மோடி அரசு பல மூகமூடிகளை அணிந்து கொண்டு மக்களை ஏமாற்றி வருகிறது. இதன் ஒரு முகம்தான் நவம்பர் திங்கள் இலண்டன் மாநகரில் அறிஞர் அம்பேத்கர் வாழ்ந்த இல்லத்தை பாஜக மாநில அரசு விலைக்கு வாங்கியது. இந்த விழாவில் பிரதமர் மோடி, “125வது பிறந்த நாள் காணும் அம்பேத்கர் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கிய சிற்பி மட்டுமல்ல. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகத்தையும் உருவாக்கியவர்.
புறந்தள்ளப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் நலிந்தவர்கள் ஆகியோரின் உரிமைக்காகப் போராடியவர். அனைத்து மக்களின் எதிர்கால அமைதி, நீதி, சமத்துவம் வாய்ப்பு கண்ணியம் ஆகியற்றை உருவாக்கி உயர்வழியில் மானுட சமூகத்திற்குப் பணியாற்றுவதற்கு நம்மை உயர்த்தினார்” என்று தனது உரையில் குறிப்பிட்டார். இது அவராகப் பேசியதா அல்லது எழுதிக்கொடுத்ததைப் படித்தாரா என்ற ஐயமும் எழாமல் இல்லை. சொல்லுக்கும் செயலுக்கும் மோடியின் அணுகுமுறைக்கும் இடைவெளி பெருகிக் கொண்டே இருக்கிறது என்பதற்குப் பல சான்றுகளைச் சுட்டலாம்.
மோடி 2015 அக்டோபர்-நவம்பர் திங்களில் பீகார் மாநிலத்தில் தேர்தல் பரப்புரைக்காக 30 முறை சென்றார். ஏறக்குறைய ஒரு இலட்சம் ஆர்.எஸ்.எஸ். சங்பரிவார அமைப்புகளைச் சார்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் இருந்து பீகாருக்கு வரவழைக்கபட்டுத் தேர்தல் பணிகளைச் செய்தனர். பணம் தாராளமாகச் செலவிடப்பட்டது.
இக்காலக்கட்டத்தில் ஆர்.எஸ்.எஸ். தலைவரான பார்ப்பன மோகன் பகவத் “இடஒதுக்கீடுக் கொள்கையை மறுபரிசீலனை செய்யும் காலம் வந்துவிட்டது” என்று கூறித் தங்களின் உண்மையான முகத்தையும் சங் பரிவாரின் ட்ரோசன் குதிரைக்குள் ஒளிந்திருந்த பாஜகவையும் வெளிப்படுத்திவிட்டார். அதிர்ந்து போனது பாஜக தலைமை.
அரைக்கால் சட்டை மோகன் பகவத்தை பல்டி அடிக்க வைத்தனர். இடஒதுக்கீட்டுக் கொள்கைக்கு எதிரான கருத்தைத் திரும்பப் பெறச் செய்தனர். இருப்பினும் பீகார் மக்கள் விழித்துக் கொண்டனர். பீகார் தேர்தல் முடிவு சமூகநீதிக் கொள்கைக்குக் கிடைத்த வெற்றி என்று உயர்வகுப்பினரே ஏற்றுக்கொண்டனர். பாஜகவின் நயவஞ்சக நச்சு அரசியலை, கடந்த 18 மாத காலத்தில் அரசு சமூக நலத்திட்டங்களுக்கான பொதுச் செலவினைக் குறைத்துக் கொண்டு வருவதிலிருந்தே அறியலாம்.
