periyar 254தலைவர் அவர்களே! சகோதரர்களே! சகோதரிகளே!

முதலாவதாக இக்கூட்டத்திற்கு ஒரு மணிநேரம் தாமதப்பட்டு வந்ததற்கு வருந்துகிறேன். காரணம் நமது சிதம்பரனார் அவர்களுக்கு சற்று உடல் நலிவு ஏற்பட்டு அவருக்குக் காயலா 103 டிகிரி இருந்தபடியினால் கொஞ்சநேரம் அவருக்காக காத்திருக்கும்படி நேரிட்டது. அதனாலேயே தான் நீங்கள் மாலையில் ஏற்பாடு செய்திருந்த மற்றொரு ஊர்வலத்தைக் கூட நான் ஒப்புக் கொள்ள முடியாமற் போய் விட்டது.

ஆகையால் அதற்காகவும் எனது வருத்தத்தைத் தெரியப்படுத்திக் கொள்ளுகிறேன். அன்றியும் திரு. சிதம் பரனார் அவர்களுக்கும் - திருமதி சிவகாமி அம்மாள் அவர்கட்கும் ஈரோட்டில் சுயமரியாதை கலப்பு “விதவை” திருமணம் நடைபெற்றதை முன்னிட்டும் அவர் இந்த ஊர் பாடசாலைக்கு மாற்றப் பட்டதை முன்னிட்டும், அவர்கள் இருவரும் இந்த ஊருக்கு வரும் போது நானும் எனது மனைவியாரும் கூடவே வரவேண்டுமென்று இவ்வூர் நண்பர்கள் பலர் கேட்டுக் கொண்டதிற்கிணங்க இங்கு வந்தோம்.

ஆயினும் வந்த சமயத்தில் திரு. சிதம்பரனாருக்குக் காயலா ஏற்பட்டு விட்டதால், அவர் வரமுடியாமல் திருமதி சிவகாமி இக்கூட்டத்திற்கும் வந்திருக்கிறார்கள். திரு சிதம்பரனார் அவர்கள் நமது இயக்கத்துக்காக பாடுபடுபவர்களில் மிகவும் உண்மையான உழைப்பாளியாவார். அவருக்கு சீக்கிரம் காயலா குணமாகிவிடுமென்று நம்பியிருக்கிறேன்.

திருமதி சிவகாமி அம்மாளும் ஒரு பெரிய குடும்பத்தில் பிறந்து இந்த ஜில்லாவிலேயே ஒரு பெரிய குடும்பத்தில் புகுந்தவர். திருமதி சிவகாமியின் முதல் கணவர் பி. ஏ. படித்தவரும் சுமார் இரண்டு மூன்று லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட செல்வந்தரென்றும் உங்கள் எல்லோருக்கும் தெரியும். அப்பேற்பட்ட பெருங் குடும்பங்களில் கலப்பு மணம் முதலியன ஏற்படுவது நமக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுக்கிறது.

திரு. சிவகாமி பதினாறு பதினேழு வயதுள்ள சிறு பெண்ணாகயிருந்த போதிலும் நமது இயக்கத்தில் பற்றுள்ள வரும், நல்ல கல்வியுள்ளவருமான ஒரு கணவன் இருந்தால் போதும் என்கின்ற அபிப்பிராயத்தைத் தெரிவித்ததானது நமது இயக்கத்தின் பலனாய் பெண்கள் உலகம் எவ்வளவு முற்போக்கடைந்திருக்கிறதென்பதை நீங்கள் உணர்வீர்கள்.

சகோதரர்களே! இனி காலை முதல் இதுவரையிலும் எங்கட்குச் செய்த ஊர்வலம் விருந்து முதலிய உபசாரத்துக்கும், வாசித்துக் கொடுத்த வரவேற்பு பத்திரங்கட்கும், எனது நன்றியறிதலைச் செலுத்திக் கொண்டு சில வார்த்தைகளால் அதற்குப் பதில் கூற வேண்டியவனாகயிருக்கின்றேன்.

உண்மையிலேயே நீங்கள் செய்த இவ்வளவு பெரிய ஆடம்பரங்களும் புகழ்ச்சி உரைகள் கொண்ட பத்திரங்களும் எனக்குக் கொஞ்சமும் இஷ்டமில்லாததும், சிறிதும் பொருத்தமில்லாததுமென்பதோடு நினைக்க நினைக்க நான் வெட்கப்படக் கூடியதாகவேயிருக்கிறது. என்றாலும் இந்த இயக்கத்தில் உங்களுக்குள்ள அளவு கடந்த உணர்ச்சியாலும் ஊக்கத்தாலுமே என்னுடைய மறுப்பைக் கூட லட்சியஞ் செய்யாமல் இவ்வளவு ஆடம்பரம் செய்து விட்டீர்களென்றே நினைக்கின்றேன்.

ஆனாலும் இந்த ஆடம்பரங்களை எனக்காக நீங்கள் செய்கிறீர்களென்று நினைக்காமல் இவ்வியக்கத்தின் வெற்றிக்கு அறிகுறியென்று கருதிக்கொண்டு இன்னும் மேலும் நான் உறுதியுடனும் ஊக்கத்து டனும் நடப்பதற்கு இவைகளை ஒரு தூண்டு கோலென்றும் கருதிக் கொண்டு எனது மனப்பூர்வமான நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

நண்பர்களே! இன்று நான் சுயமரியாதை இயக்கத்தைப் பற்றியே பேசுகிறேன். இரண்டு வருஷங்களுக்கு முன்னால் இங்கு நான் வந்து பேசியிருக்கிறேன். அப்பொழுது இதே இடத்தில் எனது நண்பரும், நமது இயக்கத் தின் பிரமுகரும், உங்கள் ஜில்லா போர்ட் தலைவருமான திருவாளர் ராவ் பகதூர் எ. டி. பன்னீர் செல்வம் அவர்களுக்கும் எனக்கும் ஒரு வரவேற்பளித்தீர்கள்.

அதற்கு முன்னும் இரண்டொரு தடவை கோவில் மண்டபத்தில் பேசியதாகவும் ஞாபகமிருக்கிறது. அதற்குப் பிறகு இங்கு வரச் சந்தர்ப்பப்பட வில்லையானாலும் நமது இயக்கத்திற்கு முதல் முதலாக இந்த ஊரிலிருந்து தான் எதிர்ப்பும், எதிர் பிரசாரமும் பல துண்டுப் பிரசுரங்களும், வசைப் புராணங்களையும் கொண்டெழுந்ததென்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

அதோடு அவ்வெதிர்ப்பை ஆரம்பித்தவர்கட்கும் எனது நன்றியறிதலைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில் அவ்வெதிர்ப்புதான் நமது இயக்கத்தை இவ்வளவு வேகமாக நடத்தச் சந்தர்ப்பங்கள் கொடுத்தது. நிற்க நான் முன் இங்கு வந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் எதைப் பற்றி என்ன விஷயங்கள் பேசினேனோ அதையே தான் இப்போது பேசப்போகின்றேன்.

ஆனால் அந்த காலத்தில் இவ்வளவு தைரியமாகவும் விளக்கமாகவும் பேச முடியவில்லை. இப்பொழுது சற்று தெளிவாகவும் உறுதியாகவும் பேசுகிறேன். இதைத் தவிர என்னுடைய பேச்சிலோ கொள்கைகளிலோ பத்து வருஷங் கட்கு முன்னிருந்ததற்கும் இப்போதைக்கும் ஒன்றும் மாறுதலில்லை என்பதே என் அபிப்பிராயம்.

நிற்க. நமது எதிரிகள் நம்மைப் பார்த்து சுயமரியாதை இயக்கமென்ப தாக ஒரு இயக்கம் எதற்காக வேண்டுமென்கிறார்கள். அன்றியும் இவ்வியக்கமானது தப்பான வழியில் மக்களைச் செலுத்துகிறதென்றும் ஒழுக்கத்தைக் கெடுக்கிறதென்றும், தேச நலத்துக்கும் கேடு சூழ்விக்கிறதென்றும் அரசாங்கத் துடன் நட்புக் கொண்டதென்றும் மற்றும் பலவாறாகப் பழிசுமத்தப்படுவதாகவும் கேள்விப்படுகிறேன்.

இவற்றிற்கு நான் சமாதானஞ் சொல்லு முன் நீங்களாகவே ஒரு விஷயத்தை யோசித்துப் பாருங்கள். அதாவது நாங்கள் யார்? எங்கள் முன்பின் தொழில் என்ன? இத்தொண்டின் மூலம் நாங்கள் எதிர் பார்க்கும் சுயநலமென்ன? என்பதையும் எங்களை ஆட்சேபிப்பவர்களின் யோக்யதையையும் அவர்களது முன்பின் வாழ்வையும் லட்சியங்களையும் யோசித்துப் பாருங்கள். முதலாவதாக என்னையும் நமது அக்கிராசனர் திரு. இராமனாதன் அவர்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்.

எங்களுக்கு இவ் வியக்கத்தின் பேரால் ஏதாவது உத்தியோகமோ பண வரும்படியோ ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோமா? இந்த இயக்கம் ஏற்பட்ட காலந்தொட்டு இன்றைய வரையில் யாரிடத்திலாவது ஒரு சின்னக் காசாவது இயக்கத்திற்காக வசூல் செய்திருக்கிறோமா? வேறு எந்த விதமான உதவியாவது இவ்வியக்கத்திற்கோ எங்கள் சொந்தத்திற்கோ இவ்வியக்கத்தின் பேரால், ஏதாவது எதிர் பார்த்திருக்கிறோமா? அல்லது நாங்கள் இம்மாதிரி பொது நலத்தின் பேரைச் சொல்லிக் கொண்டு பாமர மக்களை ஏமாற்றி அரசாங்க உத்தியோகத் திலிருந்து இருக்கிறோமா? எங்கள் பிள்ளைக் குட்டிகளுக்கு உத்தியோகத் துக்கு வேண்டியாவது, வேலை செய்கிறோமென்று சொல்வதானாலும் அப்படியாவது எங்களுக்குப் பிள்ளை குட்டிகள் ஏதாவது இருக்கிறதா? அல்லது எங்களுக்கு ஜீவனத்திற்கு ஒரு மார்க்கமோ, ஒரு நிலைமையோ இல்லாதவர்களா? அல்லது பொது ஜன சேவையின் பேரால் கஷ்டப்படாமலாவது தியாகஞ் செய்யாமலாவது பயந்து கொண்டு வெறும் மேடையில் மாத்திரம் சாமர்த் தியமாய்ப் பேசி விட்டு கஷ்டம் வந்த போது ஒளிந்து கொள்ளுகிறது முதலாகிய பித்தலாட்டமான காரியங்கள் செய்திருக்கிறோமா? இவற்றை எல்லாம் நீங்கள் நன்றாய் யோசித்துப் பாருங்கள்.

