அரசல் வெளிநாடு சென்றிருந்த நீதிக்கட்சியின் தலைவர் பொப்பிலி அவர்கள், போராட்டம் உச்சக் கட்டத்தில் நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் சென்னைக்கு வந்து சேர்ந்தார். இந்தி எதிர்ப்புப் போராட்டம் குறித்து அவரும் ஒரு நீண்ட அறிக்கை வெளியிட்டிருந்தார். இதுவரை எந்த நூலிலும் அந்த அறிக்கை பதிவாகாததால் அதையும் முழுமையாக இங்கு வெளியிடுகிறோம்.

பொப்பிலி ராஜா சாஹிப் அறிக்கை

ஜஸ்டிஸ் கட்சித் தலைவர் பொப்பிலி ராஜா ஸாஹி பவர்கள் பின்வருமாறு ஒரு அறிக்கை வெளியிட்டி ருக்கிறார்.

“நான் இந்தியாவுக்குத் திரும்பி வந்ததும் சென்னை மாகாணத்தில் நடைபெறும் கட்டாய இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் பற்றி அபிப்பிராயம் கூறவேண்டு மென்று” பத்திரிகைப் பிரதிநிதிகள் என்னைக் கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால் பிரச்சினையைச் சரியாக ஆராய்ந்து பாராமலும் நிலைமையை முற்றிலும் அறியாமலும் எனது கட்சிப் பிரமுகர்களைக் கலந்து ஆலோசி யாமலும் என் அபிப்பிராயத்தை வெளியிடக் கூடா தென உணர்ந்தேன்.

எனது கட்சி நிருவாகக் கமிட்டிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டுமென்று நினைத்தேன். ஆனால் கூட்டம் கூட்டுவதாக நினைக்கப்பட்ட தேதி பலருக்கு அசௌ கரியமாக இருந்ததினால் இம்மாதத்தில் வேறொரு தேதியில் கூட்டுவதென்று ஒத்தி வைக்கப்பட்டது.

நான் அபிப்பிராயம் தெரிவிக்க வேண்டிய விஷ யங்கள் எத்தனையோ இருந்தாலும் இந்தச் சந்தர்ப் பத்தில் இந்தி விஷயத்தில் என்னுடையவும் என் கட்சிப் பிரமுகர்களுடையவும் அபிப்பிராயங்களையும் மனப் பான்மையையும் தெரிவித்துவிடவேண்டியது அவசிய மென எண்ணி இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

தேசிய ஒற்றுமைக்குப் பொது மொழி தேவையா?

ஒவ்வொரு தேசத்துக்கும் ஒரு பொது பாஷை இருக்க வேண்டுமென்றும் ஒரே பொது பாஷை இருந்தால் தேசிய உணர்ச்சி விருத்தியடைந்து வலுப்பெறுமென்றும் சொல்லப்படுகிறது.

தேசியத்தை வலுப்படுத்தும் அம்சங்களைப் பற்றிய தப்பெண்ணத்தினாலேயே இவ்வாறு கூறப்படுகிறது.

இந்தியா ஒரு பெரிய கண்டம். ஐரோப்பாவிலிருந்து ருஷ்யாவை நீக்கிவிட்டால் இந்தியா ஐரோப்பாவுக்குச் சமமாக இருக்கும்.

ஐரோப்பாவிலே இரண்டு பாஷைகளும் இரண்டு சாதிகளும் உள்ள எத்தனையோ நாடுகள் இருக்கின்றன.

உதாரணமாக பெல்ஜியத் தைச் சொல்லலாம். சுவிட்சர்லாந் திலே மூன்று பாஷைகளும் மூன்று ஜாதிகளும் இருக்கின்றன.

இவ்வண்ணம் பல ஜாதிகளும் பல பாஷைகளும் இருப்பதினால் அத்தேசங்களில் தேசிய உணர்ச்சியில் லையென்றோ, தேசிய ஒற்றுமையில்லையென்றோ கூறிவிட முடியாது.

