வந்தமர்ந்தப் பறவையை
வரைந்து முடிக்கிறேன்
வெளியின் வெளியில்
கீச்... கீச்சென சத்தம்.

அச்சத்தத்தில் நுட்பமாய் நுழைகையில்
ஆழமாய்ப் புலப்பட்டது
வரைந்தது தாய்ப்பறவை.

குஞ்சுகளின் சத்தத்தைக் கேட்டதும்
தூரிகை குழைந்து மன்றாடுகிறது
என் வளைவுகளுக்கு வளையுமது
என்னிடம் முதல்முறை வரைகிறது
ஜீவகாருண்யமான விண்ணப்பம்.

நிபந்தனையற்ற அனுமதியில்
அதுவாய் வரைந்ததில்
வெளியின் வெளியில் கேட்ட
குஞ்சுகளின் சத்தம்
தெளிவின் தெளிவில் தெரிந்தது
உள் நுழைந்து நோக்கிய ஓவியம்
கண்முன் கிடந்தது காட்சியாய்.

தாய்ப் பறவையின் அலகிலிருந்தது
தேவைக்கேற்ற இரை.

-துரை. நந்தகுமார்

Pin It