பிரதமர் நரேந்திர மோடியின் இரண்டரை ஆண்டுக்கால ஆட்சியின் மாபெரும் சாதனை இந்த நாட்டையும் நாட்டு மக்களையும் நடுத்தெருவில் திண் டாடும்படி நிற்க வைத்திருப்பதுதான்.

கடந்த நவம்பர் 8 அன்று நள்ளிரவு முதல் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அன்று இரவு 8 மணிக்கு நரேந்திர மோடி அறிவித்தார். நாட்டில் புழக் கத்தில் உள்ள பணத்தின் மதிப்பு 17.32 இலட்சம் கோடி யாகும். இதில் ஐநூறு, ஆயிரம் உருபா நோட்டுகளின் மதிப்பு 86 விழுக்காடாகும். அதாவது 14.46 கோடி உருபா. எண்ணிக்கையில் 220 இலட்சம் பணத்தாள் களாகும். ஒரே இரவில் இவ்வளவு பெருந்தொகையை மதிப்பு நீக்கம் செய்யப்படுவதால் பொது மக்களுக்கு ஏற்படக்கூடிய இடர்ப்பாடுகளை, துன்பங்களை இந்திய அரசு கருத்தில் கொள்ளாமல் தடாலடியாக இந்த அறி விப்பைச் செய்தது என்பதைக் கடந்த 45 நாட்களின் அனுபவங்கள் உணர்த்துகின்றன. பணமதிப்பு நீக்கம் தொடர்பாக 8.11.2016க்குப் பிறகு அய்ம்பதுக்கு மேற் பட்ட அறிவிப்புகள் அரசின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள தானது எதைக் காட்டுகிறது? முறையாகத் திட்டமிடப் படாமல் இத்திட்டம் மோடியால் அறிவிக்கப்பட்டது என்பதையே காட்டுகிறது.

atm queue

10.10.2016 முதல் கடந்த ஒன்றரை மாதங்களாக மக்கள் தங்களிடம் செல்லாததாகிவிட்ட ஐநூறு, ஆயிரம் உருபா நோட்டுகளில் ரூ.4000 அளவுக்குப் புதிய நோட்டுகளாக மாற்றவும், மீதித் தொகையை தங்கள் கணக்கில் வங்கியில் செலுத்தவும், வங்கியில் தங்கள் சேமிப்பில் உள்ள பணத்தை எடுக்கவும் நாள் கணக்கில் பல மணிநேரம் கால்கடுக்க நின்று கொண்டிருக்கின்றனர். வங்கிகளின் முன்னால் வரிசை யில் நின்ற துன்பத்தால் துவண்டு விழுந்து இதுவரை எண்பது பேர் மாண்டிருக்கின்றனர்.

நவம்பர் 8 அன்று நாட்டு மக்களுக்கு நரேந்திர மோடி ஆற்றிய உரையில், “உங்கள் கணக்கில் செல் லாத உருபாய் நோட்டுகளைச் செலுத்திய பிறகு, உங் களுக்கு எப்போது தேவையோ அப்போது உங்கள் பணத்தைப் பெற்றுக் கொள்ளலாம்” என்று உறுதி அளித் தார். ஆனால் நிலைமை என்ன?

ஒரு கிழமையில் ரூ.24,000 அளவுக்கு ஒருவர் பணத்தை எடுக்கலாம் என்று அரசு அறிவித்தது. வங்கி முன் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்த பிறகும் ரூ.2000, ரூ.4000 அல்லது ரூ.5000 மட்டுமே தரப்படுகிறது. பணம் தீர்ந்துவிட்டது என்று கூறி மக்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். ஏ.டி.எம். களில் பணம் எடுப்பது என்பது குதிரைக் கொம்பு போலாகிவிட்டது. வங்கிகள் அன்றாடம் செயல்படு கின்றன. ஆனால் ஏ.டி.எம்.கள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாத-கேடான நிலை நீடிக்கிறது. ஏ.டி.எம். இல் பணம் நிரப்பப்பட்ட அரை மணிநேரத் திற்குள் பணம் தீர்ந்துவிடுகிறது. பெரும்பாலான ஏ.டி.எம். களில் பெரும்பாலான நேரங்களில் பணம் இல்லை என்கிற அறிவிப்புப் பலகை வாயிலில் தொங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி 20.12.2016 அன்று, “வங்கிகளுக்குக் போது மான உருபா நோட்டுகளை ரிசர்வ் வங்கி வழங்காத நாளே இல்லை; உருபா நோட்டுகளுக்கு ஏற்படும் தட்டுப்பாட்டைச் சமாளிக்க ரிசர்வ் வங்கி முழு அளவில் தயாராக இருக்கிறது” என்று நாக்கூசாமல் பொய் பேசியிருக்கிறார்.