இந்தியாவிலே பல பாஷைகள் பேசப்படுகின்றன. இங்கிலீஷ் நீங்கலாக உள்ள பாஷைகள் எல்லாம் இந்தியாவில் தோன்றியவைகளே.

எனினும் தமிழ் அல்லது தெலுங்கு பேசுகிற வர்கள் இந்தி அல்லது உருது பேசுகிறவர்களைவிட தேசிய உணர்ச்சியில் குறைந்தவர்கள் என எவரும் கூறமாட்டார்கள்.

நமது தேசத்தின் ஒரு பகுதியிலிருந்து மறுபகுதி களுக்குப் பிரயாணம் செய்யும் போது பல பாஷைகள் பேசுவோரை நாம் சந்திக்கிறோம். எனினும் அரசியல் விஷயங்களில் அவர்கள் எல்லாம் பொதுவாக ஒரே விதமான அபிப்பிராயமுடையவர்களாக இருக்கிறார்கள்.

பல பாஷைகள் ஐக்கிய உணர்ச்சிக்கு முட்டுக்கட் டையாக இருக்கவில்லை. ஒவ்வொரு பாஷை பேசு வோரும் தேசிய அபிவிருத்திக்கு அவர்களாலான உதவி புரிந்தே வருகிறார்கள்.

பொதுமொழி வேண்டுமென்போர் நியாய புத்தியு டையவர்களானால் (அவர்களில் பலர் நியாய புத்தி யுடையவர்கள் என நம்புகிறேன்) என் வாதத்தை ஒப்புக்கொள்ளக் கூடும். எனினும் தமது கட்சிக்கு வேறு காரணம் கூறுகிறார்கள். ஒரு பொது இலட்சியம் அல்லது நோக்கத்திற்காக ஒரு பொது பாஷை வேண்டுமென அவர்கள் கூறுகிறார்கள்.

இங்கிலீஷுக்கு வந்த இழுக்கென்ன?

பொது பாஷை என்பதற்குப் பதிலாக சௌகரிய பாஷை என நான் கூறவிரும்புகிறேன். ஆனால் நமக்கு இப்பொழுதும் இங்கிலீஷ் ஒரு சௌகரியமான பாஷையாகயிருக்கவில்லையா?

வாஸ்தவத்தில் இங்கிலீஷ் ஒரு சர்வதேச பாஷை. வெளியுலகத்துடன் நமக்குத் தொடர்பற்றுப்போகாமல் இருக்கவேண்டுமானால் - மேனாட்டு கலாஞான அறிவை நாம் இழக்காது இருக்க வேண்டுமானால், இங்கிலீஷ் நமக்கு இன்றியமையாத பாஷையே.

நமது அரசியல் சமூகக் கொள்கைகள் எல்லாம் ஆங்கில பாஷா ஞானத்தால் நமது நாட்டு நிலை மைக்குத் தக்கபடி உருப்படுத்தப்பட்டவைகளே.

இந்த நன்மைகள் தேவையில்லையென வைத்துக் கொண்டாலும், இந்தியாவின் பல பகுதியாருக்குத் தெரி யாததாயிருந்தாலும் இந்திய பாஷை என்ற காரணத் தால் ஒரு இந்திய பாஷை பொதுமொழியாக இருக்க வேண்டுமென்று வைத்துக் கொண்டாலும் இந்தி எல்லோராலும் ஒப்புக்கொள்ளக் கூடிய பாஷையாக இருக்குமா?

தேசீயப் பொது பாஷையாக இருக்க வேண்டியது இந்தியா, உருதுவா என்ற பிரச்சினை இன்னும் முடிவு பெறவில்லை. அந்தப் பிரச்சினை இப்பொழுதும் விவா தத்திலேயே இருந்து வருகிறது.

இந்தியை சமஸ்கிருத மயமாக்க வேண்டுமென்ற கிளர்ச்சி வலுப்பெற்று வருகிறது.

