தமிழகத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வேரூன்றத் தொடங்கிய புதுக்கவிதை வடிவம், இருபதாம் நூற்றாண்டின் பின்பகுதியில் பல்வேறு பரிமாணங்களாய் விரிவடைந்தது. பெண்ணியம், தலித்தியம், நவீனத்துவம் எனப் பல்வேறு கோணங்களில் இவ்வடிவம் மாற்றம் பெற்றது. நவீன கவிதைகள் என்பவை மரபின் தன்மையிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு மக்களின் வழக்குச் சொற்களுக்குள் எளிய உரைநடையாய் தன்னைப் பரிணமித்துக் காட்டுபவை. அனுபவங்களைச் சிறு வரி வடிவங்களில் படிமங்களாக மாற்றும் வல்லமை நவீனக் கவிதைகளுக்கு உண்டு. வாசிப்பவனுக்கு உடனடி உரையைத் தருதலும், அதைக் கொண்டு அவனாலும், அதன் தொடர்ச்சியாய்க் கவிதை செய்யும் ஆற்றலைப் பெற்றுவிட முடியும் என்னும் நம்பிக்கையைக் கொடுப்பதும் நவீன கவிதைகள் ஆகும்.

புதிய உள்ளடக்கம், புதிய உத்திகள், புதிய நோக்கம், எடுத்தாளும் முறை, சொற்களைச் சுருக்கி எழுதும் விதம், கவிதைகளின் வீரியம், வாசக வெளி போன்றவை நவீன கவிதைகளின் இலக்கணமாய் கையாளப்படுகின்றன. நவீன கவிதைகளின் தொடக்கம் ஆணாதிக்கம், பெண்விடுதலை, காதல், இயற்கை, வர்க்க வெளிப்பாடுகள், பொருளாதாரம் என்னும் பொருளில் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. அவ்வகையில், நவீனக் கவிதைகளில் காணப்படும் ஆணாதிக்கமும் பெண் விடுதலையும் பற்றி இக்கட்டுரை திறனாய்வதாக அமைகின்றது.woman liberation 1பெண்ணியம்

நவீன கவிதைகளில் பெண்ணியம் உலகெங்கும் அடைய வேண்டிய தொழிலாளர் விடுதலைக்கும், ஏகாதிபத்தியத்திலிருந்து அடையும் நாட்டு விடுதலைக்கும், சாதி, மதம், இனம், நிறப்பண்பாடு ஆகியவற்றின் வாயிலாக எழும் சமுதாய விடுதலைக்கும் அடிப்படையாக அமைவது பெண் விடுதலையே ஆகும். அதாவது ஒட்டுமொத்தமான மனித சமூக விடுதலைக்கு முதல் நிபந்தனையாக அமைவது பெண் விடுதலை. பெண்ணை அடிமையாக வைத்திருக்கின்ற சமூகம் ஒரு சுதந்திரமான சமுதாயமாக இருக்க முடியாது. பெண் விடுதலையைக் கூற வந்த பாரதிதாசன்,

“பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு

மண்ணடிமை தீர்ந்துவருதல் முயற்கொம்பே”1 (பாரதிதாசன் கவிதைகள், 2014)

என்கிறார். இதனால் நாட்டு விடுதலைக்குப் பெண்விடுதலை அவசியம் என்பதை உணர முடிகின்றது. பெண்களுக்கு உரிமை தந்த நாடே சுதந்திரநாடாகத் திகழும் என்பதில் ஐயமில்லை. நவீன கவிதையில் இதனை,

“குடும்பம் என்னும் குரூரம்

மறைக்க கற்பென்றும்

தாய்மை என்றும்

விருந்தினருக்கும் பரிசளித்தோம்

வேசி என்றும் பிரித்து வைத்தோம்”2 (தய். கந்தசாமி, 2002)

என்கின்றார் பாரதிதாசன். பெண்களுக்குரிய உரிமையை முதலில் தந்தால்தான், பின்னர் சமதர்மம் எனப்படும். சமதர்ம சமூகம் அமையும் என்பது உறுதியாகின்றது என்பதை,