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், 19.12.2016 அன்று வரை ரூ.12,40,000 கோடிக்குப் பழைய - செல்லாத 500, 1000 ரூபாய் தாள்களைப் பெற்றுக்கொண்டு, அதற்கு மாற்றாக ரூ.5,92,000 கோடிக்கு மட்டுமே புதிய உருபா நோட்டுகளைப் புழக் கத்திற்குக் கொடுத்துள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அதாவது கணக்கில் பெற்றுக்கொண்ட 12 இலட்சம் கோடி உருபா பழைய நோட்டுகளுக்கு மாற்றாக அதில் பாதி அளவான ரூ.6 இலட்சம் கோடிக்குப் புதிய தாள்களை - அவற்றில் பெரும்பாலும் ரூ.2000 மதிப்புள்ள தாள்களைப் புழக் கத்திற்குக் கொடுத்துள்ளது. ஆனால் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி ரிசர்வ் வங்கியிடம் உருபா நோட்டுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கும் அளவுக்குப் புதிய உருபா நோட்டுகள் இருப்பதாகப் புளுகுகிறார். உண்மை என்ன வெனில் அரசிடம் உள்ள உருபா நோட்டு அடிக்கும் அச்சகங்களில் அவற்றின் முழு உற்பத்தித் திறனைப் பயன்படுத்தினாலும் பழைய செல்லாத நோட்டுகளுக்கு ஈடுகட்டும் அளவுக்குப் புதிய பணத்தாள்களை அச்சிடு வதற்குக் குறைந்தது ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு ஆகும் என்று கூறப்படுகிறது. அதுவரை மக்கள் அன் றாடம் வங்கிகளில் பணம் எடுப்பதற்காக அல்லாடும் அவல நிலை நீடிக்கும்.

ஐநூறு, ஆயிரம் உருவா நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு நாட்டின் பொருளாதார அன்றாட நடவடிக்கைகளைச் சீரழித்துள்ளது. நாட்டின் பொருளா தார நடவடிக்கைகளில் 85 விழுக்காட்டிற்குமேல் ரொக்கப் பணம் பரிவர்த்தனையில் தான் நடக்கிறது. திடீரென ரொக்கப் பணப்புழக்கம் நிறுத்தப்பட்டதால் வேளாண்மை, சிறு, குறு தொழில்கள், கட்டுமானப் பணிகள், சுயதொழில்கள் முதலானவற்றின் உற்பத்தி யில்-செயல்பாடுகளில் பெரும் தேக்கம் ஏற்பட்டுவிட்டது. உழைக்கும் அகவையில் உள்ள உழைப்பாளர்களில் 90 விழுக்காட்டினர் அமைப்புசாராத் தொழில்களில் தான் வேலை செய்கின்றனர். இவர்களுக்கான ஊதியம் நாள் கூலியாகவோ, வார-மாதச் சம்பளமாகவோ ரொக்கமாகத் தரப்படுகிறது. ஒரே இரவில் அதிரடியாக 86 விழுக்காடு அளவிற்கான பணத்தின் மதிப்பு நீக்கம் செய்யப்பட்டுவிட்டதால்; ரொக்கப் பணப்புழக்கம் அடி யோடு முடங்கிவிட்டது. இதனால் ஏற்பட்ட வேலை இழப்பாலும் வருவாய் இழப்பாலும் உழைக்கும் மக்கள் தவித்துக் கொண்டிருக்கின்றனர். நாட்டின் பொருளாதாரம் பெரும் பின்னடைவைக் கண்டுள்ளது. இதுவே உண்மை.

திசம்பர் மாதம் சென்னையைத்தாக்கிய வார்தா புயல் மரங்களையும் மக்கள் வாழ்க்கையையும் புரட்டிப் போட்டது போல், மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை நிலைகுலையச் செய்துவிட்டது. இத்துன்பத்தை நாட்டின் நலனைக் கருத்தில் கொண்டு பொதுமக்கள் அய்ம்பது நாள்களுக்கு - அதாவது திசம்பர் 31 வரை பொறுத்துக் கொள்ள வேண்டும் என்று நரேந்திர மோடி வேண்டு கோள் விடுத்தார். நாட்டில் தலைவிரித்தாடும் ஊழலை யும், கருப்புப் பணத்தையும், கள்ளப் பணத்தையும் ஒழிப்பதற்காக அரசு நடத்தும் இந்த மாபெரும் வேள்வி யில் மக்களும் பங்கேற்று ஒத்துழைக்க வேண்டும் என்று மோடி அழைப்பு விடுத்திருக்கிறார்.

இந்திய மருத்துவக் கல்விக் கழகத்தின் (MCI) தலைவராக இருந்த கேதன் தேசாய், முறைகேடாக மருத்துவக் கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததன் மூலம் இலஞ்சமாகப் பெற்ற ரூ.2500 கோடியை முட்டாள்தனமாகத் தன் வீட்டில் அடுக்கி வைத்திருந் தார். அதனால் கையும் களவுமாகப் பிடிபட்டார்; பணமும் அமலாக்கத் துறையால் கைப்பற்றப்பட்டது. ஆனால் பிணையில் வெளிவந்த இந்த ஊழல் பெருச் சாளியை, குசராத் முதலமைச்சராக இருந்த நரேந்திர மோடி உலக மருத்துவக் கழகத்தின் தலைவராக்கிட உதவி செய்தார். குசராத் மாநில முதலமைச்சராக நரேந்திர மோடி இருந்த போது ஆதித்திய பிர்லா, சஹாரா நிறுவனங்களிடம் கோடிக்கணக்கில் பணம் பெற்றார் என்பதற்கான ஆவணங்கள் அமலாக்கத் துறையின் அதிரடிச் சோதனையில் சிக்கின. இது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்திற்குச் சென்றது. கோடிக்கணக்கில் மோடி இரண்டு முதலாளிய நிறுவனங்களிடம் பணம் பெற்றது குறித்து மோடியிடம் விசாரணை மேற்கொள்ளாதவாறு உச்சநீதிமன்றம் மழுப்பலான முறையில் தடுத்துவிட்டது. இந்த மோடி தான் அவ்வப்போது “என்னுடைய கைகள் கறைபடா தவை - தூய்மையானவை” என்று அவருக்கு அவரே நற்சான்று வழங்கிக் கொள்கிறார்.