அதுபோலவே உருதுவை பார்ஸிமயமாக்க வேண்டு மென்ற கிளர்ச்சியும் உரம்பெற்று வருகிறது.

இந்த இரண்டு பாஷைகளுக்கும் மலைக்கும் மடுவுக்குமுள்ள வித்தியாசமுள்ளது. இந்தப் பாஷைத் தகராறுகளின் சம்பந்தப்படாத நடுநிலையுடையவர்கள் இதை ஒப்புக்கொள்ளுவர்.

அவரசம் எதற்கு?

ஆகவே பொதுமொழி அவசியமென்று கூறுகிறவர்கள் அந்தப் பரிசீலனையை ஆழ்ந்து யோசித்து முடிவு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.

பொதுபாஷை விஷயமாக நான் கூறிய பொது வான அபிப்பிராயங்கள் மிகவும் முக்கியமானவை. ஆகவே இந்தி பொது மொழியாக வேண்டுமென்று கூறுவோர் பொறுப்புணர்ச்சியுடையவர்களாயிருந்தால் அவ்வபிப்பிராயங்களை நன்கு கவனித்து பதிலளித் துத் தீரவேண்டும்.

மற்றும் இந்த மாகாணத்தை மட்டும் சம்பந்திக்கக் கூடிய சில விசேஷ அம்சங்களும் இருக்கின்றன.

மாகாண சுயஆட்சி ஒரு வெறும் கனவாக இருந்து வந்த காலத்தில் நமது நாட்டு மொழிகளை சர்க்கார் சரியாக கவனிப்பதில்லையென நாம் புகார் செய்து கொண்டிருந்தோம்.

பொக்கிஷம் மட்டும் நம் அதிகாரத்திலிருந்தால் நாட்டுமொழி அபிவிருத்திக்காக நாம் எவ்வளவோ செய்துவிடுவோமென்றும் பெருமையடித்துக் கொண்டி ருந்தோம்.

மாகாண சுயஆட்சி வரும் போது நாட்டு மொழிகள் எல்லாம் புதுச்சுற்றுச் சார்புகளுக்குப் பொருத்தமாக விருத்தியடைந்து நமது தேசிய கலாபிவிர்த்திக்கு உதவி புரியுமென்றும் நாம் எண்ணிக் கொண்டிருந்தோம்.

ஐயோ! கண்ராவியே!

ஆனால் நமது அபீஷ்டங்கள் (விருப்பங்கள்) எல்லாம் நிறைவேறக் கூடிய நிலைமை ஏற்பட்டிருக் கும் இக்காலத்திலே ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு முதன் மந்திரியார் அந்த அபீஷ்டங்களையெல் லாம் கொலைபுரியும் கண்ராவியை பார்க்க வேண்டி யதாக ஏற்பட்டிருக்கிறது.

இந்தப் பிரச்சினையை காங்கிரஸ் மந்திரிகள் வெகு இலேசாக எண்ணுவது எனக்கு மிகவும் ஆச்சரிய மாக இருக்கிறது.

காங்கிர°காரரை எதிர்ப்போரால் மட்டுமின்றி காங்கிர°காரர் மீது நல்லெண்ணமுடையவர்கள் கூறிய ஆட்சேபணைகளையாவது அவர்கள் ஆராய்ந்து பார்த்ததுண்டா?

சர்க்கார் உத்தரவு திருத்தப்படவில்லையா என மந்திரிகள் கேட்கக்கூடும். ஆனால் அது கட்டாய இந்தியைக் கண்டித்துக் கூறப்படும் ஆட்சேபணை களுக்குத் தக்க பதிலாகாது.

கீழ் வகுப்புகளில் இந்தி பாடத்தில் தோல்வியடை வோரும் மேல் வகுப்புக்கு மாற்றப்படுவார்கள் என முதன் மந்திரியார் கூறுகிறார்.

அப்படியானால் கட்டாயம் எதற்கு என்றுதான் பகுத்தறிவுடையோரெல்லாம் கேட்பார்கள்.