“சோசியலிச பூங்காவின்

முகப்பே பெண் குலந்தான்

எங்கள் உரிமைப் பூ மலராமல்

சோசியலிசம் கனியாது தான்

கனியாது காண்”3 (தலையாரி, 1996)

என்பது மார்க்சிய கவிஞரின் கருத்தாகும். பாரதிதாசனின் வழி வந்தாலும், மார்க்சிய, திராவிட கருத்துக்களின் தாக்கத்தாலும், தமிழ்மொழி கவிதைகளில் பெண் விடுதலை குரல் ஓங்கி ஒலிப்பதை அறிய முடிகின்றது. உயர்ந்த சாதி, தாழ்ந்த சாதி, ஏழை, பணக்காரன் என வரும் அனைத்து நிலைகளிலும், பெண்கள் ஆணாதிக்கத்தினால் உரிமை இழந்தவர்கள் என்ற நிலையில் உள்ளனர்.

ஆணாதிக்கமும் பெண்ணடிமையும்

இலக்கியம் தொடங்கிய காலத்தில் இருந்து பெண்ணுரிமை, பெண் விடுதலை பேசப்பட்டாலும் நவீன இலக்கியத்தில் அது முதன்மைப்படுத்தப் பெற்றது எனலாம். பெண்ணியச் சிந்தனையும், பெண் சமத்துவமும் முக்கியமாய்க் கவிதைகளில் கையாளப்பட்டன. நவீன கவிதைகளில் வர்க்கப் போராட்டம் மற்றும் தொழிலாளர்களின் விடுதலைப் போராட்டத்தில் ஒடுக்கப்பட்ட ஏழையை முன் நிறுத்துவது போல், சாதி விடுதலைப் போராட்டத்தில் விளிம்புநிலை மக்களை முன்நிறுத்துவதைப் போல், பெண் விடுதலைப் போராட்டத்தில் விளிம்புநிலை மக்களைச் சார்ந்த பெண்களை முன்னிறுத்துகின்றார்கள்.

நவீனத்தின் பயன்பாடும், அது குறித்த சிந்தனைகளும், காலம்தோறும் மாறிக்கொண்டே உள்ளது. இதில் ஆனினமும் பெண்ணினமும் சமத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டுள்ளது. பெண்ணியத் தத்துவங்கள் பெருமை வாய்ந்தது. ஆண் சமுதாயமும் கருத்தில் கொள்ளப்பட்டு ஏற்கப்படுகிறது. இதில் உயர்ந்த சிந்தனையும், பல்நோக்குச் சிந்தனைகளும் பல்வேறு அறிஞர்கள் வாயிலாகவும் தகவல்கள் வெளிப்பட்டுள்ளன. எந்த தேசத்தில் பெண்ணினம் மதிக்கப்படுகிறதோ, அதுவே உயர்ந்த நாடு. உயர்ந்த மக்களும் அங்கே வசிப்பார்கள்.

இந்தச் சமுதாயத்தில் காலங்காலமாக ஆதிக்கம் செலுத்துவது ஆணாதிக்கமாகும். ஆணாதிக்கம் இல்லை என்றால் பெண்விடுதலை என்ற குரலுக்குத் தேவையே இல்லை. ஆணாதிக்கம் நிலவுடைமைச் சமுதாய காலக் கட்டத்தில் தொடங்கியது, அப்பொழுதே பெண் அடிமையும் தொடங்கி விட்டது.

நிலபிரபுத்துவம், முதலாளித்துவம் என்பவையே ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான். அடிமை சமுதாயத்தின் தொடக்கத்தில் ஆண் ஏராளமான கால்நடைகளும் அவற்றைக் கொடுத்து வாங்கப்பட்ட அடிமைகளும் அவனுக்குச் சமுதாயத்தில் புதிய தகுதியை ஏற்படுத்தியது. இவ்விதம் குடும்பத்திற்கு வெளியே ஏற்பட்ட இம்மாறுதல்கள், சமூகத்தில் சம உரிமையுடன் விளங்கிய பெண்ணைத் தாழ்த்தியது உணர முடிகின்றது.

