மோடியைப் போன்ற தன்னம்பிக்கையும், உற்சாகமும் நிறைந்த பிரதமரை இதுவரை இந்தியா பார்த்தது கிடையாது. எப்போது பார்த்தாலும் துறு துறு என்று எதையாவது செய்துகொண்டேஇருக்கின்றார். நம்ம ஊரில் A to Z சர்வீஸ் சென்டர் என்று போட்டிருப்பார்கள். எந்த வேலையைக் கொடுத்தாலும் அதை செய்து தருவார்கள். அதே போலத்தான் மோடியும்.. எதையாவது செய்துமுதலாளிகளை ஆரோக்கியமாக வாழ வைக்க வேண்டும், அதற்காக எப்படி முதலாளிகளுக்கு வரியைக் குறைக்கலாம், எப்படி அடுத்தவனின் நிலத்தை ஆட்டையைப் போடலாம், சிலிண்டர் மானியத்தைக் குறைக்கலாமா, மண்ணென்னை மானியத்தை ரத்து செய்யலாமா, இன்சூசுரன்ஸ் பணத்தை திருடலாமா, பி.எப் பணத்தைப் பங்குச் சந்தையில் போட்டு சூதாடலாமா என்று நடக்கும்போது, படுக்கும்போது, உட்காரும்போது என அனைத்து நேரமும் யோசித்துக் கொண்டே இருப்பார்.

modi 329ஆனால் மக்கள் இதைப் பற்றி எல்லாம் யோசிப்பதற்கு வாய்ப்பு தராமல் அவ்வபோது மேக் இன் இந்தியா, டிஜிட்டல் இந்தியா, தூய்மை இந்தியா என்று ஏதாவது ஒரு மொக்கை படத்தைமக்களுக்குப் போட்டுக் காட்டியபடியே இருப்பார். பாவம் மக்களும் இந்தியக் குடிமக்களாய் பிறந்த ஒரே பாவத்திற்காக அந்தக் கருமத்தை எல்லாம் சகித்துக் கொண்டு பார்ப்பார்கள். அப்படி இந்திய மக்களின் பொருமையைச் சோதிக்க மோடி அடுத்து எடுத்து இருக்கும் மொக்கைப்படம்தான் 'தொடங்கிடு இந்தியா, எழுந்து நில் இந்தியா'.

நாடு முழுவதும் கடும் விலைவாசி உயர்வாலும், வேலையில்லாத் திண்டாட்டத்தாலும் மக்கள் மத்தியில் மோடி அரசின் மீது அதிருப்தி நிலவுகின்றது. பருப்பு வகைகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்திருக்கின்றது. முன் எப்போதும் இல்லாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு பெரும் வீழ்ச்சி அடைந்து இந்தியாவின் ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரம் நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றது. தொழில்துறை உற்பத்தி முடங்கிப் போய் சாகும் தருவாயில் இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக இந்திய மக்களின் மனநிலையை மதிப்பிட்டால் அது ஒரு வெடிக்கக் காத்திருக்கும் எரிமலையாக குமுறிக்கொண்டு இருக்கின்றது.

எதாவது தகிடுதித்தம் செய்து மக்களின் இந்த ஆக்ரோசத்தைக் குறைக்க இந்திய ஆளும்வர்க்கம் விரும்புகின்றது. அதற்காக பல மோசடித் திட்டங்களை அறிவித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகின்றது. மோடி இப்போது தொடங்கி வைத்திருக்கும் இந்த ஸ்டார்ட் அப் இந்தியா, ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் மூலம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றுசொல்கின்றார்கள். ஆனால் பார்த்த மாத்திரத்திலேயே இது ஒரு மோசடி வேலை என்பதை நாம் புரிந்துகொள்ளலாம். இந்தத் திட்டத்தின் மூலம் புதிதாக தொழில் தொடங்க விரும்புவர்களுக்கு அல்லது அதைப் பற்றிய கருத்துரு வைத்திருப்பவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்று சொல்லப்பட்டிருக்கின்றது.

இந்தத் திட்டமானது ஐஐடி, ஐஐஎம் மற்றும் மத்திய பல்கலைக்கழகங்கள், தேசிய தகவல் தொழில்நுட்ப கல்வி மையங்களுடன் இணைந்து செயல்படுத்தபடும் என்று கூறப்பட்டுள்ளது. எனவே நீங்கள் ஐஐடி, ஐஐஎம் போன்றவற்றில் படிக்கும் மேட்டுக்குடி நபராக இருந்தால் மட்டுமே அரசின் இந்தச் சலுகையைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதுவும் உங்கள் திட்டத்தின் மதிப்புகுறைந்தது 25 கோடியாகவேனும் இருக்க வேண்டும். நீங்கள் படித்து முடித்துவிட்டு சொந்தமாக ஒரு மளிகைக் கடையோ, காய்கறிக் கடையோ அல்லது ஒரு சிறுதொழிலோ செய்யலாம் என்று நினைத்தீர்கள் என்றால் உங்களுக்கு ‘கெட் அவுட் இந்தியாதான்’ கிடைக்கும்.

