இந்திய தொழிலாளர் அசோசியேசன், பிரித்தன், 10 நவம்பர் 2015 இல் வெளியிட்ட அறிக்கை

11 நவம்பர் 2015 இல் அரசுமுறை பயணமாக பிரித்தனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். இந்த பயணத்தின் போது, இந்திய மற்றும் பிரித்தனின் ஏகபோக முதலாளிகள், இரண்டு நாடுகளின் வளங்களையும் உழைப்பையும் கூட்டாகச் சுரண்டவும் கொள்ளையடிக்கவும் புதிய பல ஒப்பந்தங்களைப் போடத் திட்டமிட்டுள்ளனர். பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்வதில் ஒத்துழைப்பு, அவர்களுடைய செயற்பட்டியலில் ஒரு முக்கிய இடம் பிடித்துள்ளது. ஐரோப்பிய பொருளாதாரத்தில் ஆழ்ந்த தேக்கம் ஏற்பட்டுள்ளதை அடுத்து, பிரித்தனின் ஏகபோக முதலாளிகள் பரந்த இந்தியச் சந்தைகளை ஊடுருவதையும் இந்தியாவை ஒரு நட்பு நாடாகவும், ஆசியாவில் சீனாவிற்கு எதிர் பலமாகவும் வளர்ப்பதையும் எதிர்நோக்கி இருக்கிறார்கள்.

ஐரோப்பா இந்தியா மன்றம் என்ற புதியதாக உருவாக்கப்பட்ட அமைப்பு, வெம்பிளே மைதானத்தில் 13-ஆம் நவம்பர் அன்று “இரண்டு பெரிய நாடுகள், ஒரு ஒளிமயமான எதிர்காலம்” என்ற முழக்கத்தின் கீழ் மோடியை பிரித்தனில் வரவேற்பதற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறது. இந்த வெம்பிளே நிகழ்ச்சி, “அமைதியான, வளமான இந்தியாவிற்கான அவருடைய தொலைநோக்கை முன்னிலைப்படுத்திக் கொண்டாடுவதற்கு”  நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. பெருவாரியான இந்திய மற்றும் பிரித்தனின் பெரிய முதலாளிகள் இன்னும் மோடியையே இவர்கள் விரும்புவனவற்றை நிறைவேற்றக்கூடிய விருப்பமான பிரதிநிதியாகக் கருதுகின்றனர் என்ற உண்மையை இது பிரதிபலிக்கின்றது. அதே நேரத்தில் இந்த சமயம் மோடியின் பயணத்திற்கு பிரித்தனில் பலத்த எதிர்ப்பு இருக்கின்றது.

மோடியை நாயகனாக சித்தரித்து பிரச்சாரம் நடந்துவரும் அதே சமயம், வளர்ந்து வரும் “சகிப்பின்மை”யான சூழலைக் கட்டுப்படுத்த மோடி அரசாங்கம் ஏதாவது செய்ய வேண்டும் என்று சர்வதேச முதலாளித்துவ ஊடகங்களில் எதிர்ப் பிரச்சாரம் நடந்து வருகிறது. இந்தப் பிரச்சாரத்தை இந்தியாவில் முன்னின்று நடத்தி வரும் காங்கிரசும் மற்ற பிற கட்சிகளும் “சகிப்புத் தன்மை” மீது சத்தியம் செய்து, பாஜக, மதச் சிறுபான்மையினரிடம் சகிப்புத் தன்மையுடன் நடந்து கொள்ளவில்லை என்று குற்றஞ்சாட்டுகின்றனர்.

மோடிக்கு ஆதரவான முகாமிற்கு பின்னாலோ அல்லது மோடிக்கு எதிரான முகாமிற்கு பின்னாலோ இந்திய மக்கள் அணிவகுத்து நிற்க வேண்டுமென இந்திய மற்றும் சர்வதேச முதலாளித்துவ நலன்கள் விரும்புகின்றன. ஆனால் உண்மையான பிரச்சனை ஒரு தனி மனிதனைப் பற்றியது அல்ல. பிரச்சனையானது இந்திய அரசின் தன்மை பற்றியும், அதன் அரசியல் வழிமுறைகளைப் பற்றியும் அது பாதுகாக்கும் பொருளாதார அமைப்பைப் பற்றியதும் ஆகும்.

