ஆப்பசைத்த குரங்கு போல்

ஆந்திராவிலிருந்து தெலுங்கானாவைப் பிரிப்பது என்ற முடிவை மத்திய அரசு அறிவித்த உடனேயே இந்தியாவின் வேறு சில மாநிலங்களிலும் அதே மாதிரிக் கோரிக்கைகள் எழுந்துவிட்டன. உ.பி. மாநிலத்தை மூன்றாகப் பிரிக்க வேண்டுமென மாயாவதியும், கூர்க்காலாந்தை தனி மாநிலமாக்க வேண்டுமென அத்வானியும், விதர்பா மாநிலம் கேட்டும் கோரிக்கைகள் எழுந்தன. தமிழ்நாட்டைக் கூட இரண்டாகப் பிரித்தால் நல்லது என்று மருத்துவர் ராமதாசும் கோரியதும் கலைஞர் அதை எதிர்த்து அறிக்கை விட்டதும் நடந்துள்ளது.

விலைவாசி உயர்வு, வேலையின்மை, வறுமை போன்ற உழைப்பாளி மக்களின் பிரச்சனைகளை திசைதிருப்ப மத்திய அரசுக்கு இது பெரும் வாய்ப்பாகிவிட்டது. தெலுங்கானாவைப் பிரிப்பது என்று முடிவெடுத்த காங்கிரஸ் கட்சியே இப்போது ஆந்திராவைப் பிரிக்காதே என்று போராடி வருகிறது. காங்கிரஸ் இப்போது ஆப்பசைத்த குரங்குபோல் மாட்டித் தவிக்கிறது.

எப்போதும் வன்முறையில் துவங்கும் தெலுங்கானாப் போராட்டத்தில் இம்முறை சந்திரசேகரரராவ் காந்தீய உண்ணாவிரத வழியை மேற்கொண்டார். பதினொரு நாள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு மத்திய அரசு தெலுங்கானாவைப் பிரிக்கும் முடிவை அறிவித்தது. இடதுசாரிக் கட்சிகளைத் தவிர எல்லா முதலாளித்துவக் கட்சிகளும் சந்தர்ப்பவாத நிலையையே மேற்கொள்கின்றன. இவர்கள் விலைவாசி உயர்வை எதிர்த்துப் போராடுவதில்லை. பிஜேபியோ மற்ற கட்சிகளோ இதில் அக்கறை காட்டவில்லை. கடந்த இரண்டாண்டுகளில் மத்திய அரசு இந்திய பெருமுதலாளிகளுக்கு எட்டு லட்சம் கோடி ரூபாய் நிவாரணம் வழங்கியதை இடதுசாரிகள் தவிர வேறு எவரும் எதிர்க்கவில்லை. மத்திய அரசு பிரிவினை கோஷங்களை ஆதரித்தும், எதிர்த்தும் இரட்டை வேடம் போட்டு இப்போது குரங்குபோல் மாட்டிக்கொண்டது.

Pin It