பாபாசாகேப் அம்பேத்கர் நூல் தொகுப்பு – 1இல் இறுதிப் பகுதியாக உள்ள ‘ரானடே, காந்தி, ஜின்னா' என்ற கட்டுரையை இவ்விதழில் நாம் அலச இருக்கிறோம். இக்கட்டுரை, மகாதேவ் கோவிந்த் ரானடேவின் 101ஆவது பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தையொட்டி, பூனாவின் தக்காண சபை ஏற்பாடு செய்திருந்த கருத்தரங்கில் அம்பேத்கர் 1940இல் ஆற்றிய உரையின் நூல் வடிவமாகும். இந்நூல் 1943 ஆம் ஆண்டு வெளிவந்தது.Ambedkar

இவ்வுரைக்குள் நுழையும் முன் அதற்கு அம்பேத்கர் எழுதிய அழகான முன்னுரை குறித்துப் பார்க்கலாம். சாதி இந்து சமூகம் தலித்துகள் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது – “இவர்கள் வெறுப்பின் அடிப்படையில் செயல்படுகிறார்கள்” என்பது. உண்மையில் இது ஒரு வெட்கங்கெட்ட குற்றச்சாட்டு. ஏதோ சாதி இந்துக்களின் நடவடிக்கைகள் எல்லாம் மனித இனத்தின் மீதான மாசு மருவற்ற அன்பினால்தான் அமைகின்றன என்பதைப் போன்ற பம்மாத்தின் அடிப்படையில்தான் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.

அம்பேத்கர் மீதும் இது போன்ற குற்றச் சாட்டுகளை இவர்களுடைய பாட்டன்கள் முன் வைத்தார்கள். அம்பேத்கர் மறைந்த மறுநாள் ஓர் ஆங்கில நாளேடு, ‘அம்பேத்கர் ஒரு பெரிய அறிவாளிதான். ஆனால், அவரிடமிருந்த வெறுப்புணர்வே அவர் பெரிய உயரங்களை அடைய முடியாமல் செய்து விட்டது' என்று எழுதியது. அதே பத்திரிகைகள் அவர் வாழ்ந்த காலத்திலும் அவர் மீதான தங்களது ஒவ்வாமையில் தோன்றிய காழ்ப்புணர்வைப் பரப்பி வந்தன. அப்படித்தான் அம்பேத்கரது மேற்சொன்ன உரை குறித்தும் கண்டனங்களை முன்வைத்தன.

தமது முன்னுரையில், இதற்குத் தெளிவாகப் பதிலளிக்கிறார் அம்பேத்கர் :

“இந்திய அரசியலில் சீரழிவை உண்டாக்கியதற்காக காந்தியையும், ஜின்னாவையும் நான் விமர்சித்ததை முன்னிட்டு நான் கண்டனம் செய்யப்படுகிறேன். அவ்வாறு விமர்சனங்களை முன் வைத்ததன் மூலம் அவர்கள் மீதான எனது வெறுப்பையும் அவமரியாதையையும் நான் வெளிப்படுத்தி விட்டேன் என்றும் நான் குற்றஞ்சாட்டப் படுகிறேன். இக்குற்றச்சாட்டுகளுக்கான எனது பதில் என்னவெனில், நான் விமர்சகனாக இருந்து வந்திருக்கிறேன். இனியும் அவ்வாறே இருப்பேன் என்பதே.

“நான் தவறுகள் இழைக்கிறேன் என்பது உண்மையாக இருக்கலாம். ஆயினும் பிறரது வழிகாட்டுதல்களையும், வழிமுறைகளையும் ஏற்றுக் கொள்வதை விடவும், அல்லது அமைதியாக உட்கார்ந்திருந்து காரியங்கள் மோசமடைய விட்டுவிடுவதை விடவும், தவறுகள் இழைப்பது மேலானது என்று எப்போதுமே உணர்ந்திருக்கிறேன். வெறுப்புணர்வுகளால் செயல்பட வைக்கப்படுபவனாக நான் இருக்கிறேன் என்று குற்றம் சுமத்துபவர்கள், இரண்டு செய்தி களை மறந்து விடுகின்றனர். இந்த வெறுப்பு சுயவிருப்பு என்பதிலிருந்து பிறந்தது அல்ல என்பது முதல் செய்தி. ஒரு தீர்வை விரும்புகிறவனாக நான் இருப்பதால்தான் இவர்களுக்கு எதிராக இருக்கிறேன். ஏதேனும் ஒரு தீர்வு வேண்டும் எனக்கு. ஒரு லட்சியத் தீர்வு ஏற்படும் வரையிலும் காத்திருக்க நான் தயாரில்லை...

