என்னை நீங்கியவர்கள்
ஒன்று சேர்ந்து
தீர்மானம் ஒன்றை நிறைவேற்றினார்கள்
எனக்கெதிரான அம்புகள்
தயாரிக்கவும்
என் சவக்குழிப் பூக்கள் வளர்க்கவும்
முடிவு செய்யப்பட்டது
மாதங்கள் சில கழிந்தபின்
சாம்பல்களுக்கு நடுவில்
மயங்கிக்கிடந்தது என் பீனிக்ஸ்.
இனி,
எவ்விதத்தடையுமின்றி
அவர்கள்
சத்தமிட்டு சிரிக்கலாம்.


காற்றில் அலையும் இறகு

எவர் கண்ணிலும் புலப்படாத
பறவை
நான்கு சமுத்திரங்களை
கடந்து வந்திருந்தது
கரிசல் நிறத்திலான அலகும்
செவ்வான் நிற உடலும்
கொண்டிருந்த அப்பறவை
வேம்பின் உச்சிக்கிளையில்
களைப்பாறி முடிந்தபின்
மேலேழும்பி பறக்க துவங்கியபொழுது
அதன் உடல் பிரிந்த இறகொன்று
காற்றில் கலந்தது
அக்கணத்தில்
சமுத்திரங்கள் உருமாற்றங்கொண்டு
மழைத்துளிகளாய் மண்ணில்
விழுந்து சிலிர்த்தன.

- நிலாரசிகன்

Pin It