இந்தி எதிர்ப்புப் போராட்டம் 25.01.1965 அன்று தொடங்கி 15.03.1965 வரை 50 நாட்கள் தொடர்ந்தது. 18 நாட்கள் அரசு நிர்வாகமே செயலிழந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் 263 ஆம் விதியைத் திருத்தக் கோரி பலர் உயிர் துறந்தனர். இந்தியப் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி நேருவின் உறுதிமொழி நிறைவேற்றப்படும் என்று உறுதியளித்தார். 1968 இல் ஆட்சி மொழித் திருத்தச் சட்டம் இந்தியுடன் ஆங்கிலமும் ஆட்சி மொழியாக இருக்கும் என்று ஒன்றிய அரசு அறிவித்தது. இதுவே மொழிப் போர் வரலாறு ஆகும். அந்த ஆண்டு சென்னை மாநிலத் (தமிழ்நாடு) தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று காங்கிரஸ் தோல்வியைத் தழுவியது.

தி.மு.க தலைமையேற்று 1967இல் ஆட்சிப்பொறுப்பை ஏற்றது. இக்காலக்கட்டத்தில் பொதுவுடைமைக் கட்சி இரண்டாகப் பிளந்தது.

இருமொழிக் கொள்கையும் பயிற்று மொழியும்

இந்தி எதிர்ப்பு காரணமாகக் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்ததன் காரணமாக 1967இல் அண்ணா ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் ‘தமிழ்ப் பயிற்சி மொழி’க் கொள்கையை ஆதரித்துப் பேசினார்.anna 602‘தமிழ்ப் பாடமொழியாக இருக்க வேண்டும்’ என்று சொல்வது இந்த நாட்டில்தான் தேவைப்படுகிறது. ஆங்கில நாட்டில் ஆங்கிலந்தான் பாடமொழி என்று சொல்ல வேண்டிய தேவை ஏற்படவில்லை. எந்த நாட்டிலும் இல்லாத விந்தை இங்கேதான் இருக்கிறது. தமிழில் கற்பிக்கலாமா என்ற கேள்வியும், முடியுமா என்னும் எதிர்ப்பும், பார்க்கலாம் என்னும் சந்தேகமும். தமிழ்ப் பயிற்சி பெறுபவர்கள் என்ன ஆவர்! இதுவரை பெற்றவர்கள் என்ன ஆனார்கள்? என்று இந்நாட்டிலேதான் பேசப்படுகிறது. இதற்குக் காரணம் அந்நிய ஆட்சியில் இந்த நாடு இருந்தது. அப்போது தமிழ் நாட்டங்கொண்டவர்களைப் பார்க்க முடியாது. நாட்டங்கொண்டிருந்தவர்களும் புலவர் என்ற பட்டத்தோடு சரி என்று கூறினர். இதைவிட கடுமையாக அண்ணா கூறியது இங்கு நினைவு கூரத்தக்கது: ‘ஆட்சி மொழியாக அன்னைத் தமிழிருக்க, ஆங்கிலம் பயிற்றுமொழியாக இருப்பது தழையிலே தண்ணீர் ஊற்றிவிட்டு, வேரில் வெந்நீரை ஊற்றுவதற்குச் சமமாகும்’ என்பது ஆகும்.

தமிழகத்தில் ஆட்சிமொழி தமிழ் என்று முடிவெடுக்கப்பட்ட நிலையில் 1967 இறுதியில் இந்தியப் பாராளுமன்றத்தில் இந்திமொழி பேசுவோர்க்குச் சார்பாக மாற்றப்பட்ட நேரு உறுதிமொழியும் அதனுடன் இணைக்கப்பட்ட மொழிக் கொள்கைத் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டதின் விளைவாக மூன்றாம் இந்தியெதிர்ப்புப் போராட்டம் தமிழக மாணவர்களிடையே கிளர்ந்து நாடு முழுவதும் பரவி நடைபெற்றது. இந்நிலையில் முதலமைச்சர் அண்ணா, சென்னை சட்டப்பேரவையில் இந்தி நீங்கிய இருமொழி திட்டத் தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டதனால் மாணவர் இந்தியெதிர்ப்பு அடங்கிற்று.

