ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டு, தற்போது உச்ச நீதிமன்றத்தால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருக்கின்றார். இந்தக் கைதை அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஆனால் வழக்கின் தன்மையைப் பார்க்கும் போது இதில் நிச்சயம் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு, சொத்து சேர்த்திருப்பதற்கான முகாந்திரம் இருப்பது தெரிகின்றது. 2007ல் ப.சிதம்பரம் நிதி அமைச்சராக இருந்தபோது அவருடைய கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் ரூ 4.62 கோடிகள் வெளிநாட்டு நிதி திரட்டிக் கொள்ள ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது. ஆனால் அந்த நிறுவனம் சட்ட விதிகளை மீறி ரூ.305 கோடி வரை நிதி திரட்டியுள்ளது. இப்படி சட்டவிதிகளை மீறி திரட்டப்பட்ட நிதியில் கணிசமான தொகை ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்திற்கு கைமாறியதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

P Chidambaram and Kartiஇந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான ஐ.என்.எக்ஸ் மீடியா நிறுவனர் இந்திராணி முகர்ஜி தன்னுடைய வாக்குமூலத்தில் ப.சிதம்பரம் தன்னுடைய மகனின் நிறுவனத்திற்கு உதவ வேண்டும் என்ற உத்திரவாதத்தின் அடிப்படையில்தான் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டிக் கொள்ள தனக்கு அனுமதி அளித்ததாகவும், இதன் அடிப்படையில் டெல்லி ஓட்டல் ஒன்றில் வைத்து கார்த்தி சிதம்பரத்திற்கு தன்னுடைய கணவர் பீட்டர் முகர்ஜி மூலம் பெரும் தொகை கொடுக்கப்பட்டதாகவும் சொல்லி இருக்கின்றார். ஆனால், கார்த்தி சிதம்பரம் தான் இந்திராணி முகர்ஜியை பார்த்ததே இல்லை என்றும், அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியம் (எப்ஐபிபி) நடைமுறைகள் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் கூறுயிருக்கின்றார். ஆனால் ஐ.என்.எக்ஸ் மீடியா ஊழல் பணத்தில் கார்த்தி சிதம்பரம் வாங்கியதாக சொல்லப்படும் 54 கோடி மதிப்பிலான சொத்துக்கள் ஏற்கெனவே முடக்கப்பட்டிருக்கின்றது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் 2018 ஆம் ஆண்டு கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு அப்பாற்பட்ட நபர்கள் கிடையாது என்பதால், அவர்களின் கைதை எந்த வகையிலும் எதிர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. மேலும் வழக்கறிஞரை வைத்து வாதாட வழியில்லாத ஏழைகளும் கிடையாது. அவர்கள் தங்கள் மேல் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் பொய் என்றால், அதைச் சட்டப்படி நிரூபிக்கட்டும். ஆனால் அதற்குள் காங்கிரசும், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் அக்மார்க் யோக்கியர்கள் என்பதுபோல எதிர்ப்பு தெரிவிப்பது சிறிதும் தார்மீக அறமற்ற செயலாகும்.

ப.சிதம்பரம் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது மோடி மற்றும் அமித்ஷா மீது குஜராத் கலவர வழக்கு, போலி என்கவுன்ட்டர் வழக்கு போன்றவற்றில் சிபிஐ தீவிரமாக நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்தார், அதனால் அமித்ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதோடு அமைச்சர் பதவியையும் இழந்தார், குஜராத்தை விட்டும் அமித்ஷா வெளியேற்றப்பட்டார். இதை மனதில் வைத்துதான் தற்போது உள்துறை அமைச்சராக உள்ள அமித்ஷா, ப.சிதம்பரத்தை பழிவாங்குவதாக ப.சிதம்பரம் கைதை எதிர்ப்பவர்கள் கூறுகின்றார்கள். அது உண்மையாகவும் கூட இருக்கலாம். ஆனால் அதைப்பற்றி கவலைப்பட என்ன இருக்கின்றது?. ப.சிதம்பரம் காவி தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை எடுக்கக் காரணமாக இருந்தார் என்பதற்காகவே, அவர் அதிகார முறைகேடுகளில் ஈடுபட்டு, ஊழல் செய்ய அனுமதித்துவிட முடியுமா?

