புனல் மிதக்கும் நாவாய்கள்
கரையெங்கும் மலர்ந்து நிற்கும்
பஃறுளி ஆற்றின் முகத்துவாரத்தில்
பாய்விரித்து கடல் ஏகிய
தலைவனின் இறுதி நிமிடங்களில்
விரிகிறது கடல்கொள்ளும் கபாடபுரம்
புன்னைக்கு பால் ஊற்றும் தலைவி
தோழிக்கு சொல்லும் கூற்றில்
அலைகள் உறங்கும் கடலிலிருந்து
பசலையும் பெருவிளிப்புகளும்
கலந்த குரலில் யாழ் ஒன்று
தனிமொழியில் பேசுகிறது
யுகம் யுகமாய்
உப்பின் கரிப்புடைய இசையை.
குளிர்சாதனப்பெட்டியில் இருந்து
சமைக்க எடுத்த மீனில்
ஒட்டி இருந்த நரம்பை மீட்டினேன்
வீட்டினுள் அலையடிக்க
விரிந்து பரந்தது கடல்.
- ஆர்.வி.சந்திரசேகர்
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
அகநாழிகை - அக்டோபர் 2009
அகழ்வின் குறிப்பிலிருந்து
- விவரங்கள்
- ஆர்.வி.சந்திரசேகர்
- பிரிவு: அகநாழிகை - அக்டோபர் 2009