அண்ணா காலத்திலேதான் (1968) ஆட்சி மொழிச் சட்டத்தைத் தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றி ஆற்றிய தன் உரைய¤ல் இந்தத் தமிழ்ப் பாடமொழி பயிற்று மொழி என்ற பிரச்சினையைப் பொறுத்தவரையில் பல்வேறு கருத்துக்கள் எல்லாம் சொல்லப்பட்டன. நான் ஆங்கிலத்தைப் புறக்கணிக்கிறவன் அல்லன். ஆனால் ஆங்கிலம்தான் இருக்க வேண்டும். தமிழ் அதற்குரிய இடத்தைப் பெற வேண்டாம் என்ற எண்ணம் கொண்டவனும் அல்ல. ஆங்கிலம் எந்தெந்தக் காரியங்களுக்குப் பயன்படுத்தப்படுகிறதோ அந்தக் காரியங்களுக்கு இந்தியாவில் உள்ள மொழிகளில் எது தகுதியுள்ள மொழி என்றால், அது ‘தமிழ்’ என்று சொல்லத் தயக்கப்பட மாட்டேன். அவ்வளவு வளமுள்ள மொழி அது. சென்ற முறை பேசியபடி எல்லாக் கல்லூரிகளிலும் பாடப்புத்தகங்கள் தயாரிப்பது ஆசிரியர்களைத் தயாராக்குவது ஆகிய இந்தக் காரியங்களில் கொஞ்சம் தயக்கம் காட்டப்பட்டு வருகிறது. என்னுடைய திருத்தத்தில் அவர்கள் குறிப்பிட்ட அதையும் இணைத்திருக்கிறேன். ஐந்தாண்டுகளுக்குள் தமிழகத்தின் எல்லாக் கல்லூரிகளிலும் தமிழைப் பாடமொழியாகவும் பயிற்சி மொழியாகவும் கொண்டுவர அரசு நடவடிக்கை எடுத்துக் கொள்வது மட்டுமல்ல. அடுத்த ஆண்டிலேயே சர்க்கார் கல்லூரிகளில் அத்தனையிலும் தமிழ் பாடமொழி ஆகும் என்பதை இன்றைய தினம் அறிவிக்க விரும்புகிறேன். என்று 23.01.1968 இல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொழிப் பிரச்சினையின் மீது நடைபெற்ற விவாதத்தின்போது அன்றைய முதலமைச்சர் அறிஞர் அண்ணா குறிப்பிட்டார். ஆனால், அண்ணா தந்த உறுதிமொழி 1968-69 ஆண்டில் நடைமுறைக்கு வரவில்லை.

தமிழக சட்டப்பேரவையில் சுதந¢¢திரக் கட்சி உறுப்பினர் டாக்டர் எச்.வி.ஹண்டே கல்லூரிகளில் தமிழோடு ஆங்கிலமும் பயிற்சி மொழியாக நீடிக்க வேண்டுமென்று கோரி 29.11.1967 அன்று உத்தியோகம் பற்றற்ற தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தார். இதற்கு அண்ணாவே இத்தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு அரசின் நிலையை விளக்கிப் பேசினார். “டாக்டர் ஹண்டே மிக நீண்ட காலமாக ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்கப் போவது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு அந்த ஆங்கிலத்தில் போதுமான புலமை பெற வேண்டுமென்று சொன்னார்கள். அவர்கள் செய்கிற தவறு எதிலிருக்கிறது என்றால் ஆங்கிலப் புலமை வேண்டுமென்பதில் அல்ல. போதனா மொழி ஆங்கிலமாக இருந்தால்தான் அந்தப் புலமை வரும் என்று சொல்வதில்தான்.”

