ஆர்.எஸ்.எஸ்.க்கு எதிராக பண்பாட்டு தளத்திலும் போராட வேண்டும்
ஆர்.எஸ்.எஸ். கருத்தியல்களை எதிர்கொள்ள பண்பாட்டு தளத்திலும் வேலை செய்ய வேண்டும் என்பதை தி.மு.க. உணர்ந்திருக்கிறது என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். பேட்டியிலிருந்து சில பகுதிகள்.
பொதுவாக, திமுக - அதிமுக இரண்டுமே தேர்தல்களை நடைமுறைரீதியாக அணுகுவதும், தேர்தல் களில் நிர்வாகரீதியிலான விஷயங்களைப் பேசுவ துமே வழக்கம். மாறாக, இந்தத் தேர்தலைச் சித்தாந்தப் போராக நீங்கள் குறிப்பிடுகிறீர்கள். என்ன காரணம்?
இது திமுகவுக்கும் அதிமுகவுக்கும் இடையிலான தேர்தல் இல்லை; தமிழ் மக்களுக்கும் பாசிச சக்தி களுக்கும் இடையில நடக்குற யுத்தங்கிறதாலதான் அப்படிக் குறிப்பிடுறேன்.
இந்திய ஒன்றியத்துல ஏற்கெனவே மாநிலங்களுக்கு இருக்கிற அதிகாரங்கள் குறைவு. அண்ணா காலத்துலேர்ந்து மாநிலங்களை மையப்படுத்தினதா இந்தியாவை மாற்றியமைக்க ணும்னு நாம பேசிக்கிட்டிருக்கோம்.
கலைஞர் நிறை வேற்றின மாநில சுயாட்சி தீர்மானத்தைத் தொடர்ந்து வலியுறுத்திக்கிட்டு இருக்கோம். மாநிலங்களுக்குன்னு மிச்சம் இருக்குற கொஞ்சநஞ்ச உரிமைகளையும் வேட்டையாடிட்டுருக்குற அரசா மோடியோட பாஜக அரசு இருக்கு; அதுகிட்ட தன்னோட சொந்த சுயநலன்களுக்காகத் தமிழ் நாட்டோட எல்லாத் தனித்துவங்களையும் உரிமைகளையும் பலி கொடுக்குற அரசா பழனிசாமியோட அதிமுக அரசு இருக்கு.
நாம என்ன மொழி பேசணும், நாம என்ன சாப்பிடணும்கிறதுல தொடங்கி நம்ம குழந்தைங் களை என்ன படிக்க வைக்கணும், என்ன வேலைக்கு அவங்களை அனுப்பனும்கிறது வரைக்கும் டெல்லி தீர்மானிக்கும்னா அப்போ நாம எல்லோரும் அடிமைகளா? மாநிலங்களோட நிதி உரிமையை ‘ஜிஎஸ்டி’ மூலமாப் பறிச்சாங்க. கல்வி உரிமையைப் பறிக்குறதுக்குத் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு முறையையும் புதிய கல்விக் கொள்கையையும் கொண்டுவந்தாங்க.
அடுத்து, வேலை வாய்ப்புகளை யும் குறி வைச்சிட்டாங்க. தன்னுடைய ஆதிக்கப் பலத்தால் ஒட்டுமொத்தமா மாநிலங்களைக் கீழே தள்ளக்கூடிய அக்கிரமம் இது. மாநிலங்களுக்கான வலுவான குரல் கொடுப்பதுதான் தமிழ்நாடு.
ஆனா, அதிமுகவை பாஜக கொத்தடிமை ஆக்கிட்டதாலேயே இன்னைக்குத் தமிழ்நாடு தன்னுடைய குரலை இழந்து உரிமைகளைப் பறி கொடுத்து நிக்குது. இது தமிழ் நாட்டுக்கு பாஜகவும் அதிமுகவும் இழைச்சுருக்குற மாபெரும் அவமானம். இந்த அவமானம் துடைக்கப்படணும். அதனாலதான், இது தமிழ்நாட்டோட சுயமரியாதையை மீட்டெடுக்கும் போர்னு குறிப்பிடுகிறேன்.
தொடர்ந்து, ‘ஆளுமைத் திறன் அற்றவர் ஸ்டாலின்’ என்று முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் இந்தத் தேர்தலில் மேலும் பெரிதாக ஒலிக்கிறது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
திராவிட இயக்கத் தலைவர்களைச் சித்தாந்த ரீதியா எதிர்க்கத் தெரியாத சில்லறைகள் எப்போதும் இது போன்ற கொச்சைப் படுத்துதல்கள்ல இறங்குறது வழக்கம். இந்த மாதிரி இழிவுபடுத்தல்களால என்னைப் பலவீனப்படுத்த முடியாது; ஏன்னா, தொடக்கக் காலத்துலேர்ந்து இந்த மாதிரி வசைகளை மிதிச்சுக் கடந்துதான் இந்த இடத்துக்கு வந்திருக்கேன்.
