கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

வடலூர் வள்ளலாரைப் பாருங்கள்!

வண்ணச்சரபம் தண்டபாணியைக் காணுங்கள்!

சோழ மன்னர்கள் இந்துமாக் கடலைக் கடந்து பல நாடுகளுக்குக் கப்பலைச் செலுத்திய போது, நேற்றுவரை நம்மை ஆண்ட வெள்ளையன், தேம்ஸ் ஆற்றங்கரையில் தூண்டிலில் மீன் பிடித்துக் கொண்டி ருந்தான். இது கி.பி.900, 1000 வாக்கில்.

ஆனால், கி.பி.1600இல் இந்தியாவில் ஆங்கிலேயன் அடியெடுத்து வைத்தான். அப்போது இங்கே துப்பாக்கி இல்லை.

சேலம் கஞ்சமலையிலும், நெல்லை ஆதிச்ச நல் லூரிலும் இயங்கிய இரும்பு உலைகளை நாமே மூடி விட்டோம்.

நம் ஊர் இரும்பு மூலத்தாதுவை இங்கிலாந்துக்கு ஏற்றிக்கொண்டுபோய், இரும்புத் தூண்களையும், இரும்புத் தண்டவாளங்களையும் அங்கே செய்து, இங்கே இறக்குமதி செய்தான். நிலக்கடலை, பருத்தி எல்லாவற்றையும் ஏற்றிப் போய், எண்ணெயாகவும், கிளாஸ்கோ மல்துணியாகவும் இங்கே இறக்குமதி செய்து கொள்ளை இலாபம் குவித்தான். உழவாரம் போட்டு இந்நாட்டைச் சுரண்டினான்.

இதனால், இந்தியர்கள் பசி பட்டினியால் செத்தார் கள். 1875-76இல், தாதுப் பஞ்சம் தலைவிரித்தாடியது.

செந்நெறியினையும், பொது நெறியையும் 1965க்குப் பிறகு பாடிய வடலூர் வள்ளலார், (1823-1874),

அக்கொடியவனான வெள்ளையனை எதிர்த்து -

“கருணையிலா ஆட்சி கடுகி ஒழிக

அருள் நயத்த நன் மார்க்கர் ஆள்க!”

எனக் கண்டனக்குரல் எழுப்பினார்!

“அவர் ஒரு மருளாளர் அன்று” என, வெள்ளைக் கார நீதிபதி தீர்ப்புச் சொன்னபோது, தமிழ் இலக் கணப்புலி யாழ்ப்பாண ஆறுமுக நாவலர், தம் ஆண வத்தை மறந்து, வாய்மூடி மௌனியானார். பார்ப்ப னர் ஓடி மறைந்தனர்.

எழுத்தறிவே இல்லாத இந்தியருக்குக் கல்வி கற்பிக்கும் மொழியாக - ஆட்சி மொழியாக ஆங்கிலத் தைத் திணித்து, தமிழையும் மற்ற இந்திய மொழி களையும் முடப்படுத்தினான், வெள்ளையன்.

அதை எதிர்த்து எழுந்த, வண்ணச் சரபம் தண்ட பாணி சாமிகள் (1839-1898) என்கிற சிவனடியார், “ஆங்கிலீயர் அந்தாதி” என்னும் கண்டன நூலை எழுதி, ஒவ்வொரு பாடலையும், ‘ஆங்கிலம் ஒழிக!’ என முடித்தார்; உணர்வூட்டினார்.

அதை எதிர்த்து வெள்ளையன் வாய்திறக்கவில்லை. பார்ப்பான் வேடிக்கை பார்த்தான்; தமிழன் அதை அறியும் திராணியற்றவனாக இருந்தான்.

வடலூர் வள்ளலாரும், வண்ணச் சரபம் அடி களாரும் நல்ல தொடர்பில் இருந்தனர். நிற்க.

“கொக்கு பறக்குதடி பாப்பா!

வெள்ளைக் கொக்கு பறக்குதடி பாப்பா!”

என நாடக மேடை தோறும் முழங்கினார், இசைப் பேரறிஞர் - நாடக மேதை விசுவநாததாஸ்.

கொக்கு, வெள்ளை நிறம்தான்.

“வெள்ளைக் கொக்கு” என்பது வெள்ளைக்காரனை - இந்திய மீன்களைக் கொத்தும் வெள்ளைக்காரனை - இந்தியரின் எதிரியை அடையாளப்படுத்தி, அவனை விரட்டியடிக்க வேண்டும் என்ற ஆவேசத்தை எல்லாப் பாமரத் தமிழர்களுக்கும் ஊட்டினார், அந்நாடக மேதை.

அவர்களில் எல்லோரையும் வெள்ளையன் தொட வில்லை. கைது செய்யவில்லை; சிறைப்படுத்தவில்லை.

அவர்கள் சிந்தாந்தப் போராளிகள் - சித்தாந்தத் தை விதைத்தவர்கள்.

