புதுச்சேரியில் சுயமரியாதை மகாநாடு

அக்கிராசனரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!!

எங்களை வரவேற்று மரியாதை செய்து வரவேற்புப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்ததற்கு நன்றி செலுத்துகிறோமாயினும், எங்கள் வரவைப் பற்றி இவ்வூரில் சிலர் அதிருப்தி அடைந்து ஏதோ கிளர்ச்சி செய்திருப்பதாகவும் அறிகிறோம். அதற்காக நீங்களும் சற்று பிரயாசைப்பட்டு இம் மகாநாட்டிற்கு அனுமதி பெற்றதாகவும் தெரிகின்றது. எந்த இயக்கமானாலும் எதிர்க்கிளர்ச்சி இருந்தால்தான் ஒழுங்காகவும், பலமான அமைப்பாகவும் விளக்கமாகவும் முன்னேற்றமடையும்.

periyar 34உதாரணமாக, இவ்வளவு கிளர்ச்சியாவது இங்கு நடந்திருக்காவிட்டால் அதிசயமாகத் தகுந்த இவ்வளவு பெரிய கூட்டம் இங்குக் கூடியிருக்க முடியுமா? எங்கள் வரவில் இவ்வூர் பொது ஜனங்களுக்கு இவ்வளவு கவனம் ஏற்பட முடியுமா? என்று பாருங்கள். அநேகமாக நாங்கள் போகின்ற ஊர்களில் எல்லாம் எதிர்க்கிளர்ச்சியே எங்கள் பிரசாரத்திற்கு மெத்த அனுகூலமளித்து வருகின்றது. நாங்கள் எந்த ஊருக்குப் போனாலும் அங்கு எங்களுக்காகச் செய்யப்படும் மரியாதைகளில் முதலாவது அங்குள்ள கோவில்களை அடைத்துப் போலீஸ் காவல் போடுவதும், “நாஸ்திகர்கள் வருகிறார்கள்” என்று ஊருக்குள் பிரசாரம் செய்து எங்கள் கூட்டத்தை நடத்த விடக் கூடாதென்று அரசாங்கத்திற்கு மனுச் செய்து கொள்ளுவதுமேயாகும். இந்தக் காரியங்கள் செய்யப்படுவதால் நாங்கள் வரும் விஷயங்கள் தானாகவே பரவி, பொதுஜனங்கள் அப்படிப்பட்ட ஆட்கள் அதாவது நாஸ்திகர்கள் என்பவர்கள் எப்படியிருப்பார்கள், அவர்கள் என்ன சொல்லுவார்கள் என்பதை பார்க்கலாம், கேட்கலாம் என்பதாகவே அநேகர் வந்து எங்களைப் பார்க்கவும், நாங்கள் சொல்வதைக் கேட்கவும் ஏற்பட்டு விடுகின்றது. இந்தக் காரணங்களால் எதிர்க் கிளர்ச்சிக்காரர்களுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம்.