கிட்டத்தட்ட கருப்புப் பணம் முழுவதும் பெருமுத லாளிகள், உயர் அதிகாரிகள், அரசியல்வாதிகளிடம் இருக்கிறது. இவர்கள் கேதன் தேசாய் போல் கருப்புப் பணத்தை வீட்டிலேயே அடுக்கி வைக்கும் அளவுக்கு முட்டாள்கள் அல்லர். மொத்த கருப்புப் பணத்தில் ஆறு விழுக்காடு அளவிற்கு மட்டுமே ரொக்கப் பணமாக இருக்கிறது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இக் கருப்புப் பண முதலைகள் கருப்புப் பணத்தின் பெரும் பகுதியை அயல்நாடுகளின் வங்கிகளில் சேமித்து வைக்கின்றனர்.

குளோபல் பைனான்சியல் இண்டக்ரிட்டி (Global Financial Integrity) என்கிற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், இந்தியாவில் 2004 முதல் 2013 வரையிலான காலத்தில் ஆண்டுதோறும் 3.3 இலட்சம் கோடி கருப்புப் பணம் இந்தியாவை விட்டு வெளியேறி யுள்ளது; அதாவது கடந்த 12 ஆண்டுகளில் 40 இலட்சம் கோடி கருப்புப் பணம் அயல்நாடுகளில் பெருமுதலாளி களால் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட் டுள்ளது. எனவேதான் இந்தியாவில் வருமான வரி ஏய்ப்புச் சிக்கல் ஏற்படும்போது, லலித்மோடி, விஜய் மல்லையா, இறைச்சி ஏற்றுமதி முதலாளி மொயின் குரோஷி, பெரிய ஆயுத விற்பனை வணிகர்களான சுதிர் சவுத்திரி, விபின் கன்னா போன்றவர்கள் அரசின் ஆதரவுடன் வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடு கின்றனர். இவர்கள் வெளிநாடுகளில் கோடிக்கணக்கில் பதுக்கி வைத்துள்ள பணத்தைக் கொண்டு அரசர் களைப் போல வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்திய நாட்டின் மொத்தக் கருப்புப் பணம் எவ்வளவு என்பது இன்னும் திட்டவட்டமாக வரையறுக்கப்பட வில்லை. பொது நிதி மற்றும் கொள்கைக்கான தேசிய நிறுவனம் (National Institute of Public Finance and Policy - NIPFP) 2013இல் நிதி அமைச்சகத்திற்கு அளித்த அறிக்கையில், வெளிநாட்டிலும் உள்நாட்டிலும் உள்ள இந்தியாவின் கருப்புப் பணம் இந்திய நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் (GDP) 75 விழுக்காடு அளவிற்கு உள்ளதாகத் தெரிவித்திருந்தது. அப்போது நிதி அமைச்சராக இருந்த ப. சிதம்பரமும் ஊடகங்களும் இந்த அறிக்கையைப் பொருட்படுத்த வில்லை. 75 விழுக்காடு கருப்புப் பணம் என்பது 120 இலட்சம் கோடியாகும்.

உலக வங்கி அறிக்கையில், இந்தியாவின் கருப்புப் பணம் நாட்டின் மொத்த உற்பத்தி மதிப்பில் 20 முதல் 30 விழுக்காடு அளவுக்கு இருக்கும் என்று கூறப்பட் டுள்ளது என, ஊடகங்களில் குறிக்கப்படுகிறது. வெளி நாடுகளின் வங்கிகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள கருப்புப் பணம் 75 இலட்சம் கோடி என்று முதலில் கூறியவர் எல்.கே. அத்வானிதான். எனவேதான் பா.ச.க.வின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நரேந்திர மோடி, 2014இல் நாடாளுமன்றத்திற்கு நடந்த பொதுத் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில், “அயல்நாட்டு வங்கிகளில் உள்ள 75 இலட்சம் கோடி கருப்புப் பணத்தை மீட்டு வந்து ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் 15 இலட்சம் உருவா போடுவேன்” என்று போர் முழக்கம் செய்தார். இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் வெளிநாட்டுக் கருப்புப் பணத்திலிருந்து ஒரு காசு கூட மீட்கவில்லை மோடி. இதுகுறித்து பா.ச.க.வின் தலைவராகவும் மோடியின் வலது கையாக வும் உள்ள அமித்ஷாவிடம் கேட்ட போது, “இதெல் லாம் தேர்தல் காலத்தில் பேசுகிற பேச்சுகள்; இதைப் பெரிதாக எடுத்துக் கொள்ளலாமா” என்று ஊடக வியலாளர்களிடம் திருப்பிக் கேட்டார்.

வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணத்தை மீட்க முடியாத நிலையில் உள்நாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்பதற்கான அதிரடி நடவடிக்கையாக - இராணுவத்தின் துல்லிய தாக்குதல் போல் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை நரேந்திர மோடி அறிவித் துள்ளார். மோடி, ஆட்சியில் அமர்ந்தபின், “இந்தியாவில் தயாரிப்போம்”, “தூய்மை இந்தியா”, “டிஜிட்டல் இந்தியா”, “ஸ்டார்ட் அப் இந்தியா”, “ஸ்டேன்ட் அப் இந்தியா” முதலான பல முழக்கங்களை முன்மொழிந் தார். அவற்றால் வெளிப்படையான பயன்கள் ஏதும் விளையவில்லை. தன்னுடைய ஆட்சியின் தோல்வி களை மூடி மறைக்கவும், தன் செல்வாக்கைச் சரியாமல் பார்த்துக் கொள்வதுடன், மேலும் உச்சநிலைக்குக் கொண்டு செல்லவும் தேர்ந்தெடுத்த துல்லிய தாக்குதல் தான் - பணமதிப்பு நீக்க நடவடிக்கை. பணமதிப்பு நீக்க நடவடிக்கை ஊழலை, கருப்புப் பணத்தை, கள்ளப் பணத்தை ஒழிக்கும் என்கிற போலியான எதிர்பார்ப்பை, நம்பிக்கையை மக்களிடம் பா.ச.க. தன் பரப்புரைகள் மூலம் ஏற்படுத்தி இருக்கிறது. எனவேதான் வங்கிகளின் முன்னால் கால்கடுக்கப் பல மணிநேரம் நின்றவாறு காத்திருப்பது துன்பமாக இருக்கிறது என்று புலம்பும் மக்களில் ஒரு பகுதியினர், பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்பதால், வரவேற்கக் கூடியதுதான் என்றும் கூறுகின்றனர். கோழியை விரட்டி அமுக்கிப் பிடிப்பதுபோல், நரேந்திர மோடி பணமதிப்பு நீக்க நடவடிக்கை மூலம் நாட்டில் உள்ள கருப்புப் பணத்தை அப்படியே அள்ளி சாக்கு மூட்டை களில் கட்டி எடுத்து வந்து அரசின் கருவூலத்தில் சேர்த்து விடுவார்; அப்பணம் மக்கள் நலத்திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும்; தொழில்களில் முதலீடாகச் செய்யப் படுவதன் மூலம் வேலை வாய்ப்புகள் பெருகும்; மக்களின் வாங்கும் சக்தி உயரும்; வறுமை நீங்கும் என்று நடுவண் அரசும், பா.ச.க.வினரும் நாள்தோறும் பரப்புரை செய்து வருகின்றனர்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது மக்களிடம் தன் செல்வாக்கை மேலும் உயர்த்திக் கொள்வதற்காக, வறுமையை ஒழிக்க முடியாது என்பதை நன்கு தெரிந் திருந்தும், 1971இல் தேர்தலின் போது “வறுமையை வெளியேற்றுவோம்” (கரிபீ ஹட்டாவோ) என்ற முழக் கத்தை முன்வைத்தார்.

உள்நாட்டில் உள்ள கருப்புப் பணத்தில் 6 விழுக் காடு அளவிற்கு தான் ரொக்கப் பணமாக - உருவா நோட்டுகளாக இருக்கிறது. மீதி கருப்புப் பணம் நிலம், வீட்டு மனை வணிகம், பெரும் கட்டடங்கள், தங்கம், வைரம், பங்குச் சந்தை முதலீடுகள் என அசையாச் சொத்துகளாகவும் அசையும் சொத்துகளாகவும் அரசின் நடவடிக்கையால் தொட முடியாத வகையில் பாதுகாப்பாக உள்ளன. அதாவது கருப்புப் பணம் உருவாக, உருவாக அதில் 95 விழுக்காட்டிற்குமேல் அது வெள்ளையாகக் கருப்புப் பண முதலாளிகளால் மாற்றப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அயல்நாடுகளில் வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள கருப்புப் பணமும் சும்மா தூங்கிக் கொண்டிருப்ப தில்லை. முதலாளித்துவப் பொருளாதார அமைப்பில் மூலதனம் மேலும் இலாபத்தை ஈட்டுவதற்கான வழி வகைகளைத் தேடி ஓடிக்கொண்டே இருக்கும். ஆகவே வெளிநாடுகளில் உள்ள கருப்புப் பணம் அந்நிய மூல தனமாகவும் ஹவாலா மூலமும் மீண்டும் இந்தியா வுக்குள் வந்து கொண்டிருக்கின்றது. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 2.5 இலட்சம் கோடி உருவா அளவுக்குக் கருப்புப் பணம் இந்தியப் பொருளாத hரத்தில் உருவாகிறது. இதில் ஒரு பகுதி அயல்நாடு களில் உள்ள வங்கிகளுக்குச் சென்று கொண்டே இருக்கிறது. அதேபோல் அயல்நாடுகளின் வங்கிகளில் உள்ள கருப்புப் பணம் பல்வேறு வழிகளில் மீண்டும் இந்தியாவுக்குள் வந்துகொண்டே இருக்கிறது.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில், அந்நிய முதலீட்டை இந்தியப் பங்குச் சந்தையில் ஈர்ப்பதற்காகப் பங்கேற்புப் பத்திர முறையைக் (Participatory Notes) கொண்டு வந்தார். இதன்படி பங்குச் சந்தையில் இந்தியாவில் உள்ள ஒருவரோ, அயல்நாடுகளில் இருப்பவர்களோ எவ்வளவு தொகையை வேண்டுமானாலும் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்யலாம். அவர்களின் பின்னணி குறித்து அரசு விசாரிக்காது என்பதுடன், அவர்களின் பெயர் குறித்த விவரங்கள் இரகசியமாய் வைத்திருக்கும். இந்தப் பங்கேற்புப் பத்திரங்கள் மூல மாகத்தான் வெளிநாடுகளில் பதுக்கப்பட்டுள்ள கறுப்புப் பணம் இந்தியப் பங்குச் சந்தையில் குளித்தெழுந்து வெள்ளைப் பணமாக மாறிவிடுகிறது.

