“நான் சாதாரண மனிதனில் ஒருவராக வாழ்ந்து வருகிறேன். யாவரும் என் அபிப்பிராயப்படி நடக்க வேண்டுமென்று திரு. சாரநாதன் கூறினார். அது என் கொள்கைக்கு முற்றிலும் மாறானது. நீங்கள் கேட்டு நீங்களே சிந்தித்து நன்மையானதைச் செய்ய வேண்டுமேயல்லாமல் ஒருவர் கூறுகிறபடி செய்யக்கூடாது. மனிதர்கள் சுய அறிவில் நம்பிக்கை வைக்கவேண்டும். விஷயங்களை நன்றாய் அலசிப் பார்க்க வேண்டும். 100-க்கு 99பேர் ஒப்புக் கொண்டாலும் நீங்கள் அலசிப் பார்த்தே அறிய வேண்டும். உலகத் திலுள்ள சகல தேசங்களிலும் தலைவர்களின் கட்டளைப்படி நடந்தவர்கள் கஷ்டத்திலாழ்ந்து வருகிறார்கள். நடுநிலைமையிலிருந்து விஷயங்களை கிரகிக்க வேண்டும். என்னில் கடவுளிருக்கிறாரென்று நான் கூறவில்லை. நான் கூறும் விஷயங்களை ஆலோசித்துப் பாருங்கள். சகாயத்தைப் பெறுவதற்காகவோ, வேறு சுயநலம் காரணமாகவோ நான் இங்கு வந்திருக்கவில்லை.

நாட்டிலே மக்களிடை பல நிலைமைகளைக் காண்கிறோம். ஒரு கூட்டத்தார் கஷ்டப்படுகிறார்கள், ஒரு கூட்டத்தார் இன்புற்று சுக போகங் களை அனுபவித்து வருகிறார்கள். உலகப் பரப்பில் இந்த வித்தியாச மிருக்கிறது. தேசம், மதம், ஜாதி, பாஷை முதலானவற்றின் பேரால் சரித்திர கால முதல் மக்கள் கஷ்டமடைந்து வருகிறார்கள். அவதார புருஷர்களும், தலைவர்களும் கூறின விஷயங்களை அவர்கள் பின்பற்றி வந்தார்கள். ஆதியில் மனிதர் ஒழிக்க விரும்பின காரியங்கள் இன்று வரை ஒழிக்கப் படவில்லை. அவதார காலங்களிலும் அன்னியராட்சியில்லாத காலங்களிலும் இதே கஷ்டம் நிலவி வந்தது. அதை மாற்றும் காரணத்தை மனிதர் உணர வில்லை. ஆதி முதல் நாம் எடுத்துக் கொண்ட நோக்கம் தீர்ந்த பாடில்லை. ஆகையால் புதிய முறைகளைக் கண்டுபிடிக்க நடுநிலைமை வகித்துச் சிந்திக்க வேண்டும்.

periyar and sivaji 2நம்முடைய நாட்டில் பறையனென்றும் பார்ப்பானென்றும், நிழல் படக் கூடாதென்றும் ஒரு பகுதி துவேஷம் வைத்து வருகிறது. பார்ப்பனரைப் பூதேவரென்றும், உயர்ந்த ஜாதியென்றும் சரித்திர காலம் முதல் கருதி வருகிறார்கள். காரணம் மனித சமூக பந்தத்திலில்லாததே உனக்கும் எனக்கும் என்ன வித்தியாசமென்று கேட்டால் மதவிரோதமென்றும், நாஸ்திகமென்றும் கூறப்படுகிறது. இந்த அக்கிரமங்களை அழிக்க முற்படுகிறவன் தேசத் துரோகியென்றும், மதத் துரோகியென்றும் கருதப்படுகிறான். மனுதர்ம சாஸ்திரங்களையும் வேதங்களையும், ஆதாரமாகக் காட்டி கடவுள் சிருஷ்டி, பகவான் செயல், பகவான் வாக்கென்றும் கூறுகிறார்கள். அவற்றை குழி தோண்டிப் புதைக்க நீங்கள் தயாராயிருந்தால் மட்டும் வெற்றி பெற்று விளங்கலாம். தேசாபிமானி உயர்வு தாழ்வை ஒப்புக் கொள்வானாகில் அவனுடைய தேசாபிமானம் நமக்குவேண்டாம்.