உதாரணமாக, மலேயா நாட்டுக்கு நாங்கள் எவ்வளவோ இரகசியமாகப் போயும் அங்குள்ள எதிர்க்கிளர்ச்சிக்காரர்களின் செய்கைகளின் பயனாய் மலேயாவில் இதுவரை பிரசாரம் செய்ய எந்த இந்தியருக்கும் ஏற்பட்டிராத பெரிய சௌகரியங்கள் எங்களுக்கு ஏற்பட்டது. அங்கு சுமார் 150 பேர்கள் ஒரு மகஜருடன் போலீஸ் இலாக்கா தலைமை அதிகாரியைப் போய்ப் பார்த்து ஈரோடு இராமசாமியையும் அவர்கள் கோஷ்டியாரையும். மலாய் நாட்டுக்குள் விட்டால் பெரிய கலகங்கள் நடந்து விடுமென்று தெரிவித்தார்களாம். அதற்கவ்வதிகாரியானவர் அவ்வளவு பெரிய கலகங்கள் நடக்கும்படியாக அவர்கள் என்ன விதத்தில் அவ்வளவு கெட்ட காரியம் செய்வார்கள் என்று கேட்டாராம். அதற்கவர்கள் எங்கள் சீதையைக் குற்றம் சொல்லுகிறார்கள் என்று சொன்னார்களாம். அதற்கு அவ்வதிகாரி சீதை யென்றால் என்ன என்று கேட்டாராம். அதற்கவர்கள் சீதையென்றால் எங்கள் கடவுளின் மனைவி என்று சொன்னார்களாம். அதற்கு அவ்வதிகாரி எங்களிலும் சிலர் இயேசு நாதரின் தாயாராகிய மரியம்மாளைக் குறித்துப் பேசுவதில் சிலர் பலவித சந்தேகத்தைக் கிளப்பி விடுகின்றார்கள். அதற்கு நாம் என்ன செய்ய முடியும்? வருபவர்கள் சீதையைக் குற்றம் சொன்னால் நீங்கள் ஒரு கூட்டம் போட்டு அவர்கள் சொல்லுகிறபடி சீதை குற்றவாளி அல்லவென்று சொல்லுங்கள். அதற்கு தைரியமும் ஆதாரமும் இருந்தால் பயப்பட தேவையில்லை என்று சொல்லி வருகின்றவர்களின் சுற்றுப் பிரயாணத்தை நடத்திக் கொடுக்க வேண்டிய வேலை தங்களுடையது என்று சொல்லி மகஜர்காரர்களை எச்சரிக்கை செய்தனுப்பினாராம்.

ஆகவே அது போலவே இங்கும் எங்கள் பிரசாரத்திற்கு சில மக்கள் பயந்து விட்டது ஆச்சரியமாக இருக்கின்றது.

நிற்க, சகோதரர்களே, என் வார்த்தைகளை யெல்லாம் நிராகரித்து விட உங்களுக்குப் பூரண சுதந்திரமுண்டு. அதை மறுத்துப் பேசவும் உங்களுக்குச் சுதந்திரமுண்டு. ஒருவருடைய அபிப்பிராயத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டுமென்பது நியாயமாகாது என்பதும் எனக்குத் தெரியும். ஆனால் என்னுடைய அபிப்பிராயத்தை எடுத்துச் சொல்ல எனக்கு சுதந்திரமுண்டு என்பதை நீங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும். அதைத் தடுப்பது என்பது ஒரு காலும் மனித தர்மத்தில் சேர்ந்ததாகாது. நமது நாட்டில் சுதந்திரம் என்பதற்கு அர்த்தமே மற்றவர்கள் சுதந்திரத்தைக் கெடுப்பது என்றுதான் பலர் கருதிக் கொண்டிருக்கின்றார்கள். இந்த மனப்பான்மை அடிமைத் தன்மையின் வாசனையினால் ஏற்பட்டதாகுமே தவிர ஒருக்காலும் சுயேச்சைத் தன்மை உடையதாகாது.

எங்களுக்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும்? நாங்களும் மனிதர்கள்தானே? எந்த மனிதனுடைய, எந்த அரசாங்கத்தினுடைய தனிப்பட்ட காரியங்கள் எதிலும் நாங்கள் பிரவேசிப்பதில்லையே. பொதுப்பட்ட காரியங்களில் பொது ஜனங்கள், நன்மை தீமைகளில் மற்ற எல்லாருக்கும் உள்ளது போன்ற உரிமை எங்களுக்கும் உண்டு என்பதில் நாங்கள் சிறிதும் விட்டுக் கொடுக்க இசையோம். எங்கள் அபிப்பிராயங்களுக்கு மாறுபட்டவர்கள் தக்கப் பதிலையும் ஆதாரத்தையும் உடையவர்களானால் நாங்கள் பேசுவதைத் தடுக்கவோ எங்கள் மீது ஆத்திரப்படவோ சற்றும் அவசியம் ஏற்படாது. ஆதாரமற்றவர்கள், தந்திரத்தில் வாழ்பவர்கள், அமட்டலிலும் மிரட்டலிலும் மக்களை ஏமாற்றி காலம் கழிப்பவர்கள் முதலானவர்களுக்குத் தான் எங்களைப்பற்றி பயம் ஏற்படக்கூடும் கோபமும் ஆத்திரமும் வரக் கூடும். ஆனால் அதற்காக நாங்கள் என்ன செய்வது? அஸ்திவாரமற்றவைகளும், புரட்டுகளும் என்றைக்கு இருந்தாலும் ஒரு நாளைக்கு சாய்ந்து விழுந்து தான் தீரும்.

