வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (16)

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு.

பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும்.

இந்தியாவில் மொழிவழி மாநிலம் பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர் நீதிபதி எ.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத் நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர் களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது. 10.12.1948இல் இந்திய அரசிடம் இக்குழு அறிக்கையைக் கொடுத்தது. இப்போது உள்ள நிலையில் புதிய மாநிலம் எதையும் உருவாக்கத் தேவை யில்லை என்று இக்குழு கருதியது. அந்த அறிக்கையில் மொழிவாரி மாநிலம் பிரிக்கப்படும்போது ஒரு குறிப்பிட்ட பகுதியில் 70ரூக்கு மேல் ஒரே மொழியைப் பேசும் மக்கள் இருந்தால் தான் அதை ஒரு மொழிப் பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் 70ரூக்குக் கீழ் ஒரு மொழியைப் பேசும் மக்கள் உள்ள பகுதியை ‘இரு மொழியாளர் பகுதி’ (அ) பல மொழியாளர் பகுதி என்றே கருதவேண்டும் என்ற கருத்தை அறிவித்தது.

திருவாங்கூர், கொச்சி இரண்டு நாடுகளும் மன்னராட்சியில் இருந்து விடுபட்டு இந்திய அரசில் இணைந்துள்ள இரண்டு மாநிலத்தையும் ஒரே மாநிலமாக இணைக்கப் பரிந்துரைத்தது.

புதிய மாநிலப் பிரிவினை வேண்டாம் என்று அக்குழு கருத்தறிவித்ததால் ஆந்திரர்கள் கோபமுற்றனர். ஏனென்றால் அவர்கள் 1913 முதலே தனி மாநிலம் வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். அதற்காக 1937க்குப் பிறகு தீவிரமாகப் போராடி வந்தனர்.

1913இல் ஆந்திர மகாசபை உருவானது. அன்றைய சென்னை மாகாண அரசின் வேலைவாய்ப்பில் தமிழ் நாட்டுப் பார்ப்பனர்களும், மராத்தியப் பார்ப்பனர்களும் அதிக அளவில் இடம் பெற்றிருந்தனர். ஆந்திரப் பார்ப்பனர் களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே வேலை வாய்ப்புகள் கிடைத்தன. சென்னைப் பல்கலைக் கழகத்திலும் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்களே அதிகமாக இடம் பெற்றனர். ஆந்திர மாணவர்களுக்குப் போதுமான இடம் கிடைக்க வில்லை. இதன் காரணமாகவே தெலுங்குக்காரர் களுக்குத் தனிமாநிலம் வேண்டும் என்ற கோரிக்கை உருவானது. (Political History of Andhra Pradesh 1901-2009) (Innaiah-பக். 13) நாளடைவில் அந்தக் கோரிக்கை வலுப்பெற்று வந்தது.

1917இல் கல்கத்தாவில் அன்னிபெசன்ட் தலைமையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில், ‘ஆந்திரர்களுக்குத் தனி மாநிலம் வேண்டும்’ என்ற கோரிக்கை விண்ணப்பத்தை அளித்தனர். அன்னிபெசன்ட்டும் காந்தியும் அக்கோரிக்கையை ஏற்க மறுத்தனர். திலகர் அக்கோரிக்கையை ஆதரித்தார்.

காந்தி மொழி வாரியாக காங்கிரஸ்ஸ்கமிட்டிகளை அமைப்பதற்கு முன்பே ஆந்திரர்கள் 20.1.1918இல் நீதிபதி சுப்பராவ் தலைமையில் ஆந்திரப் பிரதேச காங்கிரஸ்ஸ் கமிட்டியை அமைத்துக் கொண்டனர். அதனால் வேறு வழி இன்றி காந்தி மொழிவாரியாகக் காங்கிரஸ்ஸ் கமிட்டிகளை 1920இல் அமைத்தார்.

எல்லா மாநிலக் காங்கிரஸ்ஸ் கமிட்டிகளுக்கும் தலை நகரை அந்த அந்த மாநிலத்திலே அமைத்த காங்கிரஸ் கட்சி ஆந்திரக் காங்கிரஸ்ஸ் கமிட்டிக்கு மட்டும் தலைநகரை ஆந்திராவில் அமைக்காமல் சென்னையிலே இருக்கும்படி அமைத்துவிட்டனர். இது முதல் தவறு. இது குறித்து ம.பொ.சி.யும் தமது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.