இந்தியாவில் அதிகமாக முதலீடு செய்திருப்பது அமெரிக்காவோ, சீனாவோ அல்ல. இந்துமாக்கடலில் அமைந்துள்ள மொரீசியஸ் என்ற குட்டித்தீவு 40 விழுக் காட்டுக்கு மேலான அந்நிய முதலீட்டை இந்தியாவில் போட்டுள்ளது. மொரீசியஸ், கேமன் போன்ற குட்டித் தீவுகள், சிங்கப்பூர் போன்ற சில குட்டி நாடுகளுடன் இந்தியா “இரட்டை வரிவிதிப்புத் தவிர்ப்பு” என்கிற ஒரு மோசடியான உடன்பாடு செய்து கொண்டுள்ளது. இதன்மூலம் வெளிநாடுகளில் உள்ள கருப்புப்பணம், பங்கேற்புப் பத்திரங்கள் என்கிற வடிவில் இந்தியப் பங்குச்சந்தைக்குள் நுழைந்து வெள்ளைப் பணமாக மாறிக்கொண்டே இருக்கிறது. கருப்புப்பண ஒழிப்பு நடவடிக்கையாகப் பங்கேற்புப் பத்திர முறையை ஒழிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கூறிவரு கின்றனர். மன்மோகன் சிங் ஆட்சியோ, கருப்புப் பணத்தை ஒழிப்பதற்காகவே அவதாரம் எடுத்திருப்ப தாகக் கூத்தாடும் மோடியோ இதை ஒழிக்க முன்வர வில்லை.

பாக்கிஸ்தானில் உயர்மதிப்புக் கொண்ட இந்திய உருவா பணத்தாள்களை அச்சிட்டு இந்தியாவுக்குக் கொண்டுவந்து, இங்கு பயங்கரவாதச் செயல்களுக்குப் பயன்படுத்துவதைத் தடுப்பது என்பது, பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் நோக்கங்களில் ஒன்று என மோடி கூறியிருப்பது மிகவும் நகைப்புக்கிடமான தாகும். இப்போது புதியதாக வெளியிடப்பட்டுள்ள ரூ.2000 மதிப்பு கொண்ட பணத்தாள்களைக் கள்ள நோட்டாக அச்சிட முடியாதா? இந்தியாவில் இப்போதே ரூ.2000 கள்ள நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துவிட்ட தாகச் செய்திகள் வெளிவந்துள்ளனவே! பாக்கிஸ்தானிய பயங்கரவாதிகள் இந்த அளவுக்குத் தொல்லைப்பட வேண்டியதில்லை. ஏனெனில் பாக்கிஸ்தானிய பயங்கர வாதிகள் பங்கேற்புப் பத்திரங்கள் மூலம் இந்தியப் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதற்குத் தடை இல்லை. அந்தப் பங்குச் சந்தை முதலீட்டிலிருந்து கிடைக் கும் ஈவுத்தொகையை அல்லது முதலீட்டை விற்றுக் கிடைக்கக்கூடிய வெள்ளைப் பணத்தைத் தீவிரவாதி களுக்கு விநியோகிப்பது எளிது என்பதை அறியாத முட்டாள்களா அவர்கள்?

கருப்புப் பணம் இரண்டு வழிகளில் உருவாகிறது. போதை மருந்து வணிகம்-கடத்தல், ஆயுதக் கடத்தல், ஆள் கடத்தல், விபச்சாரம் முதலான முறைகேடான தொழில்கள் மூலம் கிடைக்கும் பணம் ஒருவகை. முறையாகத் தொழில் செய்பவர்களும் பலவகைகளில் வரி ஏய்ப்பு செய்வது, குறிப்பாக ஏற்றுமதி-இறக்கு மதிகளில் பெருமுதலாளிய நிறுவனங்கள் செய்யும் தில்லுமுல்லுகள் மூலம் கருப்புப் பணம் உருவாவது மற்றொரு வகை.

நாட்டில் உள்ள கருப்புப் பணத்தில் 64 விழுக்காடு கார்ப்பரேட் முதலாளிகளிடம் உள்ளது. மீதி அரசியல் வாதிகள், உயர் அதிகாரிகள், கிரிமினல்கள் ஆகியோரிடம் இருக்கிறது. எனவே முதலாளிகள் - அரசியல்வாதிகள் - உயர் அதிகாரிகள்-கிரிமினல்கள் கூட்டுதான் கருப்புப் பணம் உருவாவதற்கும் நிழல் பொருளாதாரம் நிலவு வதற்கும் காரணர்கள் ஆவர்.

