ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தை எரித்தோம்! பார்ப்பனர்களும் இந்த தமிழ்நாட்டு மந்திரிகளும் வாயை மூடிக்கொண்டு கிடந்தார்கள்! தஞ்சாவூரில் இரண்டு இலட்சம் மக்களை வைத்துக் கொண்டு இத்தனை நாளில் சட்டத்தை மாற்ற ஒப்பா விட்டால் அதில் ஜாதியை வலியுறுத்தும் பாகத்தை எரிப்போம் என்று எச்சரித்துச் சொன்னோம்! அப்படி சொல்லும் போது சர்க்காருடைய (ஆட்சியினுடைய) கடமை என்ன? ஏன் கொளுத்துகிறீர்கள் என்று கேட்க வேண்டாமா? நான் சொன்ன பிறகுஎட்டுநாள் கழித்து 'சட்டம் எரித்தால் மூன்று ஆண்டு தண்டனை' என்ற புதுச்சட்டத்தை ஏற்படுத்திக்கொண்டு நம்முடைய தோழர்களை எல்லாம் கண்ணை மூடிக்கொண்டு தண்டித்தானே? எங்களுடைய மான உணர்ச்சியைக் காட்டிக் கொள்வதற்கே மூன்று ஆண்டு தண்டனை, ஆயிரம் ரூபாய் வரை அபராதம் என்றால் என்ன நியாயம்?

periyar meetingஇங்கே மந்திரிக்குச் செருப்பை வீசினான்! வெளியில் சொல்லவில்லை! ஓடுகிற பஸ்சைக் கொளுத்தினான்; சிலரை நெருப்பில் தூக்கிப் போட்டான். ஒன்றும் கேட்கவில்லை! சிறு தாளை எரித்தால் தண்டனையா? ஒரே காரியத்தைச் செய்ததற்கு ஒரு இடத்தில் ஒரு ஆண்டு என்றால் இது நீதியா என்று கேட்க யார் இருக்கிறார்கள்?

சட்டசபைக்குச் சென்று 150-ரூபாய் சம்பளம் (1958-ல்) கிடைத்தால் போதும் என்று உட்கார்ந்திருக்கிறார்களே அவர்களில் யாராவது ஒருவர் கேட்டதாகச் சொல்ல முடியுமா? உண்மையில் அவர்களுக்கு மான உணர்ச்சி இருக்குமானால் அவர்களை ஏன் தண்டித்தாய்? அதுவும் ஒரு இடத்தில் குறைந்த தண்டனையும் இன்னொரு இடத்தில் அதிக தண்டனையும் கொடுத்தது தப்பு அல்லவா என்று கேட்டிருக்க வேண்டாமா? பார்ப்பானை மனதில் வைத்துக் கொண்டு அவன் எங்கு கோபிப்பானோ என்று பயந்து நம் அதிகாரிகளும் இந்தச் சட்டசபை உறுப்பினர்களும் கேட்கப் பயப்படுகிறார்கள்! நாம் எதாவது கேட்டால் 'கண்டெம்ட்டு ஆஃப் கோர்ட்' (நீதி மன்ற அவமதிப்பு) என்கிறார்கள்!

என்னுடைய கேஸ் (வழக்கு) நடக்கிற போது அதே இடத்தில் எவர் எனக்குத் தண்டனை அளிக்க வேண்டுமோ அவரை அழைத்து வைத்துக் கொண்டு இவனை விடாதே என்று சொல்லிவிட்டுப் போகிறானே! இது நீதியா என்று கேட்டால் கோர்ட்டில் கேஸ் இருக்கிறது என்று நேருவுக்கு எப்படித் தெரியும் என்று சொல்கிறார்கள்! நான் கேட்கிறேன் சென்னைக்கு வந்த நேரு திருச்சிக்கு ஏன் போக வேண்டும்?

"என் சட்டத்தை எரிப்பதா? என்னுடைய சட்டம் பிடிக்கவில்லை என்றால் இந்த நாட்டை விட்டு வெளியே போ!" என்றால் எங்களுடைய நிலைமை எவ்வளவு மோசமாக இருக்கிறது? இந்தத் தமிழ் நாட்டுக்காரனை நாம் எதுவேண்டுமானாலும் சொல்லலாம். செய்யலாம் என்ற திமிர்தானே? அதை அழிக்க வேண்டாமா? ஒழிக்க வேண்டாமா? இங்கே நம்மைப் பார்த்து நமது கேஸ் (வழக்கு) இருக்கும் போது தண்டிக்க வேண்டும் என்று சொன்ன நேரு, முதுகுளத்துரில் போன போது "கேஸ் இருக்கும் போது நான் இங்கே பேசக்கூடாது; இதை உள்ளூர் சர்க்கார் பார்த்துக் கொள்ளும்" என்று சொன்னது ஏன்? இதனால் தமிழர்கள் கையாளாகாத கோழைகள் என்றுதானே விளங்குகிறது?