அன்றியும் அதைக் காப்பாற்ற முயற்சிக்கும் நாளெல்லாம் வீண் நாளாகத்தான் முடியும். வெகு நாளையப் புரட்டு என்பதாலேயே அல்லது அதிகக் கோபக்காரர்கள் முரடர்கள் தந்திரசாலிகள் ஆதரிக்கிற அபிப்பிராயங்கள் என்பதாலேயே எதுவும் நிலைத்திருக்க முடியாது. அவையெல்லாம் இனிப் பலிக்கவும் பலிக்காது. சுதந்திர உணர்ச்சி என்பது இந்த தேசத்தில் இல்லையானாலும் சுற்றுப்பக்க தேசங்களில் இருந்து வந்து புகுந்து விட்டது. இனி அதை வெளியில் தள்ளிவிட முடியாது. ஆதலால் தடைப்படுத்த முயற்சிப்பதிலோ, கோபிப்பதிலோ பயனில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

சகோதரர்களே! நாங்கள் இங்கு எந்தவிதமான மதப்பிரசாரம் செய்யவோ, ஏதாவது ஒரு மதத்தைக் குற்றம் சொல்லவோ ஒரு தனி மதத்தை ஸ்தாபிக்கவோ வரவில்லை; அதுபோலவே கடவுள் விஷயத்திலும் கடவுள் உண்டு இல்லை என்று சொல்லவோ அதன் குணத்தில், சக்தியில், விவகாரம் செய்யவோ, அதற்கும், மக்களுக்கும், மதக்காரர்களுக்குமுள்ள சம்மந்தத்தைப் பற்றியும் சுதந்திரத்தைப் பற்றியும் விவாதிக்கவோ நாங்கள் இங்கு வரவில்லை. மக்களுக்கு அறிவு என்பது உண்டு அல்லவா அதன் பயன் என்ன? அதன் சக்தி என்ன? வாழ்க்கையின் சம்பவங்களையும், உலகத் தோற்றங்களையும் அன்னியர் உபதேசங்களையும் பற்றி உங்கள் அனுபவமும் அறிவும் என்ன சொல்லுகின்றது? உங்கள் சொந்த பகுத்தறிவைக் கொண்டு நன்றாய் ஆராய்ந்து எதையும் பரிக்ஷித்துப் பாருங்கள் என்று சொல்லத்தான் வந்திருக்கின்றோம். இதில் என்ன பிசகு ஏற்பட்டு விடக் கூடும் என்பது எங்களுக்கு விளங்கவில்லை. இதற்காக ஏன் ஒருவர் பயப்பட வேண்டும் என்பதும் விளங்கவில்லை. உங்கள் சொந்த அறிவுக்கு மதிப்புக் கொடுக்கவும். அதற்கு சுதந்திரம் கொடுக்கவும் பயந்தால் மிருக ராசிகளை விட மனித ராசி உயர்ந்தது என்று எப்படிச் சொல்லிக் கொள்ள முடியும்? மக்களை முட்டாள்தனமும் முரட்டுப்பலமும் ஆட்சி செய்யப்பட வேண்டுமா? அல்லது அறிவும் நியாயமும் ஆட்சி செய்ய வேண்டுமா? என்பதுதான் எங்கள் கேள்வி.

மனிதனின் அறிவுக்கு மேற்பட்டதொன்று உண்டு என்று ஒன்றைக் கற்பித்து மக்களுக்குள் புகுத்தி அறிவைக் கொண்டு ஆராய்ந்து பார்க்க இடம் கொடுக்காமல் “நம்பித்தானாக வேண்டும்” என்று வலியுறுத்தி அறிவைக் கட்டிப்போட்டு நாசமாக்கி மனித சமூகம் முழுவதையுமே அடிமைப்படுத்தி விட்டதாலேயே இன்று மனித சமூகம் இவ்வளவு தொல்லைக்கும், கவலைக்கும் ஆளாகி ஆகாரத்திற்கே திண்டாட வேண்டிய நிலைமை யேற்பட்டு விட்டது.