ஒருவனுக்கு பைத்தியம் பிடித்திருந்தாலொழிய கடவுளையும் தேசத் தலைவர்களையும், குறை கூற முன்வரமாட்டான். அவன் உண்மைத் தொண்டின் காரணமாகவே குறை கூறுகிறான். மக்களை ஏமாற்றி பிழைத்து வருபவர்கள் தங்கள் நிலைமையை பலப்படுத்த பகவான் கட்டளை என்று முடிச்சு போட்டு வைத்திருக்கிறார்கள். அக்காலத்தில் மனிதர்கள் சோம்பேறி களாயிருந்த படியால் ஆnக்ஷபமின்றி அதற்கு கட்டுப்பட்டிருந்தார்கள். அடிமைத்தன அஸ்திபாரம் வலுத்தவுடன் ஜனங்கள் பகுத்தறிவால் அலசிப் பார்க்க முன்வந்தார்கள். முன்ஜன்மத்தைப் பற்றி இப்பொழுது நினைப் பாரில்லை. அவர்கள் வேதங்களையும், சாஸ்திரங்களையும் மதத்தோடு சேர்த்துத் தீக்கொளுத்தவும் குழி தோண்டிப் புதைக்கவும் முன் வந்திருக்கிறார்கள். சமஉரிமையை ஒப்புக் கொள்ளாதவர்களின் அபாரமான ஆதாரங்கள் குழிதோண்டிப் புதைக்கப்படவேண்டும். ஏழைகள் பட்டினி கிடக்கும் பொழுது ஆஸ்திமான்கள் சுகபோகமாக வாழ்ந்திருக்க முடியாது.

பொறுமை, அடுத்த ஜென்மம், மோட்சம் முதலான போதனைகளெல்லாம்போதும், இறந்து பிறகுதான் பொறுமையின் பலன் கிடைக்கும். பொறுமையைப் போதிக்கும் தரகர்கள்வேண்டாம். ஒற்றுமை ஏற்பட்டால் என்ன நேரிடுமோயென்று பயந்தவர்கள் தேசாபிமானம், மதாபிமானமென்று பறை சாற்றி வருகிறார்கள். வெறுப்பையும் பொறாமையுமேற்படுத்தும் மதங்கள் தான் தோன்றின. கீழ் நாட்டின் கஷ்டங்களே மேல் நாட்டிலு மிருக்கின்றன. ஆங்கு மதச் சட்டம் முதலானவையிருப்பதால் கஷ்டப் படுவோர் இருக்கிறார்கள். மாளிகையில் வசிப்போரும் இருக்கிறார்கள். அரசனில்லாத குடியாட்சி நடைபெறும் தேசத்திலும் இதே கஷ்டங்களி ருக்கின்றன. முதலாளிகளிருக் கின்றார்கள். பாதிரிமார்களும் பிரசாரம் செய்து வருகிறார்கள் என்றாலும் மதக் கோட்பாடுகளை வெறுத்தே வருகிறார்கள்.

நம் மக்களின் விடுதலையைக் கருதுவோர் உண்மையோடு நடுநிலை மையில் விஷயங்களை ஆலோசிக்க வேண்டும். அடக்குமுறைகளும் பழிப்புகளுமேற்படலாம் பயந்தவர்களால் ஒன்றும் செய்ய முடியாது. நம்பிக்கையும் தியாகம் செய்யும் குணமுமிருந்தால் மட்டும் வெற்றி பெறலாம். நாஸ்திகனென்று பழித்தால் பழிப்போரின் அபிப்பிராயம் அவர்களோ டிருக்கட்டும். ஆnக்ஷபங்களைப் பொருட்படுத்த வேண்டாம். நம்முடைய சொந்த அபிப்பிராயத்தைக் கடைபிடிக்காதவர்கள் மூடர்களாயிருந்து வந்தார்கள். சில ஜாதியார் படிப்பதை பாவச் செயலாகக் கருதி வந்தார்கள். படிக்க சிலர்க்கு சந்தர்ப்பமேற்படவில்லை. கல்வியறிவில்லாதவர்களை தந்திரக்காரர்கள் ஏமாற்றி வந்தார்கள். பாமரமக்களின் அபிப்பிராயத்தைத் தகர்க்க முயற்சிகளெடுக்கப்பட்டாலும் நாம் பொறுமையை இழக்காமல் நம் காரியத்தில் கண்ணாயிருக்க வேண்டும்.