ஆனா, இப்படிப் பேசுறவங்களை நோக்கி ஒரு கேள்வி கேட்கலாம்னு நெனைக்கிறேன், ‘ஆளுமைத் திறன் ஸ்டாலினுக்கு இல்லைன்னு சொல்றீங்க. அப்புறம் எதுக்காகப்பா ஆளுமைத் திறனற்ற ஒரு ஸ்டாலினை எதிர்க்க இத்தனை பேர் ஒண்ணு கூடி நிக்குறீங்க?’
கூட்டங்களில் பேசும்போது சொற்கள் அல்லது எண்ணிக்கையைத் தவற விடுவது உங்களுக்கு அதிகம் நடக்கிறது. இதற்கு என்ன காரணம்? இதை உங்கள் தலைமைப் பண்போடு இணைத்துப் பேசுபவர்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
தவறுதல் மனுஷ இயல்பு. குறிப்பா, மேடைகள்ல இப்படியான தவறுதல் ஏற்படுற வாய்ப்பு ரொம்ப அதிகம். இது பலருக்கும் நடந்திருக்கு. இன்னைக்குக் காட்சி ஊடகங் களோட காலத்துல இது அதிக வெளிச்சத்துல தெரியுது. நான் சொல்றதுல கருத்துப் பிழை களோ, அரசியல் விமர்சனங்களோ இருந்தால் அதைத் தாராளமா சொல்லுங்க, விவாதிக்க லாம்.
ஆனா, வார்த்தைகளைத் தவற விடுறதை விமர்சிக்கிறேன்கிற பேருல நான் பேசுற விஷயத்தை இருட்டடிக்கிறது அறிவு நாணயம் கிடையாது. அதோட பேச்சுத்திறன் மட்டுமே தலைமைப் பண்பும் கிடையாது, அது பல்வேறு திறன்களின் தொகுப்பு.
திரும்பத் திரும்ப, ‘இந்து மதத்துக்கு எதிரான கட்சி திமுக’ என்று குற்றஞ்சாட்டுவதன் மூலம், கிட்டத்தட்ட ‘இந்துக்களுக்கான கட்சி திமுக’ என்று சொல்லும் நிலைக்கு உங்களைத் தள்ளிவிட்டதா பாஜக? கையில் வேலோடு நீங்கள் நின்றது அரசியல் உத்தியாக எடுபட்டாலும் சித்தாந்தரீதியாகத் திமுகவுக்கு அது சறுக்கல் என்கிற விமர்சனத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
திருத்தணிக்குக் கிராம சபைக் கூட்டத்துக்குப் போயிருந்தேன். அந்த ஊரோட அடையாளமாக வேல் என் கையில மக்களால கொடுக்கப்பட்டுச்சு. வாங்கிக்கிட்டேன். இதுல சித்தாந்தச் சறுக்கல் எங்கே வருதுன்னு புரியலை.
ஒருவேளை நான் அதை வாங்க மறுத்திருந்தா அப்போ என்ன சொல்லியிருப்பாங்க? சரி, கையில வேலை வாங்கினாலும் தவறு, வாங்காட்டினாலும் தவறுன்னா நான் என்னதான் செய்யணும்னு நெனைக்கிறாங்க? கடவுள் – மதம் சம்பந்தமா என்னோட நிலைப்பாட்டைப் பல இடங்கள்ல தெளிவுபடுத்தியிருக்கேன்.
அது ஒவ்வொருத்தருடைய விருப்பம், சுதந்திரம். இந்து மதத்துக்கு மட்டும் இல்லை; எந்த மதத்துக்கும் எதிரானது இல்லை திமுக. அதே சமயம், அரசியல்லேயும் அரசு நிர்வாகத்துலேயும் மதத்தைக் கலக்கிறதை உறுதியா திமுக எதிர்க்கும்.
திமுக எப்போவெல்லாம் ஆட்சிக்கு வந்ததோ அப்போவெல்லாம் எல்லாத் துறைகளையும்போல அற நிலையத் துறையும் சிறப்பாக நிர்வகிக்கப் பட்டதுங்கிறதுதான் வரலாறு. அது அடுத்து வர்ற ஆட்சிலேயும் தொடரும்.
தேர்தலில் திமுக வென்றாலும், சட்டமன்ற உறுப்பினர்களை உடைத்துத் தம் பக்கம் அவர்களை இழுத்து, பாஜக ஆட்சி அமைக்கலாம் என்ற பேச்சு சகஜமாக இருக்கிறது. இதை எதிர்கொள்ள என்ன வியூகம் வைத்திருக்கிறீர்கள்?