உண்மைகள் எதைக் காட்டுகின்றன? ஆட்சி அதிகாரத்தில் காங்கிரசு கட்சி இருந்தாலும் சரி, பாஜக இருந்தாலும் சரி, கடந்த முப்பது ஆண்டுகளுக்கு மேலாகவும் இந்திய மக்கள் அதிகரித்து வரும் வகுப்புவாத பாசிச பயங்கரத்தை எதிர்கொண்டு வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் சூழ்நிலை, கடந்த வருடத்தை விட மேலும் மோசமாகத் தான் இருந்து வருகிறது. மிகவும் வெறுக்கப்பட்டு வரும் “சீர்திருத்தத்” திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் போது, உழைக்கும் பெருவாரியான மக்களை பிரித்து வைப்பதற்கும் அவர்களை திசை திருப்பி விடுவதற்கும், வகுப்புவாதத்தையும் பாசிச பயங்கரவாதத்தையும் கட்டவிழ்த்து விடுவது ஆளும் வர்க்கங்களின் விருப்பமான முறையாக ஆகிவிட்டது.

1983-இல் அசாமில் வங்காள முஸ்லீம்கள் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாபில் வகுப்புவாத பயங்கரம் கட்டவிழ்த்து விடப்பட்டது. சூன் 1984-இல் அம்ரித்சர் பொற்கோயில் மீது ஆபரேஷன் பூளு ஸ்டார் என்ற பெயரில் நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதலினால் இது மேலும் தீவிரமடைந்தது. அதே வருடத்தில் நவம்பர் மாதத்தில் இந்திரா காந்தி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து சீக்கிய மதத்தினரின் படுகொலை செய்யப்பட்டனர். காஷ்மீர், மணிப்பூர், நாகாலாந்து, அசாம் மற்றும் கலவரப் பகுதிகள் என்று கூறப்படும் பிற பகுதிகளிலுள்ள மக்களின் விதியும் இதைப் போலவே தான் உள்ளது.

கடந்த முப்பதாண்டுகளை நிதானமாக மதிப்பீடு செய்தால், பெரிய அளவிலான வகுப்புவாத மற்றும் குறுங்குழுவாத வன்முறைகளெல்லாம் அரசின் ஆதரவோடு நடைபெற்றவையாகும் என்பதைக் காட்டுகிறது. அவை எதுவுமே “கலவரங்கள்” அல்ல. அவை மிகவும் சக்தி வாய்ந்த பொருளாதார பலம் கொண்ட, மத்திய அரசைத் தம் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பெரிய முதலாளிகளினால் ஏற்பாடு செய்யப்பட்டவையாகும். இவை நடக்கக் கூடாதென ஆளும் வர்க்கங்கள் விரும்பியிருந்தால், வகுப்புவாத வன்முறையோ தனிமனித வன்முறையோ அரசு வன்முறையோ இப்படிப்பட்ட அச்சுறுத்தும் அளவிற்கு வளர வழியில்லை.

ஆங்கிலேய காலனிய ஆட்சியாளர்கள் எப்படிப்பட்ட தந்திரங்களைக் கையாண்டார்களோ, அவற்றையே இந்திய ஆளும் வர்க்கங்களும் கடைபிடிக்கிறார்கள். ஆங்கிலேய காலனியர்கள் மத, சாதி, இனம், பழங்குடி அடையாளங்களின் அடிப்படையில் இந்திய மக்களைப் பிளவுபடுத்துவதற்கு கவனத்துடன் ஏற்பாடு செய்தனர். தங்களுடைய பிரித்தாளும் சூழ்ச்சியின் பகுதியாக ஆங்கிலேய ஆட்சியாளர்கள், அனைத்திந்திய முசுலீம் லீக், பஞ்சாப் இந்து மகாசபை, ராஷ்டிரிய சுயம் சேவக் சங்கம் போன்ற வெளிப்படையாகவே வகுப்புவாத அமைப்புகளையும், பெரும்பான்மை மதத்தினர் சிறுபான்மையினரை சகித்துக் கொள்ள வேண்டுமென போதிக்கும் காங்கிரசு போன்ற மதச்சார்பற்றதாகக் கூறப்படும் கட்சிகளையும் உருவாக்குவதற்கு உதவி செய்து ஆதரவளித்தனர். ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்த அமைப்புகளிடம் இரகசியமாக கலந்து பேசி, ஒன்றை மற்றொன்றுக்கு எதிராகத் தூண்டிவிட்டு, அவர்கள் மூலம் மக்களைப் பிளவுபடுத்தி, திசை திருப்பப் பயன்படுத்திக் கொண்டனர். அவர்கள் மதக் “கலவரங்களை” ஏற்பாடு செய்துவிட்டு பின் மத நல்லிணக்கத்தை மீட்பது என்ற பெயரில் தலையீடு செய்தனர்.

