மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள ஓர் அறிவிப்பு, மீண்டும் ஒரு மொழிப்போருக்கு அறைகூவல் விடுவதாக அமைந்துள்ளது. நாட்டின் மிக முக்கியமான ஆட்சிப் பணிகளான, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான தேர்வுகளை இனி இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும்தான் எழுத வேண்டும் என்று அவ்வறிப்புக் கூறுகிறது.

இது மாநிலங்களின் உரிமைகளுக்கு எதிரானது மட்டு மன்று, மறைமுகமான இந்தித் திணிப்பும் கூட. இந்திய ஆட்சிப்பணிகளில் மீண்டும் இந்தி பேசும் மாநிலத்தவரின் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கான செயல்தான் இந்த அறிவிப்பு.

அண்மைக் காலமாகத் தமிழ்நாட்டு மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, நாடு முழுவதும் பல மாநிலங்களிலும் பணிகளில் அமர்ந்து வந்தனர். தாய்மொழியில் போட்டித் தேர்வுகளை எழுதியதால்தான், இந்த எண்ணிக்கை ஒவ்வோராண்டும் அதிகரித்துக் கொண்டு வந்தது.

குறிப்பாக கடந்த 2010ஆம் ஆண்டு, இந்தியா முழுவதிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 980 பேர்களில், 122 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இந்த எண்ணிக்கை அவர்களுக்கு உறுத்தியதால், 2011இல் ஒரு வேகத்தடையைப் போட்டார்கள். மற்ற பாடங்களோடு, இயல்பூக்கத் தேர்வு (Aptitude Test) என்றொரு முறையைக் கொண்டு வந்தார்கள். இதனால் தமிழ்நாட்டில் இருந்து தேர்வு பெறுவோரின் எண்ணிக்கை சற்றுக் குறையத் தொடங்கியது.

ஆட்சிப் பணிகளில் தமிழர்களின் பங்கேற்பை முற்றிலும் முடக்கிப் போடுகின்ற வகையில், இப்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமே தேர்வு எழுதலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

ஏற்கனவே தொல்பொருள் ஆய்வு மற்றும் அதையொட்டிய இலக்கியத் தளங்களில், நாகசாமிகள் செம்மொழித் தமிழின் தொன்மையைப் பின்னுக்கு இழுக்கின்ற வேலைகளைச் செய்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேரடியான மொழிப் புறக்கணிப்பைக் கையில் எடுத்திருக்கிறது மத்திய தேர்வாணையம்.

மொழியில் கைவைத்தால் என்ன நடக்கும் என்பதை தமிழகம் வரலாற்றில் ஏற்கனவே பதிவு செய்துள்ளது. இந்தி எதிர்ப்புப் போராட்டங்களும், மாணவர்களின் எழுச்சியும், இந்தியை ஓட ஓட விரட்டியதை, நினைவில் கொண்டு வாருங்கள்!மாநிலங்களவையில் பேசிய திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, ‘இந்தி திணிக்கப்பட்டால் எதிர்த்துப் போராடுவோம்’ என்று குறிப்பிட்டுள்ளார். திராவிடர் கழகமும் 18ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

இந்திய அரசியல் அமைப்பு வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளுக்கு எதிரான இந்த அறிவிப்பை மத்திய அரசு தேர்வாணையம் உடனே திரும்ப்ப பெற வேண்டும். இல்லையயன்றால், கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டிவரும்.

Pin It