“இரண்டாவது செய்தி என்னவெனில், ஒருவர் தனது அன்பிலும், வெறுப்பிலும் உறுதியாக இல்லை எனில் தனது காலத்திலேயே குறிப்பிடத் தகுந்த மாற்றத்தை ஏற்படுத்தவும், தங்களது சிறந்த கொள்கைகளுக்கும், போராட்ட லட்சியங்களுக்கும் தேவையான வலுவைச் சேர்க்கவும், அவரால் ஒருபோதும் முடியாது. அநியாயம், கொடுங்கோன்மை, தன்முனைப்பு, மூடத்தனம் ஆகியவற்றை நான் அடியோடு வெறுக்கிறேன். இக்குணங்கள் கொண்ட அனைவரையும் எனது வெறுப்பு தழுவிக் கொள்கிறது. எனது வெறுப்புணர்வுகளை ஓர் உண்மையான சக்தியாகவே நான் மதிப்பிடுகிறேன் என்று எனது விமர்சகர்களிடம் சொல்ல விரும்புகிறேன். நான் நம்பும் லட்சியங்கள் மீது கொண்டுள்ள எனது அன்பின் பிரதிபலிப்பே இவ்வெறுப்பு.”

அநீதியின் மீதான வெறுப்புக்கு இவ் வளவு கவித்துவமான விளக்கத்தை அம்பேத்கரைத் தவிர வேறு யாரால் அளித்துவிட முடியும்? ஆனால் நமது ஜாதிய மண்டைகளுக்கு இதுவும் ஒவ்வாமல் போய் விடும் வாய்ப்பிருக்கிறது! அதே முன்னுரையில், காங்கிரஸ் ஆதரவு பத்திரிகைகள் பற்றியும் அம்பேத்கர் குறிப்பிடுகிறார் :

“எனக்கு காங்கிரஸ் பத்திரிகைகளைப் பற்றி நன்றாகத் தெரியும். அவற்றின் விமர்சனங்களுக்கு நான் மதிப்பளிப்பதே இல்லை. எனது வாதங்கள் தவறு என அவை ஒரு காலத்திலும் நிறுவியதில்லை. நான் செய்யும் அனைத்துச் செயல்களையும் விமர்சிக்கவும், திட்டவும், அவதூறு பேசவும் மட்டுமே அவற்றுக்குத் தெரியும். நான் சொல்லும் அனைத்தையும் திரித்து வெளியிடவும், அவற்றுக்குத் தவறான உள்நோக்கம் கற்பிக்கவும், திசை திருப்பவும் மட்டுமே அவற்றுக்குத் தெரியும். நான் செய்யும் எதுவும் காங்கிரஸ் பத்திரிகைகளுக்கு நிறைவளிப்பதாக இருக்காது. எனக்குத் தெரிந்த வரை காங்கிரஸ் பத்திரிகைகளின் என் மீதான பகையுணர்வு காரணமல்லாத ஒன்றல்ல; தாழ்த்தப்பட்டவர்கள் மீதான சாதி இந்துக்களின் வெறுப்பின் பிரதிபலிப்பாகவே அதை விளங்கிக் கொள்ள வேண்டியிருக்கிறது.”

இந்தப் பத்திரிகைகள் அப்போதே இப்படித்தான் இருந்தனவா என்ற வியப்பு சிலருக்குத் தோன்றக்கூடும். எந்த வியப்பும் தேவையில்லை. பீ – நூறாண்டுகளுக்கு முன்பும் நாறியது. இப்போதும் நாறுகிறது. இன்னும் நூற்றாண்டுகள் கழிந்தாலும் நாறும். சாதி இந்துக்களின் பத்திரிகைகளும் அப்படித்தான்!

இனி, ரானடே பற்றிய அம்பேத்கரின் உரைக்குள் போகலாம். இவ்வுரையின் போக்கில், ரானடேயை மாமனிதர் என்று போற்றுவோரும்; இல்லை என மறுப்போரும் உள்ளனர். ரானடே உண்மையில் மாமனிதரா என்பதைக் கண்டறிவதற்கு முன் மாமனிதர் என்பவர் யார் என்று புரிந்து கொள்ள வேண்டும் எனக் கூறி, மாமனிதர் என்பவரைக் குறித்த தனது விளக்கத்தை அம்பேத்கர் அளிக்கிறார் :

“மாமனிதர் என்பவர் நேர்மையானவராக இருக்க வேண்டும். அந்நேர்மையைச் செயல்படுத்த அறிவுக்கூர்மை உடையவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறு நேர்மையும், அறிவுக் கூர்மையும் உடையவராக இருப்பதோடு, அவர் ஒரு சமூக லட்சியத்தின் இயக்கவியலால் தூண்டப்படுபவராகவும் இருக்க வேண்டும். சமூகத்தைக் கட்டுப்படுத்த நடத்தும் சாட்டையைப் போலவும், அதே சமூகத்தைத் தூய்மைபடுத்துபவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறான பண்புகள் உடையவனே மாமனிதன்.”

