மொழிக்கு உரமாகிய மறவர்கள் - 7

"இந்தித் திணிப்பை இனியாவது நிறுத்துங்கள்" என அன்றைய முதலமைச்சர்.எம். பக்தவச்சலத்திற்குக் கடிதம் எழுதி வைத்து விட்டு, நஞ்சுண்டு உயிர் துறந்தார் கீரனூர் ந.முத்து.

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அறந்தாங்கி, பாலைவனம் ஜமீனைச் சேர்ந்த சின்னச்சுனையக்காடு என்ற கிராமத்தில் 1943 இல் பிறந்தவர் முத்து. இவரது தந்தை பெயர் நடேசன். அண்ணன் பெயர் வேலு. முத்து 7ஆம் வகுப்புவரை படித்தவர். படிக்கும் போதே தமிழ் மொழியின் மீது பற்று கொண்டவராய் இருந்து வந்தார்.

1957ஆம் ஆண்டு ஏழாம் வகுப்பு படிக்கும் போதே தன் பள்ளி மாணவர்களோடு மொழி உணர்வு குறித்து பேசி வந்துள்ளார். அது மட்டுமல்ல- தன் ஊரிலிருந்து பக்கத்து ஊருக்குச் செல்லும் வழியில் உள்ள கோயில் மண்டபச் சுவர்கள், சத்திரங்களின் சுவர்கள், வீட்டுச் சுவர்கள் என்று தான் பார்க்கும் எல்லா இடங்களிலும், “இந்தி ஒழிக”, “தமிழ் வாழ்க” என்று எழுதி வைத்து தன்னுடைய இந்தி எதிர்ப்பையும் மொழி உணர்வையும் மாணவராக இருக்கும் போதே பதிவு செய்துள்ளார்.

keeranur muthu 2குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பைப் பாதியில் நிறுத்துவிட்டு தன் தந்தை நடராசனுக்கு உதவியாக அவரோடு இணைந்து விவசாயத்தில் ஈடுபட்டு வந்தார். சில ஆண்டுகளில் விவசாயப் பணியிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு 1964 ஆம் ஆண்டு வாக்கில் புதுக்கோட்டை, குளத்தூர் வட்டத்தில் உள்ள கீரனூருக்குச் சென்று அங்குள்ள ஒரு உணவு விடுதியில் வேலைக்குச் சேர்ந்தார். கீரனூரில் உள்ள உணவு விடுதியில் பணியாற்றி வந்ததால் "கீரனூர்- முத்து" என எல்லோரும் அழைக்கத் தொடங்கினர்.

1965 இல் தமிழகத்தில் நடைபெற்ற இந்தி எதிர்ப்புப் போராட்டம் கீரனூர் முத்துவின் ஊரான திருச்சியிலும் பற்றிக் கொண்டது. திருச்சி நேசனல் கல்லூரி மாணவர் ஒருவருக்கு மதுரையில் இருந்து ஒரு தந்தி வந்தது, அந்தத் தந்தியில் " கண்ணீர் புகை வீசப்பட்டது, ஒருவர் மரணம் எங்களுக்கு உதவுங்கள்" என எழுதப்பட்டிருந்தது. எனவே, இதைக் கருத்தில் கொண்ட மாணவர்கள் திருச்சியிலும் இந்திக்கு எதிரான போராட்டத்தை வீரியமாக்கவும், மரணமடைந்தவருக்கு அஞ்சலி செலுத்துவது என்றும் முடிவு செய்தனர்.

சனவரி 26 ஆம் தேதி மாலையில் அருணாச்சலம் மன்றம் முன் நடைபெற்ற போராட்டத்தினால் திருச்சியில் கூட்டம் கூட அரசாங்கம் தடையாணை போட்டிருந்தது. ஆனால் அதையும் மீறி மறுநாள் 27ந் தேதியன்று காலை நேசனல் கல்லூரி, சமால் முகமது கல்லூரி மாணவர்கள் பாலக்கரை , பெரிய கடை தெரு வழியாக ஓர் அமைதி ஊர்வலம் நடத்தினர். இந்த ஊர்வலம் நகர மன்றத் திடலை அடைந்ததும் அங்கே இரண்டு நிமிடம் மொழிப்போரில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் அமைதியாக இருந்துவிட்டு, இனிமேல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வீரியமாகத் தொடரும் என அறிவித்து விட்டு அங்கிருந்து மாணவர்கள் கலைந்தனர். இதன் விளைவாக நேசனல் கல்லூரி காலவரம்பின்றி மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

தூய ஜோசப் கல்லூரி, சீதாலட்சுமி தூய சிலுவை பெண்கள் கல்லூரி மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினர். இதனையொட்டி திருச்சியில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களின் சார்பாகவும் போராட்டம் தொடர்ந்தது, கண்ணில் பட்டி காங்கிரஸ் கொடிக் கம்பங்கள் வெட்டப்பட்டன. இந்தி பலகைகள் அடித்து நொறுக்கப்பட்டன, இங்கு சிறந்த இந்தி புத்தகங்கள் விற்கப்படும் என்ற ஒரு கடை பலகையை மாணவர்கள் பிடுங்கி எறிந்தனர். மாணவர்களின் தொடர் போராட்டத்தின் விளைவாக திருச்சி நகரக் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டது.

திருச்சியில் பற்றிக் கொண்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம், உணவு விடுதியில் பணியாற்றிய கீரனூர் முத்துவைத் தூண்டியது. இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்களின் ஈகத்தை கண்டு அவரும் உணர்வோடு மொழிப்போரில் கலந்து கொண்டார்.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு தீக்குளித்தும், நஞ்சருந்தியும் இறந்த செய்திகளும், மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தடியடியும் துப்பாக்கி சூடும் முத்துவை வேதனையில் ஆழ்த்தியது. சின்னச்சாமி, சிவலிங்கம், அரங்கநாதன் எனத் தமிழுக்காக உயிரிழந்தவர்களின் ஈகம் குறித்து தான் சந்திப்பவர்களிடம் பேசியபடி இருந்துள்ளார்.

வெறும் போராட்டத்தால் மட்டும் தமிழ் மொழியைக் காக்க முடியாது என்று கருதிய கீரனூர் முத்து தமிழ்த்தாயின் உயிர் காக்க தானும் தன்னுயிரைக் கொடுப்பதென முடிவு செய்தார்.

"இந்தி திணிப்பை நிறுத்துங்கள்" என்று அன்றைய முதல்வர் பக்தவச்சலத்திற்கும், "தமிழைக் காக்கப் பாடுபடுங்கள்" என்று அண்ணாவுக்கும் கடிதங்களை எழுதி வைத்து விட்டு 1965 பிப்ரவரி மாதம் 4 ந்தேதி தன்னுடைய 22 ஆம் வயதில் நஞ்சுண்டு இறந்து போனார்.

1967இல் தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் முத்து இறந்து கிடந்த இடத்தில் சீரணி அரங்கம் ஒன்று கட்டப்பட்டு தியாகி முத்து சீரணி அரங்கு எனப் பெயர் சூட்டப்பட்டது.

- க.இரா.தமிழரசன்

Pin It