சர்க்கார் அறிக்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய படிப்பினை மிகவும் சுலபமானது.

நாட்டிலே ஏற்பட்டிருக்கும் கிளர்ச்சியையும் எதிர்ப்பையும் மனக் கொதிப்பையும் அடக்குவதற்கு அது ஒரு தற்கால சலுகையே.

இந்தி எதிர்ப்பாளர் ஆட்சேபணைகளுக்கு ஒரு தெளிவான பதில் கிடைத்திருக்கிறது.

இந்தியைக் கட்டாயப் பாடமாக்க வேண்டுமென்று காங்கிர° தீர்மானித்துவிட்டதினால் அதை எவரும் ஆட்சேபிக்கக் கூடாதென்று ஒரு காங்கிர° மந்திரி கூறுகிறார்.

நம்மவர்கள் இயல்பாகவும் ஐதீகப்படியும் பழமை விரும்பிகள் அல்லது பூர்வாசராப் பிரியர்கள்.

மதத்துக்கு அடுத்தபடியாக மக்கள் தம் தாய் மொழியை அருமையானதாகவும் புனிதமாகவும் மதிக்கிறார்கள்.

பொதுஜன அபிப்பிராயமறிய இதுவரை ஏதாவது முயற்சி செய்யப்பட்டதுண்டா?

இது ஒரு அகில இந்தியப் பிரச்சினையாக இருப்பதி னால் சர்க்கார் கடைசியாக முடிவு செய்யுமுன் ஒரு சர்வமாகாண மகாநாடு கூட்டி சர்க்கார் ஏன் யோசனை செய்திருக்கக் கூடாது?

போலி சமாதானம்

கட்டாய இந்தி மானியத்துக்குச் சட்டசபையில் மெஜாரிட்டி மெம்பர்கள் ஆதரவளித்திருக்கிறார்கள் என்பது ஒரு சரியான சமாதானமாகாது.

காங்கிரஸ்காரரை ஆதரித்த வாக்காளர் 100க்கு 66.5 பேரும் இந்தி கட்டாய பாடமாக்கப்படும் என கனவு கூடக் கண்டிருக்கமாட்டார்கள்.

இது ஒரு கட்சிப் பிரச்சினையுமல்ல. அரசியல் பிரச்சினையுமல்ல.

தாய்மொழி மதத்துக்கு அடுத்தபடியாக மக்களுக்குப் புனிதமானது.

எனவே சட்டசபையிலும் வெளியிலுமுள்ள எதிரிகள் அபிப்பிராயத்தை அவ்வளவு சுலபமாக அலட்சியம் செய்யலாமா?

“ஹிந்து” அபிப்பிராயம்

1937 ஆகஸ்டு 18ந் தேதி கட்டாய இந்தியைப் பற்றி காங்கிரசை ஆதரித்துவரும் “ஹிந்து” பத்திரிகை பின்வருமாறு எழுதியிருக்கிறது.

“இந்தி விஷயத்தில் அதிக ஆராய்ச்சி நடத்திய பண்டித ஜவஹர்லால் நேரு பள்ளிக்கூடங்களில் இந்தி போதனை செய்யும் விஷயமாக சமீபத்தில் வெளியிட்ட ஒரு துண்டுப்பிரசுரத்தில் பல முக்கியமான யோசனை கள் கூறியிருக்கிறார். இந்துஸ்தானி பேசாத மாகாணங் களில் செக்கண்டரி பள்ளிக்கூடங்களில் பேச்சுவழக்கு இந்துஸ்தானியைக் ((Basic Hindustani) கற்பிக்க வேண்டுமென, பண்டித ஜவஹர்லால் கூறுகிறார். அவர் கூறும் பேச்சு வழக்கு இந்தஸ்தானி பேச்சு வழக்கு இங்கிலீஷ் மாதிரி இருக்க வேண்டும். ஆனால் அத்தகைய பேச்சு வழக்கு இந்துஸ்தானி, இப்பொழுது வழக்கில் இல்லை. இனிமேல் தான் பேச்சு வழக்கு இந்துஸ்தானியை நாம் சிருஷ்டிக்க வேண்டும்.

