500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்பதால் ஏற்பட்ட பயன் ஒன்றை கண்டுபிடித்து காதில் பூ சுற்றியிருக்கிறார் மத்திய இராணுவ அமைச்சர் பாரிக்கர்.

காஷ்மீரில் இராணுவத்தினர் மீது, மக்கள் (அதாவது பயங்கரவாதிகள்) கல்வீசுவது நின்று விட்டதாம்; ஒரு கல் வீசினால் ரூ.500 என்று ‘தீவிரவாதிகள்’ கொடுத்து வந்தார்களாம்!

இனிமேல் இந்தியாவில் இராணுவத்துக்கு எதிரான எந்த பயங்கரவாத நடவடிக்கையும் அப்படியே நின்று போய்விடும் என்று நம்புவோமாக!

அதேபோல் பாகிஸ்தான் இந்திய எல்லையிலும், சீனா-இந்திய எல்லைப் பகுதியிலும் இனி குண்டுகள் வெடிக்காது. அந்த செய்தியையும் பாரிக்கர் நாட்டுக்கு அறிவிக்கும் நாள் விரைவில் வரக் கூடும்.

அப்படியானால் ‘பாரத’ தேசத்தில் இராணுவத்துக்கே இனி வேலை இல்லை என்ற நிலை வந்தாலும் வரலாம்.

இதேபோல், “10 ரூபாய், 20 ரூபாய் நோட்டுகளை ஒழித்து விட்டால் பிச்சைக் காரர்களை ஒழித்து விடலாமே” என்று ஒரு நண்பர் யோசனை கூறுகிறார். இதுவும் கூட ஒரு நல்ல யோசனைதான்!

ஆக, நாங்க பயங்கரவாதம், பிச்சைக்காரர் ஒழிப்புக்கு வழி கண்டு பிடித்து விட்டோம்.

அடுத்து இந்த பாழாய்ப் போன வறுமையை எப்படி ஒழிக்கப் போகிறோம்? அப்பாடா! அதற்கும் விடை கிடைத்து விட்டது, சார்.

‘இனி வறுமை செல்லாது’ என்று நாடாளு மன்றத்தில் அவசர சட்டம் ஒன்றை மோடி அறிவித்தால் போதும்; அதற்காக திடீரென அமைச்சரவையை கூட்ட வேண்டும்; ஜனாதிபதி ஒப்புதலை உடனே பெற வேண்டும் - அடுத்த சில நிமிடங்களில் நாடாளு மன்றத்துக்கு மோடி வரவேண்டும் - அடுத்த 7 மணி நேரத்தில் இந்தியாவில் வறுமை ஒழிக்கப்படுகிறது; அதற்குப் பிறகு ‘வறுமை’ என்ற வார்த்தை செல்லாது; பொது மக்கள் பீதி அடைய வேண்டாம்; அருகில் உள்ள வருமான வரி அல்லது வருவாய்த் துறை அலுவலகம் சென்று, “நான் இதுவரை வறுமையில் இருந்தவன்; இனி அப்படி இருக்க மாட்டேன்; நான் உயிருடனேயே இருக்கிறேன்” என்று உரிய ஆவணத்தைக் காட்டி வறுமையை அந்த நிமிடத்திலேயே நீக்கிக் கொள்ளலாம். எப்புடி?

எங்கள் தமிழ்நாட்டில் ஏற்கனவே இடைத் தேர்தல் நடக்கும் தொகுதிகளில் மக்களுக்காகவே அரசியலுக்கு வந்த ‘ஜனநாயக செம்மல்கள்’ வறுமை ஒழிப்புத் திட்டத்தை ஏற்கனவே தொடங்கி விட்டாங்க. ஓட்டுக்கு 1000 என்ற நிலையை உயர்த்தி, 500, 1000 ரூபாய் நோட்டுகளாக 2000 வரை வாரிவாரி வழங்குகிறாங்க.

மூன்று தொகுதிகளில் ஒழித்தால் மட்டும் போதுமா என்று எவரும் அவசரப்பட வேண்டாம். சட்டசபையில் 110ஆவது விதியைப் பயன்படுத்தி தமிழ்நாடு முழுதும் வறுமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்று அறிவிச்சுடுவோம்ல!

இதற்கெல்லாம் ‘ரூம்’ போட்டு சிந்திப்பீர்களான்னு கேட்காதீங்க. அதற்கு அவசியமே இல்லை. பாதுகாப்புத் துறை அமைச்சர் பாரிக்கர் உதிர்த்த முத்துக்கள்தான் இப்படி சிந்திக்கவே தூண்டியது. அடேங்கப்பா! அவ்வளவு பெரிய அறிவுக் கொழுந்து!

அதெல்லாம் சரிதாங்க; ஜாதி ஒழிப்புக்கு ஏதாவது திட்டம் இருக்குதா? பார்ப்பனிய ஆதிக்கத் திமிரை அடக்க ஏதாவது வழி இருக்குதான்னு யாராவது கேட்டுடாதீங்க.

இதையெல்லாம் காப்பாத்துறதுக்குத்தான் இந்த நாட்டில் சட்டம், சமூகம், கோயில், கர்ப்பகிரகம், தேர்தல், ஜனநாயகம், ஆர்.எஸ்.எஸ்.ன்னு ஒரு பெரும் ‘படை’யே பூணூல், சூலாயுதத்துடன் திரிஞ்சுகிட்டிருக்குது!

- கோடங்குடி மாரிமுத்து

Pin It