இந்தியாவின் நான்காவது பெரிய மாநிலமாகிய ஆந்திரப் பிரதேசம் தெலங்கானா, கடலோர ஆந்திரம் (ஆந்திரா), ராயலசீமை என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டது. இவற்றில் தக்காணப் பீடபூமியில் அமைந்துள்ள பெரும் நிலப் பரப்பாகிய தெலங்கானா என்னும் பகுதியே இன்று பரபரப்பாகப் பேசப்படுகிறது.

தெலங்கானா பகுதி கிழக்கே கடலோர ஆந்திரத்தையும், மேற்கே கருநாடகத்தையும் மகாராத்திரத்தையும், வடக்கே மத்திய பிரதேசத்தையும், தெற்கே ராயலசீமையையும் தனது எல்லைகளாகக் கொண்டது. இவை இன்றைய தெலங்கானாவின் எல்லைகள் மட்டுமே, வரலாற்று வழிப்பட்ட எல்லைகள் அல்ல என்பதே இன்றைய தெலங்கானா தனி மாநிலக் கிளர்ச்சிகளுக்கு அடிப்படை. இந்த எல்லைகள் பற்றிப் புரிந்து கொள்வதற்கு நாம் வரலாற்று வழியில் பயணப்பட வேண்டியுள்ளது.

தெலங்கானாவைக் கிமு 2ஆம் நூற்றாண்டு முதல் சதவாகனர்கள் தொடங்கி பலரும் ஆண்டு வந்தனர். கரீம்நகரைச் சேர்ந்த தர்மபுரி பல ஆண்டுகள் தலைநகராக விளங்கி வந்தது. பின்னர் சாளுக்கியர்களும், ககாதியர்களும் ஆண்டனர். ககாதியர்களின் ஆட்சியில் மக்களின் பங்களிப்பு நன்கு இருந்தது. மக்கள் நலத் திட்டங்களும் நிறைவேற்றப்பட்டன. பின்னர் வந்த பகாமனியர்களின் ஆட்சி மக்கள் விரோத ஆட்சியாகச் செயல்படத் தொடங்கியது. இந்தக் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராடத் தொடங்கினர். கோல்கொண்டாவின் யாதவ அரசி பகாமியருக்கு எதிராகப் போரிட்டு மாண்டார். இது இந்தப் பகுதியில் தன்னாட்சிக்காக நடந்த முதல் கிளர்ச்சி எனக் கொள்ளலாம். பகாமனி சுல்தான்கள் வலுவீனமடைந்த காலக் கட்டத்தில் அதனை வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்ட குலி குதாப் என்பவர் (பெர்சியாவில் ஹமாடனில் பிறந் த இவர் வணிகத்துக்காகத் தெலங்கானா வந்து பகாமணி சுல்தான் மூன்றாம் மொகமத் ஷாவுக்கு நெருக்கமானார்) 1518இல் குதுப்ஷஹாய் ஆட்சியை தொடங்கி வைத்தார். இவர் தெலுங்கு பேசும் பகுதிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்தார். தொடர்ந்து ஜாம்ஷீத், இப்ராகிம் ஆகியோர் ஆட்சி செய்தனர்.

1580இல் ஆட்சிக்கு வந்த வந்த குதுப்ஷா தலைநகரைக் கோல்கொண்டாவிலிருந்து ஐதராபாத்துக்கு மாற்றினார். இந்தப் பரம்பரரையில் வந்த மொகம்மது குதுப் ஷா தக்காணப் பீடபூமியை ஆண்டவர்களுடன் ஒருங்கிணைந்து மொகலாயர்களை எதிர்த்தார். குதுப்ஷகாய் ஆட்சியின் கடைசி மன்னனாகிய சயீத் அகமது ஷாஜகான் அனுப்பிய படையினரிடம் தோற்றார். இருப்பினும் மொகலாயர்கள் மாறி மாறித் தோற்றுக் கொண்டிருந்தனர். இறுதியில் அவுரங்கசீப்பின் படை 1687இல் கோல்கொண்டா கோட்டையைக் கைப்பற்றியது. அவுரங்கசீப்பின் தளபதியாகிய காசி-உத்-டின் கான் ஃபெரோஸ் ஜங் என்பவரின் மகன் மிர் கம்ருதீன் சின் கிலிச் கான் ஐதராபாத் அரசை நிறுவினார். 1713இல் அவுரங்கசீப் மறைவுக்குப் பிறகு வந்த பேரரசர் ஃபரூக்சியர் என்பவர் மிர் கம்ருதீனுக்கு நிஜாம்-உல்-முல்க் ஃபெரோஸ் ஜங் என்னும் பட்டத்தை அளித்துத் தக்காணப் பீடபூமியின் வைசிராய் ஆக்கினார். 1724இல் தில்லியைச் சார்ந்திராத ஆட்சியாக தனது அரசை அறிவித்துக் கொண்டார். இதுவே நிஜாம் ஆட்சியின் (ழிவீக்ஷ்ணீனீ ஞிஹ்ஸீணீstஹ்) தொடக்கமும் ஆகும். நிஜாம் 1799இல் திப்பு சுல்தானை வீழ்த்துவதற்குக் கிழக்கிந்தியக் கம்பெனிக்கு உதவினார். பிரித்தானியர்களும் தாங்கள் வென்ற பரப்பின் ஒரு பகுதியை நிஜாமுக்கு வழங்கினர். நிஜாம் ஆண்ட இந்த மொத்தப் பகுதியே ஐதராபாத் சமஸ்தானம் எனப்பட்டது. இது பிரித்தானியருக்குக் கீழ்ப்பட்ட ஒரு குறுநில சமஸ்தானமாகத் திகழ்ந்து வந்தது. இந்த ஐதராபாத் சமஸ்தானத்தில் தெலங்கானாப் பகுதி 50%, மராத்வாடா பகுதி (மராத்தியம்) 22%, கன்னடப் பகுதி 22% ஆகும்.