பிழைப்புக்காக பொது ஜன சேவையில் இறங்கினவர்களல்ல, ஒரு ஒழுங்கும் நிலையும் ஆன தொழிலிலிறங்கி வாழ்வை நடத்திக் கொண்டிருந்து பொது ஜன சேவைக்காக திடீரென்று அவைகளை விட்டு விட்டு வந்தவர்களே யொழிய பொது நலத்துக்கென்று வந்த பிறகு ஜீவனத்துக்கு வழி தேடிக் கொண்டவர்களல்ல. இதை நீங்கள் சற்று கவலை எடுத்து ஆராய்ந்து பார்ப்பீர்களானால், எங்களுக்கும் மற்ற தேசபக்தர்கள், தேசீயவாதிகள், காங்கிரஸ் வீரர்கள், உப்புக் காய்ச்சிகள், சாமி சமயக் காப்பாளர்கள் முதலாகியவர்கட்கும் உள்ள வித்தியாசங்கள் நன்கு புலப்படும்.

தவிர, திரு. இராமநாதன் அவர்கள் எம். ஏ. பி. எல். ஹைகோர்ட் வக்கீலாகயிருந்து வந்ததும் அவர்கள் ஒரு பெரிய கல்வியாளராகவுமிருந்து வக்கீல் தொழில் ஆரம்பத்திலேயே மாதம் முன்னூறு நானூறு சம்பாதித்துக் கொண்டிருந்ததை விட்டு விட்டு, திடீரென்று, துறவி போல் எல்லாவற்றையும் விட்டு விட்டுப் பொதுத் தொண்டிலிறங்கி ஜெயிலுக்கும் சென்று திருடர்கள், கொலைகாரர்கள், அயோக்யர்கள் போல் நடத்தப்பட்டு மண் வெட்டியையுங் கூடையையும் சுமந்து கொண்டு மண்வாரியும் தெருவில் கல்லுடைத்தும் கூனுக்கொட்டரையில் அடைபட்டும் மற்றும் பல தண்டனைகள் அடைந்தும் வந்தவர். நானோ அவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்காவிட்டாலும், ஒழுங்கான வியாபாரத்திலிருந்து வெளியாகி பல தடவைகளில் சிறை சென்று பல கஷ்டங்களை அனுபவித்தவனே யாவேன்.

இன்னும் என்னோடு கூட ஒத்துழைக்கும் பல நண்பர்களும் தக்க செல்வமுடையவர்களும் சிறை சென்று பல கஷ்ட நஷ்டங்கள் அடைந்தவர்களே தவிர இதனால் பிழைக்கக் கூடியவர்கள் அல்ல. தவிரவும் இன்றைய தினம் இந்த இயக்கத்தில் வேலை செய்யும் போது உங்களால் நாங்கள் எப்படி மதிக்கப்படுகிறோமோ கௌரவிக்கப்படுகிறோமோ அது போலவே காங்கிரஸிலுமிருந்து மதிக்கப்பட்டவர்களும் கௌரவிக்கப் பட்டவர்களுமேயாவோம்.

உதாரணமாக தமிழ் நாடு ஒத்துழையாமை காங்கிரஸ் கமிட்டியிலே நான் தலைவனா கவும் அக்கிராசனர் திரு. இராமநாதன் அவர்கள் காரியதரிசியாகவும் ஒத்துழையாமை காலம் பூராவும் இருந்திருக்கிறோம். இப்பொழுதும் அதாவது நாங்கள் இவ்வளவு பெரிய “தேசத் துரோகியும், கடவுள் துரோகியும்” ஆன பிறகுங் கூட, நாங்கள் விரும்பினால் தமிழ் நாடு காங்கிரஸ் தலைமையும், நிருவாகப் பொறுப்பும் எங்கள் கைக்குத் தாராளமாகக் கிடைத்து விடும்.

ஆனால் நாங்கள் அவ்வேலைகளை ஒரு தேசீய வஞ்சகம் என்று கருதிக் கொண்டிருக்கிறோம். ஆதலால் தான் நாங்கள் இத்துறையில் வேலை செய் கிறோம். இதில் நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட நேர்ந்தாலும் ஜெயிலுக்குப் போக நேர்ந்தாலும் நாங்கள் இன்னமும் தயாராகத்தான் இருக்கிறோமே தவிர நாங்கள் யாரையும் ஏமாற்றி விட்டு, மோசஞ் செய்து சுயநலம் அநுபவிப் பதற்காக நாங்கள் இத்தொண்டில் இறங்கவில்லை.

நம்மைத் தூஷிக்கிறவர்கள் நமது கொள்கைகளின் குற்றங்களையெடுத்துச் சொல்லி மெய்பிக்காமல் நமக்கு கெட்ட எண்ணம் கற்பிப்பதில் கவலையதிகமாக எடுத்துக் கொண்டி ருப்பதனாலேயே அவர்கள் யோக்யர்களல்லாதவர்களென்றும், பயங்காளிக ளென்றும் ஞாயமற்றவர்களென்றும் விளங்கவில்லையா? தவிர எங்கள் விஷயத்தைப் பற்றி சற்று எடுத்துச் சொன்னதினால் நாங்கள் தற்பெருமைக்காரர்கள் என்ற குற்றத்திற்காளாக வேண்டியவர்களாக இருந்தாலுமிருக்கலாம்.

ஆனபோதிலும் பொது ஜனங்களை ஏமாற்றத்திலிருந்து விடுவிப்பதற்காக அம்மாதிரியான குற்றங்கள் சில சமயங்களில் செய்ய வேண்டியே நேரிடுகிறது. தவிர நான் பொது நல சேவையில் இறங்கும் போது எந்தக் கொள்கை யோடு இறங்கினேனோ அந்தக் கொள்கையிலிருந்து இன்னம் மாறவில்லை, ஆனால் எங்கள் கொள்கையை நிறைவேற்ற எந்த ஸ்தாபனத்தை நாங்கள் கருவியாக உபயோகித்துக் கொண்டோமோ அந்த ஸ்தாபனம் தனது கொள் கையை விட்டு மாறிவிட்டதால் நாங்கள் அந்த ஸ்தாபனத்தை விட்டு மாறி எங்கள் கொள்கைக்காக வேறு ஸ்தாபனங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் உடையவர்களானோம்.

கொள்கை ஒன்றே

நாங்கள் ஒத்துழையாமையில் சேர்ந்து தலையில் மூட்டையைச் சுமந்து கொண்டு கிராமம் கிராமமாய்த் திரிந்து தினம் இரண்டு மூன்றிடங்களில் கூட பிரசங்கங்கள் செய்து கொண்டிருந்த காலத்திலும், எங்களுடைய கொள்கை கள் வெள்ளைக்காரர்களை இந்தியாவை விட்டே அடியோடு விரட்டி விடுவது அல்லவென்பதை உங்கட்குத் தைரியமாகச் சொல்லுகிறேன், மற்றென்னையெனில் எல்லா மக்களையும் மானமுள்ளவர்களாக்கி சமத்துவ மடையச் செய்வது, எல்லாருக்குள்ளும் ஒற்றுமையை உண்டாக்குவது, மக்களை அறிவாளிகளாக வாழச் செய்வது, பொருளாதார நிலைமையை உயர்த்துவது, ஜனங்களை சுகமாக சிக்கனமாக வாழவைக்க வேண்டியது முதலாகிய இந்தக் கொள்கைகளையே ஒத்துழையாமையின் போதும் வேறு பெயர்களால் அதாவது தீண்டாமை விலக்கு, ஹிந்து முஸ்லீம் முதலிய ஒற்றுமை, மதுவிலக்கு, கதர் என்னும் பெயர்கள் கொண்ட திட்டங்களாக ஏற் படுத்தப்பட்டிருந்ததே தவிர மற்றபடி சுயராஜியமென்பதாகவோ வெள்ளைக் கார ஆட்சியை விரட்டுதல் என்பதாகவோ வேறு தனிக் கொள்கைகள் எதுவும் நாங்கள் ஏற்படுத்தவேயில்லை. தவிரவும் சுயராஜியம் என்பதைப் பற்றி சில படித்த நபர்களும் உத்தியோக ஆசைக்காரர்களும் எங்களிடம் வந்து பேசின காலத்திலும் மேற்கண்டவைகள் தான் சுயராஜியமென்று சொன்னோமே தவிர இவைகளைத் தவிர சுயராஜியமென்பதாக தனியாக நாங்கள் எதையும் ஒப்புக் கொள்ளவுமில்லை, அதைப்பற்றி பேசவுமில்லை.

அப்போது நாங்கள் தலைவராகக் கொண்டிருந்த திரு. காந்தி அவர்களும் மேற்கண்ட கொள்கைகளைத் தான் சுயராஜியம் என்று ஆயிரக்கணக்கான தடவை பேசினதும் எழுதினதும் இன்னமும் தக்க ஆதாரங்களுடன் இருந்து வருகிறது.

ஆனால் திரு. காந்தி அவர்களுக்கு முதுகெலும்பு இல்லாது போனதினாலும், தாட்சண்யங்களினால் ஏற்பட்ட பலவீனத்தினாலும் ஒத்து ழையாமையை நிறுத்திவிட்டு அந்தக் கொள்கைகளையும் அழித்து விட்டுக் காங்கிரஸை உத்தியோக வேட்டைக்காரர்கள் வசம் ஒப்பிவித்து விட்டு அர்த்த மற்ற கிளர்ச்சியில் இறங்க வேண்டியதாகப் போய் விட்டது.

அர்த்தமற்ற கிளர்ச்சியில் இறங்கியதால் சர்க்காரோடு இராஜி பேசவேண்டிய நிலைமைக் கும் வந்து விட்டது. ஆனால் நாங்கள் ஒத்துழையாமைக் காலக் கொள்கை களையேதான் பெரிதும் நடத்த சுயமரியாதை இயக்கத்தை ஆரம்பித்திருக் கிறோம். எங்கள் சுயமரியாதை இயக்கத்தில் தீண்டாமை விலக்கு முக்கியமானது.

மத சம்பந்தமான மூடக் கொள்கைகளையும், மூட நம்பிக்கைகளையும் ஒழிப்பதன் மூலம் இந்து முஸ்லீம் முதலிய ஒற்றுமைக் கொள்கை முக்கியமாயிருக்கிறது. பகுத்தறிவுடன் இருக்கச் செய்வதற்காக செய்யும் முயற்சியில் மது விலக்குக் கொள்கையும் ஆராய்ச்சிக் கொள்கையும் முக்கியமாக இருக்கிறது.

அது போலவே சடங்குச் செலவுகளையும் உத்சவச் செலவுகளையும் நிறுத்தச் செய்வதன்மூலம் கதரைவிட சிக்கனமும் பொருளாதாரமுமான திட்டமும் எங்களுக்கு முக்கியமானதாயிருக்கிறது.

ஆகவே இந்தக் காரியங்களைத் தான் நாங்கள் நாட்டின் விடுதலைக்கும் மனித தர்மத்திற்கும் ஆதாரமாய்க் கொண்டு சுயமரியாதை இயக்கங் கண்டு நாங்கள் வேலை செய்து வருகிறோம்.

இதனால் எங்களை தேசத் துரோகியென்றோ கடவுள் துரோகி யென்றோ யார் சொல்வதானாலும் நாங்கள் பயப்படவோ பின் வாங்கவோ போவதில்லை என்பதை வணக்கத்துடனும் உறுதியுடனும் தெரியப்படுத்திக் கொள்கிறோம். திட்டம் தான் வித்தியாசம்.