“சென்னை நகரில் ஆந்திரா இராஜ்ஜிய காங்கிரஸ் கமிட்டி அமைப்பதற்குத் தமிழ்நாடு காங்கிரஸ்ஸ்அங்கீகாரம் கொடுத்தது. சென்னை கார்ப்பரேஷன், சட்டசபைத் தேர்தல்களில் அபேட்சகர்களைப் பொறுக்கி எடுக்கும் வேலை யில் ஆந்திரக் காங்கிரசைக் கூட்டாகச் சேர்த்துக் கொண்டது. சென்னை நகருக்குரிய அசெம்ளி (சட்டசபை) தொகுதிகளில் சரி பாதியை ஆந்திரருக்கு அளித்ததோடு அத் தொகுதிகளுக்கு அபேட்சகர்களைப் பொறுக்கி எடுக்கும் உரிமையையும் ஆந்திர மாகாண காங்கிரசுக்கே வழங்கியது தமிழ்நாடு காங்கிரஸ்” (செங்கோல் 5.12.54)

தமிழகத்தின் வடக்கெல்லை தெற்கெல்லைப் பகுதிகளைத் தமிழ்நாடு காங்கிரஸ்ஸ் முழுமையாக தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரவில்லை, சித்தூர் பகுதி ஆந்திரக் காங்கிரஸ்சிடமும் தென் திருவிதாங்கூர் பகுதி திருவாங்கூர் - கொச்சி காங்கிரஸ்சிடமும் அளித்திருந்த தும் அப்பகுதிகள் நமக்குக் கிடைக்காமல் போனதற்கு ஒரு காரணம் என கோல்டன் சுப்பிரமணியம் தன்னுடைய ‘வடக்கெல்லைப் போராட்டமும் தணிகை மீட்சியும்’ என்ற நூலில் பக். 29இல் பதிவு செய்துள்ளார். (குறிப்பு: அவர் வடக்கெல்லையை மட்டும் குறிப்பிட்டிருந்தார்)

1948இல் ஜெய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் கமிட்டி மொழிவாரி மாநிலங்களை அமைக்க ஆய்வு செய்யுமாறு காங்கிரசில் இருந்த மூவர் குழுவை அமைத்தது. அந்தக் குழுவிற்கு (ஜெ.வி.பி.) குழு என்று பெயர். ஜவஹர்லால் நேரு, வல்லபாய் பட்டேல், பட்டாபி சீத்தாராமையா ஆகிய மூவர் அடங்கிய அந்தக் குழு ஆய்வு செய்து அகில இந்திய காங்கிரஸ்ஸ் கட்சியின் தலைமையிடம் அறிக்கையை 1.4.1949இல் அளித்தது.

அந்தக் குழுவிற்கும் மொழி அடிப்படையில் மாநிலங்களைப் பிரிப்பதற்கு விருப்பம் இல்லையெனினும் ஆந்திர மக்களின் போராட்டங்களைக் காரணமாகக் காட்டி ஆந்திராவை மட்டும் பிரித்துத் தனிமாநிலமாகக் கொடுக்கச் சிபாரிசு செய்தது. சென்னையை ஆந்திரர்கள் கேட்கக்கூடாது என்ற நிபந்தனையும் விதித்தது. (ஜெ.வி.பி. குழு அறிக்கை பக்.14) அக்குழுவில் இடம் பெற்றிருந்த பட்டாபி சீத்தாராமய்யா எவ்வளவோ முயன்றும் நேருவும், பட்டேலும் சென்னையை ஆந்திராவுக்குக் கொடுக்க மறுத்துவிட்டனர்.

1949இல் கூடிய காங்கிரஸ்ஸ் காரியக் கமிட்டி சென்னை மாகாண அரசாங்கத்தையும், ஆந்திர மாகாண காங்கிரஸ் கமிட்டியையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியையும் அழைத்து ஆந்திர மாநிலம் பிரிவினை தொடர்பான அனைத்து அம்சங்களையும் ஆராய்ந்து முடிவெடுக்க இந்திய அரசுக்குப் பரிந்துரை செய்துக் கேட்டுக் கொண்டது.

இந்திய அரசு இந்த மூவர் குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொண்டு ஆந்திரத்தைத் தனி மாநிலமாகப் பிரித்துக் கொள்ள சென்னை மாகாண அரசாங்கத்தையே ஒரு குழுவை அமைத்து முடிவு செய்யக் கேட்டுக் கொண்டது.