சகோதரர்களே! அசரீரி சொல்லிற்று, அருள் சொல்லிற்று, ஆகாயவாணி சொன்னாள், ஆண்டவன் சொன்னான் என்று ஏதோ ஒன்றைக் கற்பித்து எழுதி வைத்துக்கொண்டு அதன்படி நடந்தாக வேண்டும் என்று மக்களைக் கட்டாயப்படுத்திக் கொண்டு இருப்பதும், அவற்றில் ஏதாவது ஒன்றைப் பற்றியாவது சந்தேகப்பட்டு விவரம் கேட்டால் அவர் மீது கோபிப்பதும், வைவதும், பழி சுமத்துவதும், கலகமாகி விடுமென்று மிரட்டுவதுமான காரியங்கள் எப்படி மனிதத் தன்மையானதும் நியாயமானதுமானவைகள் ஆகும்?

ஆண்டவன் சொன்னதானால், அருள் சொன்னதானால், அசரீரி சொன்னதானால், ஆகாயவாணி சொன்னதானால் அதற்குப் புஸ்தகம் எதற்கு? ஒருவருக்கு மற்றொருவர் சொல்லுவதெதற்கு? காதில் உபதேசிப்பதெதற்கு? தத்துவார்த்தங்கள் எதற்கு? அறிமுகப்படுத்துவதெதற்கு? என்பவைகளை மக்கள் சிறிதும் யோசிப்பதில்லை. ஏதாவது ஒன்றை ஒருவன் ஆண்டவன் சொன்னான் என்று சொல்லிவிட்டால், ஆண்டவன் எப்படி சொன்னான்? ஆண்டவன் சொன்னதாக யார் சொன்னார் என்று கூடக் கேட்கப்படாதென்கிறார்கள். தப்பித் தவறி யாராவது கேட்டுவிட்டால், வசவும், பழியும், மிரட்டலும்தான் பதிலாகயிருக்கின்றனவே யொழிய சமாதானமான திருப்தியான பதிலென்பதே கிடையாது. ஆகவே மனிதர்கள் முதலாவதாக இந்த இடத்தில் தங்களது அறிவைப் பயன்படுத்த சுதந்திரம் பெற்றாலல்லது ஒரு நாளும் மனித சமூகம் முற்போக்கடைவதற்கே இட மில்லாது போய்விடும். ஏனெனில் உலகத்தில் பலரை சிலர் ஏமாற்ற ஆதிக்கம் செலுத்த தங்கள் தங்கள் புரட்டுகளையும் பித்தலாட்டங்களையும் ஆரம்பித்த இடமே இந்த இடம் தான் என்று நாம் காணுவதால் அந்தப் புரட்டை முதலில் வெளியாக்கி விடவேண்டும் என்று அபிப்பிராயப் படுகின்றோம். ஆதலால் தான் அந்த இடத்தை நன்றாய் பரீக்ஷிக்க வேண்டுமென்று மேலும் மேலும் வலியுறுத்து கின்றோம். இன்று உலகத்திலுள்ள பெரும்பான்மை மதக்காரர்கள் தங்கள் தங்களுக்கு தனித்தனியாக பற்பல விதமான கொள்கைகளையும் வாசகங்களையும் வைத்துக்கொண்டு அவர்கள் அத்தனைப் பேரும் தங்கள் தங்கள் கொள்கைகளையும் வாசகங்களையும் ஆண்டவன் சொன்னான் என்றே சொல்லி சாதித்துக்கொண்டு அவற்றைப் பாமர மக்களுக்குள் பலவந்தமாக செலுத்திவிட்டார்கள். அதனாலேயே மக்களுக்குள் பற்பல பிரிவுகளும், மனப்பான்மைகளும், அபிப்பிராயங்களும் காணப்படுகின்றன. இவ்வபிப்பிராய பேதங்கள் மக்களின் ஒற்றுமையைக் குலைப்பதோடு ஒருவரையொருவர் சந்தேகிக்கவும், வெறுக்கவும் அலட்சியமாய்க் கருதவும், எதிர்க்கவும், வஞ்சிக்கவும், அடக்கி ஆளவும் பயன்படுகின்றன.