வகுப்புவாதம் என்றும், மதச்சார்பற்றது என்றும் அழைக்கப்படும் முகாம்களில் எதனுடனும் சார்ந்து மக்கள் தங்களை முட்டாள்களாக ஆக்கிக் கொள்ள கூடாது. மத வன்முறைகளையும், சாதிச் சண்டைகளையும் மற்ற குறுங்குழுவாத வன்முறைகளையும் தூண்டிவிடுவதும், ஏற்பாடு செய்வதும் அதனால் பலனடைவதும் இந்திய முதலாளி வர்க்கமாகும். அரசின் மூலம் அவ்வப்போது வன்முறையையும் பயங்கரத்தையும் ஏற்பாடு செய்தும், குறிப்பிட்ட இடைவெளிகளில் தேர்தல்களை நடத்தி ஒரு மேலாண்மைக் குழுவை மாற்றி இன்னொன்றைக் கொண்டு வருவதன் மூலமும் அது ஆட்சி செய்கிறது.

காங்கிரசும், பாஜக-வும் அதே தொழிலாளர் விரோத, உழவர் விரோத, தேச விரோதத் திட்டமான தாராளமயம் தனியார்மயம் மூலம் உலகமயமாக்கலைச் செயல்படுத்த உறுதி கொண்டுள்ளன என்று வாழ்க்கை அனுபவம் காட்டுகிறது. வாழ்வாதாரத்தையும் பெருவாரியான உழைக்கும் மக்களின் உரிமைகளையும் விலையாகக் கொடுத்து, டாடாக்களையும் பிர்லாக்களையும் அம்பானிகளையும் மற்ற பிற பில்லியனர்களையும் உலக மேற்தட்டிலுள்ள மிகப்பெரிய செல்வந்தர்களின் அணிகளில் சேரச் செய்யும் திட்டமாகும் இது. பிரித்தன் மற்றும் பிற ஏகாதிபத்திய நாட்டு ஏகபோக முதலாளிகள் சுரண்டிக் கொள்ளையடிப்பதற்காக இந்தியாவின் வளங்களையும், உழைப்பையும் மேலும் திறந்துவிடும் திட்டமாகும் இது. இந்தியாவில் தொழிலாளர்களை பிரித்தனின் முதலாளிகள் சுரண்டுவதும் பிரித்தனின் தொழிலாளர்களை இந்திய முதலாளிகள் சுரண்டுவதும் இன்று நடந்து வருகிறது.

இறக்குமதி செய்யப்பட்டு இந்திய மண்ணில் விதைக்கப்பட்ட வெஸ்ட்மினிஸ்டர் மாதிரி பாராளுமன்ற சனநாயகம், பெருவாரியான மக்களை அதிகாரத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்காக சேவை செய்துள்ளது என்று வாழ்க்கை அனுபவம் காட்டுகின்றது. இன்று அபாயகரமான பாதையில் சென்று கொண்டிருக்கும், துரோகத்தனமான பெருமுதலாளிகளின் சர்வாதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட அரசியல் அமைப்பாகும் இது. நியாயமற்ற போர்களையும், “ஆட்சி மாற்ற”ங்களை திட்டமிட்டு நடத்துபவர்களும், ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்துபவர்களும், உலகம் முழுவதிலும் எல்லா வகையான குற்றவியலான பயங்கரவாதச் செயல்களை செய்பவர்களும் ஆன ஆங்கிலேய-அமெரிக்க ஏகாதிபத்தியர்களோடு இராணுவ மற்றும் உளவுத்துறை ஒத்துழைப்பை, இந்திய ஆளும் வர்க்கங்கள் பலப்படுத்திக் கொண்டு வருகின்றனர்.