தீண்டாமை

சகோதரர்களே! ஒத்துழையாமையிலிருந்த தீண்டாமை விலக்குத் திட்டத்திற்கும் சுயமரியாதை இயக்கத்திலிருக்கும் தீண்டாமை விலக்குத் திட்டத்திற்கும் உள்ள வித்தியாசத்தை சற்றுக் கவனியுங்கள். ஒத்துழையாமையிலுள்ள தீண்டாமை விலக்கு திட்டமானது தீண்டாமையைக் கொண்டு மற்ற மக்களைத் தீண்டாதவர்களென்று சொல்லி ஒதுக்கித் தள்ளி வைத்து தீண்டாமையின் பயனாய் ஆதிக்கம் அடைந்து வருகின்றவர்களிடம் சென்று தீண்டாமையை ஒழியுங்களென்று சொல்லிக் கொண்டிருந்தோம்.

அன்றியும் தீண்டாமைக்கு ஆதாரக் கர்த்தாக்களான பார்ப்பனர்கள் கையிலேயே அவ்வேலையும் ஒப்படைக்கப்பட்டிருந்தது. அதனாலேயே அது சிறிதும் பயன் பெறாமல் பட்டபாடெல்லாம் வெறுங்காற்றாய்ப் போய்விட்டது.

ஆனால் நாங்களிப் பொழுது சுயமரியாதை இயக்கத்தில் தீண்டாமை விலக்குத் திட்டத்திற்காக செய்யும் வேலை என்னவென்றால் தீண்டா தாரிடத்திலேயே நேரிற் சென்று, “ஓ! தீண்டக்கூடாத சகோதரர்களே! சில சுயநல அயோக்யர்கள், சோம்பேறிகள், மதத்தின் பேராலும், சாமியின் பேராலும் வேத சாஸ்திரத்தின் பேராலும் உங்களை இழி பிறப்பாளர்களென்று ஏற்பாடுகள் செய்து உங்களைக் கண்டாலும் உங்கள் நிழல் மேலே பட்டாலும், உங்களோடு பேசினாலும் உங்கள் பாஷை உச்சரித்தாலும், உங்களைத் தொட்டாலும், நீங்கள் தொட்டதைத் தொட்டாலும், நீங்கள் நடந்ததின் மேல் நடந்தாலும் தீட்டு என்றும், தோஷமென்றும், பாவமென்றும் எழுதி வைத்து உங்களைக் கொடுமைப் படுத்துகிறார்கள்.

உங்களை வைப்பாட்டி மக்களென்று அழைக்கிறார்கள். தங்கட்கு அடிமை வேலை செய்யவே உங்களைக் கடவுள் சிருஷ்டித்தார் என்று சொல்லுகிறார்கள். நீங்கள் நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைக்கவும் மற்றொரு கூட்டம் நோகாமல் உங்களை ஏய்த்துச் சாப்பிட்டு விட்டு ஏப்பம் விட்டுக் கொண்டு உங்களைப் பார்த்து சண்டாளர்களென்றும் சூத்திரர் கள் என்றும் சொல்லிக் கொண்டிருக்கவும் இன்னும் எத்துணை நாட்களுக்குப் பொறுத்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள்? நீங்களும் மனிதர்கள்தானா? உங்களுக்கு மானமில்லையா? வெட்கமில்லையா?”

இந்து முஸ்லீம் ஒற்றுமை

இந்து முஸ்லீம் ஒற்றுமை என்று சொல்லிக் கொடுமைப்படுத்தப்பட்ட இழிவுப்படுத்தப்பட்ட மக்களைத் தட்டி எழுப்பி அவர்கள் மூலமாகவே தீண்டாமையை ஒழிக்க வேலை செய்ய ஆரம்பித்திருக்கிறோம். இதுதான் தீண்டாமை விலக்கு விஷயத்தில் சுயமரியாதை இயக்கத் திட்டத்துக்கும், ஒத்துழையாமை இயக்கத் திட்டத்துக்கும் உள்ள வித்தியாசமாகும்.

அது போலவேதான் இந்து முஸ்லீம் ஒற்றுமை விஷயத்திலேயும் ஒத்துழையாமை இயக்கமானது ஒவ்வொரு மதக்காரரிடத்திலும் சென்று ஒவ்வொரு மதத்தையும் சரியென்று சொல்லிப் புகழ்ந்து மதப் பிரசாரம் செய்வதின் மூலம் மக்களுக்கு அதிகமான மதப் பைத்தியத்தை உண்டாக்கி அதின் மூலம் இந்து முஸ்லீம் கிருஸ்தவர்கள் முதலியவர்களின் ஒற்றுமையை நிலைநாட்ட வேலை செய்து வந்தது. ஆனால் அவ் வேலையின் பயனாய் கலகங்களும் விரோதங்களும் ஏற்பட்டு முன்னிலுமதிகமான வேற்றுமைகள் உண்டானதுதான் கண்ட பலனேயன்றி வேறில்லை. ஆனால் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் நாங்கள் செய்யும் இந்து முஸ்லீம் கிருஸ்துவர் முதலிய வர்கள் ஒற்றுமைத் திட்டமென்னவென்றால்,

“ஓ! மதவாதிகளே! மதம் மனிதனுக்கேற்பட்டதே ஒழிய மதத்துக்காக மனிதன் ஏற்பட்டவனல்ல. எந்த மதமானாலும் அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் கட்டுப்பட்டதே ஒழிய முரட்டுப் பிடிவாதத்துக்கும் மூட நம்பிக்கைக்கும் ஆதாரமானதல்ல. மதமானது மக்களை ஒற்றுமைப்படுத்தி சமத்துவம் அளிப்பதற்கு ஏற்பட்டதே ஒழிய வேற்றுமைப் படுத்தி வித்தியாசங் கற்பிப்பதற்கல்ல. எந்த மதமும் காலதேசவர்த்தமானத்திற்கும் மக்கள் சௌகரியத்திற்கும் சமாதான வாழ்க்கைக்கும் இணங்கி வர வேண்டியதே தவிர எந்த இடத்துக்கும் எந்தக் காலத்துக்கும் சிறிது கூட மாற்றக்கூடாதது என்று சொல்லப்படுவதல்ல. ஆகையால் இக்கொள்கைக்கு விரோதமாயிருப்பவைகளை மத மென்று கருதாதீர்கள். அது மனித சமூகத்தை அழிக்க வந்த விஷ நோய் களென்று கருதுங்கள் ”
என்று சொல்வதன் மூலம் இந்து முஸ்லீம் முதலிய மத சம்பந்தமான வித்தியாசங்களையும் பிடிவாதங்களையும் மூட நம்பிக்கைகளையும் ஒழித்து மக்களுக்குள் ஒற்றுமையையும் அன்பையும் உண்டாக்கச் செய்ய சுய மரியாதை இயக்கம் பாடுபடுகிறது.

பொருளாதாரம்

அது போலவே பொருளாதார சிக்கன விஷயத்திலும் ஒத்துழையாமை இயக்கமானது கதரின் பேரால் இராட்டினம் சுழற்றுவதால் மக்களுக்கு மணிக் கொரு பைசா வீதம் குறைந்த வரும்படியை உண்டாக்கி சிக்கனத்தின் பேரால் அதிக விலையுள்ள கதரை வாங்கியுடுத்துவதின் மூலம் அதிகச் செலவையும் ஏற்படுத்தி மக்கள் நாகரீக உலகத்தில் கலந்து கொள்வதற்கில்லாமலும் செய்து சதா சர்வகாலம் கடவுள் செயல் கடவுள் செயல் என்று சொல்லி மக்களின் ஈன நிலைமைக்கும் தரித்திரத் தன்மைக்கும் கடவுளையே பொறுப்பாளியாய்க் காட்டி விட்டதால் மனிதன் மிருகமாகி கடவுளின் பேரால் அடிமையாகச் சம்மதிக்கச் செய்த கதர் என்னும் பொருளாதாரத் திட்டத்தால் மனிதர்களின் தன் முயற்சியழிந்ததல்லால் வேறொரு பலனும் ஏற்பட்டதில்லை என்பதையுணர்ந்து நாங்கள் சுயமரியாதை இயக்கத்தின் பேரால் மக்களிடத்திற் சென்று,

“ஓ மக்களே! பொருளாதாரத் திட்டத்திற்கு எல்லா மக்களுக்கும் எந்தக் காலத்துக்குமே கதர் பொருத்தமானதல்ல. இராட்டினஞ் சுற்றாததினாலேயே இந்த நாட்டிற்குத் தரித்திரம் வந்து விடவில்லை. பின் என்னவென்றால் பணக்காரன் தன் முயற்சியினால் மற்றவர்களிடம் உள்ள பணத்தை பல வழிகளில் கொள்ளையடித்துக் கொண்டு வேறொருவர் வந்து அதைக் கைப்பற்றாமல் இருக்கட்டுமென்றும் தான் பணம் சம்பாதித்த இழிவான முறைகளைப் பற்றி மற்றவர்கள் குற்றஞ் சொல்லாமலிருக்கட்டு மென்றும் கருதி முன்ஜாக்கிரதையாக இந்தப் பணமெல்லாம் எனக்குக் கடவுள் கொடுத்தார், அவர் தயவாலேயே நான் பணக்காரணானேன் என்று சொல்லி விட்டுத் தான் சம்பாதித்ததில் ஏதோ ஒரு பாகத்தைக் கடவுளுக் கென்று ஆடம்பரமாய்ச் செலவும் செய்து விட்டு அப்பணம் வேறு யாருக்கும் உதவாமல் தானே சுயநலமாய் ஒன்றுக்குப் பத்தாக வீண் செலவு செய்து கொண்டு வாழ்கின்றான்.

ஆனால் ஏழைகளோ தங்களுக்குப் பணமில்லாமல் போனதற்குக் காரணம் தங்கள் முயற்சிக் குறைவும் அறிவுக் குறைவும் என்பதையும் உணராமல் கடவுள் செயலென்றும், கடவுள் கொடுக்கவில்லை யென்றும் சோம்பேரி ஞானம் பேசிக் கொண்டு அடிமையாகவும், தரித்திர வானாகவும் இருப்பதோடு கொஞ்சம் நஞ்சம் ஏதாவது கையில் கிடைத்தால் அதையும் பணக்காரணைப் பார்த்துக் காப்பியடித்து தானுங் கடவுளுக்கும் சடங்குகளுக்கும் செலவு செய்தால் கடவுள் தனக்கும் அதிகப்பணம் கொடுப் பாரென்று நினைத்து உள்ளதையுங் கூடப் போட்டு விட்டு வெகு ஜாக்கிரதையாக தரித்திரத்தையும் அடிமைத்தனத்தையும் காப்பாற்றிக் கொண்டு வரப்படுகிறது. ஆகையால் அதனாலேயே ஏழைகள் ஏழ்மைத்தனம் அதிகப்படுவதற்கும் நிலை நிற்பதற்கும் காரணமாகிறது”. என்பதை ஏழை மக்கட்கு எடுத்துச் சொல்லி அவர்களுடைய முயற்சியையும் அறிவையும் தட்டி எழுப்பி வீணாகப் பணத்தை சாமிக்கும் சடங்குக்கும் செலவு செய்யாமல் தடுப்பதின்மூலம் நாங்கள் பொருளாதார நிலையை உயர்த்திச் சிக்கனத் தன்மையை நிலை நாட்ட முயற்சிக்கிறோம்.