இந்தியாவில் 45 விழுக்காட்டுக் குழந்தைகள் ஊட்டச்சத்து இல்லாமல் உடல் மூளை வளர்ச்சி குறைந்து காணப்படு கிறார்கள் என்று 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை புள்ளிவிவரம் சுட்டியது. இத்தொகுப்பில் பெரும்பான்மையான குழந்தைகள் தலித் ‘பழங்குடி’ பின்தங்கிய வகுப்பினர் என்பதும் இவர்கள் பெரும்பாலும் வடமாநிலங்களில்தான் உள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அண்மையில் ஆய்வாளர் அவத்தி ராமய்யா அரசியல் பொருளாதார இதழில் (அக். 24, 2015) தலித் மக்களின் உடல்நலம் பற்றிப் பல தரவுகளின் அடிப்படையில் கட்டுரை எழுதியுள்ளார்.
100 விழுக்காடு குழந்தைகளில் குறைந்த எடையுள்ள தலித் குழந்தைகளின் எண்ணிக்கை 47 விழுக்காடு என்று கூறியுள்ளார். மற்ற பிரிவினரின் உடல்நலம் 1990லிருந்து 2006வரை சற்று உயர்ந்து உள்ளது. ஆனால் இதர பின்தங்கியவர்கள் தலித் பழங்குடியினரின் உடல்நலக் குறைபாட்டு எண்ணிக்கையில் எவ்வித மாற்றமும் இல்லை என்று அந்த ஆய்வாளர் குறிப்பிடுகின்றார். போதிய ஊட்டச்சத்து இல்லாததனால் வயது வளர்ச்சிக்கேற்ப எடை உயரக் குறைபாடுகள் தலித் பழங்குடியினரிடம் பெருகி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
இரத்த சோகை அதிக அளவில் பழங்குடியினரிடமும் அதற்கு அடுத்த நிலையில் பின்தங்கிய பெண்களிடம் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். கடுமையான இரத்தச் சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் மற்ற சமுதாயப் பிரிவினரிடம் 1.5 விழுக்காடு என்றால், தலித் மக்களிடம் இந்தக் கடுமையான தாக்கம் 2 விழுக்காட்டிற்கு மேல் உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். இதே போன்று குழந்தைகளுக்குத் தடுப்பூசிப் போடப்படும் எண்ணிக்கை மிகக் குறைந்த நிலையில் மேற்கூறிய பிரிவினரிடம் உள்ளது.
அண்மையில் அறிஞர் அமர்தியா சென் ஆங்கில வார ஏட்டில் குஜராத் மாநிலத்திலேயே தடுப்பூசிப் போடாததனால் நோய்வாய்ப்படும் குழந்தைகளின் எண்ணிக்கைப் பெருகி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இது இன்றைய பிரதமருக்குத் தெரியாதா என்றும் அறைகூவல் விடுத்துள்ளார். இதே நிலையில் வட மாநிலங்களில் மகப்பேறு மருத்துவமும் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. பேறுகாலத்தில் இறக்கும் தாய்மார்களின் எண்ணிக்கை பெருமளவில் தலித் மக்களிடம்தான் உள்ளது. மேலும் இரத்த அழுத்தத்தையும் நுரையீரல் குறைபாடுகளையும் உருவாக்கும் ஒரு வகை இரத்த சோகை தலித் ஆதிவாசி மக்களிடம் காணப்படுகிறது.