எந்த மார்க்கமாக என்று பார்த்தால் ஒவ்வொரு மதக்காரனும் தன்தன் மதத்தைச் சேர்ந்த அவதாரத்தின் மூலம், தூதனின் மூலம், ஜோதியின் மூலம் தங்கள் ஆண்டவன் சொல்லியதுதான் மேலானதென்றும், சத்தியமான தென்றும் சொல்லிக் கொண்டு அதை நிலைநிறுத்த மற்றவர்களை நம்பும்படி கட்டாயப்படுத்த முயற்சிப்பதன் மூலமே யாகும். இந்த `உணர்ச்சியையும் செய்கையையும் உலகத்தில் செல்வாக்குப் பெற்றிருக்க இடம் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை மனித சமூகத்திற்குள் ஒருவித பொதுவான ஒற்றுமையும் ஓய்வும் ஏற்படுவதற்கு இடமே இல்லை. ஆகையால்தான் இந்த இடத்திலேயே மனிதன் முதல் முதல் கவனம் செலுத்த வேண்டியது மிகவும் அவசியமானது என்று சொல்ல வேண்டி இருக்கின்றது.

நாம் இப்போது எந்த மதக்காரர்களுடைய கொள்கைகளையும் உபதேச வாசகங்களையும் எடுத்துக் கொண்டு அவை சரியா? தப்பா? என்பதாகவோ ஆண்டவன் சொல்லா என்பதாகவோ வாதாட வரவில்லை. நம்முடைய வேலையும் கவலையும் அவையல்ல, மற்றென்னவெனில் எல்லா மதக்காரர்களும் பெரிதும் ஒரே ஆண்டவன்தான் உண்டென்று ஒப்புக் கொள்ளுகின்றவர்களானதால் ஒவ்வொருவரும் தங்கள் தங்கள் கொள்கைகளையும் உபதேச வாசகங்களையும் அந்த ஆண்டவனே சொன்னான் என்று சொல்லுவதால் இவர்களுக்குள் எந்த மதக்காரர்கள் சொல்லுவது உண்மை யென்றும் எந்த அவதார புருஷர்கள் எந்த தூதர்கள் முதலானவர்கள் சொன்னது உண்மையாயிருக்கக் கூடியது என்றும் கண்டுபிடிப்பது எப்படி? இதற்கு என்ன பரீக்ஷை என்பவையே யாகும்:-

மேலும் இவைகளை எல்லாம் ஆண்டவன் சொன்னான் என்று நம்பும்படி கட்டாயப்படுத்துவதால் ஆண்டவன் எந்த ரூபத்தில் எந்த நிலையில் எங்கு இருந்துகொண்டு என்ன பாஷையில் சொன்னார் என்பதில் எந்த மதக்காரர் உண்மை சொல்லுகின்றார்கள் என்று கண்டுபிடிப்பதற்குமே யாகும். மேலும் ஒரு ஆண்டவன் என்பவர் தான் சொல்ல வேண்டுமென்கின்ற கொள்கையையோ, உபதேசத்தையோ மற்றும் ஏதோ ஒன்றையோ தானே ஒருவர் மூலம் சொல்லி பிறகு மற்றவர்களால் எடுத்துச் சொல்லும்படி செய்த பிறகு அவை விவாதத்திற்கும் உள்ளாயிருப்பதைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவை ஆண்டவனால், சொல்லப்பட்டிருந்தால் அவைகள் ஒவ்வொரு மனிதனுடைய காதிலும் விழும்படியாகவோ அல்லது மனதிலும் பதியும்படியாகவோ அல்லது இப்பொழுதாவது அவைகளை ஆண்டவன் தான் சொன்னான் என்று கருதும்படியாகவோ அல்லது குறைந்த அளவு விவாதமாவதில்லாதபடியாகவோ ஏன் அந்த ஆண்ட வனால் செய்ய முடியவில்லை என்றும் இது ஆண்டவனால் முடியாத காரியமா என்றும் யோசிக்கப் புகுந்தால் அதிலிருந்தே அவைகள் எல்லாம் ஆண்டவனால் சொல்லப்பட்டது என்று சொல்லப்படுவது உண்மையாயிருக்க முடியுமா என்னும் சந்தேகங்கள் தோன்றுவதற்கு என்ன சமாதானம் சொல்லுவது என்பதேயாகும்.