இது பிரித்தானியர் ஆட்சிக்குக் கீழ்ப்பட்டிருந்தாலும் ஏனைய இந்தியப் பகுதிகளின் சட்ட திட்டங்கள் இங்கு பொருந்த மாட்டா. எனவே கடலோர ஆந்திரமும் ராயலசீமையும் பிரித்தானியருக்கு அடங்கியிருக்க, தெலங்கானாப் பகுதி மட்டும் முஸ்லீம் நிசாம்களின் ஆட்யின் கீழ் இயங்கி வந்தது. பிரித்தானியர்களின் கீழிருந்த ஆந்திரப் பகுதியில் முதலாளித்துவப் பொருளாதாரமும் சனநாயகமும் வளரத் தொடங்கின. எனவே தொழிற்சாலைகள் பெருகின. வேளாண்மை இயந்திரமயமானது. சனநாயகச் சட்ட திட்டங்கள் வடிவம் பெறத் தொடங்கின. கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுச் சாதிய ஆதிக்கம், குறிப்பாகப் பார்ப்பனிய ஆதிக்கம் பையப் பையத் தளரத் தொடங்கியது.

அதேபோது நிசாம் ஆட்சியில் அடங்கிய தெலங்கானாப் பகுதியில் நிலப்பிரத்துவப் பிற்போக்குத்தனங்கள் பெருகிக் கிடந்தன. கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்டது. மேலும் இந்தப் பகுதியில் பேசப்பட்ட மக்களின் தாய்மொழிகளில் (தெலுங்கு, கன்னடம், மராத்தியம்) கல்வி மறுக்கப்பட்டது. நிஜாம்களும், முஸ்லீம்களும் பேசிய மொழியே ஆரம்பக் கல்வி முதல் பயிற்று மொழியாக இருந்தது. அரசு நிர்வாகங்களிலும் நீதித் துறையிலும் உருது பேசும் முஸ்லீம்களே பணியில் அமர்த்தப்பட்டனர். தாய்மொழியில் நூலகங்களோ இலக்கியச் சங்கங்களோ தொடங்குவதற்குக் கூட அரசு அனுமதி பெற வேண்டும். எனவே வெறும் 6 விழுக்காட்டினரே எழுத படிக்கத் தெரிந்தவர்களாய் இருந்தனர். மக்கள் பண்பாட்டு அடிப்படையிலும் ஒடுக்கப்பட்டனர். உழைவர்கள் கடும் சுரண்டலுக்கு உள்ளாயினர். அரசுப் பண்ணை நிலங்களில் வேலை பார்ப்பதற்குக் கூலி அறவே மறுக்கப்பட்டது. தலித்துகள் தேஷ்முக் உள்ளிட்ட மேல் சாதியினரால் படு மோசமாக ஒடுக்கப்பட்டனர்.

இந்தக் கொடுமைகளை எதிர்த்து உழவர்கள் கிராம ராஜ்யங்களை அமைத்தனர். பண்ணையார்களின் நிலங்களைக் கைப்பற்றிக் கொண்டனர். இதுவே தெலங்கானப் புரட்சி எனப்படும் போராட்டத்தைத் தொடக்கி வைத்தது. உழவர்கள் தலைமையில் கம்யூனிஸ்டுகள் நடத்திய இந்தப் புரட்சி இந்தியா விடுதலை பெறுமுன்பே, 04.07.1946 அன்று தொடங்கியது. 15 ஆகத்து 1947 அன்று இந்தியா விடுதலைக் கேளிக்கைகளில் ஈடுபட்டிருக்க தெலங்கானத்து மக்களோ நிஜாம் மன்னராட்சிக்கு எதிரான போராட்ட வேள்வியில் தங்களைப் பலியிட்டுக் கொண்டிருந்தனர். நிஜாம் மன்னர் சுதந்திர இந்தியாவில் சேர மறுத்தார். சமஸ்தானங்களின் விருப்பத்தைப் பொறுத்து அவை தனித்தோ, பாகிஸ்தானுடன் இணைந்தோ, இந்தியாவுடன் இணைந்தோ செயல்படலாம் என இந்தியா ஆங்கிலேயருடன் செய்து கொண்ட உடன்படிக்கைக்கு இணங்க ஐதரபாத் நிஜாம் தனித்தே செயல்பட விரும்பினார். எனவே ஐதராபாத் சமஸ்தானம் இந்தியாவுடனோ பாகிஸ்தானுடனோ இணையாது தனித்தே இயங்கி வந்தது.