எதிரிகளை எதிர்கொள்ள முழு பலத்தோடேயே திமுக இருக்கு. நான் பலம்னு சொல்லும்போது அது ரெண்டு விதமா அர்த்தப்படுத்துறேன். ஒண்ணு, எண்ண பலம்; மத்தொண்ணு, எண்ணிக்கை பலம். பலரையும்போல பாஜகவையும் வெறும் ஒரு அரசியல் கட்சியா திமுக பார்க்கலை.
நாம வேற, அவங்க வேற. பாஜக இந்தத் தமிழ் மண்ணுக்கு எதிரி, தமிழர்களின் எதிரி. இந்தப் புரிதல் ஒவ்வொரு திமுககாரருக்கும் இருக்கு. அதை மேலும் வலுப் படுத்துவோம். இதையும் தாண்டி பாஜக விளையாட முயற்சிக்கலாம்னுதான் வெறும் 118 இடங்கள் போதாது; 234 இடங்கள்லேயும் கூட்டணி ஜெயிக் கணும்னு உயிரைக் கொடுத்து வேலை பார்த்துக் கிட்டிருக்கோம். திமுக எதையும் எதிர்கொள்ளும்!
பிரதமர் மோடியின் பிரச்சாரத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?
பாஜக வேட்பாளர்களே மோடி படத்தைத் தவிர்த்துட்டு, ஜெயலலிதா படத்தோடு ஓட்டு கேட்கப்போறாங்கன்னா அதுக்கு மேல அவருடைய பிரச்சாரத்துக்குத் தமிழ்நாட்டுல உள்ள மதிப்பைப் பத்தி நான் சொல்ல என்ன இருக்கு?
மாறிக்கொண்டிருக்கும் சூழலில், வெறும் நிர்வாகத்தை மட்டுமே முன்னிறுத்தி அரசியலில் நீடித்து நிற்க முடியாது. பண்பாட்டுத் தளத்தில் ஆர்எஸ்எஸ் செயலாற்றுவதன் மூலம் உண்டாக்கும் சிந்தனை மாற்றங்களுக்கான பலன்களையே மேலே அரசியல் தளத்தில் பாஜக அறுவடை செய்கிறது. ஆக, அதற்கு எதிர்ச் சிந்தனைகளைப் பேசுவதற்குப் பண்பாட்டுத் தளத்தில் திமுகவும் செயலாற்ற வேண்டும்; திமுகவுக்கும் இதற்கென ஓர் அமைப்பு வேண்டும் என்ற குரல் இருக்கிறது. இப்படி நீண்ட கால நோக்கில் பாஜகவை எதிர்கொள்ள என்ன செய்யப் போகிறீர்கள்?
சாதிய, மதவிய சக்திகளின் கொட்டத்தை அடக்க அரசியல்ரீதியா தேர்தல் களத்தில் மட்டுமல்லாமல், தத்துவார்த்தரீதியா பண்பாட்டுத் தளத்திலும் வேலைசெய்ய வேண்டிய கட்டாயத்தை முழுமையா உணர்ந்திருக்கோம்.
திமுக தேர்தல் அறிக்கையில் ‘சென்னையில் திராவிடர் இயக்க தீரர்கள் கோட்டம் அமைக்கப்படும்’னு சொல்லிருக்கோம் இல்லையா, தமிழர்களின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கான வரலாற்றைச் சொல்றதா அதை அமைப்போம். கழகத்தோட பாசறைகளுக்கு மீண்டும் புத்துயிர்ப்பு கொடுப்போம்.
பாசறைக் கூட்டங்களைக் கிராமங்கள்ல தொடங்கி சமூக வலைதளங்கள் வரை கொண்டுபோவோம். இது பெரியார், அண்ணா, கலைஞர் மண்… திராவிட மண்… எல்லாப் பிளவு சக்திகளையும் தமிழை வெச்சு திருப்பியடிப்போம்!
பாலின, சாதி, மதச் சமத்துவத்தை முழுமையாக ஏற்றவர்களாக எப்படிக் கட்சியைத் தயார் செய்யப் போகிறீர்கள்?
சமூகநீதி - சுயமரியாதை - சமத்துவம் - சகோதரத்துவம் இதெல்லாம்தான் திராவிட இயக்கத்தோட அடிப்படைக் கொள்கைகள். இதை ஆழமாக் கட்சியினர் மனசுல விதைக்கணும்னு நெனைக்கிறேன். தமிழுணர்வு இதற்கான கருவியா அமையணும்.
ஒவ்வொரு தலைவருக்கும் தான் சார்ந்திருக்கும் சமூகம் தொடர்பில் ஒரு கனவு இருக்கும். உங்கள் கனவில் உள்ள தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்று எண்ணுகிறீர்கள்?
அனைத்து அதிகாரங்களையும் கொண்டதா நம்ம தமிழ்நாட்டை மாத்தணும். எல்லோர்க்கும் எல்லாம் கிடைக்கிறதா தமிழ்நாடு இருக்கணும். இதுதான் என்னோட தமிழ்நாடு!
- மு.க.ஸ்டாலின்