இப்போது என்னிடத்திலோ அல்லது நான் சார்ந்திருக்கின்ற அரசினிடத்திலோ ஆங்கிலப் புலமை வேண்டுமா என்று கேட்டால் ‘ஆம்’ என்று சொல்வோம். அந்தப் புலமையைப் பெறுவதற்காக ஆங்கிலம் போதனா மொழியாக இருக்க வேண்டாமா? என்றால் இருக்க வேண்டியதில்லை என்று சொல்லுவோம். ஏனென்றால் போதனா மொழியாக இல்லாமலேயே ஆங்கிலத்தில் புலமை பெறமுடியும். போதனா மொழியாக ஆங்கிலத்தை வைத்துக் கொண்டே அம்மொழியில் புலமை பெறாதவர்களும் உண்டு. ஆகவே ஆங்கிலத்தில் புலமை பெற அது போதனா மொழியாக இருக்க வேண்டுமென்பது முக்கியமல்ல.

நான் முன்னாலே குறிப்பிட்டபடி “ஆங்கிலமே பாடமொழி என்று இருந்தது மாறி தமிழும் பாடமொழி என்று சட்டம் வந்த பின்னர் தமிழே பாடமொழியென்று இறுதிக் கட்டம் பிறக்க வேண்டும். அந்த இறுதிக் கட்டம் சில ஆண்டுகளிலேயே வருமானால் என்னைவிட மகிழக் கூடியவர்கள் வேறு யாரும் இருக்க முடியாது” என்று கூறி டாக்டர் ஹண்டேயை விவாதித்ததோடு திருப்தி அடைய கேட்டுக் கொண்டார். இதன்பிறகு ஹண்டே வாக்கெடுப்புக்கு வற்புறுத்தாமல் தீர்மானத்தை திரும்பப் பெற்றுக் கொண்டார். அதன் பிறகு தீர்மானம் நிறைவேறியது.

1968 ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 23 ஆம் நாளன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் மொழிச் சிக்கல் பற்றி நிறைவேற்றிய அரசினர் தீர்மானம், தமிழர்களின் மொழியுணர்வையும் மொழிக் கொள்கையையும் தெளிவாக எடுத்துரைக்கிறது.

அத்தீர்மானம் பின்வருமாறு:

1967 ஆம் ஆண்டு ஆட்சிமொழிகள் (திருத்த) சட்டத்தையும், அதைச் சார்ந்த தீர்மானத்தையும் இந்திய நாடாளுமன்றம் நிறைவேற்றியதின் விளைவாக இம்மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும்நிலைமை குறித்து ஆய்வு செய்தல் வேண்டும். அத்தகைய ஆய்வுக்குப் பிறகு கீழ்க்கண்டபடி பேரவை முடிவு செய்கிறது. பல்வேறு மொழி, பண்பாடு, நாகரிகங்களைக் கொண்ட இந்தியாவில் ஒரு வட்டார மொழியை மட்டும் ஆட்சி மொழியாக்குவது இந்திய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் குலைத்து, ஒரு மொழிப் பகுதி மற்றமொழிப் பகுதிகளை அடிமை கொள்ளச் செய்திடும் என்று உணரப்படுவதால், தமிழும் மற்ற தேசிய மொழிகளும் மத்திய ஆட்சி மொழிகளாக “ஆங்கிலமே ஆட்சி மொழியாகத் தொடர்ந்து இருந்து வர வேண்டும். அதற்கு ஏற்றபடி இந்திய அரசியல் சட்டத்தின் மொழிப் பிரிவு திருத்தப்பட வேண்டும்” என்று இந்த மன்றம் வற்புறுத்துகிறது.

இப்பொழுது நிறைவேற்றப்பட்டுள்ள மொழிச்சட்டம் இந்த இலட்சியத்திற்கு ஒத்ததாக அமையவில்லை என்று கருதுவதுடன் இந்தியா பிளவுபடவும் அரசாங்க நிருவாகத்தில் இருப்பவர்களிடையே. வெறுப்பு, குழப்பம், வேதனைகள் மலிந்த இரு பிரிவுகளை உண்டாக்கிவிடவும் வகை செய்கிறது என்று கருதுவதோடு, முதலில் குறிப்பிட்ட மொழி உரிமை இலட்சியம் நிறைவேறுவதற்கான முறையில் தொடர்ந¢து வலியுறுத்தி வருவது எனத் தீர்மானிக்கிறது.

