இந்திய அரசியலில் இருந்து நடிகர்களையும், அரசியல்வாதிகளையும் எப்பொழுதுமே பிரிக்க முடியாது. இங்கே நடிகர்கள் தான் அரசியல்வாதிகளாக இருக்கின்றார்கள்; அரசியல்வாதிகள் எல்லாம் பெரிய நடிகர்களாக இருக்கின்றார்கள். அது மட்டும் அல்லாமல் கருப்புப் பணத்திற்கும் அரசியல்வாதிகளுக்கும், நடிகர்களுக்கும் நேரடியாக ஒரு இறுக்கமான பிணைப்பு இருக்கின்றது. அந்த பிணைப்பின் கண்ணியை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சாதாரணமான ஒன்றல்ல. கருப்பை வெள்ளையாக மாற்ற முடியும், வெள்ளையை கருப்பாக மாற்ற முடியும் உங்களுக்குத் திறமை இருந்தால் கலர்கலராக அதைக் காட்ட முடியும். ஆனால் இந்தியா போன்ற ஒரு வறுமை மிகுந்த நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிப்பதில் அந்த மக்களின் போராட்ட பங்களிப்பைப் பார்த்தோம் என்றால், சொல்லிக்கொள்ளும்படி இல்லை அல்லது சுத்தமாகவே இல்லை என்று சொல்லிவிட முடியும். கருப்பு பணத்தை ஒழிக்க வேண்டும் என மெழுகுவர்த்திகளோடு அன்னா ஹசாரே பின்னால் போருக்கு அணிதிரண்டவர்களும், ஆன்மீக தொழிலதிபர் ராம்தேவின் பின்னால் அணிதிரண்டவர்களும் நடுத்தர வர்க்க மேட்டுக்குடி மக்கள் தான். அவர்கள் தான் கீழ்தட்டு மக்களைவிட கூடுதலாக ஈட்டும் வருவாயில் பணக்கார மேல்தட்டு மக்களை போல வாழ முடியவில்லையே என தினம் தினம் கறுவிக் கொள்பவர்கள்.
கருப்புப் பணத்தை ஒழிக்கும் மந்திரம் தனக்கு மட்டுமே தெரியும் என இந்திய நடுத்தர வர்க்க மக்களை நம்ப வைத்தார் மோடி. அப்படி உலகில் பிற நாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ள கருப்புப் பணத்தை மீட்டு ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கிலும் சுமார் 15 லட்சம் வரை போடப்படும் என பல நாட்கள் பட்டினி கிடந்தவனின் முன்னால் லெக்பீசைக் காட்டுவது போன்று மோடி காட்டினார். லட்சத்திற்கு எத்தனை சைபர் என்பதைக்கூட அறியாத ஏழை மக்களும் மாதக் கடைசியில் ஏடிஎம்மில் ஜீரோ பேலன்சை மெயின்டைன் பண்ணும் நமது நடுத்தர வர்க்கத்துக்காரர்களும் மோடிக்கு ஓட்டு மட்டும் போட்டால் போதும் அத்தோடு இந்த உலகத்தில் தனக்கு உள்ள அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வந்துவிடும் என நம்பி ஓட்டு போட்டனர்.
ஆனால் மோடி பதவியேற்ற ஒரு சில மாதங்களிலேயே ஓட்டுபோட்ட கையால் வாயிலும் வயிற்றிலும் அந்த மக்களை அடித்துக் கொண்டு அழ வைத்தார் மோடி. ரூபாய் மதிப்பு சரிவு, வேலையிழப்பு, விலைவாசி உயர்வு என மோடி ஒவ்வொரு ஆப்பாக வைத்து அடித்துக் கொண்டே இருந்தார். நாடு முழுவதும் அதற்குப் பிறகு வந்த பல சட்டமன்றத் தேர்தல்களில் பிஜேபியை மக்கள் மண்ணைக் கவ்வ வைத்தார்கள். எதையாவது செய்து தனது புகழை மீட்டெடுக்க நினைத்த மோடியிடம் யாரோ ஒரே நாளில் எப்படி ஹீரோ ஆவது என்பதற்கு இந்த அறிய யோசனையை சொல்லி இருக்கின்றார்கள். அதிரடியாக களத்திலே இறங்கி போட்டுத் தள்ளுவதில் கைதேர்ந்தவரான மோடி 08/11/2016 அன்று திடீரென்று ஊடகங்களில் இரவு 8 மணிக்குத் தோன்றி 500 ரூபாய் நோட்டுக்களும் 1000 ரூபாய் நோட்டுக்களும் இரவு 12 மணிக்கு மேல் செல்லாது என அறிவித்தார். இதன் மூலம் கருப்புப் பணம், ஊழல் என அனைத்திற்கும் முடிவு கட்டப்படும் என தனது 50 ( 56 என்பது பொய்) இஞ்சி மார்பை விரித்தபடி பெருமையாகப் பேசினார்.