ஆகவே ஹிந்துஸ்தானி பேசாத மாகாணங்களில் தற்கால இலக்கிய இந்தியை (அதாவது பண்டிதர்களுக்கு மட்டும் புரியக்கூடிய இந்தியை) கட்டாய பாடமாக்குவது அநுபவ சாத்தியமானதல்லவென அவர் அபிப்பிராயப்படுவது நன்றாக விளங்குகிறது. பண்டித ஜவஹர்லால் கூறும் பேச்சு வழக்கு இந்துஸ்தானி உருவாகாதவரை இந்தியை தேசியப் பொது பாஷையாக்கும் முயற்சி சாத்தியமான தேயல்ல.”

செக்கண்டரிப் பள்ளிக்கூடக் கீழ் வகுப்பு களில் பாடத் திட்டத்தை சுளுவாக்குவது தற்காலம் கல்வி நிபுணர்கள் வாடிக்கையாக இருந்து வருகிறது. சர்க்கார் பிறப்பித்திருக்கும் உத்தரவோ அந்த மாமூலுக்கு முரணானதாக இருக்கிறது.

இரண்டு பாஷைகள் பேசப்படும் சிற்றூர், வடஆர்க்காடு நிலைமை மிகவும் பயங்கரமான தாக இருக்கிறது.

இந்த இரண்டு ஜில்லாக்களிலும் மாணவர் கள் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் ஆகிய நான்கு பாஷைகள் படிக்க வேண்டியதாக இருக்கிறது.

மற்றும் கல்வி பூர்த்தியாகுமுன் பள்ளிக்கூடம் விடும் பிள்ளைகள் வெகு சீக்கிரம் படித்த சொற் பப் படிப்பையும் மறந்துவிடுவதாகத் தெரிய வந்திருக்கிறது.

தாய் பாஷையில் கற்ற சொற்பக் கல்வியையே மறந்துவிடும் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் கற்ற சொற்ப இந்துஸ்தானி அல்லது இந்தியை பள்ளிக்கூடம் விட்டபிறகு மறவாதிருப்பார்களா?

கட்டாய இந்தியை ஆதரிப்போர் சிலர் எதிரிகளின் முக்கியமான ஆட்சேபணைகளை அலட்சியம் செய்து விட்டு, இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சி காங்கிரஸ் எதிரிகள் சூழ்ச்சியென்றும், காங்கிரஸ் சர்க்கார் மீது பழிசுமத்தும் பொருட்டு கட்டாய இந்தியை எதிர்த்துக் கூச்சல்போடப் படுகிறதென்றும் கூறுகிறார்கள்.

அதனால் கட்டாய இந்திக்காரருக்கு நியாயபலம் இல்லையென்பதும், அதனாலேயே விவாதத்துக்குச் சம்பந்தமில்லாத பிற விஷயங்களைப் புகுத்தி நிலை மையைக் குழப்புகிறார்கள் என்பதும் வெட்ட வெளிச்ச மாகிறது.

எதிர்ப்பது தப்பா?

மேலும் ஒரு முக்கியமான பிரச்சினையை முன் னிட்டு காங்கிர° சர்க்கார் நடவடிக்கைகளைக் கண்டித்து காங்கிர° மந்திரிகளின் ஊழல்களை விளக்கி குற்ற வாளிகளாக்க எதிர்க்கட்சியார் முயல்வது எவ்வாறு தப்பாகுமெனவும் எனக்கு விளங்கவில்லை.

எனினும் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் எல்லா வகுப்பாரும், எல்லா அரசியல் கட்சியாரும், காங்கிர°காரரும் கூட சேர்ந்து உழைக்கிறார்கள் என்பதை எவராலும் மறுக்க முடியாது.