இதுபோலவே தான் மற்றும் பல துறைகளிலும் ஒத்துழையாமையின் போது நாங்கள் எந்தெந்தக் கொள்கைக்கு வேலை செய்தோமோ அதே கொள்கைகட்குத்தான் இப்பொழுதும் எங்கள் புத்திக்குத் தக்கபடி திட்டங்களை மாற்றிக் கொண்டு வேலை செய்து வருகிறோம்.

எங்களுடைய இந்த முயற்சியில் இதற்கெல்லாம் காரணமாக அரசாங்கத்தார் மீது பழி சுமத்திக் கொண்டு அரசாங்கத்தாரை மாத்திரம் வைது கொண்டிருக்கிற வரையில் நாங்கள் பெரிய தேச பக்தர்களாகவும், வீரர்களாகவும், தியாகிகளாகவும் கருதப்பட்டோம்.

ஆனால் இப்பொழுது அவைகளில் மூலாதாரத்தைக் கண்டுபிடித்து அஸ்திவாரத்தில் கையை வைத்து அடியோடு சாய்க்க ஆரம்பித்தவுடன் இப்பொழுது நாங்கள் தேசத் துரோகிகளாகவும், பார்ப்பன துவேஷிகளாகவும், நாஸ்திகர்களாகவும், மதத் துரோகிகளாகவும் ஆய்விட்டோம். ஆகவே நாங்கள் இந்த தேசத் துரோகத்திற்கும் பார்ப்பன துவேஷத்திற்கும் நாஸ்திகத்திற்கும் மதத்திற்கும் பயந்தால் எங்களால் பலன் தரக்கூடிய எந்தக் காரியமும் செய்ய முடியாது என்பதை உணர்ந்துதான் துணிந்து இத்தொண்டில் இறங்கி இருக்கிறோம்.

சகோதரர்களே! பொருளாதார விஷயத்தில் பணக்காரர்களின் பணச் செருக்கை யொழித்து அவர்களது பணம் ஏழைகட்கும் நாட்டிற்கும் உபயோகப்பட வேண்டியதென்று சொல்லி அப்பணத்தை நாட்டிற்குப் பயன்படுத்துவதே எமது வேலையாகும். ஒருவன் ஒருவனை எஜமானனாய் ஒப்புக் கொள்வதற்கும் அடிமைத் தனமாயிருப்பதற்கும் அவனது மூடத்தனமே காரணமல்லாமல் மற்றபடி அது கடவுள் செயல் அல்ல வென்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

இந்நிலையில் தான் நாம் கடவுளையோ, மதத்தையோ, சாஸ்திரத்தையோ தாக்குவதாகச் சொல்லப்படுகிறது. அதைப் பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். எங்களுடைய பொது வேலையின் அநுபவத்தையும் விடுதலை ஆராய்ச்சியையும் கொண்டுதான் இந்த வேலையில் இறங்கியிருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை அரசியலைப் பொறுத்த கவலையே நமக்குக் கிடையாது. முதலாவதாக நமக்குள் நாம் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் நிலைமையிலிருந்தும் நமக்குள் நாம் இழிவு படுத்தப்படும் இழிவிலிருந்தும் நம்மவர்களால் கொடுமைப் படுத்தப்படுவதிலிருந்தும் மீள வேண்டியதே முக்கியமான வேலையாகும்.

இந்த காரியங்களுக்கு அரசாங்கத்தார் அநுகூலமாயில்லாமல் நமது முயற்சிக்கு இடையூறாக யிருக்கும் போது மாத்திரம் தான் நாம் அரசாங்கத்தாரின் பக்கம் திரும்பவேண்டும். மற்றபடி இப்போது அரசாங்கத்தாரிடத்தில் நமக்கு வேலையில்லை. உதாரணமாக நமது முயற்சியையும் இயக்கத்தையும் குற்றஞ்சொல்லி ஆட்சேபிக்கும் பார்ப்பனர்கள் நூற்றுக்கு தொண்ணூறு பேர் நன்றாகப் படித்து அரசாங்கத் தாருடனே இருந்து கொண்டு நமது வரிப்பணத்தில் பெரும் பாகத்தை சம்பளமாக பீசாக.... அநுபவித்துக் கொண்டிருக்கிறதையும் நாம் பார்க்கிறோம்.

ஆனால் நமது இயக்கத்தை அரசாங்கத்தார் அடக்காமல் சும்மா விட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகப் பல பார்ப்பனர்கள் அரசாங்கத்தின் மீது வெறுப்புக்கொண்டு விஷமப் பிரசாரஞ் செய்வதும், அரசாங்கத் தாரைப் பார்த்து “நாங்கள் தானே பொது ஜனங்களை இராஜ வாழ்த்துப்பாட வைத்தோம், நாங்கள் தானே உங்கள் இஷ்டம் போல் எல்லாம் இந்த நாட்டின் செல்வத்தைக் கொள்ளை கொண்டு போக இடங் கொடுத்தோம். அப்படியிருக்க இப்போது நீங்கள் எங்களுக்கும் உங்களுக்கும் ஆபத்தைத் தரும் இந்த சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்கிறீர்களா? அல்லது நாங்கள் உப்புச் சத்தியாக்கிரகத்தில் சேர்ந்து கொள்ளட்டுமா?”

என்று அரசாங்கத்தாரை மிரட்டுகிறார்கள். இப்பொழுது நமது நாட்டில் கொஞ்சகாலமாக நடந்து வரும் பார்ப்பன மகாநாடுகளெல்லாம் இந்தத் தீர்மானத்தையே தான் செய்து கொண்டு வருவதை நீங்கள் பார்க்கலாம். ஆகையால் இப்பொழுது நாம் அரசாங்கத்தாரிடத்தில் சிறிது தகராறுக்குப் போவதாயிருந்தாலும் இந்தப் பார்ப்பனர்கள் உடனே உப்புச் சத்தியாக் கிரகத்தை நிறுத்திவிட்டு ஒவ்வொருவராக நம்மை யொழிப்பதற்கு சர்க்காருக்கு உளவு சொல்லிக் கொடுக்கப் போய்விடுவார்கள்.

உதாரணமாக கோயம்புத்தூர் மகாநாட்டில் நாம் சர்க்காரைக் கொஞ்சம் கண்டித்தவுடன் திரு. சத்தியமூர்த்தியும் அவர் கூட்டத்தாரும் கவர்னரிடமும் இராஜப் பிரதிநிதியிடமும் ஐரோப்பிய வர்த்தகர்களிடமும் சென்று “பார்ப்பனராகிய நாங்கள் அரசாங்கத்தாருக்கு ஒன்றும் கெடுதல் செய்யவில்லை.” என்றும் “பார்ப்பனரல்லாதார்கள் தான் இம்மாதிரி சேர்ந்து கோயம்புத்தூரில் தீர்மானஞ் செய்தி ருக்கிறார்க” ளென்றும் சொன்னதொன்றே போதுமானதாகும்.

இன்றைய தினம் சட்ட மறுப்பில் மிக்க அனுதாபத்தைக் காட்டும் திரு. டி. ஆர். இராமச் சந்திரய்யர் அவர்கள் யார் என்பது நமக்குத் தெரியாதா? அவர் தானே சென்னை மாகாண பார்ப்பன வருணாச்சிரமத் தலைவராவார். மற்றும் திரு. காந்தியை முட்டாள் என்று சொன்ன பார்ப்பனரும் வக்கீல் வேலையையும் பள்ளிக்கூடத்தையும் சட்டசபையையும் விட்டுவிலகுவது தேசத் துரோகமென்று சொன்ன பார்ப்பனரும் காங்கிரஸ் கொள்கையில் ஜாதி வித்தியாசம் ஒழியவேண்டுமென்பதாகத் திருத்த வேண்டுமென்று சொன்னவுடன் இராஜினாமாக் கொடுத்துக் காங்கிரசை விட்டுப் போன பார்ப்பனர்களும் தானே இப்பொழுது தலைவர்களாயிருக்கிறார்கள்.

உதாரணமாக சென்னை யில் கூடிய காங்கிரசின் போது அனேகர் எங்களிடம் இராஜி பேச வந்தனர். கோஸ்வாமி முதலியவர்களே நாம் ஏன் காங்கிரசை விட்டு விட்டோம் என்றனர். நாம் நாளையே இக்காங்கிரசில் சேர்வோம். எங்கட்கு அது புதிதல்ல, இந்த ஜாதி முறை ஒழிய வேண்டுமென்று சமுதாய சம்பந்தமான ஒரு ஏற்பாட்டை காங்கிரசை ஒப்புக் கொள்ள வையுங்கள் என்றோம்.

அதற்குக் கல்கத்தா திரு. கோஸ்வாமி, டாக்டர் அன்சாரி, திருமதி சரோஜினி ஆகிய வர்கள் ஆகட்டுமென்றார்கள். திரு. சு.மு. ஷண்முகம் அவர்கள் இதை அனுசரித்து ஒரு தீர்மானமும் கொண்டு வந்தார். அது விஷயாலோசனைக் கமிட்டிக் கூட்டத்திற்குக் கூட கொண்டுவரப் படவில்லை. மத சம்பந்த சமூக சம்பந்த விஷயம் அரசியலியக்கத்தில் புகக்கூடாது என்று கூறிவிட்டனர். திரு. சரோஜினியும், டாக்டர் அன்சாரியும் முக்கியமாக இராஜி பேச முயற்சித் தவர்கள். அவர்கள் எங்கள் முன் சொன்ன வார்த்தைகளைக் கேட்டபிறகு மீண்டும் பேச வரவேயில்லை. இதுதான் காங்கிரசின் “சமூக வேலை”.

சேரமாதேவி குருகுலப் போராட்டத்தின் போது காங்கிரஸ் பணத்தில் சில பேரை வெளியில் வைத்தும் சிலரை உள்ளே வைத்தும் சோறு போட்டனர். காங்கிரஸ் சம்பந்தப்பட்ட வரையில் ஜாதி வித்தியாசம் கூடாதென திரு. ளு. இராமனாதன் அவர்கள் பிரரேபித்த வார்த்தையானது ஏற்றுக் கொள்ளப்பட்டு அரங்கேறியது.

இதைக் கண்டதும், “உண்மை தேசாபிமானிகள்” எல்லாம் இராஜிநாமா செய்துவிட்டனர். நமது நண்பர் திரு. இராஜகோபா லாச்சாரி, டாக்டர் ராஜன், திரு. சந்தானம், திரு. வரதராச்சாரி, திரு. கூ.ஏ. சாஸ்திரி இந்த “தியாகி” களும் “நல்லெண்ணம் கொண்டவர்களும்” ஆகிய எல்லா ரும் ஒரே அடியில் இராஜிநாமா செய்தனர்.

ஆகையால் காங்கிரசினிடத்து மாத்திர மன்றி அதை நடத்தும் இந்த மனிதர்களிடத்தும் எங்கட்கு அவ நம்பிக்கை ஏற்பட்டு விட்டது. அதனாலேயே தான் புது “சுயமரியாதை” இயக்கம் தொடங்கப்பட்டது.