தெலங்கானா உழவர் புரட்சி பெரும் எல்லைகளைத் தொட்டது. ஆனால் இப்போரட்டத்தில் கன்னடர்கள், மராத்தியர்களின் பங்களிப்பு பெருமளவு இல்லை என்றே சொல்ல வேண்டும். இந்தப் போராட்டம் 04.07.1946 வரை நிஜாமுக்கு எதிராக மட்டுமே நடைபெற்று வந்தது. அப்போதுதான் 'ஆசிய ஜோதி' நேருவின் அரசு 'இரும்பு மனிதர்' எனப்படும் வல்லபாய் பட்டேல் உதவியுடன் பெரும்படையை ஐதராபாத்துக்குள் ஏவி விட்டது. அதற்குப் 'போலீஸ் நடவடிக்கை' எனப் பெயரிட்டது. 50,000 பேர் கொண்ட படை தெலங்கனா எங்கும் முகாமிட்டது. இது அன்றைய இந்திய இராணுவத்தில் கால் பங்கு ஆகும். பாகிஸ்தானுக்கு எதிரான போரில் கூட இவ்வளவு படைகள் ஈடுபடவில்லை. இந்தப் படை உழவர்களின் நிலங்களைப் பிடுங்கி தேஷ்முக் வகுப்பைச் சேர்ந்த பண்ணையார்களிடம் ஒப்படைப்படைக்க முயன்றது. ஆறாயிரத்துக்கு மேற்பட்ட உழைப்பாளர்களை இந்திய இராணுவம் கொன்று குவித்தது. முகாம்களில் அடைக்கப்பட்டு நோயினால் பீடிக்கப்பட்டு இறந்த ஆயிரக்கணக்கான ஏழை எளியோர் எண்ணிக்கை இதில் அடங்காது. பெரும் இராணுவ அடக்குமுறைக்குப் பின்பு 21.10.1951 அன்று உழவர் போராட்டம் முடிவுக்கு வந்தது. இந்திய இராணுவம் வென்றது.

இந்தியாவுக்குள் திணிக்கப்பட்ட ஐதராபாத் மாகாணத்துக்குப் பொதுத் தேர்தல் 1952இல் வருகிறது. புருகல் ராமகிருஷ்ண ராவ் முதலமைச்சர் ஆகிறார். அந்தக் காலக் கட்டத்தில் ஐதராபாத் குடியிருப்புச் சட்டம் இயற்றப்பட்டது. இது நவீன இந்திய வரலாற்றின் மிக முற்போக்கான சட்டங்களில் ஒன்று. நீண்ட நெடிய தெலங்கானா வரலாற்றில் 1952 முதல் 1956 வரையிலான இந்தக் காலக் கட்டத்தைத் தெலங்கான வரலாற்றின் பொற்காலம் எனலாம். அந்தக் காலத்தில் இந்திய அரசு ஆந்திராவைச் சேர்ந்த தனது அதிகாரிகள் பலரை ஐதராபாத்தில் நியமித்தது. இப்படி ஆந்திரப் பகுதியினர் ஐதராபாத்தில் குவிவதை எதிர்த்து முல்கி போராட்டம் வெடித்தது (முல்கி என்றால் உருது மொழியில் அரசைச் சேர்ந்தோர் அல்லது உள்ளூர்வாசிகள் எனப் பொருள்,). இதே காலக் கட்டத்தில்தான் 19.10.1952 அன்று பொட்டி ஸ்ரீ ராமுலு சென்னை மாகாணத்திலிருந்து ராயல்சீமை உள்ளிட்ட ஆந்திரம் பிரிய வேண்டுமெனக் கோரி சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இதனை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை. அவர் தான் வைத்த கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையில் தொடர்ந்து உண்ணா விரதமிருந்து 15.12.1952 அன்று காலமானார். இது ஆந்திரத்தில் பெரும் போராட்டத்தைக் கிளறி விட்டது. மக்களும் மாணவர்களும் சென்னை மாகாணத்திலிருந்து ஆந்திரம் விடுபட வேண்டுமெனக் கோரி தொடர் போராட்டங்களை நடத்தினர். 01.10.1953 அன்று தெலங்கானா நீங்கிய ஆந்திரப் பிரதேசம் கர்னூலைத் தலைநகராகக் கொண்டு உருவானது.

