தமிழ் நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் அரசு 2021 மே மாதம் 7ஆம் நாள் பதவியேற்றது. அன்று முதல் இந்நாள் வரை தமிழ்நாட்டு மகளிருக்கு வந்தது நல்வாழ்வு!

அடுத்த நாளான மே 8 அன்று முதலமைச்சர் கையெழுத்திட்ட முதல் திட்டம் பெண்களுக்கான கட்டணமில்லாப் பேருந்துப் பயணத் திட்டம். தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் 30 கிலோமீட்டர் வரை அரசுப் பேருந்துகளில் மகளிர் கட்டணமில்லாமல் பயணிக்கலாம். முதலில் வேலைக்குப் போகும் பெண்கள் என இருந்தது பிறகு தளர்த்தப்பட்டு எல்லாப் பெண்களுக்கும் என விரிவுபடுத்தப்பட்டது. இதில் திருநங்கைகளும் அடங்குவர். ஆண்டுக்கு 1200 கோடி என போக்குவரத்துக் கழகங்களுக்கு நட்டம் ஈடுகட்டத் திட்டச் செலவும் ஒதுக்கப்பட்டது. 18 லட்சம் மகளிர் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டது. உள்ளபடியே எண்ணிக்கை கூடியிருக்குமே ஒழியக் குறைய வாய்ப்பில்லை. இத்திட்டத்தால் பெண்கள் அடைந்த போக்குவரத்தும், அவர்களுடைய சேமிப்பும், அவர்களுடைய பயண வசதியும் வரலாறு!

அடுத்து, 2022இல் செப்டம்பர் மாதம் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் படித்த மாணவிகளுக்கான உயர்கல்விக்கு உதவும் திட்டம்! பெண்களுக்கு மேற்படிப்பை வலியுறுத்தும், பட்டப் படிப்பு முடிக்கும் வரை மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000/- வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தை நடைமுறைப் படுத்தினார் முதல்வர். அதன் பயனாளிகள் 6 லட்சம் மாணவிகள்! திட்ட ஒதிக்கீடு ரூ.698 கோடிகள்!

அதே செப்டம்பர் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டி திட்டத்தைக் கொண்டுவந்து ஏழை, உழைக்கும் வர்க்கத் தாய்மார்களின் மனதில் பால்வார்த்தார் முதலமைச்சர். தங்கள் குழந்தைகளுக்குக் காலை எழுந்து உணவு தயாரித்துத் தானும் வேலைக்கு ஓடோடும் பெண்களுக்கு எவ்வளவு பெரிய உதவி அது! அன்றாடம் காலை எழுந்து ரூபாய்10,20க்கு கூட வழியில்லாமல், குழந்தைகளைப் பட்டினியாகப் பள்ளிக்கு அனுப்பும் ஏழைத் தாய்மார்களின் கண்கள் ஆனந்தத்தால் கசிந்தன முதல்வரின் இந்தத் திட்டத்தால்! 31000 அரசுப் பள்ளிகளில் பயிலும் 17 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் திட்டம் போய்ச் சேருகிறது. ரூ.404 கோடி ஆண்டுத் திட்டச் செலவு ஒதுக்கப்படுகிறது.

நடப்பு ஆண்டான 2023இல் சொன்னபடி கொண்டு வந்துவிட்டார் மகளிர் உரிமைத் தொகையை, நம் முதல்வர்! இணையர்களே அங்கீகரிக்க மறுக்கும் குடும்பப் பெண்களின் உழைப்பை, உரிமையை ஓர்அரசு அங்கீகரித்து, அவர்களுடைய சொந்தத் தேவைகளுக்கென மாதம் ரூ.1000/- கொடுப்பது இத்திட்டம். 1.63 கோடி விண்ணப்பங்கள் வந்து அதில் 1.06 கோடி விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு எல்லோர் கணக்குகளிலும் போய்ச் சேர்ந்துவிட்டது உரிமைத் தொகை! ஆண்டுக்கு ரூ.12000 கோடி திட்டச் செலவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் இது நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இப்படி மகளிரின் உடல் நலன், மன நலன், குடும்ப நலன், சுகாதாரம், விடுதலை உணர்வு என எல்லாத் தளங்களிலும் அவர்களுடைய தேவைகளைச் சிந்தித்து, உயர்வான திட்டங்கள் தீட்டி, தமிழ்நாட்டு முதல்வர் சாதித்து வருகிறார்!

அப்படியே கொஞ்சம் ஒன்றியத்துக்குப் போவோம்!

செப்டம்பர் மாதம் 18 முதல் 22 வரை நாடாளுமன்றச் சிறப்புக் கூட்டத் தொடர். அப்படி என்ன அவசரம் வந்துவிட்டது? தலை போகும் அவசரமோ? அந்நிய நாட்டுப் படையெடுப்போ? மணிப்பூர் கலவரமோ? கலவரம் நடந்தபோதே வெளிநாட்டுச் சுற்றுலாவில் இருந்தார் மோடி? “இந்தியா” கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் சோனியா அம்மையார் எழுதிக் கேட்டே விட்டார்கள், என்ன நிரல்? எதற்காக சிறப்புக் கூட்டம் என்று. ஏதோ பசப்பினார்கள், நான்கு மசோதாக்கள் என்று. ஆனால் திட்டம் வேறாக அல்லவா இருந்திருக்கிறது?

மகளிருக்கு 33% இடஒதுக்கீடு! மோடிக்கு 9 ஆண்டுகள் கழித்து, தேர்தல் நெருங்க, நெருங்க நாட்டின் பெண்கள் மீதெல்லாம் பார்வை திரும்புகிறது பாருங்கள்!

அதாவது, தொகுதி மறுசீரமைப்பு செய்யாமல், சாதி வாரிக் கணக்கெடுப்பு நடத்தாமல் கொண்டு வர முடியாது என நிபந்தனைகளை நுழைத்துவிட்டு, மகளிர் இடஒதிக்கீடு மசோதாவை சிறப்பு நாடாளுமன்றக் கூட்டம் கூட்டி சட்டம் ஆக்கி விடுவார்களாம்! அடுத்த நாடாளுமன்றம் இல்லை, அதற்கடுத்த நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற முடியாத சட்டத்திற்கு என்னே ஒரு அலங்கார, அரங்கேற்ற நாடகம்? எப்படியான பூச்சுற்றல்?

சாதிக்கிறார் ஸ்டாலின்! ஏமாற்றுகிறார் மோடி!

- சாரதாதேவி

Pin It