திரு. எஸ் இராமநாதன் அவர்கள் செட்டி நாட்டில் இந்த விஷயங்களை திரு. காந்தியிடம் சொன்னபோது அவர் அது மெய்யா? என்று கேட்டார். இந்த டாக்டர் ராஜனே அப்படிச் செய்தார் என்று திரு. எஸ். இராமநாதன் சொன்னார். திரு. காந்தி உண்மையா என்று திரு. ராஜனைக் கேட்டதற்கு அவர் ஆம் அது என் சொந்த அபிப்பிராயத்தைப் பொறுத்தது. அரசியல் ஸ்தாபனத்தில் சமூக விஷயம் புகுத்தப்படக் கூடாது! என்று பதில் சொன்னார்! திரு. காந்தியாரும் அது “அவரவர் அபிப்பிராயம்” என்றார்! அதற்கு முன் திரு. ஆ.மு. ஆச்சாரி திரு. காந்திக்கு இதைப் பற்றிக் கடிதம் எழுதி, இந்தமாதிரி காங்கிரசில் சமூகசம்பந்த விதி செய்யலாமா? வென்று கேட்டிருந்தார்.

அதற்கு திரு. காந்தி செய்யலாமென்று பதில் எழுதினார். பிறகு நாங்களெல்லோரும் காங்கிரசை விட்டுவிட்ட பிறகு அவர்கள் ஒவ்வொருவராக மீளவும் காங்கிரசில் சேர்ந்து விட்டார்கள். நாம் ஜாதி வேற்றுமையை ஒழித்தல் என்னும் புது இயக்கத்தைத் தொடர்ந்தோம்.

சாதியினால் ஏற்பட்ட கொடுமையையும் இழிவையும் ஒழிக்க வேண்டுவது அவசியம் என்று கருதினோம். நமது பாமர மக்களின் அறியாமையையும் ஏமாந்த தன்மையையும் உபயோகம் செய்து கொண்டு நம்மீது அவர்கள் இராமசாமி நாயக்கன் “தெய்வத்தை வைகிறான், சாஸ்திரத்தை வைகிறான், மதத்தை வைகிறான்” என்று இப்படி எல்லாம் தூற்ற ஆரம்பித்து விட்டனர். இந்தத் தூற்றுதலைக் கேட்ட பாமர ஜனங்கள் எங்களைக் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்.

நாம் “உங்கள் மதத்தில் சாஸ்திரத்தில் பிரவேசி யோம். ஆனால் எங்களுடைய வேலையில் அவை தடையாய் வந்தால் அவற்றைக் கண்டு நாம் பயப்படோம் என்றோம்”. இதற்கு நியாயமுடன் பதில் கூறாமல் “மதம் அப்படிச் சொல்லுகிறது” என்றனர். ஒரு மனிதனைப் பறையனாக விருக்க ஒரு மதம் சொன்னால் அந்தமதம் வேண்டுமா? ஒருவனுக்குச் சூத்திரப் பட்டம் கொடுக்கவும் ஒரு மதம் இருப்பின் அந்தமதம் வேண்டுமா? என்று கேட்டால் “இந்தச் சூத்திரப் பட்டம் ஒழிய வேண்டும். இப்படிப்பட்ட இந்து மதம் வேண்டாம்” என்றே சுயமரியாதையுள்ள ஒவ்வொருவனும் சொல்லுவான்.

இப்போது ஒருவன் தன்னை “ஹிந்து” என்று சொல்லிக் கொள்ள வேண்டுமானால் அவன் கண்டிப்பாக “சூத்திரப் பட்டத்தை” ஒப்புக் கொள்ள வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட மதம் எனக்கும் வேண்டாம் உங்களுக்கும் வேண்டாம். இந்த மாதிரியான இந்து மதத்தைக் கடவுள் உண்டாக்கினார் என்று சொல்லப்படுவதினால் அந்தக் கடவுளும் வேண்டாம்.

எனக்குக் கடவுளைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ, சாத்திரத்தைப் பற்றியோ அக்கரையில்லை. ஆனால் கெடுதியை நீக்கவும் கொடுமைகளைக் போக்கவும் முயற்சிக்கிற போது “கடவுள் தான் சாதிகளை ஏற்படுத்தினார். அதன்படி நடக்கத்தான் வேண்டுமென்றால் அந்தக் கடவுள் எத்துணைப் பெரிய கடவுளாயிருந்தாலும் அதைச் சுட்டுப் பொசுக்க வேண்டாமா? அதைப் புதைக்க வேண்டாமா? வென்றே உங்களைக் கேட்கிறேன்.

இந்த நிலைமையிலேயே நாம் எல்லாவற்றையும் தாக்க வேண்டியிருக்கிறது. இல்லா விட்டால் எங்கட்கு அவற்றில் என்ன வேலை? எவன் அவற்றை வைத்துக் கொண்டுப் பிழைத்தால் என்ன? நம்மைத் தாழ்த்தி அமுக்கிக் கொடுமைப்படுத்த அந்த மதம் சாத்திரம் கடவுள் ஆகிய மூன்றையும் கொண்டு வந்தால் நான் ஏன் சம்மதிப்பேன்? இதனாலேயே நாம் எல்லோருக்கும் அதிலும் பார்ப்பாருக்கும் விரோதிகளாய் போய் விட்டோம்.

இவற்றால் ஏமாற்றிக் கொண்டு வந்த கூட்டத்தாருக்கு விரோதிகளானோம். பிறப்பில் வித்தியாசம் பாராட்டக் கூடாது, ஒருவனை யொருவன் அடக்கியாளக் கூடாது என்று சொல்வதால் ஒன்றும் முழுகிப் போய்விடாது. யோக்கியமான மதமும் யோக்கியமான கடவுளுமாயிருந்தால் இதனாலெல்லாம் போய் விடாது. அப்படியே போய் விடக்கூடிய கடவுளால் என்ன நஷ்டம் வந்து விடும்.

ஒரு கதை

ஒரு வேடுவனையும் ஒரு வேளாளனையும் பற்றி ஒரு கதை சொல்லுகிறேன். அதாவது ஒரு வேளாளன் ஒரு பிள்ளையாரைப் பக்தியாகப் பூசை செய்து கொண்டுவந்தான். ஒரு நாள் ஒரு வேடுவன் அந்தப் பிள்ளையாருக்கு நேராய்க் கால் நீட்டிப் படுத்துக்கொண்டிருந்தான். உடனே அந்தப் பிள்ளையார் வேடுவனை ஒன்றும் செய்ய முடியாமல் வேளாளனிடம் போய் “அந்த வேடுவனைக் காலை எடுக்கச் சொல்லுகிறாயா அல்லது உன் கண்ணைக் குத்தட்டுமா” என்றதாம்.

ஏன்! அந்தப் பிள்ளையார் கோபம் அந்த வேடனிடம் செல்லவில்லை? இதே மாதிரிதான் கடவுள்கள் எல்லாவிடத்தும் செய்வதாயிருக்கிறது. ஒரு கூட்டத்தில் மனுஸ்மிருதி நெருப்பில் கொளுத்தப்பட்டது.

ஏனெனில் அதில் நமக்கு சகிக்கமுடியாத இழிவு கூறப்பட்டிருப்பதால் ஒரு சூத்திரனுடைய பணத்தைப் பலாத்காரமாகப் பிடிங்கிக் கொள்ளலாமென்றும், இதுதான் இந்து மத ஆதாரம் என்றும், இது கடவுள் சொன்னதென்றும் சொல்லப்படுவதை எண்ணி அந்த மனுஸ்மிருதி நெருப்பு வைக்கப்பட்டது. அப்பொழுது தற்போதைய தேசபக்தர்கள் திரு. இராஜகோபாலாச்சாரியார் உட்பட பலர் ஆட்சேபித்தார்கள்.

இதற்கு சர்க்காரையும் உதவிக்குக் கூப்பிட்டார்கள். (வெட்கம் வெட்கம்) நீங்கள் சம்பாதித்து ஒரு கூட்டத்தாருக்கு கொடுப்பதும்,“சூத்திரர் முதலியோர் படிக்கக் கூடாது அவர்கட்குச் சுயேச்சைக் கொடுக்கக் கூடாது” என்றால், அந்த மனுநூலைக் கொளுத்தி உங்களது இழிவைப் போக்கிக் கொள்வதா அல்லது அதை ஒப்புக் கொள்வதா? ஆகையாலேயே இந்த இயக்கத்தை விடாதீர்கள் என்று சொல்லுகிறோம்.

எனவே இவ்வளவு நேரம் நான் பீடிகையாகச் சொல்லிக் கொள்ள வேண்டியதாயிற்று. அதிக நேரமாய் விட்டாலும் இன்னும் ஒரு மணியில் ஏதோ கொஞ்சம் சொல்லி முடிக்கின்றேன். பெரிய கூட்டமாயிருப்பதால் சொல்ல ஆசைப்படுகிறேன். இன்றைய நிலையில் சுயேச்சையும் சுயாதீனமும் பெறப்பாடுபடுவது என்னமாய் முடியும்? இந்தத் தடைகளைப் போக்குங்கள்.

மற்ற மற்ற தேசத்தார்கள் தங்கள் நாட்டுக் குற்றம் நீங்கிய பிறகே சுயேச்சையடைய என்ன செய்தார்கள் என்பதையும் எப்படியடைந்தார்களென்பதையும் நினையுங்கள். நம் குற்றம் நீங்க வேண்டிய தற்காக நாமும் அவர்களைப் போல செய்வதா? இல்லையா? அவர்களது வழியை விட்டு விட்டால் வேறு வழியில்லை.

வெறும் வாய் வார்த்தையால் ஒன்றும் முடிந்து விடாது. பெரியோர் போன வழியில் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தால் ஒரு காரியமும் நடக்காது. நாம் இப்பிரிட்டன் முதலிய நாடுகளை எடுத்துக் கொள்ளுவோம். அவர்களுடைய கல்வி, விவசாயம், தொழில், அறிவு, மனிதத்தன்மை ஆகிய இவற்றிற்கும் நம்முடைய நிலை மைக்கும் வேற்றுமையைப் பாருங்கள்.

நமது நிலை

இந்தியாவில் கல்வியை எடுத்துக் கொள்ளுங்கள். சென்ற தடவை ஜனன மரணக் கணக்கெடுத்த காலத்தில் இந்தியாவில் 100க்கு 7 பேர் படித்த வர்கள். இப்பொழுது ஏழுடன் மூன்று கூட்டி பத்து பேராக வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் மேல் நாட்டில் 100க்கு 90 அல்லது 99ம் படித்தவர்கள். அப்படியே பெண் கல்வியை எடுத்துக் கொண்டாலும் நம் நாட்டில் 1000க்கு 10 பேர்களே அதிகம். ஆனால் இங்கிலாந்தில் 1000க்கு 900 பெண்கள் படித் திருக்கிறார்கள்.

ஐரோப்பியர்களது நிலையையும் நம் நிலையையும் பாருங்கள். பிராமணர்களே மற்றவர்களை படிக்கக் கூடாதபடி செய்து இந்த நிலைமைக்கு ஆக்கி வைத்தார்கள். அதற்கு ஆதாரமாக சாஸ்திரங்களும் எழுதி வைத்திருக்கிறார்கள். மற்றவர்களைப் படிக்க வைக்கக் கூடாது.

இதை ஆதரித்தால்தான் இடம் தருவோம் என்று மகம்மதியரிடம் பார்ப்பனர்கள் ஒப்பந்தமும் செய்து கொண்டதால் மகம்மதியர் காலத்தில் நமக்குச் சரியான கல்வியில்லாமற் போயிற்று. கடைசியாக மகம்மதியர்கள் அந்த ஒப்பந்தத்தை மீறவே வெள்ளைக்காரர்களுக்கு இடம் கொடுத்தார்கள்.