1940-1960 களில், சங்கர் என்கிற கிண்டல் ஓவியக் காரர், அவருடைய “சங்கர் வார” இதழில் (Shankar’s Weekly) வெள்ளைக்கார மௌண்ட் பேட்டன் தொடங்கி - காஷ்மீரிப் பண்டிதர் நேரு, இராசாசி, ஈ.வெ.ரா. என, மிக மிக உயர்ந்த பதவிகளிலிருந்தவர்களையெல்லாம் - மட்டு, மரியாதை பார்க்காமல், கேலிச் சித்திரங் களைத் தீட்டி வெளியிடுவார்.

அவற்றைப் படித்து, கேலிக்கு உள்ளானவர்களும் சிரிப்பார்கள்; படித்த - படிக்கத் தெரியாத பாமரர்களும் சிரிப்பார்கள். பாடம் கற்பார்கள்.

அப்படிப்பட்ட சித்தாந்த விளக்க - சித்தாந் தப் பரப்புரைப் பாடகர்தான், நம் மருதாண்டக் குறிச்சி சிவதாசு என்கிற கோவன்.

அவர் ம.க.இ.க. என்கிற மாவோ இயக்கக் கொள்கைப் பரப்புக் கவிஞர். மத்திய-மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், வேளாண்குடிகள், ஆலைத் தொழிலாளர் களை உள்ளடக்கிய கொள்கைப் பரப்பு அமைப்பு - ம.க.இ.க.

அவ்வமைப்பைச் சார்ந்த கோவன் பாடியதுதான் என்ன?

“ஊருக்கு ஊரு சாராயம்,

தள்ளாடுது தமிழகம்...”

எனத் தொடங்கும் பாடல் ஒன்று.

“ஊத்திக் கொடுத்த உத்தமி,

போயசில் உல்லாசம்”

எனத் தொடங்கும் பாடல் இன்னொன்று.

இவற்றில் எது பொய்?

எது வன்முறையைத் தூண்டுவது?

இவற்றில் எந்த தேசத்துக்கு, என்ன மாதிரி துரோகம் அடங்கியிருக்கிறது?

இன்றைய முதல்வருக்கு, இதனால் என்ன மானக்குறைவு?

அப்படி ஒன்றுமே இல்லையே!

தீய நோக்கம் கொண்ட கருத்து ஒன்றுமே இல்லாத - உண்மைக் கருத்தைக் கூறுகிற, கருத்துரிமை ஒவ்வொரு தமிழ்க் குடிமகனுக்கும் உண்டு.

ஏன்?

1972-1974இல் அன்றாடம் ரூ.100 சம்பாதித்தவன், 50 ரூபாய்க்கு சாராயம், 10 ரூபாய்க்கு சுண்டல் - மிச்சம் 40 ரூபாவுடன் வீட்டுக்குப் போனான். குழந் தைகள் அரைப் பட்டினி, மனைவி முழுப் பட்டினி. எதிர்த்துக் கேட்கிற மனைவிகளுக்கு அடி, உதை.

இது, தி.மு.க. ஆட்சிக்காலம்.

1984இல் தொடங்கி, 2014-2015இல், குறைந்த நாள் கூலி ரூ.400; ஏறின கூலி 600 சம்பாதிக்கிற வன் - 200 ரூபாய்க்கு சாராயம், 60-100 ரூபாய்க்கு கறிச் சோறு - 100 ரூபா திரைப்படச் செலவு, 20 ரூபா பேருந்துக்குப் போக, மீதி 100, 150 ரூபா, 250 ரூபா வுடன் வீட்டுக்குப் போகிறான்.

இதில்தான் பங்கீட்டுக் கடை அரிசிச் சோறு. புளிரசம் - ஊறுகாய் சாப்பாடு - 5 பேருக்கு.

இது அ.தி.மு.க. ஆட்சியில்.

தமிழ்நாடு, நாடா? காடா? மானம் உள்ள தமிழன். தமிழ்மக்கள் இவை பற்றிக் கவலைப்பட வேண்டாமா?

“மதுவைத் தீண்டாதே!” என்று கட்டளையிட்ட திருவள்ளுவர் பிறந்த தமிழ்நாட்டின் அரசுக்கு, மது விற்று வரவுதான் - ரூ.24,000 கோடிதான் முதலாவது வருவாய் இனம்!

அதிகாரிகளும் அமைச்சர்களும் பெற்ற கைக்கூலி போக, கணக்கில் காட்டப்பட்ட வணிக வரி தான் இரண்டாவது வருவாய் இனம்!

பொய்களையே எழுதி - எவன் சொத்தை எவன் பேரில் வேண்டுமானாலும் ஆவணப் பதிவு செய்கிற பணங்காய்ச்சிப் பதிவுத் துறை அதிகாரிகள் திரட்டும் வருமானம் மூன்றாவது வருவாய் இனம்!

உருப்படுமா தமிழகம்?

உருப்படுவார்களா தமிழர்கள்?

தமிழகமும் தமிழரும் உருப்பட சாராயம் காய்ச்சு வதையும், சாராயம் விற்பதையும் ஒழிப்போம், வாரீர்!

சாராயம் குடிப்போரைத் தாயே - மனைவியே - பெற்ற மக்களே வெறுக்கச் செய்து, குடிகாரரைத் திருத்து வோம், வாரீர்!