ரானடே நேர்மையும் உண்மையும் கொண்டவராக விளங்கினார். பொருளாதார நிபுணராக, வரலாற்றறிஞராக, கல்வியாளராக, வழக்குரைஞராக, நீதிபதியாக எனப் பல்வேறு தளங்களில் அவரது அறிவுக் கூர்மை வெளிப்பட்டது. அதோடு, அவர் உழைத்த சமூக லட்சியங்களின் அடிப்படையிலும், அவர் உழைத்த விதத்தின் அடிப்படையிலும் அவர் உண்மையாகவே ஒரு மாமனிதராக விளங்கினார் என்று அம்பேத்கர் சான்றளிக்கிறார்.

சமூக சீர்திருத்தவாதியாக ரானடே வகித்த பாத்திரத்தை அம்பேத்கர் மிகவும் வியந்து போற்றுகிறார். சமூக சீர்திருத்தத்திற்கான ஒழிச்சல் இல்லாத பிரச்சாரம் என்பதுதான் அவருடைய முழு வாழ்வின் பொருளாக இருந்தது. அந்நோக்கத்திற்காக, கூட்டங்கள், ஊழியங்கள், உரைகள், மத விளக்கவுரைகள், கட்டுரைகள், நேர்காணல்கள், கடிதங்கள் என அனைத்து வழிமுறைகளையும் அவர் கையாண்டார். அதோடு நின்றுவிடாமல், சமூக சீர்திருத்தத்தை நிரந்தரமாகவும், முறையாகவும் செய்வதற்கென்றே அவர் ‘சோஷியல் கான்பெரன்ஸ்' என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.

உரையின் இந்தப் பகுதியில் சமூகச் சீர்திருத்தவாதிக்கும் அரசியல்வாதிக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவாக அம்பேத்கர் புலப்படுத்துகிறார் : “சிறைக்குச் செல்வது இந்தியாவில் தியாகச் செயலாகி விட்டது. தேசபக்தச் செயலாகவும், தீரமிக்க நடவடிக்கையாகவும் அது கருதப்படுகிறது. இன்றைக்கிருக்கும் அரசியல்வாதிகளைப் பொருத்தமட்டிலும் அவர்கள் அரசியலைத் தங்களது கடைசிப் புகலிடமாகக் கொண்டவர்கள்; சிறைக்குச் செல்வதன் மூலம் தியாகிகளாகிப் பேரும் புகழும் அடைந்திருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கும் சிறைவாழ்க்கை தனது அத்தனை பயங்கரங்களையும் இழந்து விட்டது. வெறுமனே மறித்து வைத்திருக்கும் ஒரு செயலாக அது மாறிவிட்டது. அரசியல் கைதிகள் இப்போது குற்றவாளிகளைப் போன்று நடத்தப்படுவது இல்லை. அவர்கள் தனி வகுப்பில் வைக்கப்படுகின்றனர். எந்தப் பாதிப்புகளுக்கும் அவர்கள் ஆளாக வேண்டியதில்லை. அவர்களுடைய பெயருக்கு எந்தக் குறைவும் ஏற்படுவதில்லை. எந்தச் சங்கடங்களுக்கும் உள்ளாக வேண்டியதில்லை...

“ஒரு தனிநபர் மீதான கொடுங்கோன்மையையும், ஒடுக்குமுறையை யும், ஓர் அரசாங்கத்தை விட ஒரு சமூகம் மிகக் கூடுதலாகவும், கடுமையாகவும் கட்டவிழ்த்து விட முடியும் என்பது பெரும்பான்மையோர்க்குத் தெரிவதில்லை. ஒடுக்குமுறைக்கான வழிகளும், வாய்ப்புகளும், அரசை விடவும் மிகப் பரந்துபட்ட விதத்தில் சமூகத்திடம் இருக்கின்றன. சமூக விலக்கத்தின் அளவுக்கும், கடுமைக்கும் இணை சொல்லக் கூடிய அளவுக்குத் தண்டனை சட்டத்தில் என்ன இருக்கிறது? சமூகத்திற்குச் சவால் விட்டு அதனால் சமூக விலக்கத்தை வரவழைத்துக் கொள்ளும் சமூக சீர்திருத்தவாதிக்கா அல்லது அரசுக்கு அறைகூவல் விடுத்துச் சில மாதங்களோ, சில ஆண்டுகளோ சிறைத் தண்டனைக்கு உள்ளாகும் அரசியல் கைதிக்கா, யாரிடம் அதிகத் துணிச்சல் உள்ளது?