மொழித் திருத்தச் சட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், இந்திபேசாத பகுதி மக்களுக்கு அநீதியையும் சங்கடத்தையும் புதிய பளுவையும் உண்டாக்குகிறபடியால், அந்தத் தீர்மானம் அமலாக்கப்படக் கூடாது என்பதில் பல அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்து தெரிவித்திருப்பதைக் கவனத்தில் கொண்டு, மத்திய அரசு உடனடியாக அந்தத் தீர்மானத்தை நீக்கி வைத்து இந்தி பேசாத மக்களுக்குச் சங்கடமும், பளுவும் ஏற்படாத ஒரு முறையை வகுக்க வேண்டுமென்று இந்த மன்றம் வலியுறுத்துகிறது.

மொழிப்பிரச்சனை பற்றி ஆய்ந்தறியவும், மொழிச் சட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம், இந்தி பேசாத பகுதி மக்களுக்கு அநீதியையும் சங்கடத்தையும் புதிய பளுவையும் உண்டாக்குகிறபடியால், அந்தத் தீர்மானம் அமலாக்கப்படக்கூடாது என்பதில் பல அரசியல் கட்சிகளும் ஒருமித்த கருத்து தெரிவித்திருப்பதைக் கவனத்தில் கொண்டு, மத்திய அரசு உடனடியாக அந்தத் தீர்மானத்தை நீக்கி வைத்து இந்தி பேசாத மக்களுக்குச் சங்கடமும். பளுவும் ஏற்படாத ஒரு முறையை வகுக்க வேண்டுமென்று இந்த மன்றம் வலியுறுத்துகிறது.

மொழிப் பிரச்சனைபற்றி ஆய்ந்தறியவும், மொழிச்சட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானத்தால் விளையும் தீங்கை அகற்றும் வழி காணவும் எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் கொண்டு, ஒரு மேல்மட்ட மாநாட்டை இந்தியப் பேரரசு கூட்ட வேண்டும் என்று இம்மன்றம் கேட்டுக்கொள்கிறது.

மொழிச் சட்டத்துடன் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் இந்தி பேசாத பகுதியினருக்குப் பளுவையும். சங்கடத்தையும் தருவதுடன், மும்மொழித் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென்று வலியுறுத்துவதன் மூலம் இந்தித் திணிப்பை நடத்தி, இறுதியில் இந்தியையே ஆட்சிமொழியாக ஆக்கிவிடுவது என்ற நோக்கத்துடன் அமைந்திருக்கிறது என்று இந்த மன்றம் கருதுகிறது.

மத்திய அரசின் இந்தித் திணிப்புத் திட்டத்தை ஏற்க மறுப்பு

மத்திய அரசின் மொழித் தீர்மானத்தை இந்த அரசு செயல்படுத்த மறுக்கிற வகையிலும் தமிழக மக்களும் மாணவர்களும் வெளியிட்டுள்ள கருத்துக்கு மதிப்பளிக்கிற முறையிலும் தமிழகத்தின் எல்லாப் பள்ளிகளிலும் மும்மொழித் திட்டத்தை அகற்றிவிட்டு தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளுக்கு இடமளித்து, இந்தி மொழியை அறவே நீக்கிட இம்மன்றம் தீர்மானிக்கிறது.

என்.சி.சி முதலிய அணிகளில் பயன்படுத்தப்பட்டு வரும் இந்தி ஆணைச் சொற்களை நீக்கிவிடுவது என்றும், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்க மறுத்தால் என்.சி.சி போன்ற அணிகளைக் கலைத்துவிடவும் இந்த மன்றம் தீர்மானிக்கிறது. தமிழகத்தில் தமிழ் பயிற்சி மொழியாகவும், பாட மொழியாகவும் எல்லாக் கல்லூரிகளிலும் நிருவாக மொழியாகப் பல்வேறு துறைகளிலும் ஐந்தாண்டு காலத்துக்குள் நடைமுறைக்கு வருவதற்கான துரிதமான நடவடிக்கையை மேற்கொள்வது என்று இம்மன்றம் தீர்மானிக்கிறது,