நாடே அல்லோகலப்பட்டுக் கொண்டிருக்கின்றது. கையில் வைத்திருந்த ஒரு சில 500 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாமல் சாமானிய மக்கள் பெரிய துயரத்திற்கு ஆளானார்கள். சரி 500 ரூபாய் நோட்டுக்களையும் 1000 ரூபாய் நோட்டுக்களையும் ஒழித்துவிட்டால் கருப்புப் பணம் ஒழிந்துவிடும் என சொல்லும் மோடி, எதற்காக 2000 ரூபாய் நோட்டுக்களை கொண்டு வந்தார் என சிறுவர்கள் கூட கேள்வி கேட்கின்றனர். ஒரு வேளை மோடியின் ராமராஜ்ஜியத்தில் 1000 ரூபாய் நோட்டுக்களைவிட 2000 ரூபாய் நோட்டுக்கள் மதிப்பு குறைவாக இருக்கும் என்று நினைக்கின்றேன்!. ஆனால் பிரச்சினையின் சாராம்சத்தை புரிந்து கொள்ள திராணியற்ற மோடியின் பக்தர்கள் வாட்ஸ்அப், பேஸ்புக் போன்றவற்றில் இந்தியா இனி வல்லரசு ஆகப்போவதாக விதவிதமாக துணுக்குகளை எழுதிக் குவித்து வருகின்றார்கள். ரஜினி, கமல் போன்ற சினிமா கழிசடைகள் முந்திக்கொண்டு வந்து வாழ்த்து தெரிவிக்கின்றார்கள். ஆனால் இதனால் சாமானிய மக்களுக்கு என்ன பயன் என்று எந்தப் பொருளாதார மேதைகளும் சொல்ல மறுக்கின்றார்கள்.
உண்மையை சொல்லப்போனால் இதனால் சாமானிய மக்களுக்கு 5 பைசாவிற்குக் கூட பிரஜோசனம் இல்லை என்பதுதான். சட்டப்படி முதலாளிகள் தொழிலாளர்களை ஒட்ட சுரண்டி கொள்ளையடித்த பணத்தை நேர்மையாக கணக்கு காட்டி பெரும் கோடீஸ்வரர்களாய் மாறிக் கொள்ளலாம். அதில் மோடிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. தொழிலாளர்களுக்கு மிக மலிவான ஊதியத்தைக் கொடுத்து அவர்களை வாழ்நாள் பூராவும் அடிமைகளாகவே நடத்தும் முதலாளிகளின் மீதான கோபம் அல்ல மோடியின் செயல். அப்படி கொள்ளையடித்த பணத்தை ஏன் கணக்கு காட்டவில்லை என்பதுதான் மோடியின் கோபம். (அதுவும் கூட வரையறைக்கு உட்பட்டதுதான்) ஒரு சில பணக்கரார்களிடம் இருக்கும் கணக்குக் காட்டாத கருப்புப் பணம் இதன் மூலம் ஒழியும் என்று சொல்வது வேடிக்கையானது. மோடி அறிவிப்பை வெளியிட்ட அன்று சென்னை போன்ற பெரு நகரங்களில் இரவு 12 மணியையும் தாண்டி தங்க நகைக் கடைகளில் குவிந்ததிருந்த பணக்காரர்களின் கூட்டத்தைப் பார்த்தாலே இந்த உண்மையைப் புரிந்துகொள்ள முடியும். பெரும்பாலான