2019 பிப்ரவரி மாதம் தமிழ் நாட்டின் பொள்ளாச்சியில் கேட்டது “அண்ணா அடிக்காதீங்க அண்ணா” என்று ஒரு இளம்பெண்ணின் கதறல். அவரைப் போன்று அண்ணனாக நினைத்து நம்பி போன பல பள்ளி மற்றும் கல்லூரிப் பெண்களை கூட்டுச் சதி தீட்டி, தனியே வரச் செய்து, கூட்டாக வன்முறையால் பாலியல் குற்றங்கள் செய்ததோடு மட்டுமல்லாமல், அதை காணொளியாகப் பதிவு செய்து இருக்கின்றனர் அன்றைய அதிகார வர்க்கத்தினர்.

pollachi criminalsபாதிக்கப்பட்ட ஒரு பெண் தன் குடும்பத்தின் துணையோடு துணிச்சலாக காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து 7 பெண்கள் புகார் அளித்தனர்.

இதில் பல ஆளுங்கட்சிப் புள்ளிகளின் குடும்ப “வாரிசுகள்” பெயர்கள் அடிபடவே வழக்கு பதியாமலும், புகார் அளித்த மாணவிக்கும், ஊக்கமளித்த அவருடைய அண்ணனையும் அச்சுறுத்தியும் பார்த்தனர் அன்றைய ஆளும் கட்சியினர். வழக்கு கொடுத்த பெண்ணின் பெயரைக் கூட சட்டத்துக்குப் புறம்பாக ஊடகங்களில் கசிய விட்டனர்.

தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, கம்யூனிஸ்ட் கட்சிகள், அகில இந்திய மாதர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு பெண்கள் அமைப்புகள் களத்தில் இறங்கி, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆதரவாகப் போராடியதால் வழக்கை சி.பி.ஐக்கு மாற்றினார்

அன்றைய முதலமைச்சர் எடப்பாடியார். அடுத்து ஆட்சிக்கு தி.மு.க வரும். அப்போது தவறிழைக்கப்பட்டப் பெண்களுக்கு நீதியும், குற்றவாளிகளுக்குத் தண்டனையும் பெற்றுத் தரப்படும் என உறுதி அளித்தார் அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின்.

சி.பி.ஐ இந்த வழக்கை மிகுந்த கவனத்துடனும், விஞ்ஞானப் பூர்வமாகவும் ஆதாரங்களைத் திரட்டி, 13 பிரிவிகளின் கீழ் வழக்கு பதிவு செய்து மூன்று குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்தது. மொத்தம் 48 சாட்சிகள், 206 ஆவணங்கள் ஆராயப்பட்டன. பாதிக்கப்பட்ட 8 பெண்களின் எந்தத் தகவலும் வெளியே கசியாமலும், அவர்களுடைய தனியுரிமைக்கும், பாதுகாப்புக்கும், நற்பெயருக்கும் எந்த களங்கமும் ஏற்படாமலும் வாக்குமூலங்களை சேகரித்தது. குற்றஞ் சாட்டப்பட்டுக் கைதான இளைஞர்களை ஊடக சலசலப்புகள் இல்லாமல், காணொளி வாயிலாகவே விசாரணை செய்து, 50 கேள்விகளுக்கு அவர்களிடம் பதில்கள் பெறப்பட்டது. குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவருக்கும் இந்த 6 ஆண்டுகள் ஜாமீன் வழங்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட ஒரு பெண்கூட பிறழ் சாட்சியாக மாறவில்லை. இந்திய அளவில் நிர்பயா வழக்குக்குப் பிறகு இத்தனை ரகசியமாகவும், இத்தனை நெடியதாகவும் நடத்தப்பட்டது இந்த வழக்குதான் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வளவோ அழுத்தங்கள், தலையீடுகள் இருந்திருந்தாலும் கோவை சி.பி.ஐ. நீதிமன்றத்தின் நீதியரசர் நந்தினி தேவி அவர்கள், கைதான 9 பேரும் குற்றவாளிகள் என அறிவித்ததுடன், அவர்கள் அனைவருக்கும் சாகும்வரை ஆயுள் சிறை என்று அறிவித்தார் தன் தீர்ப்பை. அத்துடன் ரூ.85 லட்சம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு வழங்கவும் தீர்ப்பளித்து இருக்கிறார்.

 ஆண்ட சாதி, ஆண் சாதி, அமைச்சர் சாதி, ஆளுங்கட்சி சாதி என்றெல்லாம் இறுமாப்பாக ஆண் பிள்ளைகளை வளர்க்காமல், சக பெண்களையும் மனிதர்களாக, எல்லா மனிதர்களையும் பிறப்பு, தொழில் பேதங்களின்றி சமமாக நடத்தவும், இளமையில் கல்வியிலும், நற்பண்புகளிலும் பிள்ளைகளை வளர்க்க, வளர ஒரு பாடமாக இந்த வழக்கின் தீர்ப்பு அமையும் என நம்பலாம். தமிழ்நாடு பெண்கல்வியில், பெண்களின் தொழில் வாய்ப்பில், பணி எண்ணிக்கையில் என எல்லா முனைகளிலும் முன்னோடியாக இருக்க, பெண்களின் பாதுகாப்பிலும் உறுதியாக இருக்கும் என்ற ஒளிமயமான நம்பிக்கையை விதைத்திருக்கிறது நீதிமன்றம். நாமும் பாராட்டுவோம்! நீதியின் பக்கம் நிற்போம்!

- சாரதாதேவி