தெலுங்கு பேசும் மக்களைக் கொண்ட தெலங்கானாப் பகுதியை ஐதராபாத் சமஸ்தானத்திலிருந்து பிரித்துப் புதிதாக உருவாகியிருந்த ஆந்திரப் பிரதேசத்துடன் சேர்த்து விசால ஆந்திரத்தை உருவாக்க வேண்டும் என்னும் கோரிக்கை ஆந்திராவில் எழுந்தது. தெலங்கானாப் பகுதியின் வளங்களைத் திருடிச் செல்வதற்கு ஆந்திரப் பார்ப்பனர்களும் ரெட்டிகளும் கம்மாக்களும் செய்யும் சதியே இதுவெனத் தெலங்கானாப் பகுதியினர் ஐயுற்றனர்.

இந்நிலையில், மொழியின் அடிப்படையில் மாநிலங்களைப் பிரிக்கும் நோக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி ஃபசல் அலி தலைமையில் மாநிலங்கள் மறுசீரமைப்பு ஆணைக்குழு (ஷிtணீtமீs ஸிமீஜீக்ஷீரீணீஸீவீsணீtவீஷீஸீ சிஷீனீனீவீssவீஷீஸீ (ஷிஸிசி)) ஒன்றை அன்றைய பிரதமர் நேரு நியமித்தார். இது ஃசல் அலி ஆணைக்குழு என்றும் அறியப்படுகிறது. இந்தக் குழுவின் சார்பாக ஃபசல் அலி 1955இல் முன்வைத்த தனது அறிக்கையில் தெலங்கானாவை ஆந்திராவுடன் சேர்ப்பது குறித்து ஐயத்தைக் கிளப்பினார். இந்தச் சேர்க்கை நடந்தால், ஏற்கெனவே ஆங்கிலக் கல்வி பெற்று முன்னேறியுள்ள ஆந்திரப் பகுதியினர் பல தலைமுறைகளாகக் கல்வியறிவற்றுப் போன தெலங்கானா மக்களை ஒடுக்கக் கூடுமெனக் கூறினார். தெலங்கானா பீடபூமி நிலம், ஆந்திராவோ சமவெளிப் பரப்பு, எனவே ஆற்று வளங்களை ஆந்திரம் அபகரித்துக் கொள்ளக் கூடுமெனக் கருதினார். எனவே இந்தச் சேர்க்கைக்குத் தெலங்கானா சட்டமன்றத்தில் மூன்றில் இரு பங்கு பெரும்பான்மையைப் பெறுவதே சரியெனக் கருத்துரைத்தார். இதனை 1961 தேர்தலின் போது முடிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறினார். இரு பகுதிகளுக்கான இந்த வேறுபாட்டுக்கான காரணங்களை நாம் ஏற்கெனவே கண்டோம்.

ஆனால் ஷிஸிசி பரிந்துரையை நேரு கண்டுகொள்ளவில்லை. மேலும் இந்த இணைப்பு தெலங்கானா மக்களின் விருப்பத்துக்கு எதிரானது என்று தெலங்கானா முதலமைச்சர் ராமகிருஷ்ண ராவ் கூறிய கருத்தையும் காதில் போட்டுக் கொள்ளவில்லை. இதுதான் தெலங்கானா மீது இந்தியா காட்டிய முதல் அலட்சியம். தெலங்கானா மக்களின் கருத்து எதையும் கேட்காமலேயே 01.11.1956 அன்று தெலங்கானா ஆந்திராவுடன் இணைக்கப்பட்டது. ஆந்திராவின் (கடலோர ஆந்திரம், ராயலசீமை ஆகியவற்றின்) தலைநகரம் கர்னூலிலிருந்து ஐதராபாத்துக்கு மாறியது. தெலங்கானா பகுதியில் கன்னடம் பேசும் பகுதி கருநாடகத்துடனும், மராத்தியம் பேசும் பகுதி மகாராத்திரத்துடனும் இணைக்கப்பட்டன. இந்தியாவிலேயே ஆந்திரப் பிரதேசந்தான் மொழிவாரியாக அமைக்கப்பட்ட முதல் மாநிலமானது.