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் கடித எண். 651/49/15 நாள் 25.11.1949. இதன் அடிப்படையில் ஆந்திர மாநிலப் பிரிவினை தொடர்பாக ஒரு அதிகாரப் பூர்வ குழுவைச் சென்னை மாகாண அரசு அமைத்தது. அக்குழு அப்போதைய முதலமைச்சர் குமாரசாமி ராசா தலைமையில் அமைக்கப்பட்டது. அக்குழுவில் டி.பிரகாசம், டி.கோபால்ரெட்டி, என்.சஞ்சீவரெட்டி, காலா வெங்கட்ராவ் ஆகிய நால்வர் ஆந்திர காங்கிரஸ்சின் பிரதிநிதிகளாகவும், குமாரசாமிராசா, எம்.பக்தவச்சலம், டி.டி. கிருஷ்ணமாச் சாரி ஆகிய மூவர் தமிழகக் காங்கிரஸ்சின் பிரதிநிதி களாகவும், மாதவமேனன் கேரளக் காங்கிரஸ்சின் பிரதிநிதியாகவும் உறுப்பினர்களாக இருந்தனர். 17 முறை அக்குழு கூடி விவாதித்தது.

சென்னை மாகாண அரசு சென்னைக்கு ஈடாக ஆந்திராவில் புதிய தலைநகரை ஏற்படுத்திக் கொள்ள ரூபாய் ஒரு கோடி கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. அப்போது இருந்த சட்டமன்ற உறுப்பினர்களில் 95 பேர் ஆந்திராவுக்குப் பிரிந்து செல்ல வேண்டும் என்றும் மீதம் 174 உறுப்பினர்கள் சென்னை மாகாணத்திலேயே இருக்க வேண்டும் என்றும் முடிவு செய்யப்பட்டது. புதிய ஆந்திரத்தின் தலைநகர் ஆந்திர எல்லைக்குள் அமைய வேண்டும் என்றே முடிவு செய்யப்பட்டது. (பிரிவினைக் கமிட்டி அறிக்கை பக். 4)

ஆந்திராவின் உயர்நீதி மன்றம் ஆந்திர எல்லைக் குள் அமைய வேண்டும். சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகள் 16 பேரில் 7 நீதிபதிகள் புதிய ஆந்திர உயர்நீதி மன்றத்திற்குச் செல்ல வேண்டும். (அறிக்கை பக். 4)

ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் அனைவரும் புதிய ஆந்திர மாநில அரசுக்கு செல்ல வேண்டும். ICS அதிகாரிகளைப் பொறுத்து அவர்கள் இந்திய அரசால் நியமிக்கப்படுவதால் மொத்தம் உள்ள 43 பேரில் ஆந்திராவுக்கு 16 பேர் பேச்சுவார்த்தை மூலம் அவரவர்களின் விருப்பத்தை அறிந்து மத்திய அரசுக்குத் தெரிவித்துச் சுமூகமான முறையில் மாற்றிக் கொள்ள வேண்டும். (அறிக்கை பக். 28)

IAS அதிகாரிகள் மொத்தம் 28 பேர் சென்னை மாகாண அரசில் பணியில் இருந்தனர். அதில் 38ரூ மக்கள் தொகை அடிப்படையில் 11 பேர் ஆந்திராவுக்குச் செல்ல வேண்டும் என முடிவு செய்யப்பட்டது (அறிக்கை பக். 30)

சென்னை மாகாண அரசு எல்லாத் துறைகளைப் பற்றியும் விரிவாக ஆராய்ந்து ஆந்திர மாநிலப் பிரிவினை அறிக்கையை 25.12.1949இல் இந்திய அரசுக்கு அனுப்பியது.

இந்தியா குடிஅரசு நாளாக மலரவிருக்கும் 26.1.1950 இல் ஆந்திர புதிய மாநிலம் உருவாக்க இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குழுவின் முடிவைச் சென்னை மாகாண அரசின் கெசட் மூலம் பதிவு செய்து இந்திய அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.

அந்தக் குழுவில் இடம் பெற்றிருந்த டி. பிரகாசம் இதில் சில கருத்து வேறுபாடுகளைக் கொண்டிருந்தார். மின்சாரச் செலவினங்களுக்குத் தமிழ்நாடு பகுதிக்கு அதிக அளவில் ஏற்கெனவே செலவு செய்யப்பட்டிருப்பதால் புதிய ஆந்திர அரசுக்கு 20 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என்றார். (அறிக்கை பக். 2) சென்னை நகரிலுள்ள அரசு கட்டிடங்களை மதிப்பீடு செய்து அதற்கு ஏற்றாற்போல் ரூ. 1 கோடி என்பதை உயர்த்திக் கொடுக்க வேண்டும் என்றார்.

