பூச்சூ டாமல் நகைபோ டாமல்

அழகாய் அழகாய் வருவாள் - பெண்

தாயாய் தாரமாய் மட்டும் அல்ல

தலைவி யாகவும் வருவாள்

புதுயுகப் பெண் - பூமியின் கண்

மதிமுக மாஒரு பெருமை?

மதியூ கம்அவள் உடமை!

(பூச்சூடாமல்)

ஏணையை மட்டுமா? வானையும் அசைப்பவள்

பூமயில் மட்டுமா? புயல்களைப் புசிப்பவள்!

வலியவள் - ஆனாள்  - எளியவள்

பானையை மட்டுமா? செங்கோலும் பிடிப்பவள்

கண்ணீர் நதிகளை நீந்திக் கடப்பவள்

இனி இவள் - என்றும் - இனியவள்

"ஆண் பாதமே... சரணகதி...

எப்போதுமே... அவனே கதி..."

என்கின்ற சதிகொன்று செய்வாள் பெண் புதிதாய் விதி!

(பூச்சூடாமல்)

சிறுநடை பயின்றிடும் சிற்றிடை என்பதும்

பூச்சடை பின்னிய குயிற்பெடை என்பதும்

புகழ்மொழி - அல்ல - இகழ்மொழி

ரௌத்திரம் பழகிடும் சித்திரப் பெண்இவள்

சாத்திரக் குப்பைமேல் ஆத்திரம் கொள்பவள்!

இவள்வழி - புத்தம் - புதுவழி

மூங்கையர்க்கு... மொழியானவள்...

முடங்கள்கையில்... கழியானவள்...

தடுமாறும் ஆண்ஜாதி நடைபோட வழியானவள்!

(பூச்சூடாமல்)

வீட்டை மட்டுமா நாட்டையும் நடத்துவாள்

புகுந்தகம் ஒளிபெற புத்தகம் ஏந்துவாள்.

பெண்மணி -இந்த - கண்மணி

ஆளிலாக் காட்டிலோர் விளக்காய் நலிகிறாள்.

அகிலமே வியப்புறும் அறிவொளி ஆகுவாள்.

கதிர், மதி - இவள் - கண்ணொளி

கண்ணில்கரு... மைதீட்டினர்...

பெண் மீதும்பார்... கரி பூசினர்...

ஒளிக்கோல மாய்இனி வருவாள்பெண் என்னும் சுடர்!

(பூச்சூடாமல்)