இன்னும் சில தினங்களில் தோழர் மணியரசனின் 'தமிழ் தேசியப் பேரியக்கத்தின்' சார்பாக இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் 50 ஆம் ஆண்டு நினைவு மாநாடு நடத்தப் போகிறார்களாம்.

இன நலனுக்காக இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் உயிர் நீத்தவர்களுக்கும்,போராடியவர்களுக்கும் மரியாதை செலுத்தும் முகமாக நடத்தப்படும் இந்த நிகழ்வு எங்களுக்கும் மகிழ்ச்சியே.ஆனால் மனியசன் மற்றும் தமிழ் தேசியப் பேரியக்கத்தின் கூற்றுப்படி, இது 50 ஆம் ஆண்டு இந்தி எதிர்ப்பு நினைவு ஆண்டா இல்லை 80 ஆம் ஆண்டு நினைவு ஆண்டா என்பதில் தான் பிரச்சனை.

1965 ஆம் ஆண்டு தான் இந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்கியதா?? இல்லை 1965 ஆம் ஆண்டு போராட்டத்திற்கு முந்தையப் போராட்டத்தில் யாரும் உயிரை கொடையாக வழங்கவில்லையா?

1937 ஆம் அண்டி துவங்கிய இந்தி எதிர்ப்பு போராட்டத்தை முதன்மையாக பெரியார் அதை  முன்னெடுத்தார்.திராவிடர் கழகத்தினர் முன்னணியில் நின்றனர் என்ற ஒரே காரணத்திற்க்காக வரலாற்றை திரிக்கலாமா??வரலாற்றையே திரிப்பது எந்தவித நியாயம் என சோழ நாட்டின் தற்போதைய அரசர் தான் கூற வேண்டும்.

தங்களின் அரசியல் லாபத்திற்காக இன்னொருவரின் தியாகங்களை மறைப்பது என்பது எந்த விதமான அறம் எனத் தெரியவில்லை.

தாங்கள் நடத்தபோகும் மாநாட்டையொட்டி மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு ஓரத்தில் 1937 ஆம் ஆண்டே இந்த போராட்டம் துவங்கியது எனவும்,பெரியார்,மறை மலைஅடிகள் போன்றோர் போராட்டத்தை நடத்தினர் என்னும் கூறி தன்னை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தாமல் தப்பிக்கும் வார்த்தைகளையும் தூவியுள்ளார்.

மணியரசன் அவர்களே! உங்களுக்கு தான் தெரிகிறதே ,1937 ஆம் ஆண்டே இந்தி எதிர்ப்பு போராட்டம் துவங்கியது என்று.பிறகு ஏன் 1965 இல் இருந்து தான் வரலாறு என்பது போல 50 ஆம் ஆண்டை நினைவுகூர வேண்டும்? 80 என்பதை விட 50 என்பது ஈர்க்கும் சொல் என்பதாலா?

"என்னங்க பெரியார் தமிழர் விரோதின்னு கூட்டம் நடத்துநீங்க,ஆனா இந்த மனுசன் தமிழ் மொழிக்காக போராடி இருக்காரே" என உங்கள் கூட்டத்தில் புதிதாக சேர்ந்துள்ள அல்லது இனி சேரப்போகிற தோழர் கேட்பரே என்பதற்காக இந்த ராசதந்திரமா??

இப்படி தனது சுயலாபத்திர்க்காகவும்,அரசியல் நலனுக்காகவும் வரலாற்றை சர்வசாதாரணமாக இருட்டடிப்பு செய்வது என்பது தொடர்ச்சியாக நடக்கிறது.

ஆக இப்படி போராடியவர்களின் தியாகங்களை மறைக்கும் கூட்டதிற்க்கும்,இந்த கூட்டத்தின் செயல்பாடுகளை வைத்து வரலாற்றை தவறாக அனுமானிக்கும் இளைஞர்களுக்கும் நாம் வரலாற்றை தெளிவு படுத்த வேண்டியது அவசியமாகிறது.

1930 இல் துளிர்விட்ட இந்தி எதிர்ப்பு நெருப்பு:

  1930களின் துவக்கத்திலேயே இந்துஸ்தானி சேவாதள், இந்துஸ்தானி இதாஷி சபா போன்ற இயக்கங்களின் முயற்சியால் கட்டாய இந்திப் பாடத்தை நீதிக்கட்சியின் உள்ளாட்சி அரசாங்கங்கள் சென்னை மாகாணத்தின் சில பள்ளிகளில் அறிமுகப்படுத்தியிருந்தன.ராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள்.சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது.

