவசாயிகள் தொழிலாளர்கள் மக்கள் கட்சியுடன் இணைத்துக் கொண்டார்.

1952 தேர்தலுக்கு முன்பு ஆந்திரப் பகுதியில் கம்யூனிஸ்டு கட்சியுடன் இணைந்து குறைந்தபட்ச செயல் திட்டத்தின் அடிப்படையில் (Democratic peoples front) என்ற கூட்டமைப்பை உருவாக்கினார். ஆந்திரா தனி மாநிலம் பெறுவதே இதன் முக்கிய கொள்கைகளுள் ஒன்று, ஆந்திரக் கம்யூனிஸ்டு கட்சியினர் தாங்கள் தேர்தலில் வெற்றி பெற்றால், வீட்டுக்கு 5 ஏக்கர் நிலம், ஏர் உழுவதற்கு வீட்டுக்கு ஒரு ஜதை ஏர் மாடு.

வீட்டில் பால் கறந்து குடிக்க வீட்டுக்கு ஒரு பசுமாடு தரப்படும் என்று வாக்காளர்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். தமிழ் நாட்டில் திராவிட இயக்கங்களின் எதிர்ப்பாலும் ஆந்திராவில் பிரகாசம் கூட்டணி எதிர்ப்பாலும் காங்கிரசு படு தோல்வி அடைந்தது. சரிபாதி உறுப்பினர் கூட காங்கிரசுக்கு இல்லை. டெல்லி மேலிடம் இராஜாஜியை முதல்வர் பதவி ஏற்குமாறு ஆணை யிட்டது. அப்போது ஸ்ரீ பிரகாசா என்ற உ.பி.காரர் சென்னை மாநில ஆளுநராக இருந்தார். ஆளுநர் நிய மனத்தின் பேரில் மேலவை உறுப்பின ராகி இராஜாஜி முதலமைச்சர் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

மந்திரி பதவி ஆசைக்காட்டி, மாணிக்க வேலரையும், இராமசாமி  படையாச்சியையும் தம் வலையில் விழ வைத்தார். முன்னவருக்கு 6 சட்டமன்ற உறுப்பினர்களும் பின்னவருக்கு  19 சட்டமன்ற உறுப்பினர்களும் இருந்தனர். மாணிக்க வேலருக்கு அமைச்சர் பதவி கொடுத்தார். 1954 இல் காமராசர் இராமசாமி படையாச்சிக்கு அமைச்சர் பதவி கொடுத்தார்.

இராஜாஜி ஆந்திராவில் பிரகாசத்திடம் இருந்து பிரிந்து சென்ற என்.ஜி.ரங்கா தலைமையிலான ‘கிரிஸ்கர்லோக் பார்ட்டியில்’ இருந்து சில உறுப்பினர் களை இழுத்தார். எப்படியோ ஒரு வகையில் மெஜாரிட்டியை நிரூபித்து விட்டு முதலமைச்சர் பதவியைத் தக்க வைத்துக் கொண்டார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் களாக இருந்தவர்களில்

தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள்  = 190

ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்     = 140

மலபார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் = 30

கன்னடப் பகுதியைச் சார்ந்தவர்கள் = 15

மொத்தம்       = 375    பேர்

அந்தத் தேர்தலில் வரலாறு காணாத அளவில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர் 62 பேர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தனர். தமிழ்நாட்டில் பெரியார் பிரச்சாரமும், ஆந்திராவில் தெலுங்கானா புரட்சியின் தாக்கமும் பிரகாசத்தின் கூட்டணியும் அதற்குக் காரணமாகும். தமிழ்நாட்டில் 14 பேர் மட்டுமே இந்தியப் பொதுவுடைமைக் கட்சியினர்.

தமிழ்ப் பகுதியைச் சார்ந்த 190 சட்டமன்ற உறுப்பினர்களில் இந்த 14 பேர் மட்டுமே வடக்கெல்லைக்கு ஆதரவு தரமாட்டார்கள்.  தங்கள் கட்சிக் கட்டுபாடு என்ற முறையில், மற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சி பாராமல் வடக்கெல்லைக்கு 176 பேர் ஆதரவளித்திருப்பார்கள். ஆந்திர சட்ட மன்ற உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையைவிட இது அதிகம் தான். இராஜாஜிக்குத் தமிழர்களுக்கு உதவி செய்ய விருப்பவில்லை. அவ்வளவுதான்.  ‘இராஜாஜி பரந்த தமிழகம் காண விழைந்தார்’ என்ற அருகோவின் கருத்தும் தவறானது ஆகும். (அருகோ தமிழர் இந்தியர் இல்லையா பக்கம் 4).

இராஜாஜி மொழிவாரி மாநிலக் கொள்கைக்கும் தொடக்கம் முதலே எதிராகத்தான் இருந்தார். இது பற்றி ம.பொ.சி கூறுவதாவது.

“பிரதமர் நேரு திடீர்ப் பிரகடனம் ஒன்றை வெளியிட்டார். அதாவது பசல்அலி கமிஷன் பரிந்துரையில் கண்டபடி மொழி வாரி ராஜ்யங்கள் அமைப்பதற்கு மாறாக, இந்தியாவை ஐந்து ராஜ்ஜயங்களாகச் செய்யும் திட்டமொன்றைத் திடீரென்று வெளியிட்டார். அவை தட்சிணம் (தெற்கு) ராஜ்யம், உத்திர  (வடக்கு) ராஜ்யம், மேற்கு ராஜ்யம், கிழக்கு ராஜ்ஜியம், மத்திய ராஜ்யம் என்பவனாம்......

நேருவின் திடீர்ப் பிரகடனத்தை இராஜாஜி அவர்கள் மன நிறைவோடு வரவேற்றார். அதற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவும் முற்பட்டார். முதல் கூட்டம் மயிலை விவேகானந்தர் கல்லூரியில் நடைபெற்றது. அதில் இராஜாஜி “மொழி வாரி அரசு காண விழைவோர் காட்டு மிராண்டிகள்” என்று கடுஞ் சொல் புகன்றார். இந்தக் கூட்டத்தில் நானும் கலந்து கொண் டேன்” (ம.பொ.சி. எனது போராட்டம் பக்.761) இராஜாஜி மொழிவாரி மாநிலம் கேட்பவர்கள் காட்டு மிராண்டிகள் என்று திட்டினாலும் ம.பொ.சிக்கு இனிக்கும். பெரியார் தமிழைக் காட்டுமிராண்டி மொழி என்று கூறினால் மட்டும் கசக்கும்.

(தொடரும்)

Pin It