அரசியல் சட்டத்தில் இந்திக்குப் பிரத்தியேக அந்தஸ்து அளித்திருப்பது அகற்றப்பட்டு, நாட்டின் பிற மொழிகளுக்குக் கீழ்நிலை அளிக்கும் ஷரத்துக்களெல்லாம், எல்லா இந்திய மொழிகளுக்கும் சம அந்தஸ்து நல்கும் வகையில் திருத்தப்பட வேண்டும். 8வது ஷெட்யூலில் குறிப்பிட்டுள்ள எல்லா மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு சமமாக நிதி வசதிகளை வழங்க வேண்டும்.

அண்ணாவின் தலைமையிலான அன்றைய தி.மு.க அரசு இத்தீர்மானத்தைச் சட்டப்பேரவையில் கொண்டு வருவதற்கு இன்றியமையாத காரணமாக விளங்கியது. இந்தித் திணிப்பை எதிர்த்து அப்பொழுது தமிழ் நாடெங்கும் மாணவர்கள் நடத்திய கிளர்ச்சியேயாகும். 1967 ஆம் ஆண்டு இறுதியில் இந்தியை எதிர்த்துத் தமிழ் நாடெங்கும் மாணவர்கள் நடத்திய போராட்டமே தமிழக அரசின் இருமொழித் திட்டத்தை அறிவிக்கும் இத்தீர்மானத்தை நிறைவேற்றத் தூண்டுதலாக இருந்தது என்பதும் தமிழ்நாட்டின் வரலாறு காட்டும் செய்திகளாகும். இத்துடன் இந்தி, தமிழ்நாட்டில் கற்றுக் கொடுக்கப்பட்டது நிறுத்தப்பட்டது. சென்னை சட்டப் பேரவையில் இரு மொழித்திட்ட தீர்மானம் நிறைவேறியது.

தமிழ்வழி பொறியியல் மருத்துவம் வேண்டுகோள்

கல்லூரிகளில் பயிற்றுமொழியாகத் தமிழ் ஐந்தாண்டுகளுக்குள் நடைமுறைப்படுத்தப்படும் என தி.மு.க. அரசு 1968 ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றியது. இத்தீர்மானத்தை வரவேற்றுப் பேசிய ம.பொ.சிவஞானம் தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தை பொறியியல், மருத்துவக் கல்லூரிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும் என்றார்.

1968-1969 இல் பிஸிக்ஸ், கெமிஸ்டரி, நேச்சுரல் ஸயன்ஸ், மாத்தமாட்டிக்ஸ் இவையெல்லாம் தமிழில் போதிக்கப்படுமானால் தமிழில் படித்துவிட்டுப் பொறியியல் கல்லூரிக்குப் போகும்போது அங்கு எந்த மொழியில் படிப்பது? ஆகவே தெளிவாக இருந்து 1969-1970 இல் பொறியியல் கல்லூரிகளிலும் மருத்துவக்கல்லூரிகளிலும் தமிழ்தான் போதனா மொழியாக இருக்கும் என்பதை முன்கூட்டியே தெரிவித்து, இந்த ஆண்டு முதல் விஞ்ஞானப் பாடங்கள் போன்றவற்றைத் தமிழில் கொண்டு வந்தாலொழிய இத்திட்டம் வெற்றிபெறாது என்றுதான் சொல்ல வேண்டும்.” (ச.ம.ந. 16.02.1968 191-197)

ம.பொ.சி.யின் இக்கோரிக்கையே தமிழ்வழி மருத்துவம். தமிழ்வழி பொறியியல் கல்விக்கான முதல் குரலாகும். அவருடைய பேச்சு தமிழ்ப் பயிற்றுமொழிச் சிக்கலை கல்லூரித் தளத்திலிருந்து தொழில்நுட்பக் கல்லூரித் தளத்திற்கு எடுத்துச் சென்றது.