தலைவியாக சமத்துவ நிலையில் இருந்தநிலை காணாமல் போயிற்று. இதனால், சமுதாய உற்பத்தியில் பெண்ணின் பங்கு பாதிக்கப்பட்டது. சமுதாய உற்பத்திப் இருந்த நிலையில், குடும்பத்திற்கு மட்டும் பயன்தரும் உழைப்பாயிற்று. நிலம் போலவே, உற்பத்தி பொருள் போல், பெண்ணும் ஆணின் உடைமைப் பொருளாகக் கருதப்பட்டாள். நிலம் கொண்டவன் நிலப்பிரபுகளாகவும், அதன் வழியில் கிடைத்த மூலதான குறிப்பைப் பெற்றவர்கள் முதலாளிகளாகவும் வளர்ந்தனர்.

இந்நிலையில்தான் மனித சமுதாயம் மறு உற்பத்தியைக் கருவியாக மதிப்பிடப்பட்ட பெண், கற்பு என்ற மற்றொரு கட்டுப்பாட்டிற்குத் தள்ளப்பட்டாள். சொத்து என்பது தனக்குப் பிறக்கும் பிள்ளைகளுக்குப் போய்ச் சேரவேண்டும் என்று நினைக்கின்ற ஆசைதான், இந்தக் கற்புக்குக் காரணமாக இருக்கின்றது. இந்தக் குடும்ப ஒடுக்குமுறைக்குக் காரணமாக இருக்கின்றது. ஆணாதிக்க சமூகத்தின் கற்பிக்கப்பட்ட கட்டுகளால் பெண்களை அடிமை செய்தனர்.

பகுத்தறிவு, வேளாண்மை செய்தல் என்பன ஆணின் குணம் என்றும், கீழ்ப்படிதல் பெண்மை, மென்மை, எதிர்ப்பின்மை, உணர்ச்சியின்மை, கற்பு முதலியவை பெண்ணின் குணம் என்றும், கற்பு கற்பிக்கப்பட்டதால் அவள் சமூகத்தில் பின்தங்கிப் போனாள். அதனால்தான், காலங்காலமாகப் பெண்கள் கல்வியைப் பெறமுடியாமல் போயிற்று என்பதைக் கருத முடிகின்றது. எனவே, பெண்களை எளிமையாக அடிமைப்படுத்தினர்.

குடும்பம், கல்வி, கற்பு, காதல், திருமணம், விவாகரத்து என வரும் கூறுகளில் பெண் அடிமைப்படுத்தப் படுகின்றாள் என்பதை,

 “அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு”4                                                     (பாரதிதாசன் கவிதைகள், 2014)

“பெண்ணிற்கு அழகு எதிர் பேசாதிருத்தல்”5                              (கி.வ. ஜகந்நாதன், 2006)

“கணவனே கண்கண்ட தெய்வம்”6                (கி.வ. ஜகந்நாதன், 2006)

“கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்

 மெல்லியற் பொறையும் நிறையும் வல்லிதின்... ..”7             (இளம்பூரணர், 2019)

என்ற பாடல் வரிகள், அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு, பெண்ணின் குணம் என வரும் ஆணாதிக்கப் புனைவுகளும் இதனைத் தெளிவுபடுத்துகின்றன.

பெண் விடுதலைக் கருத்துகள்

சமூகத்தில் ஆண்களின் உரிமையாக பெண்களின் உணர்வுகள் மாற்றப்பட்டிருந்தன. வீரமும் விடுதலையும் ஆண்களுக்கு உரியது என்று உரிமை கொண்டாடினர். பெண்கள் தன்னையும் தன் உரிமைகளையும் உணரும் அளவிற்கு எந்த ஒரு சூழலையும், ஆணாதிக்க சமூகமே பூட்டி வைக்கவில்லை. பெண், வீரமும் விடுதலை உணர்வும் கொண்டு போராடினால்தான் பெண்களுக்கு விடுதலை கிட்டும் என்பதைக் கீழ்க்கண்ட வரிகள் புலப்படுத்துகின்றன.