“ஒரு சமூக சீர்திருத்தவாதி சமூகத்தை எதிர்க்கும்போது அவனைத் தியாகி எனப் புகழ யாரும் இருக்க மாட்டார்கள். அவனுடன் நட்பாகக்கூட யாரும் இருக்க மாட்டார்கள். அவன் வெறுக்கப்படுகிறான்; புறக்கணிக்கப்படுகிறான். ஆனால் ஓர் அரசியல் தியாகி அரசை எதிர்க்கும்போது, அவனுக்குத் துணையாக முழு சமூகமும் அவனுடன் இருக்கும். அனைவரும் அவனை ஒரு மீட்பர் எனப் பாராட்டிப் புகழ்ந்து உயர்த்துவர்.

“தன்னந்தனியனாகப் போராடும் சமூக சீர்திருத்தவாதியா, அல்லது ஆதரவாளர்களின் திரண்ட கூட்டத்தின் பாதுகாப்பின் கீழ் போராடும் அரசியல் தியாகியா, யார் அதிக தீரத்தைக் காட்டுவது?”

அம்பேத்கரின் இவ்வரிகளை எழுதும்போது ஓயாமல் என் மனதில் தோன்றியவை பெரியாரின் இதே போன்ற கீழ்க்கண்ட வரிகள்தாம். “...நம் சுயமரியாதை இயக்கத்தின் இப்போதைய வேலையைக்கூட அரசாங்கத்தார் சட்ட விரோதம் என்று சொன்னால், அப்போது என்ன செய்வது என்று கேட்கிறார். இதற்கு நான் தாமதமில்லாமலும் வெட்கமில்லாமலும் உடனே பதில் சொல்கிறேன். என்ன பதில் என்றால், உடனே இயக்கத்தை நிறுத்திவிட்டு பிறகு மேற்கொண்டு என்ன செய்வது என்று நம்பிக்கையுள்ள தோழர்களுடன் கலந்து யோசிப்பேன். ஒன்றுமே செய்ய முடியாமல் போனால், அப்போது ஜெயிலுக்குப் போய் உட்கார்ந்து கொண்டு சுகம் அனுபவிப்பேன். வீரப்பட்டமும் பெறுவேன். சிறிது வேலை செய்ய இடமிருந்தாலும் ‘புகழையும்' ‘வீரப்பட்ட'த்தையும் தியாகம் செய்து விட்டு ‘பயங்காளி',’கோழை', ‘அடிமை' என்கிற பட்டங்களை மகிழ்ச்சியோடு வரவேற்றுத் தலையில் சுமந்து கொண்டாவது வேலை செய்வேனே ஒழிய வீண் வம்புக்கும், போலி விளம்பரத்துக்கும் இரையாக மாட்டேன். அறிவுள்ளவர்கள் சற்று யோசித்துப் பார்க்க வேண்டும்.”Jinna and Gandhi

இந்தியச் சமூகம் குறித்தும் அரசியல் குறித்தும் பாபாசாகேப் அம்பேத்கருக்கும், தந்தை பெரியாருக்கும் ஒருமித்தக் கருத்து இருந்தது மட்டுமன்றி, போராட்ட அணுகுமுறையும் அவர்கள் இருவரிடமும் ஒன்றாக இருந்ததை உணரமுடிகிறது. அவர்கள் இருவரும் ஒருவர் மீது மற்றவர் வைத்திருந்த நம்பிக்கைக்கு அடித்தளமாக இருந்தனர். ஆனால், பெரியாரின் நெற்றியில் குற்றவாளிச் சீட்டு எழுதி ஒட்டியவர்கள், தங்களது அறியாமையை அவர் தலையில் சுமத்தியிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் எழுதிய அம்பேத்கரின் எழுத்துகளை தலித்துகள் அவ்வளவு சீக்கிரத்தில் படித்துவிட மாட்டார்கள் என்ற இறுமாப்பில் எழுதியிருக்க வேண்டும். எப்படியெனினும், நிலைநிறுத்தப்பட்டிருப்பது கவித்துவ நீதிதான் என்பதில் எனக்கு அய்யமில்லை. கூட வந்திருந்து குழிபறிக்கும் ஆனந்தர்கள் தங்களது அடுத்த ‘இன்னிங்சை'த் தொடங்கலாம், வலு இருந்தால்!

இத்தகைய சமூக சீர்திருத்தத்தைச் செய்ய, ரானடே பணி செய்த சமூகம் என்பது இந்து மதத்தால் அரித்துத் தின்னப்பட்டு, நோயுற்று, அழிந்து கொண்டிருந்த சமூகமாக இருந்தது. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிராத மதம் இந்து மதம். இந்து மதத்தின் இறைத் தத்துவமென்பது பார்ப்பனரை பிற பார்ப்பனர் அல்லாதோர் அனைவரும் வணங்கி, ஊழியம் செய்யக் கடமைப்பட்டவர்கள் என்பதை வலியுறுத்துவதாக இருந்தது. வேதாந்தம், சாங்கியம், நியாயம், வைசாசிகம் எனப் பலவாறான பிரிவுகளில் இருந்த இந்து சித்தாந்தம், தனக்குள்ளேயே தனிவட்டமாய் இந்து மதத்தைப் பாதித்துவிடாமல் இயங்கிக் கொண்டிருந்தது.