ஆனாலும் இந்த வேறுபாடுகளைக் களையும் நோக்கில் ஆந்திர முதலமைச்சர் கோபால் ரெட்டியும், தெலங்கானா முதலமைச்சர் ராமகிருஷ்ண ராவும் ஓர் உடன்படிக்கை செய்து கொண்டனர். இதனையே பண்பாளர் உடன்படிக்கை 1956 (Gentlemen's Agreement 1956)என்கின்றனர். தெலங்கானாப் பகுதி முன்னேற்றங்களைக் கண்காணிப்பதற்குத் தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மண்டல நிலைக் குழு ஒன்றை இந்த உடன்படிக்கை நியமித்தது. இந்தக் குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கெனவே நடப்பிலிலிருந்த முல்கி சட்டம் (12 ஆண்டு ஐதராபாத்தில் வசித்தவர்கள் மட்டுமே அங்கிருக்கலாம் என்னும் சட்டம்) ஒழுங்காக நடைமுறைப்படுத்தப்படுகிறதா என்றும் இந்தக் குழு கண்காணிக்கும் (1919 நிஜாம் ஆட்சியிலேயே இந்த முல்கி சட்டம் நடைமுறையில் இருந்ததையும், அன்னியர் 15 ஆண்டு வசிக்க வேண்டும் என்பதே அன்றைய விதியாக இருந்ததையும் ஈண்டு குறிப்பிடலாம்). மாநிலத்தின் மொத்த வரவு செலவுகளை மக்கள் தொகை அடிப்படையில் இரு பகுதிகளுக்கும் இந்தக் குழு பிரித்தளிக்கும். ஆந்திர, தெலங்கானா அமைச்சர்களின் எண்ணிக்கை முறையே 60:40 என்றளவில் இருக்க வேண்டும்; ஒரு பகுதியைச் சேர்ந்தவர் முதலமைச்சராக இருந்தால் மற்பொரு பகுதியைச் சேர்ந்த ஒருவர் துணை முதலமைச்சராக இருக்க வேண்டும். இதுதான் 14 கூறுகளைக் கொண்ட பண்பாளர் உடன்படிக்கையின் சாரம்.

ஆனால் அடுத்து வந்த காலங்களில் ஆந்திர அதிகார வர்க்கமும் அரசியல்வாதிகளும் மண்டல நிலைக் குழுவின் பற்களைப் பிடுங்கி, அதன் பரிந்துரைகளை குப்பைக் கூடையில் விசிறி எறிந்தனர். தெலங்கானாவுக்கு மக்கள்தொகை விகிதாச்சார அடிப்படையில் நிதியுதவி செய்தல், 40% அமைச்சர் பதவி அளித்தல், துணை முதலமைச்சர் அளித்தல், முல்கி சட்டத்தை நிறைவேற்றுதல் என ஒன்றைக் கூட எந்த அரசும் பின்பற்றாமல் (இன்று வரை) தெலங்கனா மக்களுக்குப் பெருந்துரோகம் புரிந்தது.

மறுபுறம், ஆந்திர மக்கள் தெலங்கானா குறித்துப் பல்வேறு கருத்துகளையும் வரித்து வைத்துக் கொண்டிருந்தனர். தெலங்கானா மக்கள் தெலுங்கு மொழி சரிவரப் பேசத் தெரியாதவர்கள், சோம்பேறிகள், குற்றவாளிகள், முட்டாள்கள் என ஆந்திர மக்கள் கேலி செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்தச் சிந்தனைப் போக்கு அதிகார வர்க்கம் வரை பரவி நீக்கமற நிறைந்துள்ளது. இது தெலங்கானா மக்களுக்கு எதிரான போக்கை மென்மேலும் பெருக்கிச் சென்றது. இன்றுங்கூட தெலுங்குத் திரைப்படங்களில் கதாநாயகன் ஆந்திராவைச் சேர்ந்தவனாகவும், வில்லன் தெலங்கானாவைச் சேர்ந்தவனாகவும் காட்டப்படுவது இந்தச் சிந்தனைப் போக்கின் வெளிப்பாடே அன்றி வேறன்று.

இப்படி 1956 தொடங்கியே எந்த ஒழுங்குக்கும் ஆந்திர அரசு படியாது சிக்கல்கள் முற்றிச் சென்றன. பரப்பளவிலும், மக்கள்தொகையிலும் ஆந்திரம், இராயலசீமை ஆகியவற்றை விட விஞ்சி நிற்கும் தெலங்கானா பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை, வேளாண்மை என அனைத்துத் துறைகளிலும் பின்தங்கியிருந்தது. இந்த அவல நிலையை எதிர்த்துத் தெலங்கானா மாணவர்கள் 06.12.1968 அன்று ஐதராபாத்தில் உள்ள விவேக் வர்த்தின் கல்லூரியிலிருந்து ஊர்வலம் சென்றனர். இதனைக் காவல் துறையினரும், ஆந்திர அரசியவல்வாதிகள் ஏற்பாடு செய்த ரௌடிகளும் கடுமையாகத் தாக்கினர். இது 1969ஆம் ஆண்டுக்கும் சென்றது. இதுவே 1969 தெலங்கானா இயக்கம் என அறியப்படுகிறது. அற வழிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களைக் காவல்துறை ஈவிரக்கமின்றிச் சுட்டுக் கொன்றது. வழக்குரைஞர் கி. மாதவன் தலைமையில் தெலங்கானா பிரஜா சமிதி என்னும் அமைப்பு உருவானது. இந்த அமைப்பு நடத்திய பல போராட்டங்களையும் தடுக்கும் முயற்சியில் காவல்துறையினர் துப்பாக்கிச் சூடு நடத்திப் பலரையும் கொன்று குவிக்கவே மாணவர்கள் கிளர்ந்தெழுந்தனர். 01.01.1969 இவ்வியக்கத்தின் பொன்னாள். அன்றுதான் மக்கள் சார்மினார் பகுதியில் காவல்துறை விதித்திருந்த தடையையும் மீறி பல்லாயிரக்கணக்கில் கூடிக் களமிறங்கிப் போராடினர். காவலர்கள் துப்பாக்கியால் சுட்டு மக்களைக் கொன்று கொண்டிருந்தும் மக்கள் இடைவிடாது ஊர்வலத்தை ராஜ் பவன் வரை நடத்திச் சென்றது பெருந்தியாகம்! இந்த 1969 போராட்ட ஆண்டில் 400 மாணவர்கள் போலீஸ் அடக்குமுறையில் உயிரிழந்தனர்.