அதனாலேயே கோகலே அவர்கள் கட்டாய இலவசக் கீழ்தரக் கல்வி கொடுக்கப்படவேண்டுமென ஒரு சட்டம் கொண்டு வந்தார். அப்போது தர்பங்கா போன்றவர்களும் மதத்தின் பேரால் ஆழ்த்திக் கொடுமை படுத்துவோரும், ஒரு தூது கூட்ட மூலமாக வைசிராயை பேட்டி கண்டு, சூத்திரன் படிக்கக் கூடாது.

மதத்துக்கு ஆகாதென்றும், இது ஆதியில் நமக்குள் ஏற்பட்ட ஒப்பந்தத்திற்கு விரோதமென் றும், மீறினால் அரசாங்கத்தை எதிர்ப்பதாகவும் கூறினார். ஆகவே பல காரணங்களால் அரசாங்கத்தார் அந்தச் சட்டத்தை நிறைவேற்றக் கூடாமற் போயிற்று.

சுயமரியாதை உணர்ச்சி நம் மக்கட்கு ஏற்பட்ட பிறகே இலவசக் கல்வியும் கட்டாயக் கல்வியும் ஏழைகட்கு சில இடங்களிலாவது இப்போது தரப்படுகிறது. நாம் மற்ற நாட்டாரை விட அதிகக் கடவுள் நம்பிக்கையையும் கல்விக்காக ஒரு கடவுளையும் வைத்து கும்பிடுவதையும் சரஸ்வதியென ஒரு படம் வைத்துப் பூஜித்தலையும் வருடத்தில் பல தடவை உற்சவம் கொண்டாடு வதையும் செய்கிறோம்.

அதிக மரியாதையும் செய்கிறோம். சரஸ்வதி என்று புத்தகங்கள், ஏடுகள், கடிதாசிகள் எல்லாவற்றையும் கும்பிடுகிறோம், கண் ணில் ஒற்றிக் கொள்ளுகிறோம். இத்தனை வருஷங்களாகச் செய்கிற இத் தனை பூஜைக்கும் நாம் 100க்கு 7 பேர்தான் படித்தவர் ஆனோம்.

ஆனால் இதே கடிதாசியை - இதே நமது சரஸ்வதியை வெள்ளைக்காரன் மலம் துடைக் கிறான். 100க்கு 90 பேர்கள் படித்துமிருக்கிறார்கள். நாம் 100க்கு 93 பேர்கள் தற்குறிகள். இந்த சரஸ்வதியை மறந்துவிட்டு உங்கள் அறிவு, முயற்சி, காரியம் இவற்றை நீங்களே கவனியுங்கள். எல்லோரும் படித்தவர்களாவோம்.

சிலர் வெள்ளைக்காரன் மேல் தப்பிதம் கூறி அவன் ஏன் படிக்க வைக்கவில்லை என்கிறார்கள். வெள்ளைக்காரன் என்ன செய்வான்? அவன் படிப்புக்காக இவ்வளவு என நம்மைக் கொண்டே ஒதுக்கி வைத்து விட்டான். நிர்வாகத்திற்கு இவ்வளவு என ஒதுக்கி வைத்து விட்டான். அதற்கு மேல் கேட்டால் வரி போடவேண்டுமென்கிறான்.

சீர்திருத்த அரசாங்கத்தில் இவ்வளவு தான் முடியும். இதற்கு மேல் வழியில்லை என்பது நமக்குத் தெரியும். ஏன் என்றால் நம் தேசீயவாதிகள் சம்பளமாகவே அவ்வளவு பணத்தையும் கொள்ளையடித்து விடுகிறார்கள். ஆனால் நம்மிடம் வேறு பணமோ யோக்யதையோ இல்லையா என்று பார்ப்போமானால் சர்க்கார் நம்மிடமிருந்து ஆட்சிக்காக வாங்கும் வரியை நாம் சிறிதும் பயனில்லாத சாமி சடங்கு வகையராக்களுக்கு மோட்ச வரியாகக் கொடுத்து வருகிறோம்.

நமது வாழ்க்கையில் மோட்சத்தைப் பிரதானமாய் கருதுகிறோமே யல்லாமல் கல்வியை பிரதானமாகச் சிறிதும் கருதவில்லை. அதன் பொறுப்பு முழுமையும் “பொறுப்பில்லாத” அரசாங்கத்தினிடம் விட்டுவிட்டு மோட்சத்திற்கு பணத்தை செலவழித்து விடுகிறோம்.

இப்படியாக நமது செல்வமும் கவலையும் மோட்சமென்கிற ஒரு ஓட்டையில் போய்க் கொண்டிருக்கிறது. அதை முதலில் மூடுங்கள். அவ்வோட்டை அடைபட்டால் நம்மெல்லோரு டைய படிப்புக்கும் பணம் இருப்பதுடன் பிறரையும் சாப்பாடு போட்டு படிக்க வைக்க பணம் அகப்படும்.

சாதாரணமாக தமிழ் நாட்டில் மாத்திரம் ஒரு பத்து வருஷத்திற்கு மோட்சச் சடங்கையும், சுவாமி உற்சவங்களையும் நிறுத்திப் பார்ப்பீர்களானால் நீங்களெல்லோரும் படித்துவிட்டு இந்த நாட்டு மிருகங்களையும் பட்சிகளையும் கூட படிக்க வைக்க முடியும்.

மற்றும் சில்லரை தேவ தைகளின் உற்சவங்களையும் வேண்டுதல்களையும் நிறுத்தி விட்டோமேயானால் அதில் மீதியாகும் பணத்தில் ஆகாயக்கப்பல் பள்ளிக்கூடமும் கம்பி இல்லாமல் உருவங்களையனுப்பும் தந்தி பள்ளிக் கூடங்களும், செத்தவர்களைப் பிழைக்க வைக்கும் பள்ளிக் கூடங்களும் வைத்து மக்களுக்கு கற்றுக் கொடுக்கலாம். நான் சொல்லுகிற விஷயத்தில் உங்கட்கு ஏதாவது அவ நம்பிக்கையிருக்குமானால்.

திருப்பதி

திருப்பதி சாமி ஒன்றை எடுத்துக் கொண்டாலே சந்தேகந் தீர்ந்து விடும். அந்த சாமிக்கு வருஷம் ஒன்றுக்கு 17 லட்சம் ரூபாய் காணிக்கை வருகிறது. இதுதவிர அந்த சாமிக்கு ஏழரை கோடி ரூபாய் பெறுமான சொத்துமிருக்கிறது. அந்த சொத்துக்களை விற்று 100க்கு மாதம் எட்டணா வட்டிக்குக் கொடுத்து வாங்கினாலும் வருஷத்தில் நாற்பது லட்சம் ரூபாய் வட்டி வரும்.

இவை தவிர அந்தக் கோவிலுக்கும் உத்சவத்துக்கும் வேண்டுதலைக்கும் காணிக்கை செலுத்துவதற்கும் யாத்திரை போகும் ஜனங்களின் ரயில் சார்ஜ் முதலிய செலவுகளைக் கணக்குப் பார்த்தால் அதிலும் நாற்பது ஐம்பது லட்ச ரூபாய் கணக்கும் ஆக இந்த மூன்று இனங்களில் திருப்பதி வெங்கடாசலபதி என்கிற ஒரு சாமியால் மாத்திரம் வருஷம் ஒன்றுக்கு ஒரு கோடி ரூபாய் வீணாகிறது.

இது போலவே சற்றேறக்குறைய தமிழ் நாட்டில் மாத்திரம் திருச்செந்தூர், இராமேஸ்வரம், மதுரை, ஸ்ரீரங்கம், சிதம்பரம், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், திருவாரூர் முதலிய கோயில்களையும் சங்கராச்சாரி பண்டார சந்நதி ஆகிய மடங்களையும் கும்பகோணம் மகாமகம் போன்ற உத்சவங்களையும் மற்றும் 108 திருப்பதி 1008 சிவலிங்கம் வகையரா பாடல் பெற்ற ஸ்தலங்களையும் மற்றும் மாரியாயி ப்ளேகாயி, காளியாயி முதலிய கிராமதேவதை முதலியவை களுக்கும் மற்றும் சடங்கு சிரார்த்தம் கருமாதி முதலியவைகட்கும் ஆகும் செலவு மெனக்கேடு வகையராக்களையும் சேர்த்தால் எத்தனை பத்துக்கோடி ரூபாய்கள் ஆகுமென்று சற்றுப் பொறுமையாயிருந்து கணக்குப் போட்டுப் பாருங்கள்.

இவையெல்லாம் மனிதனைக் கெடுக்கவும் அவனது அறிவைப் பாழாக்கவும் என்றும் தரித்திர வானாகவேயிருந்து அடிமையாயிருக்கவுமே அந்தச் சாமிகள் உத்சவங்கள் சடங்குகள் மோட்சங்கள் என்பவைகளெல்லாம் சுயநலக்காரர்களால் அயோக்ய எண்ணத்துடன் ஏற்படுத்தப்பட்டதாகும்.

என்ன பலன்?

நிற்க திருப்பதி யாத்திரையால் மனிதனுக்கு என்ன பலன் ஏற்படுகிறது? அதனால் என்ன ஒழுக்கம் காண்கிறோம். ஒருவன் 2000 ரூபாயைக் கொண்டுபோய் திருப்பதி உண்டியலில் கொட்டிவிட்டு வருவானேயானால் அவனுடைய அரையங்குலமாயிருந்த நாமம் இரண்டங்குலம் அகலமாவதும், சனிக்கிழமை பிடிப்பதும் மக்களைக் கண்டால் என்னைத் தொடாதே! எட்டிநில்! என்பதைத் தவிர வேறு ஒழுக்கமோ நாணயமோ அன்போ ஏற்படுகிறதா? தவிரவும் திருப்பதிக்குப் போனதினாலேயே அது வரையில் செய்த பாவமெல்லாம் ஒழிந்துவிட்டதென்று கருதி இனிப் புதுப்பாவமும் செய்யலாம் என்கிற தைரியம் உண்டாகிவிடுகிறது.

தவிர, இந்த மாதிரியான சாமிகளால், உத்சவத்தால் இதுவரை நாட்டிற்கு யாதொரு பலனும் ஏற்பட்டதில்லை என்பது கண்கூடு.

விவசாயம்

விவசாய விஷயத்திலும் சாமிகளையும் விதியையும் பழய பழக்க வழக்கங்களையும் நம்பி எவ்வளவோ நஷ்டம் அடையும்படியான பிற்போக் கிலேயே யிருக்கிறோம். நம் நாட்டு விவசாயம் 2000 வருஷத்திற்கு முன் இருந்ததாகச் சொல்லப்படும் நிலைமையில் தான் இருக்கிறதே தவிர சிறிதும் முற்போக்கடையவில்லை.

இந்த நாட்டில் ஒரு ஏக்கராவுக்கு நூறு ருபாய் லாபம் வருவதானால் மேல் நாட்டில் ஏக்கராவுக்கு ஆயிரம் ரூபாய் வரும்படியாக வேலை செய்கிறார்கள்.

