நான் கீழ்பென்னாத்தூர் உயர்நிலை பள்ளியில் பத்தாம் வகுப்பு 1972இல் முழு ஆண்டு தேர்வு எழுதிவிட்டு விடு முறை யில் வீட்டிலிருந்தேன். பொழுதுபோக்கிற்காகக் கீற்றுக்கொட்ட கையில் இரவுக் காட்சித் திரைப்படம் பார்த்துவிட்டு நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு வீட்டுக்குவந்து உணவை முடித்துக் கொண்டு உறங்குவதற்காக வயலில் உள்ள கொட்டகையில் படுக்கச் செல்ல, என் அம்மாவிடம் சொல்லிவிட்டுப் புறப்பட இருந்தபொழுது, என் அம்மா “நடு இராத்திரியில் போகாதே காத்து-கருப்பு ஏதாகிலும் மிரட்டப்போகுது” என்றார். நானும் பிடிவாதத்துடன், வயலுக்குப் படுக்கப் புறப்பட்டேன். பௌர்ணமி நேரம் அது. வழியில் மாந்தோப்பு, மூங்கில் புதர் நிறைந்த இடத்தைக் கடந்து செல்ல வேண்டும். அந்த இடத்தை நெருங்கி யவுடன் நிலா வெளிச்சத்தில் மாந்தோப்பு அருகில் ஒரு கருப்பு ஆள் உணர உருவம் நின்றது. இதைப் பார்த்தவுடன் அம்மா சொன்ன மாதிரி ஏதோ உருவம் நிற்கிறதே, அம்மாவிடம் தைரிய மாகப் பேசிவிட்டு வந்து விட்டோமே, திரும்பிப் போனால் அம்மா பயப்படுவார், என்றெண்ணி கொண்டே அந்தக் கருப்பு உருவத்தைத் தைரியமாக நெருங்கினேன்.

அந்த உருவம் தோப்பு நிழலின் உள்ளே சென்றது. அங்கே ஒரு பாழடைந்த கிணறு ஒன்று உள்ளது. அருகில் செனறு பார்த்தேன். அந்த உருவத்தைக் காணவில்லை. சற்றுப் பதட்டத் துடன் கிணற்றில் எட்டி பார்த்தேன்; அங்கும் காணவில்லை. ஒரு பெரிய கல்லை எடுத்துக் கிணற்றில் போட்டேன். டமார் என்ற சத்தம் வந்ததே தவிர வேறு குரல் சத்தம் வரவில்லை. பின்னர் சிறிது முன்னோக்கிச் சென்றேன். சற்றுதொலைவில் அதே உருவம் நின்று கொண்டிருந்தது. என்னைக் கண்டு அது பயந்துவிட்டது என்று எண்ணி கனைத்துச் சத்தமிட்டு யாரது என்றேன். அந்த உருவம், என்னையா! இப்பொழுது தான் வயலுக்குப் போகின்றாயா என்றது. அப்பொழுது புரிந்து கொண்டேன் எனக்குத் தெரிந்தவர் தான் அவர் என்று. “ஆமாம் மாமா” என்று கூறிவிட்டுச் சென்றேன்.

பின்னர் ஏன் இவர் இந்த இரவில் இங்கு நிற்கின்றார்? என்ன செய்கிறார்? என்று நானும் ஒரு செடி மறைவில் நின்று பார்த்தேன். அவர் வேகமாக அவருடைய காதலி வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். இப்படிப்பட்டவர்கள்தான் மற்றவர் களிடம் பேய், பிசுhசு உள்ளது என்று கூறி திசைதிருப்பி விட்டுத் தவறுகள் செய்கின்றனர். அன்றிலிருந்து பேய், பிசாசு, பூதம் என்பதை நம்புவதே இல்லை. பேய் ஓட்டுவது என்ற தொழிலைச் செய்பவர்கள் இன்றும் அதிக அளவில் பொய் புரட்டுகள் சொல்லி ஏமாற்றி மற்றவர்களின் பணத்தையும் பொருளையும் பிடுங்கிக் கொள்கின்றனர். இந்த எண்ணம் தந்தை பெரியாரைப் பற்றி நான் அறிந்திராத காலத்தில் உருவான எண்ணமாகும். நான் பெரியாரைப் பற்றித் தெரிந்து கொண்டபிறகு மிகவும் தெளிவு பெற்றுப் பகுத்தறிவுச் சிந்தனையுடன் உள்ளேன்.

Pin It