தாத்தா காலத்திலிருந்து
வாசலில் இருந்த
ரெண்டு புளியமரம்
வருவோர்க்கெல்லாம் நிழல்கொடுத்து
வாசல்முழுதும் விரிந்திருந்தது ...
சும்மாட்டோடு
பாத்திரம் சுமந்துவரும்
ஏவாரக்காரனுக்கு விற்பனையிடம்
அந்த மரத்தடி நிழல்தான் ...
வேகாத வெய்யிலில்
வேர்க்க,வேர்க்க அலையும்
செவிட்டு ' ஐஸ்காரன்'
கொஞ்சநேரம் ஓய்வெடுத்துப்போவான்...
பொழுதுசாயும் வரை
பிள்ளைகள்
அந்த மரநிழலில்தான்
பம்பரம், கோலியடித்து விளையாடினார்கள் ...
செம்மஞ்சள் பூக்களை
வாசலெங்கும் உதிர்த்திருந்தது ...
விடியற்காலையில்
''வெயிறு செரியில்லடி
காவாய்க்கு போயி வந்தங்'' என்று
பச்சியம்மாள் பாட்டி
அம்மாவிடம் பொய்சொல்லி
உதிர்ந்துகிடக்கும் புளியம்பழத்தை
மடிநிரப்பி ஓளித்து செல்வாள் ....
பொழுதுசாய கூடடையும் பறவைகள்
என்ன பேசுமோ ?.
கீச் ...கீச் ...கீச்ச் ...என்று
ஒலியடங்க நள்ளிரவைத் தாண்டும் ..
மரக்கிளையில்தான் எங்களை
ஊஞ்சல்கட்டி தாலாட்டினாள் அம்மா ...
மரநிழலில்தான் எங்களை
கால்மீது படுக்கவைத்து
முப்பாட்டன் கதைசொல்லி
உறங்க வைத்தாள் பாட்டி ...
எங்கள் நிலத்தில் ஒருநாள்
எரிகுண்டுகள் வீழ்ந்தபோது
நாங்கள் அழிக்கப்பட்டோம்...
எங்களைவிடு,
நாங்கள் கேட்பதெல்லாம் ஒன்றுதான்
எங்கள் புளியமரம்
உனக்கு என்ன செய்தது?
கீற்றில் தேட...
புளியமரம்
- விவரங்கள்
- படைவீடு அமுல்ராஜ்
- பிரிவு: கவிதைகள்