டி. பிரகாசம் தன்னுடைய எதிர்ப்புகளைத் தனியாக அதில் பதிவு செய்துள்ளார். ஆந்திராவில் புதிய உயர்நீதி மன்றம் கட்டும் வரையில் ஆந்திர உயர்நீதிமன்றம் சென்னையிலே இருக்கவேண்டும் என்ற கோரிக்கையை யும் அவர் முன் வைத்தார்.

ஆந்திரக் காங்கிரஸ் கமிட்டி 11.11.1949இல் கூடியபோது பட்டாபி சீதாராமய்யா கூறியது கருத்தாவது: “ஜெ.வி.பி. கமிட்டியில் சென்னை நகரத்தை ஆந்திரர்கள் கேட்கக் கூடாது என்று முடிவு செய்த காரணத் தினாலேயே அது தமிழர்களுக்குச் சொந்தம் என்று ஆகிவிடாது. ஜெ.வி.பி. கமிட்டியில் புதிய ஆந்திர அரசு தகராறுக்கு இடமில்லாத வகையில் அமைந்த 12 மாவட்டங்களைப் புதிய மாநிலமாக அமையும் என்று கூறியுள்ள தாலேயே சென்னையைத் தமிழர்களுக்கு விட்டுக் கொடுக்கவேண்டிய அவசியமில்லை.” (அறிக்கை பக்.5)

ஆந்திராவில் புதிய தலைநகரம் உருவாகும் வரை ஆந்திர அரசின் தலைமை அலுவலகங்கள் சென்னையிலே இருக்க வேண்டும். சென்னை மாநகரத்தையும் அதைச் சுற்றியுள்ள இருமொழி பேசுவோர் பகுதிகளையும் இணைத்துத் தனி அதிகாரியின் கீழ் மாகாணமாக ஆக்க வேண்டும். (அறிக்கை பக். 5) பட்டாபி சீத்தாராமையா இக்குழுவில் இடம் பெறவில்லை என்றாலும் அவருடைய கருத்துகளை டி. பிரகாசம் பதிவு செய்துள்ளார். ஆந்திர உயர்நீதி மன்றம் சென்னையில் இருக்கவேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை முன் வைத்தார். ஆனால் பெருவாரியான உறுப்பினர்கள். இவருடைய கோரிக்கைகளை ஏற்றுக் கொள்ளவில்லை. சென்னை நகரத்தில் தமிழருக்கு எந்த அளவு உரிமை இருக்கிறதோ அதே அளவு ஆந்திரருக்கும் உரிமை உள்ளது என்ற பிரகாசத்தின் கோரிக்கையைப் பிரிவினைக் குழு ஏற்றுக் கொள்ளவில்லை. சான்று: (Formation of Andhra Province - Report of the Partition Committee)

நேருவின் தலைமையிலான இந்திய அரசு வழக்கம் போல மாநிலப் பிரிவினையில் விருப்பம் இல்லாததால் இந்தக் குழுவின் அறிக்கையை வாங்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டது.

பொட்டி ஸ்ரீராமுலு சென்னை மயிலாப்பூரில் புலுசு. சாம்பாமூர்த்தி வீட்டில் தனி ஆந்திர மாநிலம் அமைக்க வலியுறுத்திச் சாகும் வரை உண்ணாவிரதம் மேற் கொண்டார். 19.10.1952 முதல் 15.12.1952 வரை 57 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்து விட்டார். பொட்டி ஸ்ரீராமுலு உண்ணாவிரதம் இருந்தபோதே பிரதமர் நேரு, அவர் இறப்பதற்கு முன் 9.12.1952இல் பாராளுமன்றத்தில் “ஆந்திரர்கள் சென்னை நகரைக் கேட்காமல் இருந்தால் தனி ஆந்திர மாநிலம் உருவாக்குவது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று அறிவித்தார். (Political History of Andhra Pradesh 1909 - 2009 by Narisatti Innaiah பக். 44)

பொட்டி ஸ்ரீராமுலு 15.12.1952இல் இறந்த பிறகு ஆந்திராவில் பெரும் வன்முறை மூண்டது. விஜயவாடா இரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர். துணை இராணுவப் படை வரவழைக்கப்பட்டது. துப்பாக்கிச்சூடு நடைபெற்றுச் சிலர் கொல்லப்பட்டார்கள். மேலும் போராட்டம் அதிக அளவில் வெடித்த பிறகுதான். நேரு பாராளுமன்றத்தில் 19.12.1952 அன்று நாடாளுமன்றத்தில் தனி ஆந்திர மாநிலம் உருவாக்கப்படும் என்று அறிவித்தார். புதிய ஆந்திர மாநிலத்தை உருவாக்கு வதற்காக நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழுவை அமைத்தது மத்திய அரசு.     

 (தொடரும்)

Pin It