முதலாளிகளும் முறைகேடான தொழில்களைச் செய்வோரும் அரசியல்வாதிகளுடன், கட்சிகளுடன் அணுக்கமாக இருப்பதுடன் அவர்களுக்குப் பெருந்தொகையை இலஞ்சமாகவும் நன்கொடை என்ற பெயரிலும் அளித்து வருகின்றனர். அதற்குக் கைம்மாறாக அரசியல் கட்சிகள் அவர்களின் முறைகேடுகளுக்குப் பாதுகாப்பு அரணாக விளங்குகின்றன. தேசியக் கட்சி, மாநிலக் கட்சி என்கிற வேறுபாடு இதில் இல்லை. கடந்த பத்து ஆண்டுகளில் “யாரிடமிருந்து என்று கூறப்படாத வகையில்” (Unknown Sources) தேசிய கட்சிகள் பெற்ற நன்கொடை விவரம் :

வ. எண். கட்சியின் பெயர்         பெற்ற நன்கொடை ரூ. கோடியில்

1.         காங்கிரசு    3,323

2.         பா.ச.க.          2,125

3.         சி.பி.எம்.       471

4.         பகுஜன் சமாஜ்       448

5.         தேசியவாத காங்கிரசு   243

அரசியல் கட்சிகளுக்கு ரூ.20,000க்குக் குறை வாக அளிக்கப்படும் நன்கொடைகள் வருமான வரி விதிப்புச் சட்டத்தின்கீழ் வரமாட்டா என்று 1951ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் எழுதப்பட்டு விட்டது. ஏனெனில் இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது அடிப்படையிலேயே முதலாளிகளையும் பெரும் பணக் காரர்களையும் காப்பாற்றும் சட்டம் என்பதை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது.

அரசியல் கட்சிகள் முறைகேடாகப் பெறும் பணம் முழுவதையும் ரூ.20,000க்குக் குறைவாகப் பெற்ற நன்கொடையாகவே கணக்குக் காட்டுகின்றன. மேலும், 1961ஆம் ஆண்டு வருமான வரிச் சட்டத்தில் அரசியல் கட்சிகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுவிட்டது. எனவே அரசியல் கட்சி என்பது கறுப்புப் பணத்தை வெள்ளைப் பணமாக மாற்று வதற்கான சிறந்ததோர் அமைப்பு என்றாகிவிட்டது. இந்தியாவில் இப்போது இருக்கின்ற அரசியல் கட்சிகள் எண்ணிக்கை எத்தனை தெரியுமா? தேர்தல் ஆணையத்திடம் அரசியல் கட்சிகளாகப் பதிவு செய்யப் பட்டிருப்பவைகளின் எண்ணிக்கை 1900. இவற்றுள் 400 அரசியல் கட்சிகள் கூட, தேர்தல்களில் வேட் பாளர்களை நிறுத்துவதில்லை. கருப்புப் பணத்தை எளிதாக வெள்ளையாக்குவதற்கான சாதனமாக அரசியல் கட்சிகள் இருக்கின்றன (Economic and

Political Weekly, December 17, 2016).

சென்னையில் இருக்கும் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் நிறுவனரும் இணைவேந்தருமான பச்சமுத்து என்கிற பாரிவேந்தர் இந்திய சனநாயகக் கட்சி என்கிற அரசியல் கட்சியை நடத்துவதன் நோக்கம், கல்விக் கொள்கையின் கருப்புப் பணத்தை வெள்ளையாக்கு வதற்கே ஆகும். சாதிச் சங்கங்களும் அரசியல் கட்சி களை நடத்துவதன் பின்னணியும் இதுவே ஆகும். எனவே தேர்தல் ஆணையம் இந்திய அரசுக்கு அனுப்பிய அறிக்கையில், ரூ.2000 அல்லது அதற்கு அதிகமான தொகையில் பெயரிடப்படாமல் வழங்கும் நன்கொடைகளைப் பெறுவதற்கு அரசியல் கட்சிகளுக் குத் தடைவிதிக்க வேண்டும்; தேர்தல் அரசியலில் பங்கேற்காத கட்சிகளின் அங்கீகாரத்தை இரத்து செய் யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் பணமதிப்பு நீக்க அறிவிப்புக்குப்பின் கூடிய நாடாளுமன்றக் கூட்டத் தொடரில், மோடி அரசு, வெளிநாடுகளிலிருந்து இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு வரும் நன்கொடைகளுக்கு உள்ள தடை களை நீக்கும் வகையில் வெளிநாட்டு நன்கொடை ஒழுங்காற்றுச் சட்டத்தில் (FCRA) பின் தேதியிட்டு நடைமுறைக்கு வருவதாகத் திருத்தம் செய்துள்ளது - வேதாந்தா, ஸ்டர்லைட், அனில் அகர்வால் ஆகியோரை வழக்கிலிருந்து காப்பாற்ற!

கள்ளப் பணத்தை ஒழிப்பேன் என்பது மக்களை ஏமாற்றுவதற்கான ஒரு முழக்கமே ஆகும். 2012 முதல் 2015 வரையிலான காலத்தில் கைப்பற்றப்பட்ட போலி உருவா நோட்டுகள் எனப்படும் கள்ளப் பணம் 147 கோடி ஆகும். கொல்கத்தாவில் உள்ள இந்தியப் புள்ளி விவர அமைப்பு 2015இல் மேற்கொண்ட ஆய்வில், புழக்கத்தில் உள்ள கள்ளப்பணம் 400 கோடி உருபா என மதிப்பிட்டுள்ளது. இது மொத்தம் புழக்கத்தில் உள்ள பணத்தில் 0.022 விழுக்காடு மட்டுமே ஆகும். கள்ளப் பண மதிப்பீடு நூறு மடங்கு அதிகமாக அதாவது 40,000 கோடி என்று வைத்துக் கொண்டால்கூட, அது மொத்த மதிப்பில் ஒரு விழுக்காடு கூட இருக்காது. எனவே கள்ளப்பணம் கருப்புப் பணத் தைப் போல் அல்லாமல், பொருளாதார நடவடிக்கை களில் குறிப்பிடும்படியான பாதிப்பை ஏற்படுத்து வதில்லை.