“பெண்ணை உள்ளே

வைத்து பூட்டிவிட்டு

அவளிடமே சாவியையும் கொடுத்து

விடுதலை கொடுத்து விட்டதாக

வீராப்பு வேறு...”8 (தய். கந்தசாமி, 2002)

என்கின்றார் நவீன கவிஞர். ஆணாதிக்க சமுதாயம் உருவாக்கி வைத்திருக்கின்ற கருத்துப் புனைவுகளைப் பெண்ணடிமைக்குக் காரணம் என்பதைச் சுட்டிக் காட்டுகின்றார். ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடப்பது உரிமைப் போராட்டம். ஆணை எதிரியாகக் கருதுவதோடு அவர்தான் மேன்மையை முற்றிலுமாக நீக்குவது அவசியம். எனவே, ஆணாதிக்கத்தை எதிர்த்து அவர்கள் உருவாக்குகின்ற குடும்பம் முதலான கெடுதல்களைப் பெரிதும் எதிர்த்து பெண்கள் போராட வேண்டும் என்ற தீவிர பெண்ணியம் பெண்களுக்காகப் போராடும் நவீன பெண் கவிஞர்களின் கருத்துக்கு வலிமை சேர்க்கிறது.

பெண்கள் அடிமைகளாக அன்றி ஓர் உயிராகக் கருதப்பட வேண்டும் என்பது தீவிர பெண்ணியத்தின் முதல் குரலாகும். சமுதாயத்தில் பெண்கள் அடிப்படையான உரிமைகளையும் இழந்து தவிக்கின்றனர். உணவு, உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு, உடை, உடலுக்குச் சிறிதும் காற்றுப் புகாமல் இழுத்துப் போர்த்துதல், இருப்பிடம்- படி தாண்டாது இருத்தல், கல்வி, சொத்து, காதல், திருமணம் என வரும் இவற்றில் பெண்களின் சொந்த விருப்பங்கள் தவிர்க்கப்படுகின்றன. இங்கெல்லாம் பெண்களுக்குப் பேச்சுரிமை மறுக்கப்படுகின்றன. சமூகத்தில் இப்படி அடிப்படை உரிமைகளை இழந்து வாழும் பெண்களின் அவல நிலைகளைக் கண்ட நவீன கவிஞர்.

“வீசி எறிந்த சேலையில்

மடிந்த அம்மாவின் மூச்சு

எதிர்காலத்தின் தறிகளில்

கண்ணீரை நெய்கிறது..

கோணிச் சிதைந்த

முகத்தசைகளின் திருகல்களின்

கிளம்புகின்றது

அழுகையின் வெடிச்சத்தம்...”9 (யாழன் ஆதி, 2004)

என்று குறிப்பிடுகின்றார். பெண்கள் தனக்கே சொந்தமான, அடிப்படை உரிமைகளைக்கூட இழந்துவிட்டார்கள் என்று பொருள் கூறும் பொழுது, சமுதாயத்தில் பெண்கள் மனித இனமாக மதிக்கப்படவில்லை என்று கருத்துதான் வெளிப்படுகின்றன. “இந்து மக்களால் போற்றப்படும் மனுதர்ம சாஸ்திரத்தில், பெண்கள் கல்வியில் இருந்து விலக்களிக்கப்பட்டவள் என்றும், இழிபிறப்பாகவும் கருதப்பட்டிருக்கின்றாள்” (க.ப. அறவாணன், 1999) என்று வரும் க.ப.அறவாணனின் கருத்து பெண்ணடிமையை உறுதி செய்கின்றது.

பெண்களை அடிமைகளாகக் கருதுதல்

சமுதாயத்தில் பெண்கள் எப்போதும் அடிமைகளாகவே கருதப்பட்டு வந்தனர். கற்பு பெண்களை அடிமைகளாகவே வைத்திருக்க உதவி செய்கின்றது. ஆரியர் வருகைக்குப் பின் தமிழகத்தில் பெண்களுக்கான உரிமை முற்றிலுமாக அழிந்துவிட்டது. 'தாலி கட்டும் முறை ஆணுக்கும், பெண்ணுக்குமான நீதிகள் வேறு வேறு என்பதை உணர்த்துகின்றது’ என்ற தந்தை பெரியாரின் கருத்துக்கள் பெண்கள் மீதான ஆணாதிக்கத்தின் காரணமாக உரிமை இழந்து வாழ்கின்ற நிலைமையைக் காட்டுகின்றது.