நம்முடைய உரிமைகளுக்காகவும் எல்லா தேசங்கள் மற்றும் மக்களின் உரிமைகளுக்காகவும் குரல் எழுப்பும் ஒரு நூற்றாண்டிற்கு மேற்பட்ட வரலாறு, வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு உண்டு. காலனியத்துவம், இனவாதம், ஏகாதிபத்தியம் போன்ற  எல்லா வகையான அடிமைத்தனத்தையும் எதிர்த்து எல்லா ஒடுக்கப்பட்ட மக்களோடும் சேர்ந்து தோளோடு தோளாக நின்று போராடும் மகத்தான பாரம்பரியம் நமக்கு உண்டு. தற்போதைய சூழ்நிலைமைகள், நம்முடைய சிறப்பான புரட்சிகர பாரம்பரிய வழியில் நடைபோட வேண்டுமென அறைகூவல் விடுகின்றன. இந்தியாவில் நடக்கும் போராட்டத்தை, வகுப்புவாத மற்றும் மதச்சார்பற்ற ஆளும் குழுக்களுக்கிடையே நடக்கும் போராட்டமாக சித்தரிக்கும் வஞ்சகமான பிரச்சாரத்தை நம்பிவிடாமல் நாம் விழிப்பாக இருக்க வேண்டும்.

இந்தியாவிலும் பிரித்தனிலும் மற்றும் உலகளவிலும் நடைபெற்றுவரும் போராட்டம், மாற்றத்திற்கு ஏங்கும் சுரண்டப்படுகின்ற பெரும்பான்மையினருக்கும் இன்றுள்ள நிலைமையை மாற்றமின்றி பாதுகாக்க விரும்பும் சுரண்டும் சிறுபான்மையினருக்கும் இடையிலானதாகும். அந்தப் போராட்டமானது, மிகச் சில மூர்க்கத்தனமான ஏகாதிபத்திய சக்திகளுக்கும் ஏகாதிபத்திய மேலாதிக்கத்தினால் பாதிக்கப்பட்ட பெருவாரியான நாடுகளும் மக்களுக்கும் இடையிலானதாகும்.

சமுதாயத்தின் எல்லா உறுப்பினர்களுடைய கருத்துரிமையைக் கட்டிக் காப்பதற்கும், அது எந்த வகையிலும் யாராலும் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்யவும் கூடிய ஒரு அரசிற்காக, நம் நாட்டில் போராட்டம் நடக்கிறது. மக்கள் கட்சிகளை அதிகாரத்தில் அமர்த்துவதற்கு பதிலாக, கட்சிகள் மக்களை அதிகாரத்தில் வைத்திருப்பதற்கான ஒரு அரசியல் வழிமுறைகளுக்கான போராட்டம் நடைபெறுகிறது. தங்களின் கைகளில் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு நம் நாட்டின் கடுமையாக உழைக்கும் மக்கள், எல்லோருக்கும் வளமையை உறுதி செய்யும் வகையில் பொருளாதாரத்தை மாற்றியமைக்க முடியும்.

ஏகாதிபத்திய போர்களுக்கு எதிராகவும், சுரண்டலைத் தீவிரப்படுத்துவதற்கு எதிராகவும், “சிக்கன நடவடிக்கை” என்ற பெயரில் சமூகத் திட்டங்களுக்கான செலவுகளை வெட்டிக் குறைப்பதற்கு எதிராகவும், பிரித்தன் தொழிலாளி வர்க்கம் தொடுத்து வரும் போராட்டத்தில் இந்தியத் தொழிலாளர்களும் ஒரு அங்கமாவர். இந்திய தொழிலாளி வர்க்கமும் பெருவாரியான மக்களும் தங்கள் வாழ்வாதாரம் மற்றும் உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு எதிராக இந்தியாவில் தொடுத்து வரும் போராட்டத்திலும் நாங்கள் ஒரு அங்கமே. இரு நாட்டு முதலாளிகளின் குற்றவியலான திட்டங்களை முறியடிப்பதற்கு, இரண்டு நாட்டு தொழிலாளர்கள் மற்றும் மக்களின் ஒற்றுமை மிகவும் அவசியமாகும்.

இரு நாட்டு உழைக்கும் மக்களின் உரிமைகளுக்கும் நலன்களுக்கும் எதிரான நோக்கம் கொண்ட, இந்திய மற்றும் பிரித்தனின் முதலாளிகளிடையே உள்ள பிற்போக்குத்தனமான கூட்டணியை எதிர்ப்பதற்காக, பிரித்தனிலுள்ள எல்லா இந்திய தொழிலாளர்களையும், இந்திய தொழிலாளர்கள் அசோசியேசன் கூவி அழைக்கிறது.

உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுவீர் ! 

Pin It