அன்றியும் இவற்றையெல்லாம் ஆண்டவன் சொன்னார் என்று கண் மூடித்தனமாய் நம்புவது அவசியமா அல்லது ஆண்டவன் சொல்லி இருந்தால் நமக்கு ஏன் தெரிந்திருக்கக் கூடாது என்று எண்ணி ஆராய்ந்து பார்ப்பது அவசியமா என்பதுமாகும்.

நிற்க, இப்படிப்பட்ட ஒரு ஆண்டவன் ஏன் மனிதனின் அறிவுக்கு எட்டாதவனாகி விட்டான்? என்பதற்கு இதுவரை யார் என்ன சமாதானம் சொன்னார்கள்? சர்வசக்தியும், சர்வ வியாபகமும் உள்ள ஆண்டவன் ஒரு மனிதனின் அறிவுக்கும், மனதிற்கும், கண்ணிற்கும் தென்படாமல் ஏன் இருக்க வேண்டும் என்பதைப் பற்றி யார் யோசித்துப் பார்த்து சமாதானம் கூறுகிறார்கள்? ஏதோ ஒரு ஆண்டவன் இருக்கின்றான் என்று மக்களை நம்பச் செய்ய வேண்டுமென்பதற்காகவோ ஒரு வாசகத்தை ஆண்டவன் சொன்னான் என்று நம்பச் செய்வதற்காகவோ உலகத்திலுள்ள மக்களின் அறிவையும், ஆராய்ச்சியையும், சுதந்திரத்தையும் இம்மாதிரி தடைப்படுத்தி விடுவதா என்று கேட்கின்றோம். இதற்காக மனிதனின் இயற்கை ஞானத்தை தலை எடுக்கவொட்டாமல் அழுத்தி வைத்து விடுவதா என்றும் கேட்கின்றோம்.

மனிதர்கள் சுதந்திரமுடையவர்களாக வேண்டுமானால் அவரவர்களுடைய அறிவுக்கும் ஆராய்ச்சிக்கும் முதலில் சுதந்திரம் கொடுக்கப்பட வேண்டும். பிறகு அவரவர்கள் அபிப்பிராயத்தை தாராளமாய் வெளியிலெடுத்துச் சொல்ல இடமளிக்க வேண்டும். தனக்கே விளங்காததையும் மற்றொருவனுக்கு விளங்க வைக்க முடியாததையும் நம்பும்படியோ, ஒப்புக் கொள்ளும்படியோ எதிர்பார்ப்பதும் யாரையும் நிர்பந்தப்படுத்துவதும் கண்டிப்பாய் கூடவே கூடாத காரியமாகும். அது போலவே உலக மனிதர்கள் ஒற்றுமைப்பட்டு சகோதரப் பாவம் அடைய வேண்டுமானால் முதலில் ஆண்டவர்கள் தொல்லையும், மதக்காரர்களின் தொல்லையும் அவர்களின் உபதேசங்களின் தொல்லையும் ஒழிந்தாக வேண்டும் . இதற்கு ஒரு மார்க்கம் செய்தாக வேண்டும். இது செய்யப்படாதவரை மனிதன் காட்டுமிராண்டித் தனத்திலிருந்து மனிதத் தன்மைக்கு ஒருக்காலமும் திரும்ப மாட்டான்.

(தொடரும்)

குறிப்பு : புதுச்சேரி ஜெப்ளே தியேட்டரில் 01.03.1931 அன்று நடைபெற்ற மாநாட்டில் ஆற்றிய உரை.

குடி அரசு - சொற்பொழிவு - 08.03.1931

(இதன் தொடர்ச்சி 15.03.1931 குடி அரசு இதழில்)

Pin It