பெண் பார்க்க வந்தார்கள் 

உற்றார், உறாதார், உறவினர், உறவிலர் 

எல்லோரும் வந்தனர் 

முன்னும் பார்த்தனர், பின்னும் பார்த்தனர் 

நடக்கக்கோரினர். பேச வைத்தனர் 

என் கைத்தலம் பற்றப் போகும் கணவருக்கு 

என் கையால் தேநீர் தரக் கூறினர் 

அவரும் வாங்கினார். 

 

போக்குவரத்துக் காவலர்களின் 

சைகைக்குக் காத்திருக்கும் 

வாகன ஓட்டிகள் போல் 

அனைவரும் கவனித்தனர் 

ஒவ்வொருவர் முகமும் பூரித்து மலர்ந்தது 

என்னவர் என்னை ஏற்றுக் கொண்டதால் 

எல்லா முகங்களிலும் மத்தாப்புச் சிரிப்பு. 

 

அடுத்தடுத்து படலங்கள் ஆரம்பமாயின 

திருமணவிழாவும் நல்ல முகூர்த்தத்தில் 

நடந்து முடிந்தது. 

பிறந்த வீட்டிலிருந்து பளபளக்கும் பாத்திரங்கள் 

பட்டுப்புடவைகள், அணிகலன்கள் 

எனப்படும் ஆபரணங்கள் 

பத்திரங்கள், பணம் காசுகள் 

எல்லாமே என் பிறந்த வீட்டிலிருந்து வந்தன. 

என் இதயத்தைத் தவிர!