இந்துவின் லட்சிய நோக்கமாய் இருக்கிற சதுர்வர்ணத்தின் உருமாறிய வடிவம்தான் சாதியமைப்பு முறையாக இருக்கிறது. அச்சதுர்வர்ணம் கல்வியையும் கற்றலையும் ஒரே ஒரு சமூகத்திற்கு மட்டும் உரிமையானதாக விதித்தது. ஆயுதம் ஏந்துவதை ஒரே ஒரு சமூகத்திற்கு மட்டும் உரிமையானதாக விதித்தது. வணிகம் செய்ய ஒரே ஒரு சமூகம் மட்டுமே உரிமையுடையது என்று விதித்தது. அடிமை ஊழியம் செய்ய எஞ்சிய சமூகம் விதிக்கப்பட்டது.

ஒரு நல்ல சூழ்நிலைக்கு மட்டுமே போதுமானதாய் ஒரு சமூக அமைப்பு இருக்கக் கூடாது. ஒரு சூறாவளியின் சீற்றத்தையும், வேகத்தையும் தாங்குவதாகவும் அது இருக்க வேண்டும். இந்து சாதி அமைப்பு அவ்வாறு இருக்குமா? முடியாது என்பது வெளிப்படை. தற்காப்புக்கானாலும், எதிர்தாக்குதலுக்கானாலும் ஒரு சமூகம் தனது ஆற்றலை திரட்டக் கூடியதாக இருக்க வேண்டும். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கடமைகளையும், காரியங்களையும் பகிர்ந்தளித்து விட்டு, அதை மாற்ற முடியாதது என விதித்து விட்ட பிறகு, சக்தியைத் திரட்டுவதற்கு என்ன வழி இருக்கிறது? பார்ப்பனர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என தொண்ணூறு சதவிகித இந்துக்கள் இந்து சமூக அமைப்பின்படி ஆயுதம் ஏந்த முடியாது.

தனக்கு ஏற்படும் நெருக்கடியான நேரங்களில் அதன் படையை அதிகரிக்க முடியாதென்றால், ஒரு நாடு எவ்வாறு பாதுகாக்கப்பட முடியும்? அடிக்கடி குற்றம் சுமத்தப்படுவதைப் போல, தனது அகிம்சைத் தத்துவத்தின் மூலம் இந்து சமூகத்தை புத்தர் பலவீனப்படுத்தி விட்டார் என்பது உண்மையல்ல. பார்ப்பனியக் கொள்கையான சதுர்வர்ணம்தான் தோல்விக்கு மட்டுமின்றி, இந்து சமூகத்தின் அழிவுக்கும் காரணமாக இருக்கிறது.

இந்து சட்டத்தின்படி, பார்ப்பனர்கள் மதத் தலைவர்களாக இருப்பதன் முழுப் பலனையும் அனுபவித்தார்கள்; கொலைக் குற்றம் செய்திருந்தால்கூட அவர்களுக்கு மரண தண்டனை கிடையாது. கிழக்கிந்தியக் கம்பெனியும் இச்சலுகையை 1817 வரை அனுமதித்தது. இத்தகைய சலுகைகளை அனுபவித்த பார்ப்பனர்களிடம் ஏதேனும் நற்பண்புகள் எஞ்சியிருந்தனவா? அவர்கள் ஒட்டுண்ணிகளாக மாறி விட்டிருந்தனர். சமூகத்தை இரையாகக் கொள்வதையும், மதத்திலிருந்து கொள்ளை லாபம் ஈட்டுவதையும் வழக்கமாக்கி விட்டிருந்தனர். இக்கருத்தை 1795 ஆம் ஆண்டு விதியின் முகவுரையை (கணூஞுச்ட்ஞடூஞு ணிஞூ tடஞு கீஞுஞ்தடூச்tடிணிண 1795) சான்று காட்டி விளக்குகிறார் அம்பேத்கர். ஒருவரிடமிருந்து அவரது விருப்பமின்றி அவரது பொருள் எதையாவது அபகரித்துக் கொள்ள விரும்பும் பார்ப்பனர்கள் கையாண்ட மிரட்டல் உத்திகளை அது குறிப்பிடுகிறது :