ஆண்டுக்கு 2500 கோடி வீதம் நான்கு ஆண்டுகளுக்கு 10000 கோடி நிதி ஒதுக்கப்படுமாம். இந்த நிதி 2.5 லட்சம் நபர்களுக்கு முதல்கட்டமாக வழங்கப்படுமாம்.(பத்திரிக்கையில அப்படித்தான் போட்டிருந்தாங்க) உங்களது திட்டத்தின் மதிப்பு 25 கோடிக்குக் குறையாமல் இருக்க வேண்டும் என்கின்றார்கள். அப்படி என்றால் கணக்கு எங்கோ இடிக்கின்றதே. 2500 கோடியை இருபத்தி ஐந்து, இருபத்தி ஐந்து கோடியாக பிரித்து 2.5 லட்சம் பேருக்குக் கொடுத்தால் எவ்வளவு வரும்? மோடியை நல்லவன் என்று சொல்பவர்கள் அந்தக் கணக்கை போட்டுக் கொள்ளலாம்.

ஒவ்வொரு ஆண்டும் படித்து முடித்து ஏறக்குறைய 50 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் உழைப்புச் சந்தையில் குவிந்து வருகின்றார்கள். இவர்களில் பத்து சதவீத பேருக்கு வேலைகிடைப்பதே பெரும்பாடாக இருக்கின்றது. மற்றவர்கள் எல்லாம் கிடைத்த வேலைக்கு செல்லும் அத்துக்கூலிகளாக , வேலை தேடிக் கொண்டிருப்பவர்களாக, சமூக விரோதிகளாக என பல அவதாரங்களை எடுத்துக் கொண்டு இருக்கின்றார்கள். இவர்களுக்கு எல்லாம் வேலை கொடுக்க வேண்டும் என்றால் இங்கே உற்பத்தித் துறை பெரிய அளவில் வளர வேண்டும். ஆனால்உற்பத்தித் துறையோ இப்பவோ, அப்பவோ என இழுத்துக் கொண்டு கிடக்கின்றது. மோடி நாடு நாடாக சுற்றி பங்குச்சந்தை சூதாடிகளை மட்டுமே இதுவரை இந்தியாவிற்கு அழைத்து வந்துள்ளார். நேரடி உற்பத்தியில் பங்கேற்கும் மூலதனம் எதுவும் இந்தியாவை இதுவரை எட்டிக்கூட பார்க்கவில்லை.

உலகம் பூராவும் பொருளாதார பெருமந்தம் நிலவுவதால் நிதி மூலதனத்தைத் தன் கைவசம் வைத்திருக்கும் யாரும் அதை நேரடி உற்பத்தி சார்ந்த தொழிற்துறைகளில் முதலீடு செய்வது கிடையாது. முடிந்தவரை பங்குச் சந்தையில் போட்டு எவ்வளவு சீக்கிரம் சுருட்ட முடியுமோ அவ்வளவு சீக்கிரம் சுருட்டிக் கொண்டு ஓடவே மூலதனச் சூதாடிகள் தயாராக இருக்கின்றார்கள். அதனால் இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த 28 மாதங்களில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. செத்துப் போன பிணத்திற்கு எவ்வளவுதான் அலங்காரம் செய்தாலும் துர்நாற்றத்தை நீண்ட நேரத்திற்கு கட்டுப்படுத்தி வைத்திருக்க முடியாது. அதே போலத்தான் செத்து அழுகிப்போன இந்திய தொழிற்துறையை எவ்வளவுதான் மூடி மறைக்க மோடி முயன்றாலும் பங்குச் சந்தை சரிவும், ரூபாய் மதிப்பு சரிவும், கடும் விலைவாசி ஏற்றமும், பெருகிவரும் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டமும் மோடி ஒரு வெட்டி முண்டம், வீணாப்போன தெண்டம்என்பதை காட்டிக் கொடுத்துவிடும்.

இந்த எழுந்திரு இந்தியா திட்டத்தின் மூலம் எழுந்து நிற்க விரும்புவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு வரி கிடையாதாம். சுற்றுச்சூழல் பற்றி கவலைப்பட வேண்டியதே இல்லையாம். பணத்தை வாங்கித் தின்றுவிட்டு கம்பெனி திவால் ஆகிவிட்டது என்று சொன்னாலும் பிரச்சினை இல்லையாம். இதத்தான்டா எப்பவுமே பண்ணிக்கிட்டு இருக்கறீங்க என்று நீங்கள் நினைப்பது தெரிகின்றது. ஆனாலும் என்ன செய்வது மக்களே, ஊராமூட்டு பணத்திற்கு மங்களம் பாடுவதென்றால் யாருக்குத்தான் கசக்கும். அதுவும் மோடி போன்ற 420களை கேட்கவா வேண்டும்!

- செ.கார்கி

Pin It