முதுகுளத்தூரில் இரண்டு மூன்றுபேர் செத்து இருக்கிறார்கள். இரண்டாயிரம் வீடுகள் தீப்பற்றி எரிந்திருக்கின்றன; அதில் அவதிப்பட்டவன் எல்லாம் பறையன், சக்கிலி, இழிமக்கள் என்று கருதப்படும் தமிழன்தானே? இங்கே நாம் எந்தப் பார்ப்பான் மீதும் கைவைக்கவில்லை. அப்படி யிருந்தும் நமக்குத் தண்டனை!

ஜாதி ஒழிய வேண்டுமென்று சொல்வது எனக்கு மட்டுமா? முதுகுளத்தூர்க்காரனுக்கும் சேர்த்துத்தானே கேட்கிறேன்? நான் மட்டுமா சூத்திரன், தேவடியாள் மகன்? காமராசர் முதல் கண்ணீர்த்துளிகள் வரை எல்லோரும் அந்த லிஸ்டில்தானே (பட்டியலில்) இருக்கிறோம். அசல் தேவடியாள் மகன் என்று கருதுகிறவனுக்கு என்னைவிட அதிகமான ரோஷம் வர வேண்டாமா? இங்கே தேவடியாள் மகன் என்று பெயர் வாங்கிக் கொண்டிருப்பதைவிட டில்லியின் பிடிப்பில் இருந்து விலகுவோமே!

ரஷ்யா, அமெரிக்கா அல்லது காடு மலை வனம் வனாந்திரம் எதை எடுத்துக் கொண்டாலும் நம்மைப்போல் காட்டுமிராண்டிகள் எங்கும் இருக்க மாட்டார்கள்! எந்த மதக்காரன் நம்மை இழிவு படுத்தினானோ அவனைப் பெரிய ஜாதி என்று சொல்லுகிறோம்! எந்தச் ஜாதிக்காரன் நம்மைக் கீழ் மகன் என்று சொல்கிறானோ அவன் கடையில் சாமான் வாங்கக் கூடாது. அவனுக்கு எந்த வேலையும் செய்யக்கூடாது என்று சமூக பகிஷ்காரம் (புறக்கணிப்பு) செய்தால் பார்ப்பான் உணர்வான். அத்தோடு கூடவே அறிவுத் துறையில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

மகான்கள் சொன்னார்; ரிஷி சொன்னார்; அவர் சொன்னார்; இவர் சொன்னார்; என்று நம்புகிறோமே தவிர நம் புத்தி என்ன சொல்லுகிறது என்று சிந்திப்பதில்லை. 'கடவுள் ஒருவர் இருக்கிறார் அவர் தான் எல்லாம் செய்கிறார்; அவர் இல்லாத இடமில்லை' என்பவனைப் பார்த்து கடவுளைக் காட்டு என்றால் எதைக் காட்டுவான்? எப்படிக் கடவுளை ஒருவன் காட்டமுடியாதோ அது போலத்தான் சாதி என்பதையும் ஒருவன் காட்ட முடியாது!

பார்ப்பான், நாயுடு, முதலி, ரெட்டி, கவுண்டன், செட்டி, பறையன் என்று சொல்லப்படும் ஜாதிக்காரர்களை அழைத்து ஒரு இடத்தில் நிர்வாணமாக (அம்மணமாக) நிற்க வைத்து நம் நாட்டான் வேண்டாம் வெளிநாட்டான் ஒருவனை அழைத்துவந்து இவன் இன்ன ஜாதி என்று கண்டுபிடித்துச் சொல் என்றால் எப்படிச் சொல்வான் இவன் பார்ப்பான், இவன் செட்டி, இவன் பறையன் என்று? ஆகவே ஜாதி என்ற பேய் நம் மக்களை மடையர்களாக ஆக்கி வைத்துவிட்டது. ஜாதி ஒரு பேய் என்பதை ஆச்சாரியார் அவர்களும் ஒத்துக் கொண்டாரோ என்னவோ அவருடைய வாயால் வந்து விட்டது ஜாதி ஒரு பேய்தான் என்று.

