அந்தி நேரத்தை வரையும்
அரசமரமும் ஆலமரமும்
கெச்...கெச்...கெச் என்று
விளக்கேற்றச் சொல்லி
ஊருக்கு விரைவுச் செய்தி
அனுப்பிக் கொண்டிருந்தன..

வீட்டின் கதவுகள் எல்லாம்
கருக்கலிடம் கதை கதையாய்க் கிசுகிசுத்தன.
அதில் வயசுப் பொண்ணுகளின் வாலிபம்
மின்னின..

கதை மினுக்கமத்தனையும்
அவர்களின் தடைபடாத ஏக்க மூச்சில்
சிதைந்து விடக் கூடாதே என்று
கதிகலங்கிக் கத்தலாயின சுவர்க்கோழிகள்..

காற்று கலைத்து விளையாடும்
கைக்கடங்காத கொண்டை முடியை
அள்ளி அள்ளி முடிந்து கொண்டிருந்தார்
கொல்லுப் பட்டறை மேட்டில் அமர்ந்தே
அரைப் பார்வையில்
அறுபத்தஞ்சு ஆண்டுகளையும்
ஒக்கிட்டு நிமிர்த்திய பாப்பாசாரி...

அவர் வாயில் குதப்பியிருக்கும்
வெற்றிலை சொல்லும்
ஊர்ப் பட்ட புராணங்களை..

மேய்ச்சலில் இருந்து திரும்பிய
நொண்டிக் கோமதி அக்காளின்
வெள்ளாட்டு வீரர் கூட்டத்தில்
இரண்டொன்று பட்டறை ஓலையைப்
பதம் பார்த்துக் கடந்தன..

விட்டு விட்டு அம்மி தட்டும் சத்தம்
கேட்டு ஊர் அம்மனுக்கு உள் நாக்கில்
எக்கச்சக்கமாய் எச்சில் ஊறியது..

பாதிக்கும் மேல் ஊர் பாய் உதறுவதை
பால் நிலா படம் பிடித்து ரசித்தது...

பண்டாரம் பொஞ்சாதி காவேரி
பத்து அய்யர் வீட்டில் வேலை முடித்து
சேலைத் தலைப்பால் மூடிச் சுமந்து வந்த
வெஞ்சன வாசம் எல்லாக் கதவுகளையும்
பலமாய்த் தட்டி பந்தி வைத்தது..

பூசாரி சைக்கிளின் லொடலொடப்பு
ஒடுங்கும் நேரமும்,
வரிக்காரர்களின் சீட்டுக்கட்டை
வெட்டும், கலைக்கும் சத்தமும்
அம்மனின் வலக்கர சூலாயுதம்
இடப் பக்கம் மாறுவதும்
சொல்லி வைத்தது போல்
ஒரே நேரத்தில் நடக்கிறது...

தன் வீட்டு முற்றத்தில் நின்று கொண்டு,
மேற்கே அம்மன் கோவில் திசைக்கு
நின்ற வாக்கிலும்,
முட்டும் போட்டு விழுந்தும்
கட்ட சண்முகத் தேவரின்
இரண்டாவது மருமகளுக்கு
நாள் நின்று இன்றோடு எட்டு வெள்ளியாம்...

"பிழைச்சிக் கிடந்தா ஒம்பேரையே
பிள்ளைக்கு விடுதேன் ஆத்தா" என்று
வணங்கி எழவும்...
பக்கத்து வீட்டு பசுமாட்டுக் கழுத்து மணி,
"பலே பல்லு ஆறுமுகம்" என்றிசைக்க...

வீட்டு முற்றத்தில் சட்டி பாத்திர பளபளப்பு
வட்டமாய் வரைந்த நிலாச்சோறு
வளையத்தில் சோறும் கறியும்
சொக்கனை கொக்கி போட்டு இழுக்க..

நிலா வெளிச்சம் நின்று கொண்டே
சோற்றுக்கு உப்பிட்டு தலை தடவி
சாப்பிடச் சொல்ல...

தெரு நாய்களின் ஊளைகளை
வரி வரியாய் நின்ற பசுமரங்கள்
வடிகட்டி பாசுரங்களாய்
மடைமாற்றி மதுர கீதமாக்கிவிட...

உறங்கும் ஊரே ஒரு ஐலேசமாய்
எங்கள் அம்மா ஊர்
இலங்கியது அறுபதுகளில்...

ஈருவலிதான் இவையோவென
செல் டவரைக் கண்டு மிரண்டு
காற்று ஓடி ஒளியும் இப்போது
ஊரைப் பற்றி எதுவும் கேட்காதீர்கள்..

- கண்ணன் புலமி

Pin It