1. கத்திகளையும், பிளேடுகளையும் கொண்டு தனது உடலையே கிழித்துக் கொள்வது அல்லது விஷத்தை விழுங்கி விடுவதாகப் பயமுறுத்துவது 2. கூர் எனப்படும் வட்ட வடிவிலான வேலி அமைத்து, அதற்குள் விறகுக் கட்டைகளை அடுக்கி அதன் மேல் ஒரு மூதாட்டியைக் கிடத்தி, தான் விரும்புவதைத் தராவிட்டால் அக்கூரை எரித்துவிடுவதாக மிரட்டுவது 3. மிரட்டப்படுபவன் பார்வையில் பார்ப்பனன் தனது மனைவியையும் குழந்தைகளையும் நிறுத்தி, அவன் கண் முன்னாலேயே அவர்களது தலைகளைத் துண்டித்து விடப் போவதாக மிரட்டுவது 4. மிரட்டப்படுபவன் வீட்டு வாசலில் பட்டினி கிடந்து மறியல் செய்வது.

இவ்வாறு மிரட்டிக் கொண்டிருந்தவர்கள், அதோடு நின்றுவிடாமல், பார்ப்பனர் அல்லாதவர்களின் பெண்களுக்கு ‘கன்னி கழிக்கும்' உரிமை தங்களுக்கே உரியது என உரிமை கோரத் தொடங்கினர். இப்பழக்கம் கோழிக்கோட்டில், ஜமோரின் குடும்பங்களிலும், வைணவர்களில் வல்லபாச்சாரி பிரிவினரிடையேயும் நிலவி வந்தது என்கிறார் அம்பேத்கர்.

மேலும் 1819இல் கிழக்கிந்திய கம்பெனி இயற்றிய சட்டத்தின் முகவுரையைச் சான்று காட்டி, இந்து சமூகம் அன்றைக்கு எந்தளவுக்கு கேடுகெட்டுப் போய் இருந்தது என்பதை விளக்குகிறார் அம்பேத்கர். அம்முகவுரையில், விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக மனைவிகளையும், குழந்தைகளையும் ஆசை காட்டி இழுத்துப் போக பெருவாரியாகப் பெண்கள் நியமிக்கப்பட்டிருந்ததும், குடும்பத்தையும், குழந்தைகளையும் நிராதரவாக விட்டுவிட்டு ஓடிப்போகும் பழக்கம் ஆண்களிடம் பரவலாகக் காணப்பட்டதும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இவ்வாறான நிலை அன்றைய சமூகத்தில் காணப்பட்டபோதும், பார்ப்பனர்கள் எல்லாவற் றையும் நியாயப்படுத்தினார்கள். தீண்டாமையை நியாயப்படுத்தினார்கள். சாதியை நியாயப்படுத்தினார்கள். கட்டாயப்படுத்தப்பட்ட விதவை முறையை நியாயப்படுத்தினார்கள். விதவைகளை உயிரோடு எரிப்பதை நியாயப்படுத்தினார்கள். பல பெண்களை மணம் செய்து, மணம் செய்தவர் இறந்தால், அனைத்துப் பெண்களையும் கொளுத்துவதை நியாயப்படுத்தினார்கள். இப்படி எல்லா அக்கிரமங்களையும், அநியாயங்களையும் பார்ப்பனர்கள் நியாயப்படுத்தினார்கள். ஏனென்றால், அவற்றை அடிப்படையாகக் கொண்டே அவர்கள் சுகவாழ்வு வாழ்ந்தார்கள்.

இப்படிப்பட்ட நிலையில் உள்ள சமூகத்தைக் கொண்டுள்ள ஒரு நாட்டிற்கு அரசியல் விடுதலையை விடவும் சமூக விடுதலையே உடனடித் தேவையாக இருக்கிறது என்றும், அத்தயை சமூக விடுதலையைப் பெறுவதற்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலம் உகந்த சூழ்நிலையை ஏற்படுத்தித் தருவதாக இருக்கும் என்றும் ரானடே வாதிட்டார். கெடுவாய்ப்பாக, காங்கிரஸ்காரர்களின் கூப்பாட்டில் இவரது குரல் கேட்கப் படாமலே போயிற்று. சமூக விடுதலையைப் பெறுவதற்கு முன்னரே அரசியல் விடுதலையைப் பெற்றோம். அதன் பலனை இப்போது அனுபவிக்கிறோம் என்று அம்பேத்கர் கசப்புடன் தெரிவிக்கிறார்.

அடுத்ததாக, ரானடேவை அம்பேத்கர் வாழ்ந்த காலத்தில் மிகப் பெரிய அரசியல் ஆளுமைகளாகக் கருதப்பட்ட, இன்றும் கருதப்படுகிற காந்தியோடும், ஜின்னாவோடும் ஒப்பிட்டுப் பேசுகிறார். காந்தியையும், ஜின்னாவையும் பற்றிய அம்பேத்கரது விமர்சனங்களைக் கவனியுங்கள்.

