மோடியின் ஆட்சி எவ்வளவு கேவலமாக பெருமுதலாளிகளுக்கு ஆதரவாக செயல்படுகின்றது என்பதற்கு இதைவிட ஒரு சிறந்த உதாரணத்தை இனி நம்மால் காட்ட முடியாது. மோடி என்னதான் தன்னை  நல்லவன் என்று காட்டிக் கொள்ள சில வெற்று திட்டங்களை அவ்வப்போது அறிவித்து இந்து வானரங்களை உற்சாகப்படுத்தினாலும் இந்திய பொதுஜனங்கள் மத்தியில் காவியின் சாயம் வெளுத்துக் கொண்டே தான் இருக்கின்றது. டிஜிட்டல் இந்தியா, டிஜிட்டல் விவசாயம், டிஜிட்டல் சந்தை என மோடி டிஜிட்டலில் படம் ஓட்டிக் கொண்டிருக்க, இப்போது இந்திய மக்கள் புதிதாக டிஜிட்டல் திருடர்களைப் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

   vijay mallyaஏன் இதை சொல்கின்றேன் என்றால் இந்த டிஜிட்டல் திருடர்கள் பழங்கால திருடர்களைப் போல திருடிவிட்டு மாறுவேடத்தில் ஒளிந்து ஒளிந்து காடுகளிலும், மலைகளிலும் பதுங்கி வாழ்பவர்கள் அல்ல. இவர்கள் திருடிய பணத்தை வைத்து வெளிப்படையாக மக்கள் முன்னாலேயே தங்களது படோடபத்தைக் காட்டுகின்றார்கள். மக்களே இவர்களைத் திருடர்கள் என்பதை மறந்து தொழில் சாம்ராஜியங்களின் சக்கரவர்த்திகளாகப் பார்க்கும் அளவிற்கு அவர்களது செயல்பாடுகள் இருக்கின்றன. இது போன்ற கொடுமைகள் எல்லாம் பல நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னால் இந்தியாவை அரசாளும் ஒரு ‘இந்து மன்னனின்’ ஆட்சியில் நடைபெறுகின்றது என்பதுதான் பேரவலம் ஆகும். அதை விட பேரவலம் அந்தத் திருடன் அந்த இந்து மன்னனின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பிவிட்டான் என்பதாகும்.

   விஜய் மல்லையா வெளிநாட்டிற்குத் தப்பிச் சென்றுவிட்டார் என்பதும் அதை மோடி அரசு அனுமதித்ததும் இந்திய மக்களின் மனங்களில் குறிப்பாக நடுத்தர வர்க்கத்தின் மனங்களில் மோடி என்ற இந்து மன்னனின் பிம்பத்தை இனி மீட்டெடுக்க முடியாத அளவிற்கு உடைத்துப் போட்டிருக்கின்றது. மோடி என்ற புனிதனை விட்டால்  இந்தியாவைக் காப்பாற்ற இனி யாராலும் முடியாது என உடலெல்லாம் வாயாக மாற்றிப் பேசிய அற்பவாதக் கும்பல் மோடியின்  உட்கருவிசையில் இருந்து பீய்த்துக் கொண்டு அதன் சுற்றுவட்டப் பாதையையே காலி செய்துவிட்டு ஓடிவிட்டது. மோடிக்காக தயாரிக்கப்பட்ட பல வகையான விளம்பரப் பலகைகள் தூக்குவார்  யாருமின்றி அநாதையாகக் கிடக்கின்றன.

   இந்திய மக்களின் வரிப்பணத்தை மூலதனமாகக் கொண்டு இயங்கும் இந்திய வங்கிகள் எப்போதுமே இந்திய பெரும்பான்மை உழைக்கும் மக்களின் நலன்களைப் பிரதிநிதித்துவம் செய்தது கிடையாது. அது எப்போதுமே பெருமுதலாளிகளின் வளர்ச்சியை மட்டுமே தங்களுடைய ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவை. சாமானிய மக்கள் வங்கிக்கடன் கேட்டு செல்லும் போது அவர்களை நாயைவிடக் கேவலமாக வங்கிகள் நடத்துவதும், அதுவே பெருமுதலாளிகள் கடன் கேட்கும் போது தனக்கான கமிசனை உறுதிப்படுத்திக் கொண்டு கேட்கும் தொகையை உடனே கொடுப்பதும் வழக்கமாக நடக்கின்றது. இப்படி இந்திய பெருமுதலாளிகளுக்கு வங்கிகள் கொடுத்து, வராமல் இருக்கும் கடன் மட்டும் ஏறக்குறைய 4 லட்சம் கோடிகள் என்கின்றார்கள்.