பணமதிப்புநீக்க நடவடிக்கையால் அரசு எதிர்பார்த்த படி கருப்புப் பணம் கண்டுபிடிக்கப்பட முடியாது என் பதை உணர்ந்தாலும், மக்கள் பல வகையில் அலைக் கழிக்கப்படுவதால் ஏற்பட்டுள்ள எதிர்ப்பாலும், மோடி அரசு தன் குரலை மாற்றிக் கொண்டிருக்கிறது. ஊழலை, கருப்புப் பணத்தை, கள்ளப் பணத்தை ஒழிக்காமல் உறங்கமாட்டேன் என்று கொக்கரித்த மோடியும், பா.ச.க.வும் பணமதிப்பு நீக்கத்தின் நோக்கம் ரொக்கப் பணம் இல்லாத பொருளாதார நிலையை (Cashless Economy) உருவாக்குவதே என்பதற்கு முதன்மை தந்து பேசிவருகின்றனர். இதுவும் இல்லாத ஊருக்குப் போகாத வழிகாட்டுவது போன்றதே ஆகும்.

இந்தியாவில் உள்ள மொத்த வங்கிகளின் கிளை கள் 1,35,263. இவற்றில் ஊரகப் பகுதிகளில் 47,455 கிளைகள் மட்டுமே உள்ளன. 15 அகவைக்கு மேற்பட்ட வர்களில் 2016ஆம் ஆண்டில் 53 விழுக்காட்டினர் மட்டுமே வங்கிகளில் கணக்கு வைத்துள்ளனர். நாட்டில் மொத்தம் 2,02,000 ஏ.டி.எம்.கள் உள்ளன. ஊரகப் பகுதிகளில் 20 விழுக்காட்டிற்கும் குறைவான ஏ.டி.எம்.களே இருக்கின்றன. ஆகவே மோடி கூறும், ‘பணம்மற்ற பொருளாதாரத்திற்கான’ போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிலையில் வெறும் வாய் வீராப்புப் பேசுவதால் என்ன பயன்?

ஸ்மார்ட் செல்பேசிகள் மூலம் பணப்பரிமாற்றம் செய்து கொள்ள மக்கள் பழகிக் கொள்ள வேண்டும் என்று மோடி சொல்கிறார். நாட்டில் 83 விழுக்காட்டி னரிடம் ஸ்மார்ட் செல்பேசி இல்லாத நிலையில், இதைப் பரிந்துரைக்க மோடி அரசு வெட்கப்பட வேண்டாமா? 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கின்படி 25 விழுக்காட்டினர் எழுத்தறிவற்ற வர்கள். மேலும் பள்ளிகளில் முதல் வகுப்பில் சேரு வோரில் 39 விழுக்காட்டினர் 5ஆம் வகுப்பை முடிப்ப தற்குள் பள்ளியிலிருந்து நின்று விடுகின்றனர். இவர் களால் ஸ்மார்ட் ஃபோன் மூலம் பணப்பரிவர்த்தனை செய்ய முடியுமா? வறுமைக்கோட்டிற்குக்கீழ் வாழும் 40 விழுக்காடு மக்களால் ஸ்மார்ட் கைப்பேசி வாங்க முடியுமா?

பிரெஞ்சுப் புரட்சிக்குமுன் மக்கள் ரொட்டியும் கிடைக்காமல் பட்டினியால் தவித்த போது, மன்னரின் மனைவி கேக் சாப்பிடுமாறு மக்களுக்குக் கூறியது போல், வங்கிகளிலும் ஏ.டி.எம்.களிலும் தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் மக்கள் தவித்துக் கொண்டிருக்கும் போது, ஸ்மார்ட் கைப்பேசிக்கு மாறுங்கள் என்று கூறுவது முட்டாள்தனமாக இருக்கிறது.

2016 சூலையின் கணக்கின்படி, இந்தியாவில் 69.77 கோடி பற்று அட்டைகள் (Debit Card) வழங் கப்பட்டுள்ளன. 2.59 கோடி கடன் அட்டைகள் (Credit Card) வழங்கப்பட்டுள்ளன. இவை இரண்டும் பொதுவாக பிளாஸ்டிக் அட்டைகள் எனப்படுகின்றன. 69 கோடி பற்று அட்டைகள் இருந்தாலும் இவற்றில் 90 விழுக்காடு பற்று அட்டைகள் ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. பொருள் களை வாங்கப் பயன்படுத்துவதில்லை. ஏனெனில் உழைக்கும் மக்களில் 90 விழுக்காட்டினர் அமைப்பு சாரா தொழிலாளர்களாக இருப்பதாலும் ஏழை, எளிய, நடுத்தர வர்க்கத்தினராகவும் இருப்பதாலும்-சிறு அளவி லான ரொக்கப் பரிமாற்றச் சந்தைதான் நாட்டில் நிலவுகிறது. உழவர்களில் 85 விழுக்காட்டினர் சிறு, குறு உழவர்களாக இருக்கும் நிலையில் அவர்களின் விளைபொருள்களை முன்பேர வணிகத்திலா விற்க முடியும்? குறிப்பாக காய்கறிகள், பூ வகைகள், பழங்கள் முதலானவை சிறிய அளவில் ரொக்கத்திற்குச் சந்தைப் படுத்தப்படுகின்றன. மோடி ஆட்சி, இந்த நடப்பு உண் மைகளை மறந்துவிட்டு மின்னணுப் பணப்பரிவர்த்த னையை முன்னெடுப்பது மக்களை எள்ளிநகையாடுவது போன்றதல்லவா? 30 விழுக்காடு கிராமங்களுக்கு மின் இணைப்பே இந்த 2016ஆம் ஆண்டிலும் இல்லை என்பது மோடிக்குத் தெரியுமா?