உலகமயமாதல் கொள்கை வழியாக அந்நிய முதலீட்டை அதிகம் பெற்று பொருளாதார வளர்ச்சியை 8 விழுக்காட்டிற்கு மேல் எடுத்துச்செல்ல முடியும் என்ற நாள்தோறும் சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளைப் போன்று நடுவண் அரசின் அமைச்சர்கள் கடந்த 20 ஆண்டுகளாகக் கூறி மேலும் மேலும் பன்னாட்டு முதலாளிகள் இந்தியாவில் முதலீடுகள் செய்வதற்குத் தடைகளை நீக்கி வருகின்றனர். மூவாயிரம் கோடி அளவிற்கு அரசின் அனுமதியின்றி முதலீடு செய்யலாம் என்று அண்மையில் மோடி அரசு முடிவு செய்துள்ளது. ஆனால் கடந்த 20 ஆண்டுகளாக இவர்கள் கூறும் பொருளாதார வளர்ச்சியால் யார் பயன் பெற்றார்கள் என்பதை ஆசி` சிங் கௌ`லேந்தரா குமார், அபி`க் சிங் ஆகியோர் இணைந்து ஒரு ஆய்வுக்கட்டுரையை அக்டோபர் 17, 2014 அரசியல் பொருளாதார ஏட்டில் எழுதியுள்ளனர். தீண்டாமை என்ற கொடுமையைச் சந்தித்து வரும் தலித் பழங்குடியின மக்கள் வருமான ஏற்றத்தாழ்வு என்னும் பொருளாதாரக் கொடுமை யையும் சந்தித்து வருகின்றனர் என்று இந்த ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
1983-84, 1987-88, 1993-94, 2004-05, 2011-12 ஆகிய ஆண்டுகளின் தேசிய மாதிரி ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ள நுகர்வோர் செலவினை அடிப்படையாக வைத்து இந்தக் கருத்துரைகளை வழங்கியுள்ளனர். நகர்ப் புறங்களில் பழங்குடியினரும் தலித்துகளும் புறந்தள்ளப்பட்டு அவர்களின் ஏற்றத்தாழ்வு பெருகி வருகிறது. ஊர்ப்புறங்களில் தலித்துகளுடைய ஏற்றத்தாழ்வு நகர்ப்புறங்களைவிடப் பெருகியிருக்கிறது.
பொருளாதாரச் சீர்திருத்தம் என்ற பெயரில் சுட்டப் படுகிற வளர்ச்சி அனைத்துச் சமூகத்தினரையும் உள்ளடக்கிய தாக இல்லை. மாறாக தலித் பழங்குடியினரைப் புறந்தள்ளும் செயலாகவே உள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி தலித் பழங்குடியினரின் வாழ்க்கையில் கல்வியில் முன்னேற் றத்தை அளித்து வருகிறது. இதன் காரணமாக ஏற்றத்தாழ்வும் குறைந்து வருகிறது என்று இந்த ஆய்வாளர்கள் சுட்டியுள்ளனர்.
2014இல் தூய்மை இந்தியா என்ற திட்டத்தை மோடி அறிவித்தார். தூய்மையாக நாட்டை வைத்திருப்பது சுற்றுச் சூழலுக்கும் மக்களுக்கும் பயன்தரும் செயல் என்பதை யாரும் மறுக்கவில்லை. ஆனால் மோடி அறிவித்த தூய்மைத் திட்டம் நாட்டில் பெருகி வரும் குப்பைகள் கழிவுகளைப் பற்றி மேலோட்ட மாகக் குறிப்பிட்டு, அடிப்படை உண்மைகளை மூடி மறைக்கிறது.
இத்தொழிலில் ஈடுபட்டு வரும் சமூகத்தினரின் சமூக-பொருளாதார நிலைகளை ஆய்ந்த பிறகுதான் இத்திட்டம் அறிவிக்கப்பட்டதா? என்று பல அறிஞர்கள் வினா எழுப்பு கின்றனர். சுபா` கட்டாடே என்ற ஆய்வாளர் அரசியல் பொருளாதார ஏட்டில் (அக். 31, 2015) மனிதக் கழிவை நீக்கும் தொழிலில் யார் ஈடுபட்டு வருகிறார்கள் என்பதை விளக்கி அதற்கான பல புள்ளிவிவரங்களையும் அளித்துள்ளார். சுதார்க் ஓல்வ் என்கிற புகைப்பட இதழாளர் அளித்த தரவினை யும் இக்கட்டுரையில் சுட்டியுள்ளார்.