சாமி என்பது என்ன? அற்கு அடையாளம் என்ன? யாரோ சொல்லி கொடுத்ததை மனதில் வைத்துக் கொண்டு நம்புவதைத் தவிர வேறு ஒன்றுமில்லை. எவ்வளவு பக்தியில் இருக்கிறவனும் அவனன்றி ஓர் அணுவும் அசையாது என்று சொல்லுவான். எவன் கடவுளை நம்புகிறான்? வீட்டில் திருட்டுப்போனால் சாமியைக் கேட்க வேண்டாமோ? என்னுடைய வீட்டிலிருந்த சாமான் எங்கே போச்சு! உனக்குத் தெரியாதது அல்லவே சொல் என்று எவன் கேட்டான்? அதற்கு இன்னார் எடுத்துக் கொண்டு போனான் என்று எந்தக் கடவுள் இதுவரையில் சொல்லியிருக்கிறது?

கடவுள் எல்லோரையும் படைத்தார் என்று சொல்லுகிறான். பூணூலை மாட்டிக்கொண்டு தொடதே! எட்டி நில்! என்று சொல்லுகிறானே! அப்படியானால் கடவுள் எப்படி எல்லோரையும் படைத்தார்?

சர்வ வல்லமையுள்ளவர் என்று கூறும் குழவிக்கல்லை அகற்றி விட்டு உள்ளே இருக்கின்றவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு சாமியின் பெண்டாட்டிக் கட்டியிருக்கும் புடைவையை அவிழ்த்துக் கொண்டு அம்மணமாய் விட்டு விட்டுப் போகிறானே! அவருடைய சர்வ வல்லமை எங்கே போச்சு? எல்லாம் நம்முடைய மக்களை ஏய்ப்பது அல்லாமல் வேறு என்ன?

அரசாங்கம் நடக்கிறது. பார்ப்பானுடைய நன்மைக்காக இருக்கிறதே தவிர மக்களுடைய நன்மைக்காக நடக்கிறது என்று சொல்ல முடியவில்லை.

அரசன் ஒருவன் இருந்து ஆள்வது அரசாட்சி! அரசன் ஆட்சி அரசாட்டி தேர்தலில் பணத்தைச் செலவு செய்து பொய் ஓட்டு வாங்கிச் சென்றவன் எப்படி ஆட்சி செய்ய யோக்கியதையுண்டு? திரு. காமராசர், திரு. சுப்பிரமணியம், திரு. கக்கன் எல்லோரும் தெருவில் நின்றவர்கள் தானே? இப்பொழுது அவர்களுக்கு ஒரு பெருமை இருக்கிறது. மந்திரிப் பதவி போய்விட்டால் நமக்குப் பின்னால் நிற்க வேண்டியவர்கள் தானே? எந்த விதத்தில் அவர்களுக்கு யோக்கியதை இருக்கிறது? தேர்தலில் எந்த யோக்கியதையில் வந்தார்கள்? என்பது எனக்குத் தெரியும். காமராசர் நாடார் என்பதற்கும் சி.சுப்ரமணியம் கவுண்டர் என்பதற்கும் தானே ஓட்டுக் கொடுத்தான்? காமராசர் சுப்ரமணியம் மட்டும் தானே ஓட்டுக் கொடுத்தான்? காமராசர், சுப்ரமணியம் மட்டும் தான் பணம் செலவு செய்தார்கள் என்பதில்லை. இந்தக் கண்ணீர்த் துளிகளும் பணம் செலவு செய்துதான் வந்தார்கள்.

இப்போது ஆள்வது தமிழனுடைய பிரதிநிதி என்று சொல்கிறார்கள்! எங்கே தமிழனுடைய பிரதிநிதி? நேரு கலெக்டர் என்றால் காமராசர் ஒரு டபேதார் மாதிரிதானே இருந்து காரியம் நடைபெறுகிறது?

மக்கள் எல்லோரும் சமம் என்று சொல்கிற ஆட்சியில் பூணூல் உச்சிக்குடுமி வைத்திருப்பவனையும் விட்டு வைத்திருக்க நியாயம் என்ன?

நம்முடைய நாட்டிலே மக்களை ஒழுக்கத்திற்குக் கேடான முறையில் நடத்திச் செல்வது பார்ப்பான்; அவனுடைய வேத புராண இதிகாசங்களும் பார்ப்பானுடைய பத்திரிகைகளும்தான் இவைகளை நாம் புறக்கணிக்க வேண்டும்.

---------------------------

12.08.1958 அன்று பெரியார் ஈ.வெ.ரா. வட சென்னை (ஓட்டேரியில்) சொற்பொழிவு: ”விடுதலை”16.08.1958

அனுப்பி உதவியவர்:- தமிழ் ஓவியா