போராட்ட களமான தமிழகம்:

இந்த எதிர்ப்புகளுக்கு இடையேராஜாஜி 21 ஏப்ரல், 1938ஆம் ஆண்டு 125 உயர்நிலைப்பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் அரசாணையை வெளியிட்டார். அவரது பிடிவாதம் போராட்டக்காரர்களால் தமிழை அழித்து இந்தியை வளர்க்கும் முயற்சியாகக் கருதப்பட்டது. ராஜாஜி மற்றும் இந்திக்கு எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 3, திசம்பர் 1938 இந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.

இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின்சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். போராட்டத்திற்குத் தமிழ் அறிஞர்கள் மறைமலையடிகள்,சோமசுந்தர பாரதியார், கா. அப்பாதுரை, முடியரசன்,இலக்குவனார் போன்றோர் ஆதரவளித்தனர். இப்போராட்டத்தில் பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். மூவலூர் ராமாமிருதம், நாராயணி, வ. ப. தாமரைக்கனி, முன்னகர் அழகியார், டாக்டர். தர்மாம்பாள், மலர்முகத்தம்மையார், பட்டம்மாள், சீதாம்மாள் ஆகியோர் சிறை சென்ற சில மகளிராவர்.13 நவம்பர் 1938ல், தமிழக மகளிர் மாநாடு இதற்கான ஆதரவைக் காட்டும் வகையில் கூட்டப்பட்டது.

போராட்டக்காரர்களின் பிராமணர் எதிர்ப்பு உணர்வுகளுக்கிடையிலும் காஞ்சி ராஜகோபாலாச்சாரியார் போன்ற சில பிராமணர்களும் போராட்டத்திற்குத் துணை நின்றனர்.
தமிழ் பேசும் இசுலாமியர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர்; ஆயினும் உருது பேசியஇசுலாமியர் அரசிற்கு ஆதரவளித்தனர். திருச்சியைச் சேர்ந்த பி. கலிஃபுல்லா என்ற முசுலீம் லீக் சட்டமன்ற உறுப்பினர் "நான் ஓர் இராவுத்தர். எனது தாய்மொழி தமிழ் என்பதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை; பெருமையே கொள்கிறேன். இந்தியை ஏன் இந்தியாவின் பொதுமொழியாகக் கொள்ளவேண்டும் என்று எவரும் எங்களுக்கு விளக்கவில்லை" என்று கூறினார். போராட்டத்திற்கான மக்களாதரவைக் கண்ட மாநில ஆளுனர் சூலை 2, 1938 அன்று அரசப்பிரதிநிதி (வைஸ்ராய்)க்கு இவ்வாறு எழுதினார்.. "கட்டாய இந்தி இம்மாநிலத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது மற்றும் அது பெரும்பான்மையான பொதுமக்களின் விருப்பத்திற்கு மாறானது"

தமிழர் படை:

1938 ஆம் ஆண்டு ஜுன் 3_ந்தேதி சென்னையில் இந்தி எதிர்ப்பு போராட்டம் தொடங்கியது. ராஜாஜி வீட்டு முன்பாக மறியல் செய்து, பலர் கைதானார்கள். இந்தி எதிர்ப்பின் அவசியத்தை மக்களிடம் பரப்ப “தமிழர் பெரும்படை” என்ற பெயரில் ஒரு அமைப்பு நிறுவப்பட்டது.

பட்டுக்கோட்டை அழகிரிசாமி, ஜ.குமாரசாமிபிள்ளை, மூவலூர் இராமாமிர்தம் அம்மையார், “நகர தூதன்” ஆசிரியர் திருச்சி திருமலைசாமி ஆகியோர் தலைமையில், தமிழர் பெரும்படையினர் திருச்சி உறையூரிலிருந்து நடைபயணமாக சென்னையை நோக்கிப் புறப்பட்டனர். கிட்டதட்ட 234 ஊர்களின் வழியாக, 42 நாட்கள் நடந்து இவர்கள் சென்னை நகரை அடைந்தனர். சென்னையின் எல்லையில் இவர்களை மறைமலை அடிகள் வரவேற்றார். சென்னை நகரத்தின் இந்தி எதிர்ப்புப் பிரச்சாரப் பொறுப்பை மீனாம்மாள் சிவராஜ் ஏற்றிருந்தார். கட்டாய இந்தியை எதிர்த்து மாணவர்கள், பெண்கள் உட்பட அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்துப் போராடினர். இப்படி தமிழகம் முழுவதும் பல தமிழறிஞர்கள் தலைமையில் போராட்டங்கள் வெகுவாக வெடித்தன. போராடியவர்களைக் கைதுசெய்து சிறை தண்டனை விதித்தது அரசு.அடுத்த 42 நாட்களில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் நடத்திப் பரவலான ஆதரவைத் திரட்டினர். அவர்கள் 11 செப்டம்பர் 1938 அன்று சென்னை வந்தடைந்தனர். அங்கு அவர்கள் அரசு அலுவலகங்களில் மறியல் செய்ததாகக் கைது செய்யப்பட்டனர். இவர்களது நடைப்பயணத்தால் சிற்றூர்களிலும் கிராமங்களிலும் இந்தி எதிர்ப்பு மற்றும் தமிழாதரவு உணர்வுகள் பரவின.

