விராலிமலை சண்முகம்

தமிழ் காக்கும் மொழிப்போரை ஒடுக்குவதிலும் தமிழுக்குக்காகப் போராடுவோரைச் சிறையிலடைப்பதிலும், இந்தி வெறியர்கள் வேகம் குறையாமல் இருந்தனர். இதனை எண்ணி வேதனைப்பட்டார் விராலிமலை சண்முகம்.

viralimalai sanmugamவிராலிமலையில் மளிகைக்கடையில் பணியாற்றி வந்தவர் சண்முகம். சொந்த ஊர் புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தா மலை. தவுல் கலைஞர் மு.இராமையா இவரின் தந்தை.

இராமையா - சவுந்தரம் மகனாக 11.8.1943 இல் பிறந்தவர். அண்ணன் இரா.மாணிக்கம், குடும்ப அண்ணனாக மாணிக்கத்தையும் கொள்கை அண்ணனாக அறிஞர் அண்ணாவையும் நேசித்தவர் சண்முகம். இருவருக்கும் கடிதம் எழுதினார்.

"அண்ணா !... குடும்ப பாரம் உன்னைத் சேர்ந்துவிட்டது.  தமிழுக்குச் செய்ய வேண்டிய கடமையைச் செய்துவிட்டேன், விடைபெறுகிறேன்" அண்ணன் மாணிக்கத்திற்கு எழுதிய கடிதப்பகுதி இது.

"தமிழினமே என் போன்றோர் உடலைப் பார்த்தாவது விழித்தெழு. தமிழ்த்தாயின் பாதம் இரத்தத்தால் கறைபடிந்துள்ளது. 'உயிர் தமிழுக்கு! உடல் மண்ணுக்கு' என்று கூறி உயிர்விட்ட சிவலிங்கம், அரங்கநாதன் இவர்களைக் காணச் செல்கிறேன்"

- அறிஞர் அண்ணாவிற்கு எழுதிய கடிதப் பகுதி இது

கடிதங்களை எழுதிவைத்துவிட்டு 25.2.1965ஆம் நாள் நஞ்சுண்டு உயிர் துறந்தார் விராலிமலை சண்முகம்.

திருச்சி பாலக்கரை மேம்பாலம் 'சின்னச்சாமி' சண்முகம் மேம்பாலம்' என 11.11.2006இல் பெயர் சூட்டப்பட்டு, மொழிப் போர் வீரர்களை நினைவூட்டியபடி உள்ளது. 

எதுவரை எதிர்ப்பது?

"ஒரு காலத்தில் நாவலந்தீவு (இந்தியா) பூராவும், இன்றைய பரதகண்டம் பூராவும் பரவியிருந்த தமிழகம் விந்தியம் வரை குறுகி, இன்று வேங்கடம் வரை குறுகி நிற்கிறது. இந்த நிலையில் இத்தமிழகத்தில் இந்தி நுழைந்துவிடுமானாலோ தமிழகமே மறந்துபோகும், மாண்டு போகும். இந்தியைக் கடைசி மூச்சு உள்ளவரை ஒவ்வொரு தமிழனும் எதிர்த்தே தீர வேண்டும்."

- தமிழ்த் தென்றல் திரு.வி.க.

(17.7.1948 சென்னை இந்தி எதிர்ப்பு மாநாட்டுப் பேச்சு. நூல்: இந்திப் போர் முரசு பக்கம்: 35)

தமிழுக்கு நேர்வதே தமிழனுக்கும்!

“ஒரு மொழிக்கு உரிய வாய்ப்புகள் மறுக்கப்படும் போது அந்த மொழியைப் பேசும் மக்களுக்கும் அவை மறுக்கப்படுகின்றன. மொழி முடமாக்கப் படும்போது அவனும் முடமாகிறான். மொழிவழி விடுதலை வராமல் சமுதாயத்துக்கு எந்த விடுதலையும் கிடைக்காது. கிடைத்தாலும் பயன் விளையாது". - பேராசிரியர் பொற்கோ

Pin It