போராட்டங்களின் விளைவாக 1969 ஆந்திர அரசு ஓர் அரசாணை (நிளி 36) வெளியிட்டு, அதன்படி 25,000 அயல் ஊழியர்கள் வெளியேற்றப்படுவார்கள் என அறிவித்தது. ஆனால் ஆந்திர உயர் நீதிமன்றம் முல்கி சட்டம் தவறெனத் தீர்ப்பளித்தது. இதனை எதிர்த்து மாநில அரசு உச்ச நீதிமன்றம் சென்றது.

இந்நிலையில் சென்னா ரெட்டி 21.05.1969 அன்று தெலங்கானா பிரஜா சமிதி தலைவரானார். இந்த இயக்கம் அவர் தலைமையில் 1971 பொதுத் தேர்தலில் போட்டியிட்டுத் தெலங்கானவில் பெருமளவிலான நாடாளுமன்றத் தொகுதிகளையும், சட்டமன்றத் தொகுதிகளையும் வென்றது. ஆனால் அவரோ மொத்த வெற்றியையும் இந்திரா காந்தியின் கால்களில் காணிக்கையாக்கி காங்கிரசில் இணைந்து முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். இருப்பினும் அவர் இந்திரா உதவியுடன் தெலங்கானா மக்களின் உரிமைகளைப் பெற்றுத் தருவதாக வாக்களித்தார்.

ஆந்திர அரசின் மேல்முறையீட்டு வழக்குக்கான தீர்ப்பு 1972இல் முல்கி சட்டத்துக்கு ஆதரவாக வெளியானது. இதனை எதிர்த்து உடனே ஆந்திராவில் 'ஜெய் ஆந்திரா' என்னும் இயக்கம் உருவானது. கடலோர ஆந்திரா எங்கும் கிளர்ச்சிகள் வெடித்தன. உடனே இந்திராகாந்தி பண்பாளர் உடன்படிக்கை உள்ளிட்டப் பழைய திட்டங்களை எல்லாம் தூக்கியெறிந்தார். இந்த உச்ச நீதிமன்ற ஆணையையே 1973இல் நாடாளுமன்றத்தில் ஒரு சட்டத் திருத்தம் கொண்டு வந்து ஒன்றுமில்லாதடித்தார். அதாவது தனது கட்சியின் மாநில முதலமைச்சர் ஒருவர் கொண்டு வந்த சட்டத்தை உச்ச நீதிமன்ற ஆதரவு இருந்தும் கிழித்துப் போட்டார். புதிதாக ஆறு அம்சத் திட்டம் ஒன்றை முன்வைத்தார். இது ஏற்கெனவே இருந்த பல ஒப்பந்தங்களையும் மீறியது. குறிப்பாக ஆறாவது கூறு மண்டல நிலைக் குழுவையும், முல்கி சட்டத்தையும் தூக்கி எறிந்தது. இருந்தாலும் தெலங்கானா மைந்தர்களுக்கு கல்வி நிலையங்களிலும் அரசு அலுவலகங்களிலும் குறிப்பிட்ட அளவு இடஒதுக்கீடு தருவதென முடிவானது. இதற்கு ஆதரவாகக் குடியரசுத் தலைவரின் ஆணை வெளிவந்தது. 1975இல் நாடாளுமன்றத்தில் இதற்கெனச் சட்டத் திருத்தமும் கொண்டுவரப்பட்டது. ஆனால் இதற்கான அரசு அறிவிக்கை வெளியிடுவதற்கே 1986 வரை ஆகி விட்டது! இவ்வளவு தாமதமாக வந்த இந்தச் சட்டமுங்கூட நடைமுறைக்கு வராமலே போயிற்று.