நவீன கவிதைகள் பெண்ணிடமே சமுதாயக் காலகட்டத்தில் தொடங்கிவிட்டது என்பது மார்க்சியவாதிகள் அறிந்தது ஆகும். பழங்காலத்தில் பெண் விடுதலை என்பது குடும்பம், கற்பு என்ற கூறுகளில் அதிகமாகக் காணப்பட்டது.

 தமிழ்ச் சமுதாயத்தைப் பொறுத்தவரையில் கற்பு என்பது பெண்களின் அடிமைக் கூறாகவே உணரப்படாமல் இருந்தது. தமிழ்ச் சமுதாயத்தில் கல்வி, கேள்வி, அரசியல், பல்வேறு துறைகளில் பெண்கள் சிறந்த நிலையில், பல்வேறு உரிமைகளுடன் பெண்கள் வாழ்ந்தனர் என்பதைக் காட்டுகின்றது. தமிழ்நாட்டில் ஆணாதிக்கம் என்பது ஆரியர் வந்த பின்னர் நிகழ்ந்துள்ளது என்பதை,

“வெட்கம் கெட்டுப் பார்க்க

சாதி வெறியும்

காம வெறியும்

விரைத்த பொழுதில்

பிரியங்காவும் சுரேகாவும்

ஊர் பொதுவில் பலியிடப்பட்டனர்...

அவர்கள் யோனிகளில்

இந்த தேசத்தின் மானம்

மூங்கில் குச்சிகளாய்

சொருகப்பட்டுக் கிடந்தது...”10 (அரச முருகு பாண்டியன், 2009)

என்னும் நவீன கவிதை வாயிலாகக் குறிப்பிடுகின்றார். அதாவது அக்காலத்தில் பெண்கள் சிறந்த மாண்புடையவராகத் தீதின்றி விடுதலையுடன் வாழ்ந்தனர் என்பது நவீன கவிஞர்களின் கருத்தாகும். சாதி வேற்றுமை, பெண்ணடிமை போன்ற சமூக சீர்கேடுகளை விளைவித்தது மனுதர்மம் என்பதில் ஐயமில்லை.

பெண் விடுதலை

நவீன கவிதைகளில் வரும் பெண், ‘ஏழைப் பெண்’ பல்லாண்டு காலமாகத் துன்பமே சுமந்து துயரமே உருவாய் மாறிவிட்ட ‘அபலை’ ஆவாள். உணவு, உடை, இருப்பிடம், பொருள், காதல், கற்பு, திருமணம், குடும்பம், பிள்ளை வளர்ப்பு, என நீண்டுகொண்டே செல்லும் வாழ்க்கையின் தேவைகளுக்காகப் போராடும் ஒடுக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண். எனவே, அவளது விடுதலையை முதலாளித்துவ ஆணாதிக்கத்தில் இருந்தும் சமுதாய ஆதிக்கத்திலிருந்தும் பெற வேண்டியதாக அமைந்துள்ளது.

பண்ணையார்கள், முதலாளிகள் என வரும் மேல்தட்டு வர்க்கத்தினிடமிருந்து பொருளாதார, அரசியல், விடுதலையும் சமஉரிமையும் பெறவேண்டும். ஒடுக்கப்பட்ட இனம் உயரவேண்டும் என்ற குறிக்கோளுக்காகப் படைக்கப்பட்ட நவீன கவிதைகளில் வல்லுறவு செய்யப்பட்டவளின் வலி நிரம்பிய கடைசி மூச்சு வெளிப்படும் விடுதலைப் போராட்டம் கவிதை வரிகளில் வெளிப்படுகின்றது. இதனை,

“பசியுற்ற புலியின்

வெறிகொண்ட வேட்டையென

நுகரப்படும் பெருங்காமம்

பிறப்புறுப்பு தைக்கப்பட்ட

பழங்குடிப் பெண்ணொருத்தியின்

ரத்தமாய் வெளியேறும் சிறுநீர்

ஓடும் பேருந்தில்

வல்லுறவு செய்யப்பட்டவளின்

வாதை நிரம்பிய

கடைசி மூச்சு....”11 (சுகிர்தராணி, 2016)