2013இல் மும்பை மாநகராட்சியில் குப்பை அள்ளுபவரின் புகைப்படத்தை வெளியிட்டு ஓர் உருக்கமான கருத்தைப் பதித்துள்ளார். இந்த மாநகராட்சியில் 30 ஆயிரம் துப்புரவுப் பணியாளர்கள் பணியாற்றுகிறார்கள். அனைவரும் தலித் பிரிவினர் ஆவர். கல்வி பெறாதாவர்கள். மற்ற சமுதாயப் பிரிவினரால் கீழ்மைப்படுத்திப் பார்க்கும் நிலையில் உள்ளனர். எவ்விதப் பாதுகாப்புக் கவசங்களும் இல்லாமல் இவர்கள் இந்தத் துப்புரவுப் பணிகளில் ஈடுபடுகிறார்கள். பெரும்பான்மையோர் மதுவிற்கு அடிமையாகி இருக்கிறார்கள். குடியிருக்க வீடுகள் இல்லாமல் வறுமையில் வாழ்கிறார்கள்.
தங்களது மனைவிகள் குழந்தைகளைத் துன்புறுத்துகிறார்கள். இத்தொழிலாளர்கள் இறந்தால் இவர்களது மனைவிகளுக்கு இந்தப் பணி அளிக்கப்படுகிறது. ஆனால் சோகம் தொடர்கிறது என்று கூறி தான் எடுத்த படத்தை வெளியிட்டு “இந்தியக் குடிமக்களே உங்களுடைய சக மனிதர்களின் வலி தெரியவில்லையா? இந்த நிலை தொடர வேண்டுமா?” என்று சுதார்க் குறிப்பிட்டுள் ளார். இதே நிலைதான் மற்ற மாநிலங்களிலும் காணப்படுகிறது.
மேலும் இவர்கள் ஆற்றும் பணிகளைத் தொண்டு, சேவை என்று இந்துமதம் கூறுகிறது. இக்கருத்தைத்தான் காந்தியும் தனது உரைகளில், எழுத்துகளில் குறிப்பிட்டுள்ளார். யுவான் சுவாங் கி.பி.7ஆம் நூற்றாண்டில் இந்தியாவிற்கு வந்தபோது தனது நூலில் சூத்திரர்கள் சண்டாளர்கள் ஊர்ப்புறங்களில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர் என்றும் தீண்டாமை கடைபிடிக் கப்படுகிறது என்ற வரலாற்றுச் சான்றுகளையும் இந்தக் கட்டுரையில் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
மோடி தூய்மை இந்தியா திட்டத்தை தில்லி வால்மீகி பகுதியில் இருந்துதான் தொடங்கினார். அதே இடத்தில்தான் காந்தி சில நாட்கள் தங்கியிருந்தார். காந்திக்கும் மோடிக்கும் ஒரு ஒரு ஒற்றுமை உள்ளது. இருவரும் இந்துமத சனாதன தருமத்தை ஏற்றுக்கொண்டவர்கள். எனவேதான் அறிஞர் அம்பேத்கர் காந்தியைக் கடுமையாக விமர்சனம் செய்தார். 1925இல், வறுமை மற்றவர்களுக்கு அல்ல ஆனால் சூத்திரர்களுக்கு மட்டுமே என்று கூறுவதும்-துப்புரவுப் பணி தீண்டத்தகாதவர்களுக்கு நல்லது என்று கூறுவதும் ஒரு குரூரமான நகைச்சுவை என்று அம்பேத்கர் காந்திக்குப் பதிலளித்தார்.
