ஏறத்தாழ 145 நாள்களுக்கும் மேலாக எரிந்து கொண்டிருக்கும் மணிப்பூரின் நெருப்பு இன்னும் அணைந்தபாடில்லை. அது கலவர பூமியாக அறிவிக்கப்பட்டு இருகிறது.

முடக்கப்பட்டிருந்த இணைய சேவையின் தடை விலக்கப்பட்டவுடன் மாணவர்கள் இருவர் கொலை செய்யப்பட்டுத் தெருவில் கிடந்த படமும், செய்தியும் வெளியானது.

தணிந்தது போலிருந்த மக்களின் கோபம் மீண்டும் போராட்டக் களத்தில் வந்து நின்றது. கொலை செய்யப்பட்ட மாணவர்களுக்காக நீதியும், அமைதியும் கேட்டு மாணவர்களும் போராட்டத்தில் இறங்கினார்கள்.

அவர்களுக்குக் கிடைத்தது தடியடி, கண்ணீர்ப் புகை மற்றும் பெல்லட் குண்டுகளின் துப்பாக்கிச் சூடு. காயங்கள், மரணங்கள் என்பது தொடர்கின்றன. மாநில பா.ஜ.க வின் முதல்வர் பைரன்சிங் அமைதியை ஏற்படுத்த முயலவில்லை. மணிப்பூரின் இந்த மோசமான நிலைக்கு பா.ஜ.க தான் காரணம் என்று தலைநகர் இம்பாலுக்கு அருகில் தெளபெல்லில் இருந்த பா.ஜ.க அலுவலகம் போராட்டக்காரர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டு உள்ளது. இப்பொழுது சி.பி.ஐ சிறப்பு விசாரணைக் குழு அங்கு செல்வதாக அரசு தரப்பில் இருந்து சொல்லப்பட்டு உள்ளது.

ஒரு மாநிலமே கொதிநிலையில் இருக்கிறது என்ற கவலை இல்லாமல், அதைப்பற்றிப் பேசாமல், அமைதி திரும்ப எந்த நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கும் நாட்டின் பிரதமர் மோடியை நாடே கண்டித்தும் எந்தப் பயனும் இதுவரை இல்லை.

கலவரம் தொடங்கிய பின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்ற எதிர்க்கட்சிக் குழுவினர்கள் கூட மணிப்பூர் சென்று வந்தார்கள்.

ஆனால் பிரதமர் என்ற முறையில் மோடி மட்டும் அங்கு செல்லவில்லை. அதைத் தவிர பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் சளைக்காமல் சென்று வருகிறார்.

இது நாட்டின் பிரதமருக்கு அழகல்ல. ஜனநாயகத்தை மதிக்காதவர், சர்வாதிகாரப் பாதையில் செல்பவர் என்று மக்களால் பேசப்படும் மோடியின் கோடிக்கணக்கான ஊழல்கள், இனவெறி, மதவெறி, வெறுப்புணர்வுகளால் கொதித்துப் போயிருக்கிறார்கள் மக்கள். இதில் மணிப்பூரின் நெருப்பும் இணைகிறது. இந்தக் கொடுமைகளில் இருந்து நாடும், மக்களும் விடுபட வேண்டும்.

அதற்கு ஒரே வழி, 2024 பொதுத் தேர்தலில் மோடியின் பா.ஜ.கவை வீழ்த்த வேண்டும். ‘இந்தியா’ கூட்டணியை அரியணை ஏற்ற வேண்டும், வாக்குச் சீட்டுகளால் மக்கள்.

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It