அரசியல்வாதிகளும், தொழில் அதிபர்களும் தங்களிடம் உள்ள கணக்கில் காட்டாத பணத்தை எல்லாம் அசையா சொத்துக்களாக அதாவது நிலங்களாக, தொழிற்சாலைகளாக, கல்வி நிறுவனங்களாக, தங்கங்களாக, வைரங்களாக இன்னும் பங்குகளாக மாற்றி வைத்திருக்கின்றார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். நீங்கள் ஜெயலலிதா, சசிகலா கும்பலிடம் உள்ள சொத்துக்களை எல்லாம் கணக்கிட்டாலே அது சில ஆயிரம் கோடிகளைத் தாண்டும். இவர்கள் மட்டும் அல்ல, கருணாநிதி, விஜயகாந்த், ராமதாசு, வைகோ போன்ற எல்லோரும் தனது சொத்துக்களை அப்படித்தான் மாற்றி வைத்திருக்கின்றார்கள். அதனால் மோடி ஒழிப்பதாய் சொல்வது இல்லாத கருப்புப் பணத்தைத்தான்.
இன்னும் சில அதிமேதாவிகள் வெளிநாடுகளில் பதுக்கி வைத்துள்ள கருப்புப்பணத்தை இதன் மூலம் செல்லா காசாக ஆக்கிவிட முடியும் என்று கருத்து சொல்லுகின்றார்கள். வெளிநாடுகளில் ஏதோ பேங் லாக்கர்களில் அந்தப் பணம் பத்திரமாக இருப்பது போன்று இருக்கின்றது அவர்களின் பேச்சு. வெளிநாடுகளில் பதுக்கி வைத்திருப்பதாய் சொல்லப்படும் கருப்புப் பணம் அங்கு உண்மையில் இல்லை என்பது இவர்களுக்கு இன்னும் தெரியவில்லை. இந்தியாவில் இருந்து வரி இல்லா சொர்க்கங்களில் முதலீடு செய்யப்படும் கருப்புப் பணம் திரும்ப பார்டிசிபேட்டரி நோட் என்ற முறை மூலம் திரும்ப அது இந்தியாவிலேயே முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது. இந்திய பங்குச்சந்தையில் புழங்கும் பணத்தில் பெரும்பகுதி இந்தப் பணம்தான் என்பது இங்கிருக்கும் எல்லா பொருளாதார அதிமேதாவிகளுக்கும் தெரியும். அப்படி இருக்கும் போது மோடியின் இந்த அறிவிப்பால் என்ன நடந்துவிடப் போகின்றது? பங்குச்சந்தை, பார்டிசிபேட்டரி நோட் இதெல்லாம் எதுவும் தெரியாமல் ஏன் வங்கிக்கணக்குக் கூட வைத்திருக்காத நம்ம ஊரில் உள்ள சாதாரண வியாபாரிகள் முதல் வீட்டில் தனது பிற்கால தேவைக்காக சிறுக, சிறுக பணம் சேர்ந்து வைத்திருந்த நபர்கள் வரை இப்போது மொத்தமாக பாதிக்கப்படப் போகின்றார்கள். தங்களது எதிர்கால வாழ்வு இப்படி மோடியால் அஸ்தமனம் ஆகும் என்று அவர்கள் கனவில்கூட எதிர்ப்பார்த்து இருக்க மாட்டார்கள்.