மதங்களின் பேராலும் சடங்குகளின் பேராலும் மக்கள் எத்தகைய இன்னல்களையடைந்து வருகிறார்கள். கோவில்களுக்கும் உற்சவங்களுக்கும் கோவில் சொத்துக்களுக்கும் எவ்வளவு பொருள் வீணில் விரையம் செய்யப்பட்டு வருகின்றது. திருப்பதியில் வருஷம் 20லட்சம் ரூபாய் காணிக்கை கிடைக்கிறது. காணிக்கை கொடுப்போர் பிரயாணம் செய்து வரும் செலவைப் பாருங்கள். அக்கோவிலுக்கு இரண்டு கோடி ரூபாய் சொத்திருக் கிறது. அரைவட்டி போட்டுப்பார்த்தால் எத்தனை லட்சம் கிடைக்கும். கடவுளுக்காக பட்டை நாமத்தோடு பிச்சையெடுத்த பணம் யார் வயிற்றில் விழுகிறது? கணக்குப் பார்த்தால் பாவமாம். காணிக்கை கொடுத்தவனிலும் அச்சொத்தை அனுபவித்து வருகிறவர்களிலும் ஏதாவது மாறுதலேற்பட்டு வருகிறதா?

ஒரு ரூபாய் வட்டியில் சேர்த்து 5000 ரூபாய் காணிக்கை கொடுத்தவன் அடுத்த வருஷத்தில் ஒன்றரை ரூபாய் வட்டி வசூலிக்கிறான். கஷ்டத்தை அதிகரிக்கவே கடவுள் உணர்ச்சி மனிதரிலேற்பட்டு வருகிறது. இதைப்பற்றி சுய அபிப்பிராயங்களைத் தெரிவித்தால் நாஸ்திகமாம். தென்னாட்டில் ஜில்லாவுக்கொரு பெரிய உபத்திரவம் (ஆலயம்) இருந்து வருகிறது. பிழைப்பிற்காக அயல் நாடுகளுக்குச் சென்றால் அந்நாடுகளில் அவர்களுக்கு முன் சுவாமிகள் சென்று விடுகிறார்கள். இந்தியாவில் 35 கோடியில் தாழ்த்தப்பட்டோர் நீங்கலாக 16 கோடி உயர் ஜாதி இந்துக்களிருக் கிறார்கள். நபரொன்றுக்கு இரண்டு கடவுளைக் கும்பிடுவோர் ஏழை ஜனங்களை அயல் நாடுகளுக்குத் துரத்தி வருகிறார்கள். நம் புத்திக் கெட்டின நன்மையான காரியத்தைச்செய்ய வேண்டுமானால் மூடப்பயம் ஒழிய வேண்டும். சுயமரியாதையின் நோக்கம் இதுவே. சாமிகளுடைய சுயமரியாதையற்றத் தன்மையை நாம் அறிந்து வருகிறோம். தேசபக்தியும் கடவுள் பக்தியும் மதபக்தியுமில்லாத தேசத்தில் மட்டும் வேலையில்லாது கஷ்டப்படும் மக்களிருக்க மாட்டார்கள். அங்கு கொடுமைக்காரரும் ஆஸ்திமான்களுமில்லை. இதை எந்த இடத்திலும் கூறத் தயாராய் இருக்கிறேன். நான் கூறுவது தப்பிதமாய்த் தோன்றினால் பைத்தியக்காரனின் கூற்றாக நினைத்துக் கொள்ளுங்கள்.”

குறிப்பு : 23-10-1932 இல் கொழும்பு கால்பேஸ் மைதானத்தில் சுயமரியாதைச் சங்கத்தார் ஆதரவில் மாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆற்றிய சொற்பொழிவு.

(குடி அரசு - சொற்பொழிவு - 30.10.1932)

Pin It