உண்ணாநோன்புகள்:

1 மே 1938 அன்று ஸ்டாலின் ஜகதீசன் என்ற இளைஞர் ஒருவர் கட்டாய இந்திக் கல்வியை எதிர்த்து உண்ணாநோன்பு இருக்கலானார். அவர் போராட்டக்காரர்களின் சின்னமாக விளங்கினார். விடுதலை இதழில் வெளியான நேர்முகமொன்றில் "தமிழ்த்தாய்க்கு இன்னும் உண்மையான மகன்கள் இருக்கிறார்கள்" என்று கூறினார். அவரைத் தொடர்ந்து சூன் 1 முதல் பொன்னுசாமி என்பவரும் ராஜாஜியின்வீட்டின் முன்னர் உண்ணாநோன்பைத் துவங்கினார். இத்தகைய போராட்ட வடிவை பெரியார் ஆதரிக்காதபோதும் அவரது மற்ற தலைவர்கள் உண்ணாநோன்பு இருப்பவர்களை ஓர் எடுத்துக்காட்டாக அறிவித்தனர். கா. ந. அண்ணாதுரை இந்தி எதிர்ப்பு போராட்டக் கூட்டமொன்றில் "இன்று ஜகதீசன் இறந்தால் அவரிடத்தை நிரப்ப நான் பத்து பேருடன் அமருவேன். அவர் இறந்தால் நீங்களும் இறக்கத் தயாராகுங்கள்" என முழக்கமிட்டார். ஜகதீசன் உண்ணாநோன்பைப் பத்து வாரங்களில் நிறுத்திக்கொண்டார். அவர் இரவு வேளைகளில் உணவருந்தியதாகவும் கூறப்படுகிறது

நடராசனும் தாளமுத்துவும்:

      நடராசன் என்ற தலித்துஇளைஞர் திசம்பர் 5, 1938 அன்று கைது செய்யப்பட்டார். அவர் 30 திசம்பர், 1938 அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 15 சனவரி 1939 அன்று மரணமடைந்தார். 13 பிப்ரவரி 1939 அன்று தாளமுத்து நாடார் என்பவர் இந்து தியோசாபிகல் உயர்நிலைப்பள்ளியருகே மறியல் செய்ததாகப் பிறருடன் கைது செய்யப்பட்டார். அவரும் காவலில் இருக்கும்போது நோய்வாய்ப்பட்டு 6 மார்ச் அன்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு 11 மார்ச் அன்று மரணமடைந்தார். அவரது இறப்பிற்கு அவரது உடல்நிலைக்குறைவும் கடும் வயிற்றுப்போக்குமே காரணம் என்று அரசு கூறியது. சட்டமன்றத்தில் இவ்விறப்புக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது இராசாசி அவற்றை மிகவும் சாதாரணமாக எடுத்துக்கொண்டு மறுத்தார். இத்தகைய அரசின் போக்கு போராட்டக்காரர்களை மேலும் கோபமுறச் செய்தது. சென்னையில்நடந்த அவர்களது இறுதிச்சடங்குகளில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர்; .

இந்த இரண்டு உயிர்பலியும் தமிழ்நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழகம் போர்க்களமாகிவிட்டதை சட்டசபையில் சர். ஏ.டி.பன்னீர்செல்வம், ராஜா சர். முத்தையா செட்டியார், திவான் பகதூர் அப்பாத்துரைப்பிள்ளை ஆகியோர் விரிவாக எடுத்துக்கூறி விவாதித்தனர்.
இந்திக்கு இவ்வளவு கடும் எதிர்ப்பு இருக்கும் என்று ஆரம்பத்தில் ராஜாஜி நினைக்கவில்லை. போராட்டம் தீவிரமானதைத் தொடர்ந்து பெரியாரை விடுதலை செய்ய உத்தரவிட்டார். 167 நாள் சிறையிலிருந்த பெரியார், 22.4.1939 இல் விடுதலை செய்யப்பட்டார். அவர் விடுதலையான 6 மாதங்களுக்குப்பின், போராட்ட வீரர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். “போராட்ட வீரர்களை விடுதலை செய்ததற்கு நன்றி. ஆனால், கட்டாய இந்தி உத்தரவை வாபஸ் பெறும் வரை போராட்டம் ஓயாது” என்று பெரியாரும், மற்ற தலைவர்களும் அறிக்கை வெளியிட்டனர்.