இது எந்தக் கட்சியையோ, அரசியல் கொள்கை யையோ சேர்ந்த பிரச்சினையல்ல.

இந்த இந்தி எதிர்ப்புப் பிரச்சாரத்தினால் காங்கிர° மந்திரி சபையை வீழ்த்த பகுத்தறிவுடைய எவரும் முயலவில்லையென்பதையும் தெளிவாகக் கூறிவிடுகிறேன்.

சட்டப்படியுள்ள பூராக்காலமும் காங்கிரஸ் மந்திரி கள் பதவியிலிருக்க வேண்டுமென்று சர்க்காரைக் கண்டிக்கிறவர்கள் விரும்புகிறார்கள்.

காங்கிர°காரர் பதவியேற்ற போது அடக்குமுறைச் சட்டங்கள் எல்லாம் ஒழிக்கப்பட்டுவிடும் என ஜனங்கள் நம்பினார்கள்.

கிரிமினல் திருத்தச் சட்டங்கள் புத்திசாலித்தன மாகத் திருத்தப்பட்டால் நாங்களும் ஆதரிக்கத் தயார்தான்.

எனவே மாகாண சுய ஆட்சி அமலில் இருக்கும் ஒரு மாகாணத்தில் சாத்வீகக் கிளர்ச்சி செய்வோர் மீது காங்கிரஸ்காரரால் வெறுக்கப் பட்ட கிரிமினல் திருத்தச் சட்டம் பிரயோகம் செய்யப்படுவது மிகவும் வருந்தத்தக்கதாகும்.

சிட்டுக்குருவிக்கு பீரங்கியா?

காங்கிரஸ் மந்திரிகள் சொல்வதுபோல இந்த இயக்கம் ஒரு சிறு கோஷ்டியார் இயக்கமென்றால், சிட்டுக்குருவி மீது பீரங்கிப் பிரயோகம் செய்வது நியாயமாகுமா?

அசெம்பிளியில் பிரதம மந்திரியார் கூறிய வாதங்கள் பழுத்த அதிகாரவர்க்கத்தாருக்கு அதிகமாகக்களிப் பையளித்திருக்கலாம். ஆனால் இந்தியப் பொது ஜனங்களுக்கு அவை திருப்தியை அளிக்கவே இல்லை.

சர்க்காரைக் கவிழ்க்கக் கிளர்ச்சி செய்வோரைத் தடுக்கவே கிரிமினல் திருத்தச் சட்டம் இயற்றப் பட்டது. நியாயமான சட்ட வரம்புக்குட்பட்ட பிரச்சாரத்தை அடக்க இயற்றப்படவில்லை.

சில பத்திரிகைகள் நீங்கலாக இந்திய தேசியப் பத்திரிகைகள் எல்லாம் இந்தி எதிர்ப்பாளர்கள் மீது சென்னை சர்க்கார் கிரிமினல் திருத்தச் சட்டம் பிரயோகம் செய்து வருவதைக் கண்டித் திருக்கையில் சில ஆங்கிலோ-இந்தியப் பத்திரி கைகள் மட்டும் பிரதம மந்திரியாரின் தைரியத் தைப் பாராட்டி எழுதியிருக்கின்றன.

கட்டாய இந்தி எதிர்ப்பாளரை அடக்க சர்க்கார் கடுமையான முறைகளைக் கையாளுவதினால் அவ்வியக்கம் அதிகம் வலுப்பெற்றுவிட்டது.

இந்த நிலைமையில் சர்க்காரையே சிலர் எதிர்க்கத் தொடங்கியது ஆச்சரியமல்ல. முதன் மந்திரியார் வீட்டு முன் உண்ணாவிரதமிருக்கவும், மறியல் செய்யவும்கூட துணிவுகொண்டுவிட்டார்கள்.

இந்தி எதிர்ப்பாளர் கையாண்டுவரும் முறைகளை காங்கிரஸ்காரர் வன்மையாகக் கண்டிப்பதைப் பார்த்து நான் திடுக்கிட்டுப் போனேன்.

