சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் உளப்பட வாழ்நர்
பூவுலகு வெப்பம் உயர்வதில் உலகமும்
பொருளா தார நெருக்கடி நிலையால்
அரும்பெரும் மனிதரின் வாழ்வும் சுகமும்
எரிந்து சாம்பலாய்ப் போவதை அறியினும்
உரிமைக்குப் போரிட இயலா திருப்பர்
புவியின் வெப்பமும் சந்தையின் சிக்கலும்
அவிய வைக்கும் சமதர்ம அரசை
அமைக்கும் போரைத் தொடுக்க மறுப்போர்
குமையும் குறையோரின் இழிந்தவ ராவர்.
 
(மக்கட் பிறவியிற் குறைபாடு உடையவை எனப்படும் குருடு, வடிவற்ற தசைத் திரள், கூன், குறள் (குள்ளம்), ஊமை, செவிடு, விலங்கைப் போன்ற வடிவத்துடன் பிறத்தல், மூளை வளர்ச்சிக் குறைவு ஆகிய எட்டு வகைக் குறைபாடுகளுடன் வாழ்பவர்கள் உள்ளனர். இவர்கள் புவி வெப்பம் உயர்வதால் உலகமும், சந்தைப் பொருளாதார நெருக்கடியால் உயிரினங்களிலேயே உயர்நிலையில் இருக்கும் மனித இனத்தின் வாழ்வும் சுகமும் எரிந்து சாம்பலாகிப் போய்க் கொண்டு இருப்பதை அறிந்து கொள்ள முடிந்தாலும் / முடியாவிட்டாலும் (இதை மாற்றி உலகைக் காத்திட வேண்டும் என்று) உரிமையாய்ப் போராட முடியாது இருப்பர். புவி வெப்ப உயர்வையும், பொருளாதார நெருக்கடியையும் நீக்க வல்ல சோஷலிச அரசை அமைப்பதற்கான வர்க்கப் போரை முன்னெடுக்க மறுப்பவர்களை, (அனைத்து உறுப்புகளும் நலமாக உள்ள படி பிறந்திருந்தாலும், உடலுறுப்புக் குறையுடன் பிறந்து விட்டோமே என்று மனதிற்குள்) குமைந்து கொண்டு வாழும் குறையுடை மக்களும், இழிந்தவர்கள் என்றே நினைப்பர்.)
 
- ‍இராமியா

Pin It