என, கட்டாயத் திருமணம், கற்பழிப்பு, பெண்ணடிமை போன்ற ஆணாதிக்கக் கொடுமைகளிலிருந்து பெண்விடுதலை அடையப் போராடுகின்றாள். உழைப்புச் சுரண்டல், அவமதிப்பு போன்ற முதலாளித்துவப் பொருளாதார, அரசியல் ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற சமுதாயத்தோடு சேர்ந்து போராடித் துடிக்கின்றாள். கூர்ந்து நோக்குகையில் இந்த இரண்டு வகைப் போராட்டமும் முதலாளித்துவ ஆணாதிக்கத்தின் காரணமாக எழுந்தவை என்பது நமக்குப் புரிகின்றது. பாரதி இதனை,

“காதல் காதல் காதல்

காதல் போயிற், காதல் போயிற்

சாதல் சாதல் சாதல்” (பாரதியார் கவிதைகள், 2014)

என்கின்றார். காதலிக்கும் உரிமை ஆண் பெண் இருபாலர்க்கும் உண்டு. காதல் என்பது புனிதம் என்பதால், காதலிக்கும் காதலர்களும் புனிதர்களாக உள்ளனர்.

ஆண், பெண் என்ற வேறுபாட்டு உணர்வைக் காதல் மறைத்துவிடுகின்றது. இந்நிலையில்,

“காதலர் உள்ளம் தொட்டுச் சுவைத்தது காதலை

மலரும் மனமும் போல் சேர்த்தனர்

பாழும் உலகில் மெய்க்காதலர்கள்...”12       (இரகுதேவன், 2016)

என்று காதலின் தன்மையைச் சுட்டுகின்றார். காதலிலும் பெண்கள் ஆளப்படுவதாகும். ஆண்கள் ஆளுகின்றவர்களாகவும் உள்ளனர். காதல் என்பது ஆண் வர்க்கத்தினால் ஏற்பட்ட புனைவுகள் ஒன்றாக உள்ளது. ஆகவே, காதலில் ஆண் வர்க்கம் ஆளுகின்றவனாகவே கவிதை அமைத்துள்ளது.

பெண்களின் உண்மையான உணர்வுகள்

சமூகத்தில் பெண்களின் உண்மையான உணர்வுகளும் அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என ஆண்களால் கற்பிக்கப்பட்ட கருத்துக்களால் மறைக்கப் பட்டுள்ளது. இதனால்தான், தீவிரப் பெண்ணியவாதிகள் ஆண் மேலாண்மையை முழுவதுமாகப் போக்க பாலியல் ரீதியான புரட்சித் தேவதை என்றனர். பெண் தன் பாலியல் உணர்வுகளை வெளிக்காட்டாமல் இருப்பது நவீன கவிதைகள் காட்டுகின்றது.

சமுதாயத்திலிருந்து பெண்விடுதலை பெறமுடியாத, மீறமுடியாத நிலையிலே உள்ளனர். ஆகவே, பெண்களுக்கு விடுதலை தேடும் இந்தியப் பெண்ணியமானது, இந்து மதத்தையும் அதன் ஏற்றத்தாழ்வான, சாதி அமைப்பையும் கணக்கில் கொள்வது இன்றியமையாதது ஆகின்றது. பெண்கள் ஈனப்பிறவியாகக் கருதப்பட்ட சமுதாயத்தில் ஏழைப் பெண்ணின் நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு வந்த நிலையில், பெண்கள் மனம் புண்படுத்தப்பட்ட நிலையிலே வாழ்ந்து வருகின்றனர். என்பதனை,

“இருள் சூழ்ந்த சாமத்தில்

பேரிடியாய் என்மீது

படர்ந்து கொண்ட

வெறி நாயே...

நான் எட்டி உதைத்த

பாத குருடுகளில் காயப்படுத்தி இருக்கும்

நீ பொத்துக்கொண்டோடிய

உன் குறி”13 (அபிமானி. 2004)

என நவீன கவிதை குறிப்பிடுகின்றது.