“முதலாவதாக எனக்குத் தோன்றும் விஷயம் என்னவெனில், மிகப் பெரிய அகம்பாவத்தில் அவர்களுக்கு இணை சொல்லக்கூடிய இருவரைக் காண்பது கடினம். அவர்களுக்குத் தங்களுடைய தனிப்பட்ட முன்னேற்றம்தான் எல்லாமும். தேசிய நோக்கம் என்பதெல்லாம் வெறும் கடைச் சரக்கு அவ்வளவுதான்.”

“அவர்கள் இருவரும் இந்திய அரசியலை நாட்பட்ட சொந்தப் பகைக்குரிய ஒரு பொருளாக மாற்றி விட்டனர். அதன் விளைவுகள் ஒருபோதும் அவர்களை அச்சுறுத்துவதில்லை...”

“எங்கெங்கு போனாலும் தாங்களே எப்போதும் புகழின் ஒளியில் இருக்கும் விதமாய் காரியங்களை ஏற்பாடு செய்யவும், மேடைப் பம்மாத்தில் தேர்ந்தவர்களாகவும் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள் இருவரும். தானே உயர்ந்தவர் என உரிமை கோருவதை இருவருமே செய்கிறார்கள்.”

“உயர்ந்தவர்கள் என்று உரிமை கோருவதோடு மட்டுமின்றி தோற்கடிக்க முடியாதவர்கள் தாங்கள் என்றும் அவர்கள் உரிமை கோருகிறார்கள். இத்தகைய அவர்களது உணர்வுகள் பத்திரிகைகளால் பலப்படுத்தப்படுகின்றது.

பெரும்பான்மைப் பத்திரிகைகளின் ஆரவாரப் பாராட்டின் துணையோடு காந்தி, ஜின்னா ஆகிய இருவரும் வெளிப்படுத்தும் மேலாதிக்க மனப்பான்மை எல்லா வரம்புகளையும் தாண்டிவிட்டது என அம்பேத்கர் விமர்சனம் செய்கிறார். அவ்விருவர் மீதான விமர்சனங்கள் இத்துடன் முடிந்து விடவில்லை.

“தாங்கள் மேலாதிக்கத்தின் மூலம் காந்தி யும் ஜின்னாவும் தங்களைப் பின்பற்றுவோரின் பாதிப் பேரை முட்டாள்களாகவும், பாதிப் பேரை வேடதாரிகளாகவும் மாற்றி விட்டனர். தங்களது உச்ச நிலையை நிறுவுவதற்காக, பெரும் பண முதலைகள் மற்றும் தொழில் அதிபர்களின் உதவியைப் பெற்றுக் கொண்டனர்.”

“இவ்விரு பெரிய மனிதர்களின் கைகளில் அரசியல் ஊதாரித்தனமான போட்டியாக மாறிவிட்டது. காந்தி ‘மகாத்மா' என்று அழைக்கப்பட்டால், திரு. ஜின்னா காய்தி–கி–ஆசிம் என்று அழைக்கப்பட்டாக வேண்டும். காந்தியிடம் காங்கிரஸ் இருந்தால் ஜின்னாவிடம் முஸ்லிம் லீக் இருக்க வேண்டும். காங்கிரஸ், ஒரு காரிய கமிட்டியும், அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி யும் கொண்டதாய் இருந்தால் – முஸ்லிம் லீக்கும் தனக்குரிய காரிய கமிட்டியும், கவுன்சிலும் கொண்டதாக இருக்க வேண்டும். காங்கிரசின் ஒரு கூட்டம் நடைபெற்றால், அதைத் தொடர்ந்து முஸ்லிம் லீக்கின் கூட்டம் நடந்தாக வேண்டும். காங்கிரஸ் ஓர் அறிக்கையை வெளியிட்டால் லீகும் அதைப் பின்பற்றி வெளியிட வேண்டும். காங்கிரஸ் 17,000 வார்த்தைகளுடன் கூடிய ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால், முஸ்லிம் லீக்கின் தீர்மானம் அதைவிட குறைந்தது 1000 வார்த்தைகளையாவது கூடுதலாகக் கொண்டிருக்க வேண்டும்.”

இவர்கள் இருவருடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ரானடேவிடம் துளிகூட அகம்பாவம் இல்லை. அறிவுப்பூர்வமான சாதனை கள் நிகழ்த்தியவராக அவர் இருந்தபோதும் கூட, அடக்கத்தின் உறைவிடமாகத் திகழ்ந்தார். முட்டாள்களின் புகழுரைகளோடு திருப்தி அடைய ரானடே மறுத்தார். தமக்குச் சமமான வர்களுடன் உறவாடுவதற்கு அவர் ஒருபோதும் அஞ்சியதில்லை. தனது பார்வைகளைப் பகுத்தறிவு மற்றும் அனுபவம் ஆகிய வற்றின் வெளிச்சத்தில் பரிசோதனை செய்யத் தயாராக இருந்த ஒரு பகுத்தறிவுவாதியாகவே அவர் திகழ்ந்தார். அவரது மேன்மை இயல்பானதாய் இருந்தது. நாடகத்தின் உதவியோ, தன்மையப் போக்கு கொண்ட செயல் தந்திரம், மானியம் பெறும் பத்திரிகைகள் ஆகியவற்றின் உதவி அவருக்குத் தேவைப்படவில்லை.

