எனக்கு (நான் பிறந்து) நாளது செப்டம்பர் 17-ஆம் தேதியோடு 93 ஆண்டு முடிவடைந்து 94-ஆம் ஆண்டு முதல் நாள் தோன்றிவிட்டது. 93 ஆண்டு என்றால், நான் பிறந்து, மாதங்களில் 1116 மாதங்கள், நாட்களில் 34,045 நாட்கள், பிறைகளில் (அமாவாசைகளும்) 1635 ஏற்பட்டு மறைந்து விட்டன. இனிமேலும் எத்தனை காலத்துக்கு வாழ்ந்தாலும், வாழ்வில் தேய்மானம்தான் காணமுடியுமே ஒழிய வளர்ச்சி காண்பது என்பது (இயற்கையில்) முடியாத காரியமேயாகும்.

என் வாழ்நாளில் நான், மற்றவர் (அனேகர்) கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர்கள் கருத்து என்பவைகளில், யாரும் நினைக்காததும், நினைத்தாலும் வெளியில் சொல்லப் பயப்படுவதும், துணிந்து சொன்னாலும் செய்கையில் நடவாததும், நடத்திக் காட்ட முடியாதது மான காரியத்தை, எளிதாய் நினைத்து, வெளியில் எடுத்துச் சொல்லி (பிரச்சாரம் செய்து) காரியத்திலும் நடந்து வந்த தோடு, ஒரளவுக்கு மற்றவர்களுக்கும் தெரியும்படி - விளங்கும்படி, ஓரளவுக்கு நடத்திக் காட்டியும் வந்திருக்கிறேன்.

இந்த நிலை உலகெல்லாம் பரவ வேண்டும் என்று எண்ணங்கொண்டு அதற்காக வாழ்கிறேன் - என்ற எண்ணத் தில் இருந்து வருகிறேன். அப்படிப் பட்ட காரியம் (எண்ணம்) என்னவென்றால், தெய்வம் இல்லை, தெய்வ சக்தி என்பதாக எதுவும் இல்லை, மனிதத் தன்மைக்கு மேற்பட்ட தெய்வசக்தி - தெய்வீகத்தன்மை என்பதாக எதுவு மில்லை. அப்படிப்பட்ட தெய்வீகத்தனம் கொண்டவர்கள் என்பதாக யாருமே இல்லை; அப்படிப்பட்ட காரியம் என்பதாகவும் எதுவுமே இல்லை என்றும் திண்ணமாய்க் கருதி, உறுதியாக பணியாற்றியும் வந்திருக்கிறேன் - ருகிறேன்.

இந்த எனது நிலையில், எனது 93 ஆண்டு வாழ்நாளில் எனக்கு யாதொரு குறையும், சங்கடமும், மனக் குறைவோ, அதிருப்தியோ ஏற்பட்டதேயில்லை. மேற்கண்ட எல்லாக் காரியங்களிலும் மற்றவர்கள் எளிதில் பெறமுடியாத அநேக ஏற்றங்களைச் சாதாரணமாகப் பெற்றிருக்கிறேன்; மக்களால் நல்ல அளவுக்கு மதிக்கப்பட்டும், பாராட்டப் பட்டும், விரும்பப்பட்டும், போற்றப்பட்டும் வந்திருக்கிறேன்.

இதனால் உலகுக்கு - மக்களுக்கு யாதொரு கெடுதியும் ஏற்பட்டதில்லை என்பதோடு நாட்டுக்கும், மக்களுக்கும், பிற்படுத்தப்பட்ட - தாழ்த்தப்பட்ட மக்கள் யாவருக்குமே நல்ல வளர்ச்சியும், முன்னேற்றமும் ஏற்பட்டு வருகின்றன என்றே சொல்லலாம்.

நமது கருத்து வெளியீடும் பிரச்சாரமும் துவக்கப்பட்ட காலத்தில், நமது மக்களின் சராசரி ஆயுள் (வாழ்நாள்) பத்து ஆண்டேயாகும். கல்வியில் நமது மக்கள் 100-க்கு 8 பேர் 10 பேர் என எழுதப்படிக்கத் தெரிந்தவர்கள் ஆவார்கள். ஏராளமான நோய் நலிவுகள்; அவற்றுள் பரிகாரம், சவுக்கியம் செய்ய முடியாத நோய்கள் அதிகம். காலரா (வாந்திபேதி) வந்தால் 100-க்கு 90 பேர் சாவார்கள்; பிளேக் வந்தால் 100-க்கு 100-ம் சாவார்கள்; இருமல் (க்ஷயம்) வந்தால் 100-க்கு 80 பேர் சாவார்கள்; அம்மை (வைசூரி) வந்தால் 100-க்கு 50 பேர்களுக்கு மேல் சாவார்கள். தொத்து நோய்களும் பல; குழந்தைச் சாவுகளும் ஏராளம். கர்ப்பஸ்திரீகள் சாவுகளும் ஏராளம் இருந்தன. இதற்கு ஏற்ப ஏழ்மையும், கீழ்த்தரமான வாழ்க்கை நிலையும் இருந்து வந்தன.

அரசியலில் அன்னிய ஆதிக்கம், பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடின. அதுபோலவே உத்தியோகத் துறை யிலும் பார்ப்பன மயமும் முன்னேற்ற வகுப்பார் ஆதிக்கமும் இருந்து வந்தன. முதலாளிகள் ஆதிக்கமும், எஜமான் - அடிமைத் தன்மையும் இயற்கை என்று சொல்லும் தன்மையில் தாண்டவ மாடின. செல்வ நிலையோ, ஒரு லட்சம் என்பதுதான் உயர்ந்த நிலை. 10 லட்சம் என்பது மிகமிக உயர்ந்த நிலையாய் இருந்தது. மற்றும் எவ்வளவோ கீழ் நிலைக்கு ஆளாகி இருந்தது மாத்திர மல்லாமல் அந்நிலைபற்றி வெட்கப் படாமலும், கவலைப்படாமலும் வாழ்ந்து வந்தோம்.

இப்படிப்பட்ட நிலையில், இந்த நிலை பற்றி யாருமே கவலைப்படாமல் - இவற்றின் விளைவு பற்றி யாருமே கவலைப்படாமல், ‘எல்லாம் கடவுள் செயல், நம்மாலாவது ஒன்றுமே இல்லை’- என்று கருதி, நிம்மதியுடன் மக்கள் இருந்த காலத்தில் நான் ஒருவன் மாத்திரமே தீவிரமாய்ச் சிந்தித்து, இந்த நிலைக்குக் காரணம் நமது முட்டாள்தனமும், இதுவரை சிந்திக்காததுமேதான் என்று கருதி, துணிந்து கடவுளையும், மதத்தையும், சாஸ்திரங்களையும், முன்னோர் கூற்றையும் அழித்து, ஒழித்துக்கட்டி, மக்களுக்குப் புது எண்ணங்களை - அறிவை உண்டாக்கவேண்டும் என்று பாடுபட்டு வந்ததே இம் மாற்றங்களுக்கு வழியேற்படக் காரணமாயிற்று.

(விடுதலை பிறந்தநாள் விழா மலர் -94 )

Pin It