நிகழ் ஆண்டு 2023, வரும் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15 முதல் தமிழ்நாட்டின் குடும்பத் தலைவிகள் கலைஞரின் உரிமைத் தொகையைப் பெற இருக்கிறார்கள்!

தமிழ் நாட்டில் சற்றொப்ப 2 கோடி குடும்பங்கள் இருக்கும். அதில் 50 விழுக்காட்டினரான 1 கோடி மகளிர் உரிமைத் தொகையை உறுதிப் படுத்தும் விதமாக திட்டக்கணக்கில் ரூபாய் 7000/- கோடியை ஒதுக்கி இருக்கிறது தமிழ்நாடு அரசு!

 தமிழ்நாட்டின் வரலாற்றிலேயே இதுபோன்றதொரு பெரும்திட்டம், இதுவரை செயல்படுத்தப் பட்டதில்லை என்று முதல்வர் சொல்லி இருப்பது, இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட எடுத்துக்கொண்ட காலத்தையும் அதன் பலன்களையும் பொதுமக்கள் புரிந்துகொள்ள உதவுகிறது.

mk stalin 310ஆண்டொன்றுக்கு ரூபாய்12,000 கோடியை இந்த மண்ணின் மகளிருக்காக திராவிட மாடல் அரசு செலவு செய்ய இருக்கிறது. இது பல துறைகளின் ஆண்டுச் செலவை விட அதிகமானது. இதன் மூலம் பெண்களின் வளர்ச்சியிலும் பொருளாதாரத் தற்சார்பிலும் இந்த அரசு எடுக்கும் கவனம் முக்கியம் பெறுகிறது!

ஒரு குடும்பத்தில் பெண்ணின் உழைப்பு என்பது பொருளாதார ரீதியாக ஆண் வெளியே செலுத்தும் உழைப்பை விட சிறிதும் குறைந்ததில்லை என்று நீதிமன்றம் கூறியிருக்கிறது. சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அவர்கள் கடந்த ஜூன் 23 அன்று வழங்கிய தீர்ப்பில், பெண்களுக்கு கணவன் சேர்த்த சொத்திலும் அவருடைய பாரம்பரிய சொத்திலும் கூடப் பங்கு உண்டு எனத் தீர்ப்பு அளித்துள்ளார்கள்.

2021 தேர்தலுக்கு முன்பே இந்தக் கருத்தியலை முன்வைத்த தி.மு.க. தலைவர் அவர்கள், வறுமைக்கோட்டுக்குக் கீழே, முறை சாரா வேலைகளில் பெண்கள் பணிபுரிந்து கொண்டு, தங்கள் கணவர்கள் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்திற்காகப் பன்முக ஆற்றலோடு வீட்டில் உழலும் பெண்களின் நலனைப் பேணும் விதமாக மகளிருக்கு மாதம் ரூபாய்1000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

பெண்களின் ஒருமுக வரவேற்பைப் பெற்று ஆட்சியில் அமர்ந்த உடனே, பெண்களுக்கு இலவசப் பேருந்து அறிவிப்பை செய்தார். அதன் மூலம் மட்டுமே மகளிருக்கு மாதாந்திரம் ரூபாய் 1000 சேமிக்க முடிவதாகப் பெண்கள் மகிழ்ச்சியுடன் பேசிய காணொளிகளை நாம் பார்த்தோம். அது பொருளாதாரப் பிரிவுகள் அற்ற அனைத்து மகளிருக்குமான ஒரு திட்டமாக மகளிரைச் சென்று அடைந்தது.

பெட்ரோல் டீசல் விலையில் மாநில அரசு மானியம் அறிவித்து, விலை ஏற்றத்தின் பாதிப்புகளைக் குறைத்து, குடும்பத் தலைவிகளின் சுமையைக் குறைத்தது தி.மு.க. அரசு. அதுமட்டுமல்லாமல், பெண்கள் உயர் கல்விக்கான திட்டமாக மாதம் ரூபாய்1000, 12ஆம் வகுப்புக்குப் பின்னர் உயர்கல்வி கற்கும் அரசுப் பள்ளியில் பயின்ற 12 ஆம் வகுப்புக்கு மாணவிகளுக்கான உயர் கல்வித் திட்டமாக மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதித் திட்டம் கொண்டுவரப்பட்டது.

மகளிருக்கான உரிமைத் திட்டம் விரிவாக விவாதிக்கப்பட்டது. மாநிலத்தின் கடந்த 10 ஆண்டுகால பொருளாதாரப் பின்னடைவில் இருந்து மீள்வதில் கவனம் செலுத்தி, மேனாள் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் அதை ஓரளவு நிலை நிறுத்தியவுடனேயே முதல்வர் அவர்கள், சென்ற நிதிநிலை அறிக்கையில், இந்த ஆண்டுக்கான தொகையை ஒதுக்க உத்தரவிட்டார்.

ஏன் இன்னும் கொடுக்கவில்லை? இருக்கும் 2 கோடி குடும்பங்களுக்கும் கொடுப்பார்களா? சொன்னால் கொடுத்துவிட வேண்டியதுதானே என்ற பொறுப்பற்றோர் கேட்கும் கேள்விகளைப் புறந்தள்ளி இன்று ஓர் அருமையான திட்டத்தை, வறுமையிலும், சமூகப் பாதுகாப்பில் பின்தங்கியும் இருக்கும் ஒரு மகளிர் கூட விடுபட்டு விடாதபடியான சிறப்புத் திட்டத்தை அறிவித்துள்ளார் முதல்வர் அவர்கள்!

திட்டம் செயல்படுத்தப்பட இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் சென்ற வாரம் மாவட்ட ஆட்சியர்களும், அதிகாரிகளும் உள்ளடக்கிய கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு, குடும்ப அட்டை கூட இல்லாத, வசிப்பிடம் அற்ற ஏழை எளியோரையும் கண்டறிந்து இந்தத் திட்டத்தின் பயனைப் பெற வழி செய்திருக்கிறார் முதல்வர். தகுதி வாய்ந்த விளிம்பு நிலை மகளிர் யாரும் விடுபடாதவாறு, மனச்சான்றுடன் அதனை உறுதி செய்யும் வகையில் 13 கேள்விகளையும், 11தன்னிலை உறுதிமொழிகளையும் கொண்டு வடிவமைக்கப் பட்டுள்ளது படிவம். உரிமைத் தொகை சரியான கைகளில் சென்று சேர்வதை இது உறுதிப் படுத்துகிறது.

 மாவட்ட ஆட்சியமைப்புகள், செயல்முறை வழிகாட்டுதல் கூட்டங்களை நடத்தத் தொடங்கி உள்ளனர். சற்றொப்ப 1.5 கோடி விண்ணப்பங்கள் எதிர்பார்த்த நிலையில் படிவங்கள் அந்தந்தப் பகுதி நியாய விலைக் கடைகளில் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எல்லார்க்கும் எல்லாமும் என்ற சமத்துவச் சிந்தனைக்கான திராவிட மாடலையும், அதன் வழி நின்று, தன் மக்களை நேசிக்கும் உண்மையான தலைவரையும் பெண்கள் இனிக் கொண்டாடிக் கொண்டே இருப்பார்கள்!

- சாரதாதேவி

Pin It