ஆனால் நாமோ விவசாயத்திற்கொரு கடவுளைக் கற்பித்து மாட்டையும் ஒரு கடவுளாக நினைத்து அதனது கொம்பில் ஒரு தெய்வத்தையும் வாலில் ஒரு தெய்வத்தையும் காலில் ஒரு தெய்வத்தையும், தொடையில் ஒரு தெய்வத்தையும், சாணியிலும் மூத்திரத்திலும் மோட்சங் கொடுக்கிற சக்தியையும் கற்பித்து மாட்டிற்குப் பூஜை செய்து பொங்கல் போட்டு சாணியையும் மூத்திரத்தையும் கலக்கிக் குடிப்பதோடு நமது விவசாய ஆராய்ச்சி முயற்சி முடிந்து விடுகிறது.

இன்னுங் கொஞ்சம் அதிகமாகச் செய்ய வேண்டுமானால், ஏறு உழுவதற்கு முன் பார்ப்பானைக் கூப்பிட்டுப் பஞ்சாங்கம் பார்த்து, நல்ல நாள் கண்டுபிடித்து ஏறுக்கும், கொழுவுக்கும், நுகத்துக்கும், கருவத்தடிக்கும், உழவுகோலுக்கும், ஒவ்வொரு தெய்வங்களைக் கற்பித்து, சாம்பிராணி புகை போட்டு பார்ப்பானுக்குப் பணம் கொடுத்து ஏறு கட்டுவதோடு ஆராய்ச்சி முடிந்து விடுகிறது.

இந்த பூஜையும் நல்ல நாளும் பார்ப்பானுக்குக் கொடுத்த காசும் கொஞ்சங் கூட நமது விவசா யத்துக்குப் பொறுப்பாளியல்லவேயல்ல. விளையாவிட்டால் விதியோடு பொறுப்பு நின்று போய்விடுகிறது. மேல் நாட்டானோ விவசாயத் தில் ஒரு கடவுளையும் லட்சியஞ் செய்யாமல் தன்னையும் தன் அறிவையும் முயற்சியையும் பொறுப்பாக்கி எந்தவிதமான பூமிக்கு எந்தவிதமான பயிர் செய்வது என்பதிலும் எந்தவிதமான பயிருக்கு எந்தவிதமான எரு விடுவது என்ப திலும் கவலையெடுத்து வேலை செய்கிறான்.

ஆஸ்திரேலியாவில் பழ விவசாயக்காரர்கள் புளிப்பான பழங்காய்க்கும் மரத்தை இனிப்பாக்கவும் நூற்றுக்கணக்காக பழம் காய்க்கும் மரங்களை ஆயிரக்கணக்கான பழங்கள் காய்க்கும் படி செய்யவும், பத்துநாட்களில் கெட்டுப்போகும் படியான பழத்தை ஒரு மாதத்திற்கு கெடாத படியான பழம் காய்க்கும்படி செய்யவும் வேண்டிய காரியங்கள் ரஸாயன கூட்டுகள் மூலமாகவும் திராவகங்களை செடிகளில் செலுத்துவதன் மூலமாகவும் பயிர் செய்கிறார்களென்று நமது நண்பர் திரு. ஆர். கே. ஷண்முகம் அவர்கள் தனது ஆஸ்திரேலியா யாத்திரையைச் சொல்லும் போது எடுத்துச் சொல்லியிருக்கிறார்.

ஒரு மனிதனுக்கு முப்பது ஏக்ரா நிலமிருந்தால், அதில் ஐநூறு பேர்களுக்கு சதா வேலையி ருக்கும் படியான ஒரு தொழிற்சாலை மாதிரி விவசாயஞ் செய்யலாமென்றும் சொல்லியிருக்கிறார். நாம் அந்த விதமான துறைகளில் சிறிது கூட விசாரமில்லாமல் அதிகமாக பயிர் பிடிக்க வேண்டுமானால் பிடிக்காததற்கு முன்னமே எங்கே கண் திருஷ்டிப்பட்டு விடுமோ என்று பயந்து கொண்டு பயிர் செய்திருக்கும் பூமியில் ஒரு கோலை நட்டு அதில் ஒரு விகாரமும் ஆபாசமுமான உருவத்தைக் குத்திகையில் எதையோ கொடுத்து தலையில் சட்டியை கவிழ்த்து கரும்புள்ளி செம்புள்ளி குத்திவிட்டு வீட்டில் போய் உட் கார்ந்து கொள்ளுகிறோம். இந்த நிலையில் உள்ள உங்களை வெள்ளைக்கார அரசாங்கம் பாழாக்கிற்றா? உங்கள் கடவுளும் விதியும் பாழாக்கிற்றா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

செல்வநிலை

தவிர நமது செல்வ நிலையை நினைத்தால் இன்னும் மோசமாயிருக்கிறது. நமது நாட்டில் ஒரு ஆளின் சராசரி வரும்படி ஒரு நாளைக்கு ஒரு அணா ஆறு பை என்று சொல்லப்படுகிறது. ஆனால் இந்த நிலையிலுள்ள நமக்கு செல்வத்துக்குக் கூட லக்ஷ்மி என்ற ஒரு கடவுளை வைத்து தினமும் வணங்குகிறோம்.

அதற்காக செய்யும் செலவும் கணக்கு வழக்கில்லை. இவ்வளவு செலவும் ஏழையாயிருப்பதற்கு ஒரு சமாதானத்திற்குத் தான். அதாவது நமக்கு லக்ஷ்மி கடாட்சமில்லை, நாம் எவ்வளவுதான் ஆசைப்பட்டும் பாடு பட்டும் என்ன பிரயோஜனம் என்று நினைத்து சோம்பேறித் திருப்தி அடைவதற்குத் தான் உபயோகப்படுகிறதே தவிர முயற்சிக்கும் அறிவுக்கும் உபயோகப்படுகிறதில்லை,

தொழில் முயற்சி

நம்மவர் ஏதோ சொற்ப முதல் கையிலிருக்கிறதென்று கருதி ஒரு புது தொழிலை செய்யலாமாவென்று நினைத்தால் முதலில் தன்னுடைய பேர் நாமத்திற்கு கால பலன் எப்படியிருக்கிறதென்று பார்ப்பானைக் கூப்பிட்டு பரிசோதிக்க வேண்டியதாய் விடுகிறது.

அவன் வந்த உடனே இவரின் பேரைக் கேட்டு கோடுகிழித்து இன்ன வீட்டில் இன்ன கிரகம் இருப்பதனால் 6 மாதத்திற்கு தொட்டதே துலங்காது - ஒரு வேலையும் செய்யாதே என்று சொல்லிவிட்டு தனக்கு வரவேண்டிய பணத்தை வாங்கிக் கொண்டு போய் விடுகிறான். நம்மவரும் அதை நம்பிக் கொண்டு இந்த ஆறு மாத காலம் வெளியில் போனால் கூட ஏதாவது கிரகப் பிழைகள் ஏற்பட்டு விடுமோ எனக் கருதி பத்திரமாய் வீட்டிற்குள்ளேயே இருந்து கையிலுள்ளதும் போதாமல் கடனும் வாங்கி சாப்பிட்டு விடுகிறான்.

ஆறு மாதங் கழித்து நல்ல கிரகம் வருகிறபோது தொழிலுக்கும் ஜீவனத்திற்குமே கையில் காசு இல்லாமல் அறிவு பிழையை பெருக்கி கிரகப் பிழையை ஊர்ஜிதப்படுத்திக் கொள்கிறான். (சிரிப்பு) ஆகவே நமது அறிவைப் பறி கொடுத்து ஜோஸ்யர் அப்படிச் சொன்னார் குருக்கள் இப்படிச் சொன்னார் என்று கருதி இன்ன கிரகம் இன்ன மாதம் இத்தனையாந் தேதி இன்ன கிரகத்திற்கு போகிறதென்று எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கிற நாம் முன்னுக்கு வரமுடியுமா? அல்லது கிரகத்தையும் சரஸ்வதியையும் லட்சுமியையும் விதியையும் லட்சியம் செய்யாமல் தோன்றியவுடன் ஊக்கத்துடன் வேலை செய்யும் மேனாட்டார் முன் வருவார்களா? ஆகவே நம்மை இந்த கதியாக்கினது வெள்ளைக் காரர்களா? நமது மதமா விதியா என்பதைக் கவனித்துப் பாருங்கள்.

மனிதத்தன்மை

நிற்க, நமது மனிதத் தன்மையிலாவது சுயமரியாதையிலாவது நாம் எப்படியிருக்கிறோ மென்பதை யோசித்துப் பாருங்கள். மேல் நாட்டில் பிறவி யில் மக்கள் எல்லோரும் சமம். நமது நாட்டிலோ நூற்றுக்கு 97 பேர்கள் பிறவிலேயே இழிபிறப்பானவர்கள். அதாவது கடவுளுடைய ஒரு இழிவான ஸ்தானத்திலிருந்து பிறந்தவர்கள். இவ்வளவு பெரிய நாட்டில் நூற்றுக்கு 3 பேர்கள் தான் சரியான மனிதர்கள்.

ஆகவே மேற்கண்ட உயர்ந்த ஜாதியாரான 100க்கு 3 பேர்களுக்கு 100க்கு 97 பேர்களான இழிபிறப்பு மக்கள் வைப்பாட்டி மக்களாயிருந்து அடிமையாகி தொண்டு செய்வதன் மூலமே மோட்சத்திற்குப் போக வேண்டியவர்களான சுயமரியாதையற்றவர்களாக வேயிருக்கின்றார்கள்.

இந்த இழிவும் மனிதத் தன்மையும் சுயமரியாதையற்ற தன்மையும் நமது கடவுளாலும் மதமாலும் ஏற்பட்டதா? அல்லது வெள்ளைக்காரர்களால் ஏற்பட்டதா? என்பதை யோசித்துப் பாருங்கள். இதிலிருந்து நீங்கள் செய்த கடவுள் பூசையும் புண்ணியமும் உங்களைத் தாழ்த்துகிறதா அல்லது உயர்த்துகிறதாவென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். ஆகவே இந்தக் கடவுள் மதம், சாஸ்திரம், விதி இன்னான்கையும் அடியோடு ஒழிக்காமல் எந்த வெள்ளைக்கார இராஜியத்தையொழித்தாலும் ஒருக்காலும் மனிதத் தன்மை யும் சுயமரியாதையும் அடைய மாட்டீர்களென்பது நிச்சயம்.

வலிமை

நிற்க உடல் வலியிலும் மன உறுதியிலும் மேனாட்டாருக்கும் நமக்கும் உள்ள வித்தியாசத்தைப் பார்த்தால் நமது நிலையின் உண்மை நன்றாய் விளங்கும், ஒரு மேனாட்டான் ஒரு ஆகாயக் கப்பலுடனும் சில வெடி குண்டு களுடன் இமய மலையிலிருந்து புறப்படுவானேயானால் 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி வரையில் சாம்பலாக்கி விட முடியும்.