அடுத்து வந்தார் என்டிஆர்! தெலுங்குத் திரைப்படங்களில் கண்ணன் வேடமிட்டே மக்களைக் கவர்ந்து, தெலுங்கு தேசம் என்னும் கட்சியைத் தொடங்கி ஆட்சியைப் பிடித்த என். டி. ராமாராவ் 30.12.1985 அன்று ஓர் அரசாணையை (610 நிளி) வெளியிட்டார். இதன்படி, 1975-85 காலக் கட்டத்தில் வேலைப் பிரிப்புகளில் ஏற்பட்ட பிழைகளைச் சரிசெய்யும் விதமாக, தெலங்கானா பகுதியில் பணியமர்த்தப்பட்ட ஆந்திர ஊழியர்கள் ஆந்திராவுக்கே திருப்பி அனுப்பப்பட்டு அவ்விடங்களில் தெலங்கானா மக்கள் அமர்த்தப்படுவர் என்றும், இதனை நிறைவேற்றுவதற்குக் கடைசி நாள் 31.03.1986 என்றும் அறிவிக்கப்பட்டது. இதன்படி 59,000 ஆந்திர ஊழியர்கள் ஆந்திராவுக்கே திருப்பி அனுப்பப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? அடுத்த 20 ஆண்டுகளில் ஆந்திர ஊழியர்களின் எண்ணிக்கை இரண்டரை லட்சத்துக்கு உயர்ந்ததுதான் மிச்சம். பிறகு என்டிஆர் உருப்படியாக ஏதும் செய்யாமல் இறந்தும் போனார்.

என்டியாரிமிருந்து பதவியைப் பறித்து ஆட்சிக்கு வந்த அவரது மருமகன் சந்திரபாபு நாயுடுவும் உருப்படியாக ஏதும் தெலங்கானா மக்களுக்குச் செய்யவில்லை. அத்துடன் அவர் தெலங்கானா பிரிவினையைக் கடுமையாக எதிர்த்தார். தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியத் தலையான கே. சந்திரசேகர ராவ் அன்றைய சட்டமன்றத்தில் துணை அவைத்தலைவராக இருந்தார். நாயுடுவிடம் அமைச்சர் பதவி கேட்டார் ராவ். தர மறுத்தார் நாயுடு. அமைச்சர் பதவி கிடைக்காத ராவ் திடீரெனத் தெலங்கானா பற்றாளர் ஆனார். தெலங்கானா ராஷ்டிர சமிதி என்ற கட்சியை 2000இல் நிறுவினார். 2000 நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் சந்திரசேகர ராவ் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி கண்டு போட்டியிட்டார். பாரதிய ஜனதாவுக்கு மாநிலங்களைத் துண்டாடுவதில் உடன்பாடு உண்டுதான். ஆனால் தெலங்கானா பிரிவினை சந்திரபாபு நாயுடுவுக்கு ஒவ்வாது என்பதால் பாரதிய ஜனதா அதனைச் செய்யவில்லை. 2004இல் நடைபெற்ற சட்டமன்ற, நாடாளுமன்றத் தேர்தல்களில் காங்கிரசுடன் கூட்டணி கண்டார் ராவ். காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் சேர்ந்து அமைச்சர் பதவியும் பெற்றார் ராவ். தெலங்கான பிரிவினைக் கோரிக்கையை காங்கிரஸ் கூட்டணி அரசின் குறைந்தபட்சப் பொதுத் திட்டத்திலும் சேர்த்தார். ஆனால் காங்கிரஸ் உருப்படியாக ஒன்றும் செய்யாமல் போகவே 2006இல் காங்கிரஸ் கூட்டணி அரசுக்குக் கொடுத்து வந்த ஆதரவைத் திரும்பப் பெற்றார். 2006 திசம்பரில் டிஆர்எஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகினர். இந்த இடங்களுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் அது தோல்வியையே தழுவியது.