ப.சிதம்பரத்தின் கைதை தமிழ் மக்கள் ஒரு பொருட்டாகக் கூட எடுத்துக்கொள்ளவில்லை என்பதுதான் உண்மை. ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்படுவதற்குக் காரணமாக இருந்த ஒரு பாசிஸ்ட்டை எப்படி தமிழ் மக்கள் கொண்டாடுவார்கள்? ஈழத்தில் மட்டுமல்ல, தன் சொந்த நாட்டு மக்கள் மீதே உள்நாட்டுப் போரை தொடுத்த பாசிஸ்ட்தான் சிதம்பரம். ஜனநாயக முற்போக்கு அரசில் நிதி அமைச்சராவதற்கு முன் தினம் வரை சிதம்பரம் வேதாந்தா பன்னாட்டு நிறுவனத்தின் அலுவல் சாரா இயக்குனர்களில் ஒருவராகவும், அதன் கூட்டு முறையிலான நிறுவனங்களுக்கு வழக்கறிஞராகவும் இருந்தவர். தான் பதவிக்கு வந்த பின்னால், அதற்கு நன்றிக்கடனாக தண்டகாரனிய காடுகளில் இருக்கும் கனிம வளத்தை வேதாந்தா கொள்ளையடிக்கத் தடையாக இருந்த மாவோயிஸ்ட்களை ஒழித்துக் கட்ட, 2009 ஆம் ஆண்டு பசுமை வேட்டை என்ற பெயரில் பழங்குடி இன மக்களுக்கு எதிரான உள்நாட்டுப் போரை துவக்கி வைத்தார். ஏறக்குறைய 2 லட்சம் துருப்புகள் பழங்குடியின கிராமங்களை சூறையாடியும், தீவைத்தும், பாலியல் வல்லுறவில் ஈடுபட்டும் 3 லட்சத்திற்கு மேற்பட்ட பழங்குடியின மக்களை அவர்களின் சொந்த வாழ்விடங்களில் இருந்து அடித்து விரட்டி அவர்களை உள் நாட்டிலேயே அகதிகளாக மாற்றியது. இன்று வரையிலும் பசுமை வேட்டை தொடர்கின்றது.

பன்னாட்டு பெருமுதலாளிகளின் ஏவல் நாய்களாக செயல்படுவதில் எப்பொழுதுமே காங்கிரசுக்கும், பாஜகவுக்கும் வேறுபாடு இருந்தது கிடையாது. பசுமை வேட்டையை சிதம்பரம் கொண்டு வந்தபோது, அதை மிகத் தீவிரமாக பாஜக ஆதரித்தது. அதனால்தான் வேதந்தா மிக அதிகமான தேர்தல் நிதியை பிஜேபிக்குக் கொடுத்தது.

ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மட்டும் மோசடிப் பேர்வழிகள் கிடையாது. அவரது குடும்பத்தின் தொழிலே மோசடி செய்வதுதான். மேற்கு வங்கத்தைச் சேர்ந்த சாரதா சிட்பண்ட் நிறுவனம் அதிக வட்டி தருவதாகக் கூறி பொதுமக்களிடம் இருந்து 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வரை வசூலித்து, அதை திரும்பத் தராமல் ஏமாற்றியது. சாரதா குழும நிறுவனங்களில் இருந்த மக்கள் பணத்தை அதன் நிர்வாகிகள் முறைகேடாகப் பயன்படுத்திய விவகாரத்தில் நளினி சிதம்பரமும் உடந்தையாக இருந்துள்ளார். அவர் சாரதா சிட்பண்ட் நிர்வாகத்திடம் இருந்து ஒரு கோடியே 40 லட்சம் ரூபாயை சட்டவிரோதமாகப் பெற்றதாகக் கூறி அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. இது மட்டுமல்ல ஒட்டுமொத்த தமிழ்நாடும் நீட் தேர்வுக்கு எதிராக போராடிக் கொண்டு இருந்தபோது, நீட் தேர்வு ஆதரவாக சிபிஎஸ்இ மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வாதாடி அனிதா தற்கொலை செய்து கொள்வதற்குக் காரணமாக இருந்த துரோகிதான் நளினி சிதம்பரம்.

குடும்பம் மொத்தமும் பணத்துக்காவும், பதவிக்காகவும் யார் தாலியையும் அறுக்கத் தயங்காதவர்கள். ஊழல், அதிகார முறைகேடு, இனத் துரோகம் இவற்றைத் தவிர வேறு எதையுமே தன் வாழ்நாளில் சிதம்பரமோ, அவரது குடும்பமோ இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ செய்தது கிடையாது. சில நாட்களுக்கு முன்னால் எடப்பாடி பழனிசாமி அவர்கள் “ப.சிதம்பரத்தால் இந்த நாட்டுக்கு என்ன பயன்? பூமிக்குத்தான் பாரம்” என்று கூறி இருந்தார். அதில் உண்மை இல்லாமல் இல்லை. ப.சிதம்பரம், நளினி சிதம்பரம் போன்ற இனத் துரோகிகள் தமிழ் மக்களுக்கு செய்த மிகப்பெரும் அநீதியை ஒருநாளும் தமிழ்ச் சமூகம் மறவாது. அதனால் பாசிஸ்ட் ப.சிதம்பரத்தைக் கைது செய்ததைப் பற்றி தன்மானமும், சுயமரியாதையும் உள்ள எந்த ஒரு தமிழனும் கவலைப்பட மாட்டான்.

- செ.கார்கி

Pin It