சமய சந்தர்ப்பங்களைக் கவனிக்காமல் கண்ட விஷயங்களுக்கெல்லாம் இம்முறைகளை காங்கிரஸ் காரரே கையாண்டு வந்திருக்கிறார்கள். எனவே இப்பொழுது ஆட்சேபிப்பதற்கு அவர்களுக்கு நாக்கே இல்லை.

எனது நண்பர் ஸர். பி.டி. ராஜன் ஒரு சந்தர்ப் பத்தில் கூறியதுபோல், மறியல் செய்தல், பட்டினி கிடத்தல், சிறை புகுதல் முதலியன அரசியல் மேல் சாதியாரான காங்கிரஸ்காரருக்கே உரியதெனவும் மற்றவர்கள் அந்த காங்கிரஸ்காரரின் “காபிரைட்” உரிமைகளைப் பறிமுதல் செய்யக்கூடாதென்றும் காங்கிரஸ்காரர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் போல் இருக்கிறது.

பட்டினி எங்களுக்கு உடன்பாடல்ல

ஜஸ்டிஸ் கட்சியாராகிய நாங்கள் பட்டினி விரத மிருப்பதை மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். பட்டினி விரதமிருப்பது எங்கள் வாடிக்கையல்ல.

சாத்வீக முறையில் மறியல் செய்வதைக்கூட நாங்கள் ஆதரிக்கவில்லை.

முதன் மந்திரியாருக்கோ அவரது குடும்பத்தாருக்கோ தொந்தரவு கொடுப்பது நியாயமே அல்ல.

எங்கள் கொள்கைப்படி, அந்த முறைகள் எவ்வளவு பயன் தரத்தக்கவைகளாக இருந்தாலும் நாங்கள் ஆதரிக்கமாட்டோம்.

ஆகவே அந்த முறைகளை நிறுத்திவிட்டு தமது சக்திகளை வேறு வழிகளில் திருப்பி நாடு முழுவதும் தீவிரப் பிரச்சாரம் செய்து தேச மக்களுக்கு இந்தி எதிர்ப்பு நோக்கங்களைத் தெரி விக்க வேண்டுமென நான் இந்தி எதிர்ப்புத் தலைவர்களையும் தொண்டர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.

தாய்மொழி மீதுள்ள பேரபிமானத்தினால் வகுப்புத் துவேஷத்தையுண்டுபண்ணக் கூடிய எதுவும் செய்யக் கூடாதென்றும் நான் கேட்டுக் கொள்கிறேன்.

நிலைமையைச் சமாளிக்க இப்பொழுதும் காலம் கடந்துவிடவில்லை.

நாம் உண்ணாவிரதிகளையும் மறியல் செய்வோர் களையும் கண்டிப்போமாக! மக்கள் இம்முறைகளைக் கையாளாதிருக்கும் முறையில் நாம் கண்டிக்க வேண்டும்.

முதன் மந்திரியார் கடமை

இந்நிலைமையைச் சமாளிக்கும் பரிகாரம் முதன் மந்திரியார் கையிலேயே இருக்கிறது. “கட்டாயம்” என்பதை விட்டுவிட வேண்டுமென நான் மிக்க அக் கறையுடன் அவரைக் கேட்டுக் கொள்கிறேன். அகில இந்திய விஷயங்களில் ஈடுபட்டு சர்க்கார் சலுகையை எதிர்பார்ப்போர் தாராளமாக இந்தியைக் கற்றுக் கொள்ளட்டும்.

முதன் மந்திரியார் கெட்ட எண்ணத்துடன் இந்தியைக் கட்டாயப் பாடமாக்க முயல்கிறார் எனக் கூறவில்லை.

எத்தகைய நல்ல சீர்திருத்தமும் துப்பாக்கி முனை யைக் காட்டி அமலில் கொண்டு வரப்பட்டால் தீமையுடையதாகவே மதிக்கப்படும்.