அதுமட்டும் அல்லாமல் பொருளாதாரத்தில் இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். அனைத்து நுகர்வு பொருட்களும் வாங்குவதற்குப் போதிய ஆள் இல்லாமல் ஏற்கனவே திணறிக்கொண்டு இருக்கும் சந்தையை மிகச்சுருங்க வைக்கும். அதன் நீட்சியாக பெரும் வேலையிழப்புகள் உண்டாகும். இது இன்னும் கூடுதலான சந்தை சீரழிவிற்கு இட்டுச்செல்லும். ஒரளவு வசதி படைத்த மக்கள் இதில் இருந்து தப்பித்துக் கொள்வார்கள். சாதாரண, நடுத்தர வர்க்க மக்கள் விழிபிதுங்கி நிற்கப் போகின்றார்கள். கருப்புப் பணத்தை தடுப்பதற்கும், ஊழலை ஒழிப்பதற்கும், கள்ளப் பணத்தை கண்டுபிடிப்பதற்கும் ஏற்கனவே இருக்கும் அனைத்து அமைப்புகளின் தோல்வியே இது காட்டுகின்றது. மீண்டும் இதுபோன்ற கருப்புப் பணம் உருவாகாமல் தடுக்க முடியும் என்றோ, பாகிஸ்தான் தீவிரவாதிகள் கள்ளப் பணத்தை இந்தியாவிற்குள் கொண்டுவராமல் தடுக்க முடியும் என்றோ ஊழலை ஒழிக்க முடியும் என்றோ மோடியால் உறுதியாக சொல்ல முடியாது. ஏனென்றால் இது எல்லாம் திரும்பவும் நடப்பதற்கான 100 சதவீத வாய்ப்புகள் உள்ளன. அப்போது மோடி என்ன செய்வார் திரும்பவும் புதிய 500 ரூபாய் நோட்டுக்களையும், 2000 ரூபாய் நோட்டுக்களையும் செல்லாது என அறிவிப்பாரா?
மக்களுக்கான அரசு அமைப்புகள் அனைத்தும் இன்று மக்களுக்கானதாக அல்லாமல் கார்ப்ரேட்களின் நலன் சார்ந்து இயங்கும் குற்றக் கும்பலாக மாறிவிட்ட நிலையில், அதை மாற்றியமைக்கத் திராணியற்ற மோடி அரசு இதுபோன்ற செயல்களால் தன்னை நேர்மையாக காட்டிக் கொள்ள முற்படுகின்றது. சமவேலைக்குச் சம ஊதியம் தரவேண்டும் என உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைபடுத்தாமல் சண்டித்தனம் செய்யும் முதலாளிகளைத் தண்டிக்கத் திராணியற்ற மோடி அந்த முதலாளிகளின் எடுபிடியாக இருக்கும் வரை கருப்பு பணம் உற்பத்தியாவதையும், ஊழலையும் ஒருபோதும் ஒழிக்க முடியாது. மோடி தன்னுடைய இந்த அறிவிப்பால் நல்ல முதலாளிகளை உருவாக்க நினைக்கலாம். ஆனால் முதலாளிகளில் நல்ல முதலாளி, கெட்ட முதலாளி என்றெல்லாம் எதுவும் இல்லை. முதலாளி என்பவனே அயோக்கியன்தான். உழைப்பை சுரண்டாமல், கூலியை கொள்ளையடிக்காமல் ஒருவனால் முதலாளியாகவே இருக்க முடியாது என்பதுதான் பொருளாதாரத்தின் அடிப்படை. இந்த எளிய உண்மையைக்கூட புரிந்துகொள்ளத் திராணியற்ற மோடியின் ஜால்ராக்கள் ஆகா ஓகோ என மோடியை புகழ்ந்து தள்ளிக் கொண்டு இருக்கின்றார்கள்.
நாம் கடைசியாக அவர்களிடம் கேட்கும் கேள்வி இதுதான். மோடியின் இந்த அறிவிப்பால் உங்களது சம்பளம் உயர்ந்துவிடப் போகின்றதா?, விலைவாசி குறைந்துவிடப் போகின்றதா? படித்து முடித்த அனைவருக்கும் வேலை கிடைத்து விடப்போகின்றதா? இல்லை பெருமுதலாளிகளால் இந்தியாவின் வளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்பட்டு விடுமா? ஆம் என்று நினைத்தால் மோடியைக் கொண்டாடுங்கள்! இல்லை என்று நினைத்தால் காறித் துப்புவதற்குத் தயாராகுங்கள்!!
- செ.கார்கி