திமிர்ந்த பீடபூமி போலிருக்குமவள் 

உயர்குன்றின் மீதிருந்து பார்க்கிறாள் 

உறைந்த நெருப்புக் குழம்பெனக் 

கருத்திருக்கும் காலடியிலிருந்து 

விரிகிறது அவள் நிலம் 

வரப்புகளற்ற பெருநிலம் 

நீரைப் புணரா பாலைகளும் 

வெப்பத்தைப் பருகா மேய்ச்சல் நிலங்களும் 

அவளைச் சிலிர்ப்பூட்டின 

முடிச்சிகளிலிருந்து 

அவிழும் மலைத்தொடர்கள் 

அவளுடலில் ஊர்ந்து செல்கின்றன 

நதிகளையும் நாணல்களையும் 

நீருற்றி வளர்க்குமவளின் நிழல் 

ஆழ்கடல்களிலும் படர்ந்திருக்கின்றது 

அவள் வியர்வையில் 

பூத்துக் காய்த்த தானியங்களில் 

வன்பறவைகள் பசியாறுகின்றன 

தோலுரிக்கப்படாத அவள் மொழிக்கு 

வெளுத்த பனித்துருவங்கள் நிறமூட்டுகின்றன 

நிலம் முழுவதும் பெண்வாசனை வீச 

அவள்மீது செம்மதுவின் வாசனை 

இவையெல்லாம் அவளின் 

முதல் கூடலுக்கு முன்னிகழ்ந்தவை.

- சுகிர்தராணி