ஆனால் “கட்டாய” பகுதியை நீக்குவது முதன் மந்திரியாரின் அந்தஸ்துக்குப் பாதகமுண்டு பண்ணக் கூடுமென்பதை நானறிவேன்.

எனினும் பொது நன்மையைக் கருதி சொந்த அந்தஸ்தைப் பெரிதாக மதிக்கவே கூடாது.

கிரிமினல் திருத்தச் சட்டப்படி தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதினால் நமது மாகாணத்திலுள்ள பலதிறப்பட்ட கட்சிகளுக்கும் ஒற்றுமை உண்டாகக்கூடும்.

கனம் இராஜகோபாலாச்சாரியாரை நான் நன் கறிவேன். சரியான சமயத்தில் தைரிபமாக நடந்து கொள்ளும் குணம் அவரிடம் உண்டு.

சென்னைக்கு வந்தது முதல் நான் பொதுஜன அபிப்பிராயமறிய முன்வந்திருக்கிறேன்.

கட்டாய இந்தியினால் தாய்மொழி அபிவிர்த் திக்குப் பங்கமேற்படுமென பொதுஜனங்களுக்கு அந்தரங்க சுத்தியான அச்சமிருந்து வருவதை எவருக்கும் மறுக்க முடியாது.

இந்தியை இஷ்டபாடமாக்க ஏற்பாடு செய்வதில் எவருக்கும் ஆட்சேபணை கிடையாது.

முதன் மந்திரியாரிடமும் காங்கிர° கட்சியிட மும் உள்ள அபிமானத்தினாலும், காங்கிர° மந்திரிகளுக்கு வீண் தொந்தரவு உண்டாக்கக் கூடாதென்ற நல்லெண்ணத்தினாலுமே அதிகப் பேர் இந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் ஈடுபடாமல் இருந்து வருகிறார்கள்.

எனது வேண்டுகோள்

சென்னை மாகாண மக்களில் பெரும்பாலார் இந்தியை ஆதரிக்கவில்லையென மிக்க பொறுப் புணர்ச்சியுடன் நான் கூறுகிறேன்.

சரியான புள்ளிவிவரங்களும் ஆதாரங்களும் இல்லாதிருப்பதினால் கட்டாய இந்தி பக்தர்கள் எனது வாதங்களை சுளுவாக மறுக்கக்கூடும் என்பதையும் நானறிவேன்.

பொதுஜன நம்பிக்கைக்குப் பார்த்திரமான ஒரு பாரபட்சமற்ற கமிட்டி மூலம் சென்னை நகரத்தில் இரகசிய வாக்கெடுத்து கட்டாய இந்திப் பிரச்சினையை முடிவு செய்ய வேண்டுமென நான் இரு கட்சியா ரையும் கேட்டுக் கொள்கிறேன்.

வாக்காளர் தீர்ப்புக்கு இரு கட்சியாரும் கட்டுப்பட வேண்டும்.

ஒருவரது மதத்தையும், மனச்சாட்சியையும் பொறுத்த விஷயத்தில் இம்மாதிரி வாக்கெடுத்து முடிவு செய்வது சரியானால் பிர°தாப விஷயத்திலும் கட்டாய இந்தி விஷயத்திலும், அம்மாதிரி முறையைப் பின்பற்றுவதில் என்ன ஆட்சேபணை இருக்கக்கூடுமென எனக்கு விளங்கவில்லை.

எல்லாக் கட்சியார் கருத்தும் பாமர மக்களின் நிலை மையை விருத்தி செய்யும் வேலையில் பூரணமாகச் செல்லும் பொருட்டு சமாதான பரமான - ஒழுங்கான தேச முன்னேற்ற முறைகளை நாம் கையாள வேண்டு மென்பதே நமது ஆசை.

ஆகவே எனது விண்ணப்பம் அலட்சியம் செய்யப்பட மாட்டாதென நான் நம்புகிறேன் (குடிஅரசு, 18.9.1938).

- தொடரும்

Pin It