இரசீதுகள் இல்லாமல் ரொக்கப் பரிமாற்றத்தின் மூலம் நடக்கும் வணிகத்தால்தான் கருப்புப் பணம் உருவாகி வருகிறது என்கிற பழியை சிறு வணிகர்கள் மீது மோடி சுமத்துகிறார். இதன் உள்நோக்கம் சில் லறை வணிகத்தை ஒழித்து ரிலையன்ஸ், வால்மார்ட், பிக் பஜார் போன்ற பெருமுதலாளிகளின் சந்தை ஏகபோகத்திற்கு வழியமைப்பதே ஆகும்.

மின்னணுப் பணப் பரிமாற்றத்துக்கு மாறிவிட்டால் ஊழலும் கருப்புப் பணமும் ஒழிந்துவிடும் என்பது ஒரு மாயை. பிளாஸ்டிக் பணத்தைப் பயன்படுத்தும் ஏகாதி பத்திய நாடுகளில்கூட, கருப்புப் பொருளாதாரம் ஒழிந்து விடவில்லை. அமெரிக்காவில் 1,60,000 கோடி டாலர் அளவுக்கும், சப்பானில் 48,000 கோடி டாலர் அளவுக் கும் கருப்புப் பொருளாதாரம் இருப்பதாக உலக வங்கி அறிக்கை தெரிவிக்கிறது. பணப்புழக்கம் குறைவாக இருக்கும் பிரேசில் நாட்டில் ஊழலும் கருப்புப் பணமும் கோலாச்சுகின்றன.

எனவே மோடி கூறுகின்ற ரொக்கப் பணம் இல்லாத பொருளாதாரம் என்பது சிறுவணிகர்களை, சுயதொழில் செய்வோரை, உழவர்களை, மற்ற உழைக்கும் பிரிவினரை வங்கி வலைப் பின்னலில் சிக்கவைத்து, அவர்களிடம் நேரடியான வரியை மேலும் வசூலிப்பதும், மக்களின் சேமிப்புப் பணத்தைக் கார்ப்பரேட் முதலாளி களுக்குக் கடனாகத் தருவதும், பிறகு அவற்றில் பெரும் பகுதியை வாராக்கடன் என்ற பெயரில் தள்ளுபடி செய்வதும் ஆகும். நடுவண் அரசு ஆண்டுதோறும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு 5 இலட்சம் கோடி அளவுக்குப் பலவகையான வரிச்சலுகைகளை அளித்து வருகிறது.

பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்புப் பணத்தை வெளிக்கொண்டுவரும் என்று சொன்னார் மோடி. வெகுமக்கள் வங்கிகளிலும், ஏ.டி.எம்.களிலும் தங்கள் பணத்தை எடுக்க முடியாமல் நடுத்தெருவில் வெய்யி லில், குளிரில் திண்டாடிக் கொண்டிருக்க, கருப்புப் பண முதலைகளோ நேரடியாக ரிசர்வ் வங்கியி லிருந்தே தங்களிடமிருந்த செல்லாத நோட்டுகளைப் புதிய 2000 உருவா பணத்தாள்களாக மாற்றிக் கொண்டுவிட்டன. மற்ற வங்கிகளிலிருந்தும் குறிப் பாகத் தனியார் வங்கிகளிடமிருந்து புதிய உருபா நோட்டுகளைப் பெற்றுக் கொண்டனர். கருப்பு பண முதலைகள் மோடிக்கு ‘பெப்பே’ காட்டிவிட்டார்கள்.

ஏழைகள் நிம்மதியாகத் தூங்குகிறார்கள்; கருப்புப் பணம் வைத்திருப்போர் தூங்க முடியாமல் தூக்க மாத்திரையை விழுங்கிக் கொண்டிருக்கின்றனர் என்று நவம்பர் 8க்குப் பிறகு மோடி சொன்னார். ஆனால் இப்போது ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர மக்களும் நடுத்தெருவில் திண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். பணமதிப்பு நீக்க நடவடிக்கை கருப்புப் பணத்தையும் ஊழலையும் ஒழிக்கும் என்பது வெறும் கானல் நீரே என்பது வெட்டவெளிச்சமாகிவிட்டது. ஆனால் வெகு மக்களின் துயரம் இன்னும் பல மாதங்களுக்குத் தொடரும். மோடி இதற்கு விடை சொல்ல வேண்டிய காலம் விரை வில் வரும். கருப்புப் பண முதலைகள் நிம்மதியாகத் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

Pin It