ஒரு பீரங்கி வெடி யினால் இருபது மைலுக்கு அப்பாலுள்ள பட்டணத்தைத் தூளாக்க முடியும். ஒரு துப்பாக்கி வெடிப் புகையினால் பதினாயிரக் கணக்கான மக்களை மயங்கி விழச் செய்யமுடியும். ஆனால் நாம் தட்டிப் பேச ஆளில்லாத சமயத்தில் மேடையிலேறிக் கூப்பாடு போடவும் துப்பாக்கி சப்தத்தைக் கேட்டால் நமது குழந்தைகளுக்குச் சுரம் வரவும் மற்ற நாட்டுக்காரனைக் கண்டால் பயப்பட வும் தயாராயிருக்கிறோம். பலத்துக்கும் மனவுறுதிக்குங் கூட வீரன், கருப்பு, காட்டேரி என்பதாக பல சாமிகளை வைத்து கும்பிட்டும், ஓட்டம் பிடிப்பதில் தான் தயாராயிருக்கின்றோம்.

ஆராய்ச்சி

நிற்க, நமது அறிவு ஆராய்ச்சி விஷயத்திலும் பழைய நிலைமையிலே தானிருக்கிறோம். ஏதாவது பெரிய விஷயங்களைப் பற்றிப் பேசினால் கலியுகம் இன்னும் என்னென்ன வேண்டுமானாலுஞ் செய்யுமென்று சொல்லிவிட்டு வெகு ஜாக்கிரதையாக பழைய நிலைமையைக் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக்கிறோம்.

வெள்ளைக்காரனோ நேற்றிருந்த நிலைமையிலிருந்து சிறிதாவது மாறுதலடையவே இன்றைக்கு ஆசைப் படுகிறான். 1930-ல் இருக்கும் நிலைமை 1940-ல் எவ்வளவு மாறுதல் அடைந்திருக்குமென்று நம்மாலேயே சொல்ல முடியாது. அவர்கள் கண்டுபிடிக்கும் அற்புதங்களும் செய்யும் அருமையான வேலைகளும், நமக்குச் சிறிதும் அர்த்தங்கூட ஆவதில்லை.

ஆகாயத்தில் ஒரு மணிக்கு 200, 300 மைல் வீதம் பறக்கவும் பூமியில் ஒரு மணிக்கு 100, 150 மைல் வீதம் ஓடவும் தண்ணீருக்குள் ஒரு மணிக்கு 100, 120 மைல் நீந்தவும் கண்டு பிடித்திருக்கிறார்கள். கம்பியில்லாமல் 5000 மைல் 10000 மைலுக்கப்பால் நிமிஷக் கணக்கில் சேதியனுப் பவும், உருவங்களையனுப்பவும் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

இதெல்லாம் அவர்கள் சொந்த அறிவின் மீது பொறுப்பைப் போட்டுக் கண்டு பிடித்தவர் களேயொழிய, தெய்வத்தின் மீதா வது, விதியின் மேலாவது பழி போட்டுக் கண்டு பிடித்தவர்களல்ல. சாதாரணமாக ஆயிரத்தித்தொளாயிரத்தில் நாம் கண்ட போர்ட் மோட்டார் காரானது வருஷம்தோறும் முன்னேற்றமடைந்து வந்து செலவும் வேலையும் குறைந்து கொண்டே வருகிறது. 1940-ல் அது எவ்வளவு முற்போக்கடைந்திருக்கு மென்று சொல்ல முடியாது.

விலையை குறைக்கவும் செலவைக் குறைக்கவும் வேகத்தை அதிகப்படுத்தவும் எண்ணை கூட இல்லாமல் ஓட்டவும் முயற்சி செய்துகொண்டு வருகிறார்கள். நாமோ இந்த அற்புதங்களையெல்லாம் காதி லும் கேட்டு கண்ணிலும் பார்த்து ஒரே வார்த்தையில் அதாவது “இவையெல்லாம் வெள்ளைக்காரர்கள் இங்கிருந்து திருடிக் கொண்டு போனதுதானே” என்பதாகச் சொல்லி விடுகிறோம்.

நமது நாட்டில் 200 வருஷத்திற்கு முன்னிருந்த ஒற்றை மாட்டு வண்டியும் இரட்டை மாட்டு வண்டியும் இன்னமும் அப்படியேதானி ருக்கிறது. பிரயாணம் செய்கிறவர்கட்கு சித்ரவதையாகயிருந்தாலும் சிறிதும் மாறுதல் செய்ய நாம் முற்படுவதில்லை.

ஏதாவது மாறுதல் செய்வதென்றால் இரும்பாணிக்குப் பதிலாக பித்தளை ஆணியும் பித்தளை ஆணிக்குப் பதிலாக வெள்ளி ஆணியையும் போட்டுக் கொஞ்சம் பாரத்தை அதிகமாக்கி விடுகிறோமே தவிர உட்காருவதற்கு சௌகரியமோ பாரத்தைக் குறைப்பதோ வேகத்தை அதிகப்படுத்துவதோ ஆன காரியங் களில் சிறிதும் கவலை யெடுப்பதில்லை.

முற்போக்குக்கு யார்

மேல் நாட்டில் ஒவ்வொரு மனிதனும் அறிவாளிகள் சொன்னபடிக் கேட்டுத் தெரிந்திருக்கிறார்கள். இந்த நாட்டில் ஒவ்வொருவனும் ஐயர் என்ன சொல்லுகிறார்! சமயம் என்ன சொல்லுகிறது? சாஸ்திரமென்ன சொல்லுகிறது? என்று பார்த்துக் கொண்டிருப்பதோடு கடவுள் வந்து சொற்பனத்தில் சொல்லுவார் என்று காத்துக்கொண்டிருக்கிறான்.

இருபது வருஷத்திற்கு முன் ஒரு வெள்ளைக்காரப் பெண் அணிந்து வந்த உடை சுமார் இருபது கஜத்துக்கு மேலாகவே யிருக்கும். பெரிய வீட்டுப் பெண்கள் நடந்தால் துணி பூமியில் இழுபடாமல் தூக்கிக் கொண்டு போவதற்கு ஆள் வைப்பார்கள்.

அவயங்களைப் பெரிதாகக் காட்டுவதற்கு முயற்சிப்பார்கள். இன்றைய தினம் அவர்களுடைய உடை இரண்டு கஜம் துணியில் முடிந்துவிட்டது. எவ்வளவு குறுக்க வேண்டுமோ, எவ்வளவு சுருக்க வேண்டுமோ அவ்வளவுக்குக் குறைத்து விட்டார்கள். நாம் எதைச் சுருக்கினாலும் கடவுள் கோபித்துக் கொள்வாரோ வென்று நடுங்குகிறோம்.

முற்போக்கு

வெள்ளைக்காரருடைய ஆராய்ச்சி அடுத்த ´த்திற்கு என்ன மாறுதல் செய்வதென்று துடித்துக் கொண்டிருக்கிறது. நம்முடைய ஆராய்ச்சி 2000 வருஷங்கட்கு முன் எப்படியிருந்தோமோ அப்படியே இருக்க வேண்டுமென்று கருதி அதைக் கண்டுபிடிக்கத் தொல்காப்பிய ஆராய்ச்சி செய்யப்படுகிறது.

எனவே வெள்ளைக்காரனுடைய முற்போக்குக் குதிரை முன்னாலும், நமது குதிரை பின்னாலும் போய்க் கொண்டிருக்கிறது. நம்மு டைய முட்டாள்தனமான காரியங்கட் கெல்லாம் அவசியத்தையும் காரணத்தையும் சொல்லாமல், பகவான் சொன்னார், மனு சொன்னார், ஆகமம் சொல் லிற்று, ஆழ்வார் சொன்னார், ஆச்சாரியார் சொன்னார் என்று சொல்வதைத் தவிர வேறு ஒன்றும் சமாதானமில்லை.

ஆகவே நாம் எந்தக் காலத்திலோ எவனோ எதையோ எதற்கோ சொன்னான் அதைப்பற்றி நமக்கு என்ன கவலையென்று கருதி இந்தக் காலத்துக்குத் தகுந்ததை செய்யாமல் வாளா யிருப்போமானால் மனிதர்களாக வாழ முடியாது.

மூட நம்பிக்கை

எப்படி பஞ்சாட்சரம் ஜெபித்தால் விபூதி பூசினால் மோட்சம் வரு மென்று மூட நம்பிக்கையால் கருதிக் கொண்டு துன்பப்படுகிறோமா அதுபோலவே தான் தக்ளி சுற்றினால் உப்புக் காய்ச்சினால் விடுதலை வருமென்று மூட நம்பிக்கையால் கஷ்டப்படுகின்றோம்.

பஞ்சாட்சரத்திலும் விபூதி யிலும் நமக்குள்ள மூட நம்பிக்கை தான் தக்ளியிலும் உப்புக் காய்ச்சுவதிலும் திரும்பிவிட்டு விட்டதே தவிர வேறில்லை. அதில் நமது கடுகளவு ஆராய்ச்சி யாவது செய்திருப்போமானால் இதிலும் அணுவளவாவது ஆராய்ச்சி செய்யப் புத்தி புகுந்திருக்கும். பரம்பரையாய் நமக்குள்ளிருந்த மூட நம்பிக் கையே நம்மை ஆட்சி செய்து கொண்டு சிறிதும் முன்னேறவொட்டாமல் தடுக்கின்றது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

நாஸ்த்திகம்

இப்போது நீங்கள் இந்தக் கூட்டத்திலிருந்து வெளியில் போகும் போது உங்களிற் சிலர் இராமசாமி சரியாய்த் தான் பேசினான். அதில் என்ன தப்பிருக்கிறதென்று ஒருவர்க்கொருவர் பேசிக் கொள்வீர்கள். ஆனால் பக்கத்தில் கேட்டண்டை ஒரு பார்ப்பான் நின்று கொண்டு உங்களைப் பார்த்து “நன்றாய் நாஸ்திகப் பிரசாரம் கேட்டீர்களா? பாகவதத்தில் இத்தனையாவது ஸ்காந்தத்தில் இந்த மாதிரி இன்ன இடத்தில் இத்தனை மணிக்கு இன்னான் வந்து இந்த மாதிரி நாஸ்திகம் பேசுவான், ஜனங்கள் ஞானமில்லாமல் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.

அதுதான் கலி வந்ததற்கு அடையாளம். அது சமயம் ஜாக்கிரதையாயிருந்து அதை மறக்கடிக்க ஒவ்வொருவராக முயல வேண்டுமென்று பகவான் திருவாய் மலர்ந்தருளியிருக்கிறார். ஆதலால் இவற்றை நம்பாதீர்கள்!” என்று சொல்லுவான்.

நீங்களும் திடுக்கிட்டு ஆ! என்ன பிசகு செய்தோமெனக் கருதி இந்த விஷயத்தைக் கேட்டதற்காக உங்கள் காதைக் கழுவிக் கொள்வீர்கள். இப்படியேதான் உங்களை ஆயிரக்கணக்கான வருஷங்களாக ஏமாற்றி வைத்திருக்கிறார்கள்.

ஆகையால் எந்த விஷயத்தையும் கண்மூடித் தனமாய் நம்பி விடாமல் உங்கள் அறிவைக் கொண்டு நன்றாக ஆராய்ச்சி செய்து பார்த்து அதன் முடிவின்படி நடவுங்கள் என்று கேட்டுக் கொண்டு இதை முடிக்கிறேன்.

குறிப்பு:-05.06.1930 இல் நடைபெற்ற திருவாரூர் பொதுக்கூட்டச் சொற்பொழிவு.

(குடி அரசு - சொற்பொழிவு - 15.06.1930)

Pin It