இந்த சூழலில், “பிரிட்டிஷ் ஆட்சியுடன் ஒத்துழைப்பதில்லை” என்ற தீர்மானத்தைக் காங்கிரஸ் மேலிடம் நிறைவேற்றியது. அதைத்தொடர்ந்து, மாநிலங்களில் இருந்த காங்கிரஸ் மந்திரிசபைகள் பதவியை விட்டு விலகின. தமிழகத்தில் ராஜாஜி மந்திரிசபையும் 28.10.1939 இல் பதவி விலகியது. 21.2.1940 இல் கட்டாய இந்தி உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்தி எதிர்ப்புப் போரில் சிறை சென்றவர்களில் பெண்கள் உட்பட மொத்தம் 1,269 பேர். ஒருவழியாக முதற்கட்ட இந்தி எதிர்ப்புப் போராட்டம் முடிவுக்கு வந்தது.

1940-1950 காலகட்டங்களில்:

     1940-46 ஆண்டுகளில் இந்தித் திணிப்பு எதிர்ப்பு உணர்வைத் திராவிடர் கழகமும் பெரியாரும் உயிரூட்டி வந்தனர். அரசு இந்திக்கல்வியைக் கட்டாயப் பாடமாக்கத் துணியும்போதெல்லாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் நடத்தி அதனைத் தடுப்பதில் வெற்றி கண்டனர். இந்த காலகட்டத்தில் மிகத்தீவிரமான போராட்டம் 1948-49 ஆம் ஆண்டுகளில் நடந்தது. இந்தியா விடுதலை பெற்ற பின்னர் காங்கிரசு தலமையிலான புதிய இந்திய அரசு, இந்தியைப் பள்ளிகளில் கட்டாயமாக்க மாநிலங்களை வற்புறுத்தியது. அதன்படி சென்னை மாகாணத்தில் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தலைமையிலான காங்கிரசு அரசு 1948ஆம் ஆண்டு கட்டாயமாக்கியது. பெரியாரின் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்கு இம்முறை காங்கிரசில் இருந்த ம. பொ. சிவஞானம் மற்றும் திரு.வி.க தங்கள் முந்தைய இந்தி ஆதரவுநிலைக்கு மாறாக ஆதரவளித்தனர்.

ஜூலை 17, 1948ல் திராவிடர் கழகம் ஒரு அனைத்துக் கட்சி இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டைக் கூட்டி இந்தி கட்டாயப் பாடமாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. 1937-40ல் நடந்தது போலவே பேரணிகள், கருப்பு கொடி போராட்டங்கள், அடைப்புகள் ஆகியவை நடத்தப்பட்டன. அப்போது கவர்னர் ஜெனரலாக இருந்த இராசாசி ஆகஸ்ட் 23ம் தேதி சென்னை வந்த போது திராவிடர் கழகத்தினர் அவருக்கு கறுப்புக்கொடி காட்டினர். இதற்காக அண்ணாதுரை, பெரியார் உட்பட பல தி.க.வினர் ஆகஸ்ட் 27 அன்று கைது செய்யப்பட்டனர். பின் அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், போராட்டம் தொடர்ந்தது. டிசம்பர் 18 ஆம் தேதி பெரியார் மீண்டும் கைது செய்யப்பட்டார். ஆனால் விரைவில் அரசுக்கும் போராட்டக்காரர்களுக்கும் சமரச உடன்பாடு ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்; அரசும் அவர்கள் மீது தொடுத்திருந்த வழக்குகளைத் திரும்பப் பெற்றுக்கொண்டது. பின்னர்இந்திப் பாடத்தை 1950-51 கல்வியாண்டிலிருந்து விருப்பப்பாடமாக மாற்றி விட்டது. இந்தி கற்கவிரும்பாத மாணவர்கள் இந்தி வகுப்புகளின் போது பிற செயல்பாடுகளில் ஈடுபட அனுமதிக்கப்பட்டனர்

இப்படி ஆயிரக்கணக்கில் ஆண்களும்,பெண்களும்,குழந்தைகளும் கடும் துயர் உற்று,சிறைகளை நிரப்பி, உயிர் தியாகம் செய்து போராடிய போராட்டங்களை,,அதை பெரியார் முன்னெடுத்தார்.திராவிடர் கழகத்தினர் முன்னணியில் நின்றனர் என்ற ஒரே காரணத்திற்க்காக வரலாற்றை திரிக்கலாமா??

- மனோஜ் குமார், தந்தை பெரியார் திராவிடர் கழகம்

Pin It