விதைப்பின் காலங்கள் கருகி

புகைமண்டுகிறது பொய்த்த வானில்

கட்டாந்தரைகளான உழுநிலங்களில்

விதைக்கப்பட்ட வியர்வைவிதைகள்

ஏமாற்றங்களை சூல்கொள்கின்றன

கால் நரம்புகள் புடைக்க உழுத நிலத்தில்

உட்கார்ந்து கைசூப்புகின்றன

பாலற்ற உழத்தியின் குழந்தைகள்

கோபத்தை மண்வெட்டியாக்கி

வாழ்வை கொத்துகிறான் உழவன்

இளகாத ஆண்டைகளின் மனங்களென

கெட்டித்தட்டிக் கிடக்கின்றன நிலங்கள்

அவற்றின் வெடிப்புகளில் கசியும்

வெப்பக்காற்றே மூச்சாகி

அந்தியில் அலைகிறான் மறைய முடியாத

சூரியனாய்

நீரற்று பூமி வெப்பமடைந்ததற்காய்

காரணங்களைக் கண்டறிந்து

விருதுகள் வாங்கப் போயிருக்கிறார்கள் அதிகாரிகள்

சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் குப்பிகள்

கைகளில் மிளிர

- யாழன் ஆதி

 

Pin It