ஆனாலும் காங்கிரசிலும் தெலுங்கு தேசத்திலும் அழுத்தம் அதிகரித்துச் சென்றது. காரணம், தெலுங்கு தேசம் கட்சியின் துணையத் தலைவர் தேவ கௌட் கட்சியிலிருந்து விலகி தெலங்கானாவுக்கு ஆதரவாக நவ தெலங்கனா பிரஜா கட்சியை ஆரம்பித்தார். 09.10.2008 அன்று சந்திரபாபு நாயுடு தனது கட்சி வரலாற்றிலேயே முதல் முறையாகத் தனித் தெலுங்கானாவை ஆதரிப்பதாகக் கூறினார். பிப்ரவரி 2009இல் காங்கிரசு அரசும் தனித் தெலங்கா£னா கோரிக்கையைக் கொள்கையளவில் ஆதரிப்பதாக அறிவித்தது. ஆந்திராவில் 2009 நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்கள் நெருங்கிய நிலையில் அனைத்துப் பெரிய கட்சிகளும் தனித் தெலங்கானாவை ஆதரித்தன. பிரஜா ராஜ்யம் என்னு கட்சியைத் தொடங்கி தேர்தல் நாடகத்தில் குதித்த சிரஞ்சிவீயும் இதனை ஆதரிக்கத் தவறவில்லை. நவ தெலங்கானா கட்சி சிரஞ்சீயுடன் சேர்ந்து கொண்டது. 2009 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களில் சந்திரசேகர ராவ் தெலுங்கு தேசத்துடன் கூட்டணி கண்டு தோல்வியடைந்தார். திரும்பவும் மன்மோகன் சிங் பிரதமராகவும், ஒய். எஸ். ராஜசேகர ரெட்டி முதலமைச்சராகவும் ஆயினர். டிஆர்எஸ் கட்சியின் இளஞ்சிவப்பு நிறக் கொடியணிந்து வெற்றி பெற்ற ராஜசேகர ரெட்டி தனித் தெலங்கானா கோரிக்கையை எதிர்த்துப் பேசத் தொடங்கினார்.

இந்த நிலையில்தான் சந்திரசேகர ராவ் நவம்பர் 29 அன்று தனித் தெலங்கானா என்ற ஒற்றைக் கோரிக்கையுடன் சாகும் வரையிலான உண்ணா விரதப் போராட்டத்தைத் தொடங்கினார். இது உடனே தெலங்கானாப் பகுதிகளில் பெரும் போராட்டங்களைத் தூண்டி விட்டது. பொது மக்களும் மாணவர்களும் தெருவுக்கு வந்தனர். இது காங்கிரசுக்குள் புகைச்சலைக் கிளப்பியது. ஜே. சி. திவாகர் ரெட்டி தொடங்கித் தெலங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களும் (74), நாடாளுமன்ற உறுப்பினர்களும் (4) பதவி விலகத் தொடங்கினர். தெலங்கானா எங்கும் பேருந்துகளும் தொடர்வண்டிகளும் நின்றன. கடைகள் அடைக்கப்பட்டன. ஐதராபாத் யாருக்கு? என்பதும் விவாதப் பொருளாகியுள்ளது. வரலாற்று வழிப்பட்டு ஐதராபாத் தெலங்கானாவுக்குச் சொந்தமானது என்பதே நடுநிலையாளர்களின் கருத்து.

பல வாத-எதிர்வாதங்களுடன் போராட்டங்கள் முற்றிச் செல்லவே திசம்பர் 9 அன்று மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் தனித் தெலங்கானா குறித்து ஆந்திரச் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அறிவித்தார். உடனே ராவும் உண்ணா விரதத்தை நிறுத்திக் கொண்டார்.

இப்போது ஆந்திராவில் போராட்டங்கள் வெடித்தன. காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிராஜா ராஜ்யம் எனத் தொடர்ந்து பல கட்சிகளின் ஆந்திரச் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகத் தொடங்கினர். ஆந்திரத்திலும் ராயலசீமையிலும் கடையடைப்புகள் நடந்தன., தொடர்வண்டிகள், பேருந்துகள் நின்றன. உடனே மன்மோகன் சிங் எந்த முடிவையும் அவசரப்பட்டு எடுக்க மாட்டோம் என அறிவித்தார்.

ஆந்திர, தெலங்கானா பகுதிகளை ஒப்புநோக்கின் பள்ளி, கல்லூரிகளின் எண்ணிக்கை, மருத்துவமனைகளின் எண்ணிக்கை, கல்வியறிவு, வேளாண்மை, வேலைவாய்ப்பு, உணவுத் தேவை, நலவாழ்வு என எதை எடுத்தாலும் தெலங்கானா ஆந்திராவை விடத் தாழ்ந்திருக்கும் புற உண்மையைக் கணக்கில் கொண்டு, இந்த வேறுபாட்டை முனைப்புடன் தீர்த்து வைத்திருக்க வேண்டிய காங்கிரஸ் அரசுகள் தங்களது ஒப்பந்தங்களையே மாற்றி மாற்றிப் பேசி தெலங்கானா மக்களுக்கு துரோகம் இழைத்து வருவதுதான் இந்தச் சிக்கலுக்கே ஆணி வேர்க் காரணமாகிறது. சுருங்கச் சொல்லின், நேருவும் பட்டேலும் சேர்ந்து தெலங்கானா மக்களுக்குச் செய்த துரோகம் இன்று சோனியா, மன்மோகன் வரை தொடர்கிறது.

இந்தியாவில் என்று முடியும் காங்கிரசின் துரோக வரலாறுகள்?

- நலங்கிள்ளி (இந்த மின்-அஞ்சல் முகவரி spambots இடமிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதைப் பார்ப்பதற்குத் தாங்கள் JavaScript-ஐ இயலுமைப்படுத்த வேண்டும்.)

Pin It