  சாமானிய மக்கள் ஒரிரு கடன் தவணைகள் கட்டாமல் போனால் அவர்களின் வீடுகளையும் , நகைகளையும் ஏலத்தில் விடும் வங்கிகள் அதுவே பெருமுதலாளிகள் கட்டாமல் போனால், அதை தள்ளுபடி செய்கின்றன. கடந்த 2012 முதல் 2015 வரை இப்படி ரூ 1.14 லட்சம் கோடிகள் வாராக்கடன் பொதுத்துறை வங்கிகளால் தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன. மொத்த வாராக்கடனில் 73 சதவீதம் ரூ 1 கோடிக்கு மேல் பெற்றவர்களின் வாராக்கடன்களாகும். இப்படி கோடிகளில் வாங்கி கொடுக்காமல் ஏமாற்றும் நபர்கள் மீது தனது கருணைப்பார்வையை செலுத்தும் பொதுத்துறை வங்கிகள் விவசாயத்திற்கும், கல்விக்கும், சிறுதொழிலுக்குமென  சில ஆயிரம் முதல் சில லட்சங்கள் கடன் வாங்கி அதில் ஒரிரு தவணைகள் செலுத்த முடியாமல் போனால் அவர்களது பெயர்களைப் பத்திரிக்கையில் விளம்பரம் செய்வது தொடங்கி கூலிப்படையை வைத்து அடித்து உதைப்பது வரை அனைத்தையும் செய்கின்றன.

    பெரும்பலான பொதுத்துறை வங்கிகளின் நிர்வாகிகள் கிரிமினல் பேர்வழிகளாகவே உள்ளனர். அவர்கள் உள்ளூர் கந்துவட்டிக் கும்பலுடனும், பெரும் முதலாளிகளுடனும் மறைமுகமாக தொடர்புகளை வைத்துக் கொண்டு மக்களின் பணத்தைத் தங்கள் விரும்பம் போல அரசுக்கே தெரியாமல் வட்டிக்கு விடுவதிலும், ஊக வர்த்தகத்திலும் முதலீடு செய்வதிலும் கவனம் செலுத்துகின்றனர். இதன்மூலம் வேலைக்குச் சேர்ந்த குறைந்த காலத்திலேயே தனியாக வங்கி தொடங்கும் அளவுக்கு தங்களை வளர்த்துக் கொள்கின்றார்கள். அந்தத் திமிர்தான் சாமானிய மக்களை கேவலப்படுத்தச் சொல்லி அவர்களைத் தூண்டுவதும், முதலாளிகளைப் பார்த்தால் பல் இளிக்கச் சொல்லி அவர்களை உற்சாகப்படுத்துவதும் ஆகும்.

   இந்தியப் பொதுத்துறை வங்கிகள் என்பது இந்தியப் பெருமுதலாளிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டே உருவாக்கப்பட்ட ஒன்றாகும். அது எப்போதுமே சுயேட்சையான அமைப்பாக செயல்பட்டது கிடையாது. உங்களுக்கு அரசியல் செல்வாக்கு இருந்தால் எத்தனை  ஆயிரம் கோடிகள் வேண்டும் என்றாலும் வாங்கிக் கொள்ளலாம். மோடி ஆஸ்திரேலியப் பயணத்தின் போது அதானியை உடன் அழைத்துச் சென்றதையும், அவருக்கு  இந்திய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி 6200 கோடி கடன் வழங்கியதையும் பார்த்து நாடே காறித் துப்பியதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். இப்படி அதானிக்காக வால் ஆட்டுவதை பெருமையாக நினைக்கும் மோடியும் , பாஜகவும் விவசாயிகள் கடன் சுமைதாங்காமல் தற்கொலை செய்துகொண்டபோது “வறட்சி காரணமாக தங்கள் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் விவசாயிகளின் தற்கொலை  தற்போது ஃபேஷன் மற்றும் டிரெண்டாகிவிட்டது” என்று கொச்சைப்படுத்தியது.