1968 ஆம் ஆண்டு அண்ணா கொண்டுவந்த இருமொழிச் சட்டம் இந்தி எதிர்ப்பு என்ற நோக்கில் வெற்றி பெற்றது. அந்நிலையில் ம.பொ.சி சில திருத்தங்களை முன் மொழிந்தது போல பொதுவுடைமைக் கட்சி உறுப்பினர் ஏ.பாலசுப்பிரமணியமும் சில கருத்துக்களைக் கூறினார்: அவசரமாக நமது அரசு செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன. ஆங்கிலத்தை அகற்றி எல்லாத் துறைகளிலும் தமிழ் வந்துவிட வேண்டும். அதற்கு வேண்டிய நடவடிக்கைகளை நாம் எடுக்க வேண்டும். நீதி, நிர்வாகம், கல்வி என்ற மூன்று நாற்காலிகள் தான். அந்த மூன்று நாற்காலிகளிலும் தமிழை அமர்த்திட வேண்டும். அந்த மூன்று நாற்காலிகளில் வேறு மொழி அமர இடம் கொடுக்கக் கூடாது. மற்ற மொழிகள் தனியான வெளி இடத்தில் உட்காரலாமே தவிர. இந்த மூன்று நாற்காலிகளிலும் மற்ற மொழிகளுக்கு இடம் இல்லை. இந்த மூன்று நாற்காலிகளிலும் தமிழைத் தவிர வேறு எந்த மொழிக்கும் இடமில்லை என்ற நிலையை ஏற்படுத்தி விட்டால் தமிழ் மக்களுக்கு பயம் இருக்காது, பீதி இருக்காது. நமது மாநிலத்திற்குள் வேறு எந்த மொழிக்கும் தனி இடம் கிடையாது என்ற உத்திரவாதம் இருக்கும். அதைச் செய்து விட்டால் பெரிய அளவு கலக்கம் போய் விடும். பீதி குறைந்துவிடும். துரிதமாகத் தமிழை அரியாசனத்தில் அமர்த்த வேண்டும்” என்றார்.

பதில் அளித்த அண்ணா. “திரு பாலசுப்பிரமணியம். திரு சங்கரய்யா அவர்கள் சொன்னது போல் இந்திய அரசு இந்திக்கு மட்டும் சலுகை காட்டுகிற அந்தத் திட்டத்தை மாற்றி எல்லா மொழி வளர்ச்சிக்கும் உரிய சலுகைகளைக் கொடுத்து வளரச் செய்வார்களானால் நாம் அந்த நிலைக்கு வரமுடியும். அதுவரை கொஞ்சம் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துக் கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

கல்லூரிகளில் தமிழ் - மீண்டும் நடைமுறை

அண்ணா மறைவைத் தொடர்ந்து கலைஞர் மு.கருணாநிதி தலைமையிலுள்ள புதிய அரசு 1970 ஆம் ஆண்டு பதவியேற்றது. 1968 ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில் பயிற்றுமொழித் திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிகள் மேற்கொண்டது. முந்தைய காங்கிரஸ் அரசின் தமிழ்ப் பயிற்றுமொழித் திட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த 1970 ஆம் ஆண்டு அரசு ஆணை வெளியிட்டது.

மாணவர் எதிர்ப்பு

கலைஞர் கருணாநிதி முதல்வர் பொறுப்பை ஏற்ற பின்னரும் கல்லூரிகளிலே தமிழைப் பயிற்சி மொழியாக்கும் பணி வளர்பிறையாகி வந்தது. தமிழைப் பயிற்சி மொழியாக எடுத்துப் படிக்கும் மாணவர் எண்ணிக்கை பெருகி வந்தது. இந்த வளர்ச்சி அரசு கல்லூரிகளின் அளவில்தான். தனியார் கல்லூரிகளில் தமிழைப் பயிற்சி மொழியாக்கும் திட்டத்திற்குப் போதிய ஆதரவு கிடைக்கவில்லை.

- டாக்டர் சு.நரேந்திரன், சென்னை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழக சிறப்புநிலைப் பேராசிரியர்.