தமிழ்நாட்டிற்குக் கொடுக்கப்பட வேண்டிய நிதியைக் கொடுக்காமல், ஒன்றிய அரசு ஓரவஞ்சனை செய்கிறது என்றும், மறு தொகுதிச் சீரமைப்பு என்பது மறைமுகமாகத் தென்னாட்டில் உள்ள மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது என்றும் நம் தமிழ்நாட்டின் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்!இதற்கு அரசியல் ரீதியாகவும், புள்ளி விவரங்களோடும் விடை தராமல், இந்தியாவின் பிரதமர் மோடி அவர்கள், எவ்வளவு கொடுத்தாலும் அழுகைக் குரல் குறையவே இல்லை என்று தனிப்பட்ட சண்டை போலப் பேசியுள்ளார்! இப்படி விடை சொல்வது, ஒரு பிரதமரின் தகுதிக்கு அழகும் இல்லை, ஏற்றதும் இல்லை!
இப்போது மிகச் சரியாகத் தமிழ்நாட்டின் முதலமைச்சர், "இது அழுகை அன்று, உரிமைக் குரல்" என ஓங்கி முழங்கி இருக்கிறார்! அது மட்டுமின்றி, ஒன்றிய அரசு எத்தனை நெருக்கடிகளைக் கொடுத்தாலும், தமிழ்நாடு பணியாது என்றும் துணிவாகத் தன் கருத்தை எடுத்து வைத்திருக்கிறார்!
தமிழ்நாட்டின் உரிமைக் குரலாய் ஒலிக்கும் முதலமைச்சரின் குரலை நாம் மகிழ்ந்து, பாராட்டி, வரவேற்கிறோம்! சுயமரியாதை இயக்கம் தோன்றி வளர்ந்த மண், இந்தத் தமிழ் மண் என்பதை முதலமைச்சரின் ஒவ்வொரு பேச்சும் உறுதிப்படுத்துகிறது! இந்த நிலைப்பாடு, மக்களிடையே திமுக விற்கும், தமிழ்நாடு அரசுக்கும் பெரும் வரவேற்பைப் பெற்றுத் தந்துள்ளது!
இதுகுறித்து இன்று தொலைக்காட்சி ஊடகங்கள் சில, விவாதங்கள் நடத்தின. முதலமைச்சரின் உரை பற்றி மக்களிடையே கருத்துக் கணிப்பும் நடத்தின! சன் நியூஸ் போன்ற திமுக ஆதரவு ஊடகங்களைத் தாண்டி, நியூஸ் 7 தொலைக்காட்சியும் ஒரு கருத்துக்கணிப்பை நடத்தி வெளியிட்டது!
முதலமைச்சரின் இந்த உரை வெறும் அரசியல் உத்தியா, அதிமுக எதிர்ப்பா என்பது போன்ற நான்கு வினாக்களை முன் வைத்திருந்தது ! அதில் 75 விழுக்காடு பார்வையாளர்கள், இந்தக் குரல் மாநில உரிமைக்காகவே என்று கருத்து தெரிவித்திருந்தனர் !
எனவே கட்சி எல்லையைத் தாண்டி, இது மாநில உரிமைக்கான குரல் என்ற எண்ணம் பொதுமக்கள் இடையேயும் ஏற்பட்டு உள்ளது என்பது தெளிவாகிறது! இந்தக் கருத்து மேலும் மேலும் மக்களிடம் பரவும், திமுகவிற்கான பெரும் ஆதரவைப் பெற்றுத்தரும் என்பது உறுதி!
அதிமுகவை அமித்ஷா பணிய வைத்தது போல, திமுகவை ஒன்றிய அரசினால் ஒரு நாளும் அடிபணிய வைக்க முடியாது என்பதே இன்றைய அரசியல் ! இது திமுகவிற்கான வெற்றி இல்லை, தமிழ்நாட்டு மக்களுக்கான வெற்றி!
- சுப. வீரபாண்டியன்