இதுதான் காந்தியோடும், ஜின்னாவோடும் ரானடேவை ஒப்பிட்டு அம்பேத்கர் கூறிய கருத்துகள். பின் நவீனத்துவக்காரர்கள் அதுவும் கட்டவிழ்ப்பின் மீது ஆர்வம் காட்டிய பின் நவீனத்துவக்காரர்கள், காந்தியை குறித்த புனிதக் கட்டுமானங்களில் இறங்கும் சமகாலச் சூழலில், அம்பேத் கரது இந்தக் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. வெளிநாட்டு வெள்ளைக்காரர்களும், உள்ளூர், உள்பூணூல் மற்றும் வெளிப் பூணூல்காரர்களும் தடித்தடியாய் விலை உயர்ந்த புத்தகங்களில் எழுதிவிட்டு அல்லது புளுகிவிட்டுப் போனதைப் பார்த்து வந்தடைகின்ற திடீர் திருப்பங்கள் நிறைந்த கருத்தல்ல இது.

அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவர்களால் வஞ்சிக்கப்பட்ட அடித்தட்டு சாதியினரின் பக்கம் நின்று, நாள்தோறும் அவதூறுகளை யும், வசவுகளையும் சந்தித்து, மிரட்டல்களுக்கு அஞ்சாமல் பாடுபட்டுப் போராடிய தலைவர் அம்பேத்கர். அதோடு, இந்தியத் துணைக் கண்டம் கண்ட அறிவுஜீவிகளில் முதன்மையானவர் அவர். அர்ப்பணிப்பும், நேர்மையும் நிறைந்த அவரது கருத்துகளை தன்னலங் கருதி சாதிமான்கள் வேண்டுமானால் கண்களை மூடிக் கொண்டு கடந்து போய் விடலாம். சமூக விடுதலையிலும் உண்மையிலும் அக்கறை கொண்டவர்கள் அங்ஙனம் செய்தல் இயலாது. தகாது.

தமது இந்த உரையில் ரானடே குறித்த நல்ல கருத்துகளை இதுவரை தொகுத்துக் கூறிய அம்பேத்கர், அதன் இறுதிப் பகுதியில் ரானடே மீதும், அவரது மிதவாதக் கட்சியின் அன்றைய நிலை குறித்தும் சில விமர்சனங்களை அம்பேத்கர் முன்வைக்கிறார். இவ்வாறான நிலை அக்கட்சிக்கு ஏற்பட்டதற்கு ரானடேவே பெருமளவுக்குக் காரணமாக இருந்தார். உயர் வகுப்பு என்று சொல்லப்படுவதற்குச் சொந்தமானவர் ரானடே. அவர் ஒருபோதும் வெகுமக்கள் திரளின் மனிதராக இருக்கவில்லை. இந்த வெகுமக்கள் திரளுடன் தொடர்பு கொள்வதில் நம்பிக்கை அற்றவராக அவர் இருந்தார். அவர் வழியில் மிதவாதக் கட்சி நடைபோட்டதால், அது தனக்கென்று ஒரு கட்சி எந்திரத்தைப் பராமரிப்பதில் நம்பிக்கையற்று இருந்தது. எனவே, தனது கொள்கைகளைப் பிரச்சாரம் செய்வதில் அது மிகவும் பின்தங்கி விட்டது. அந்த காரணத்தினால்தான் அக்கட்சி தேய்ந்து அழியும் நிலைக்குப் போனது.

இவை ரானடேவுக்கு மட்டுமின்றி சமூகத்தின் மீது எந்தப் பிடியும் இல்லாமல், வெறுமனே ஆசைக்காக அமைப்பு நடத்திக் கொண்டிருக்கும் அனைத்து அமைப்பு களுக்கும் பொருந்துவது. அதிலும் குறிப்பாக தலித் அமைப்புகளுக்கும், கட்சிகளுக்கும் கனகச்சிதமாகப் பொருந்துவது. அவர்கள் அம்பேத்கரின் அறிவுரைகளை கணக்கில் எடுத்துக் கொள்ளாவிட்டால், அது அவரவரது அமைப்புக்கும் கட்சிக்கும் மட்டுமின்றி சமூகத்துக்கும் இழப்பு.

- ம.மதிவண்ணன்

Pin It