 இவர்கள் ஆட்சி செய்யும் மகாராஷ்டிரா மாநிலம் இந்தியாவில் விவசாயிகள் அதிகம் தற்கொலை செய்து கொள்ளும் மாநிலமாக உள்ளது. அங்கு தினம்  7 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டு இறக்கின்றார்கள். 2014 ஆண்டு மட்டும் அங்கு 1981 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு இறந்துள்ளனர். உலக அளவில் நடைபெறும் விவசாயிகள் தற்கொலையில் 17 சதவீதம் இந்தியாவிலேயே நடைபெறுகின்றன. இப்படி  இந்திய விவசாயிகளுக்கு வங்கிக்கடன் கொடுக்காமல் அவர்களைக் கந்துவட்டிக் கும்பலின் பிடியிலும் தனியார் நிதி நிறுவனங்களின் பிடியிலும்  சிக்க வைத்துச் சாகடிக்கும் கொலைக்கருவிகளாக வங்கி நிர்வாகிகளும் அவர்களைக் கட்டுப்படுத்தும் இந்திய ஆளும் வர்க்கமும் உள்ளது.

  தஞ்சாவூர் மாவட்டம் , சோழகன்குடிகாடு கிராமத்தில் உள்ள  விவசாயி பாலன் மீது நடத்தப்பட்ட கொலைவெறித் தாக்குதலை நாடே பார்த்தது.  கோட்டக் மகேந்திரா வங்கியில் டிராக்டர் வாங்கிய கடனில் வெறும் இரண்டு தவணைகள் கட்டவில்லை என்பதற்காக அந்த விவசாயியின் டிராக்டரை பறித்துக் கொண்டதோடு அவரை அடித்து உதைத்து காவல் நிலையம் வரை போலீஸ் நாய்கள் இழுத்துச் சென்றதையும் மேற்கொண்டு வழக்கு போடாமல் இருக்க அவரிடம் இருந்து பணம் பறித்ததையும் பார்த்து விவசாயிகள் கொதித்தெழுந்து இருக்கின்றார்கள்.  இதே போல அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே உள்ள ஒரத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அழகர் என்பவர் சோழமண்டலம் ஃபைனான்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி டிராக்டர் வாங்கி இருக்கின்றார். வாங்கிய கடனில் ரூ. 5 லட்சம் கட்டிவிட்டார். ஒரிரு தவணைகள் மட்டுமே கட்டாமல் இருந்துள்ளார். இதனால் நிதிநிறுவன ஆட்கள் அவரின் டிராக்டரை வலுக்கட்டாயமாக பறித்துச் சென்றுள்ளனர். இதனால் மனம் உடைந்த ஆறுமுகம் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டு இறந்துள்ளார்.

  ஒருவேளை அவர்களுக்குப் பொதுத்துறை வங்கிகள் குறைந்த வட்டியில் கடன் வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட துயரச் சம்பவங்கள் நடைபெறாமல் தடுத்திருக்கலாம். ஆனால் அதற்கான வாய்ப்பே இல்லை என்னும் நிலையிலேயே  எப்போதும் இந்திய பொதுத்துறை வங்கிகள் இருக்கின்றன. சாராய முதலாளி விஜய் மல்லையாக்களை நக்கிப் பிழைக்கும் ஆளும்வர்க்கம் ஏழை விவசாயிகளிடம்  மட்டும்  எப்போதும் மூர்க்கத்தனமாகவே நடந்து கொள்கின்றது.

 இந்த முதலாளித்துவ கட்டமைப்பிற்குள் இதற்கான தீர்வுகளை சிலர் முன்வைக்கின்றனர். ஆனால் இந்தக் கட்டமைப்பிற்குள்ளாக செய்யப்பட்ட ஒவ்வொரு சீர்திருத்தமும் பெரும் முதலாளிகளை மேலும் கொழுக்க வைக்க மட்டுமே பயன்பட்டன என்பதுதான் கடந்த கால வரலாறு. எனவே விவசாயிகள் தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு பெரும்சக்தியாக ஒன்றுதிரண்டு தமக்கான விடுதலையை இந்தக் கட்டமைப்பை மாற்றி அமைப்பதன் மூலமாகவே உருவாக்கிக்கொள்ள முடியும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். அதுவே சிறந்த ஒன்றாகவும் இருக்கும். 

- செ.கார்கி

Pin It