விண்வெளியில் பலஆயிரம் கோடி ரூபாய் செலவில் செயற்கைக் கோள்களையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளையும் செலுத்தும் இந்திய அரசு பூமியில் இன்றும் இத்தகைய இழிவான தொழிலைச் செய்வதைப் பற்றிக் கவனத்தில் எடுத்துக்கொள்ளாமல், அவர்களுடைய கல்வி உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதுதான் தூய்மை இந்தியா திட்டத்தின் நோக்கமா? என்று பலர் கேள்வி எழுப்பி வருகின்றனர். தூய்மை இந்தியா திட்டத்திற்காக 62 ஆயிரம் கோடி தேவைப்படுவதாகவும், அதில் 14620 கோடியை அரசு அளிக்கும் என்றும் மீதித் தொகையை முதலாளித்துவக் குழுமங்கள் வழங்கும் என்றும் குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்த நிதியெல்லாம் உண்மையில் செலவிடப்பட்டுள்ளதா? இந்த ஓராண்டில் தூய்மை இந்தியா திட்டம் பெற்ற வெற்றிகள் என்ன? போன்ற கேள்விகள் எழாமல் இல்லை.
ஆனால் இந்து தர்மத்தின்படி மனிதக் கழிவுகளையும் குப்பைகளையும் அகற்றும் பொறுப்பு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கென்று இன்று வரை ஒதுக்கப்பட்டுள்ளதே அதை மாற்றாமல் எவ்வாறு தூய்மை இந்தியா திட்டம் வெற்றி பெறும்? மேலும் பெரும்பாலும் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட ஏழைக் குழந்தைகள் ஊட்டச்சத்து பெறுவதற்கான ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டத்திற்காக ஒதுக்கிய தொகையை நடுவண் அரசு குறைத்துள்ளது வன்கொடுமை அல்லவா? கல்வி பொதுச்சுகாதாரத்திற்கென்று ஒதுக்கிய தொகையையும் மோடி அரசு குறைத்துள்ளது.
இந்நிலையில் ஏற்கெனவே வாடி வதங்கும் குழந்தைகள் கர்ப்பிணிப் பெண்கள் ஆகியோர் இன்னும் மோசமான முறையில் பாதிக்கப்படுவார்கள். இதையெல்லாம் மூடி மறைத்துவிட்டு வளர்ச்சி-வளர்ச்சி என்று வெற்று முழக்கங்களை உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் முழங்கிச் சுற்றுலா வரும் மோடி பொருளாதாரச் சுரண்டலையும் சமூகக் கொடுமைகளையும் கண்டும் காணதவர் போல நாடகமாடுகிறார். மேற்குறிப்பிட்ட உண்மைகளும் புள்ளிவிவரங்களும் தூய்மை இந்தியா திட்டமும் மற்ற திட்டங்களைப் போல வெறும் ஏமாற்றுத் திட்டங்களே என்பதை உணர்த்துகின்றன. ஏற்றத்தாழ்வு பெருகி வருகிறது. அதுவும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரிடையில் கொடுமையான முறையில் பெருகி வருகிறது.
ஆனால் பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக மாறி வருகின்றனர். முதலாளிகள் பெரும் முதலாளிகளாகப் பெரும் வளர்ச்சி பெற்று வருகிறார்கள். அம்பானி, அதானி போன்ற 100 முதலாளித்துவ குழுமங்கள்தான் இந்தியப் பொருளாதாரத்தைத் தங்கள் பிடியில் கொண்டு வந்துள்ளனர் என்பதைப் புள்ளிவிவரங்கள் சுட்டுகின்றன.
இவற்றைத் தீர்ப்பதற்கு உறுதியான செயல் நடவடிக்கைகள் எதுவுமில்லாமல், அண்ணல் அம்பேத்காரை இலண்டனில் மோடி புகழ்வது சொல் சூழ்ச்சியாகும்; சமூகச் சதியாகும். அரசின் சமூக நீதிக்கு எதிரான போக்கினை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். இதற்குப் புதுதில்லியியும் பீகாரும் நல்ல அடிகளைக் கொடுத்துள்ளன. சொரணை உள்ள மாட்டிற்கு ஒரு சூடு போதும் என்பது நமது முதுமொழியாகும். மரண அடிதான் பாஜக என்ற-பசுத்தோல் போர்த்திய புலிக்குச் சரியான முடிவாகும்.