தமிழகத்தில் 21 மாநகராட்சி மேயர் பதவிகளில் பெண்களுக்கு 11 பதவிகள் ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 உலக அளவில் அரசியல் அதிகாரப் பகிர்வில் பெண்களின் பங்கு என்பது வளர்ந்த நாடுகளில் கூட குறைவாகவே இருக்கின்றது. உலகச் சூழல் இப்படி இருக்க, பெண்களுக்கு 50 சதவீத மேயர் பதவிகளை ஒதுக்கியதன் மூலம் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சமூக நீதியில் மற்றும் ஒரு சரித்திரம் படைத்திருக்கிறார். இந்த அரசாணை என்பது, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நீதிக்கட்சி பெண்களுக்கு வாக்குரிமை அளித்த நிகழ்வைப் போன்று வரலாற்றில் பதியக்கூடிய நிகழ்வாகும்.

திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையான பெண்விடுதலை - பாலினச் சமத்துவத்தை, அரசியல் அதிகாரப் பகிர்வு என்னும் இந்த அரசாணை மூலம் நிலைநாட்டி இருக்கிறது தி.மு.கழகம்.

பெண்களுக்கான அரசியல் என்பது வாக்கு வங்கியாக உருவெடுக்காத நிலையிலும், தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணா - முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், இன்று முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பெண் விடுதலைக்கான அடுத்த கட்ட நகர்வை முன்னெடுத்து இருக்கிறார்.

பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களிலும், அது முன்னேறிய சமூகங்களுக்கு மட்டும் சென்றுவிடாமல், ‘ஆதிதிராவிடர்’ பட்டியல் சமூகப் பெண்களுக்குச் செல்லும் வகையில் மாநகராட்சிப் பதவிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதும் இரட்டிப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.

எந்தக் குறையும் சொல்ல முடியாமல் எதிர்க்கட்சிகளே பாராட்டத் தொடங்கியிருக்கின்றன.

குறை மட்டுமே காணும் எதிர்க்கட்சிளே பாராட்டும்போது, சமூக நீதிக்காகத் தொடர்ந்து குரல் எழுப்பும் அனைத்து முற்போக்கு இயக்கங்களும் முதல்வரின் சமூக நீதிக்கான நடவடிக்கைகளைக் கொண்டாடும் நேரம் இது!

- கருஞ்சட்டைத் தமிழர்

Pin It