உலகில் எல்லா உயிர்களுக்கும் இரண்டு உணர்வுகளின் அடிப்படையாகவும் அமைந்துள்ளனர். அவற்றில் ஒன்று பசி, இன்னொன்று காமம். இவை இரண்டும் எல்லா உயிர்களுக்கும் அடிப்படையான முதல் உணர்வுகளாக உள்ளன. காம உணர்வின் விளைவே காதல் ஆகும். மனித இனத்தின் காதலுக்குத் தடை போட்டது கற்பு என்ற ஒன்றாகும். கற்பு என்ற ஒன்றே பெண்ணின் அடிமைக்கூறுகள் யாவற்றிற்கும் தலைமையானது. இத்தகைய கற்பு என்ற முதல்தடை உடலாலும் குணத்தாலும் வளர்ந்த பெண்ணிடம் ஏற்பட்ட காதலுக்குத் தடை போட்டதாகும்.

முடிவுரை

சொந்த உரிமைகளை இழந்திடும் பெண், ஆணுக்கு இணையான உரிமைகளைப் பெற்று சமூகத்தில் ஆணும் பெண்ணும் சமமாக வாழவேண்டும் என்பதை நவீன கவிதை உணர்த்துகின்றன.

சமூக விடுதலைக்கு, பெண் விடுதலை அடிப்படையாக உள்ளது என்பதை உலகம் அறிய வேண்டும். பெண்ணின் வெறுப்பு விருப்புகள் மதிக்கப்படாமல், பெண்ணுக்குப் பாலியல் விடுதலை இல்லை என்பதை நவீன கவிதைகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆணாதிக்கம் சமுதாயச் சிக்கல்களாக மாறுவதையும் பெண்ணிய விடுதலை சமுதாய விடுதலையாக ஒன்றுக்கொன்று தொடர்புடையதைக் காட்டி பெண்விடுதலையைப் பேசுகின்றனர் நவீன கவிஞர்கள்.

               பெண் என்பதால் தாழ்வாக எண்ணாமல் எவராக இருந்தாலும் எதிர்த்துப் போராடும் குணம் வேண்டும் என்ற கருத்து இங்கே அமைகின்றது. பெண்ணின் விடுதலைக்கு ஆணாதிக்கத்தை எதிர்த்து போராட வேண்டும் என்ற கருத்து அடிப்படையாக அமைகின்றது என்பதில் ஐயமில்லை என்பதை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகின்றது.

துணைநூற் பட்டியல்

1.            பாரதிதாசன் கவிதைகள், நர்மதா பதிப்பகம், சென்னை, தொகுதி-1, ப.125, எட்டாம் பதிப்பு-2014

2.            தய்.கந்தசாமி, தனிஇருட்டு, விடியல் பதிப்பகம், கோவை, ப.16, முதற்பதிப்பு-2002

3.            தலையாரி, எங்கே எமது முகம், பஃறுளி பதிப்பகம், சென்னை,ப.85, முதற்பதிப்பு-1996

4.            இளம்பூரணர் உரை, தொல்காப்பியம், பொருளதிகாரம், கற்பியல், நூ.1099, கௌரா பதிப்பகம், சென்னை, முதற்பதிப்பு-2018

5.            யாழன் ஆதி, செவிப்பறை, புத்தா வெளியீட்டகம், கோவை,ப.56, முதற்பதிப்பு-2004

6.            க.ப.அறவாணன், பெண்ணடிமைத்தனமும், வேரும்விழுதும், ப.13 தமிழ்க்கோட்டம் வெளியீடு, சென்னை, முதற்பதிப்பு, 1999

7.            அரச முருகு பாண்டியன், கயர்லாஞ்சி இந்தியாவில்தான் இருக்கிறது, ப.23, தமிழ்க் கூடம், சென்னை, முதற்பதிப்பு, 2009

8.            சுகிர்தராணி, இப்படிக்கு ஏவாள், காலச்சுவடு பதிப்பகம், நாகர்கோவில், ப.33 முதற்பதிப்பு, 2016

9.            பாரதியார் கவிதைகள், குயில்பாட்டு, நர்மதா பதிப்பகம், சென்னை, தொகுதி -1 பா.8 எட்டாம் பதிப்பு-2014

- த.செந்தமிழ், முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்

Pin It