(1.சட்டமன்ற விவாதங்கள், தொகுதி I, பிப்ரவரி, 1944, பக்கம் 131)

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்(வைசிராய் நிர்வாக சபையின் தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்): ஐயா, நமது அவையின் பெண் உறுப்பினர் இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்தமைக்காக மகிழ்ச்சி அடைகிறேன். என் மனத்தில் பெரும் சுமையாக அழுத்திக்கொண்டிருக்கும் ஒரு விஷயம் குறித்து அவைக்கு விளக்கம் அளிக்க இந்த ஒத்திவைப்புத் தீர்மானம் எனக்கு நல்வாய்ப்பினை அளிக்கிறது. இதுவே என் மகிழ்ச்சிக்குக் காரணம். இந்திய அரசாங்கத்தின் இந்த முடிவை மிகவும் துரதிர்ஷ்டவசமானது என்று கருதுகிறேன். இதிலிருந்தே அவை எனது உணர்வுகளைப் புரிந்துகொள்ளும் என்று முதலிலேயே கூறிவிடுகிறேன். இந்த முடிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கவில்லை. இருப்பினும் இப்போதைய சூழ்நிலைமைகளில் இத்தகைய முடிவை மேற்கொள்ளும்படி இந்திய அரசாங்கம் நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறது என்பதைக் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இதிலிருந்து என் நிலையை அவை வேறுபடுத்திப் புரிந்து கொள்ளும் என்று நம்புகிறேன்.           

ambedkar 313இந்த விஷயம் குறித்து இது வரை நடைபெற்ற விவாதத்தை நான் உன்னிப்பாக செவிமடுத்துக் கேட்டத்தில் மதிப்பிற்குரிய பெரும்பாலான உறுப்பினர்கள் மனிதநேயத்தால் உந்தப்பட்டே பேசியிருக்கிறார்கள் என்று எனக்குப்படுகிறது. அவர்கள் எதார்த்த நிலையிலிருந்து வெகுதூரம் விலகிச் சென்று விட்டார்கள் என்பதே எனது தாழ்மையான கருத்து. இந்த விவாதத்தில் பங்கு கொண்டு பேச முன்வந்துள்ள நான் எதார்த்த நிலைமையைக் கணக்கிலெடுத்துக் கொண்டே உரையாற்ற எண்ணியுள்ளேன். இந்த அவை முடிவெடுக்க வேண்டிய விஷயங்கள் என்ற நோக்கில் பல விஷயங்கள் விவாதத்தின்போது முன்வைக்கப்பட்டன. நிலக்கரிச் சுரங்கங்களில் தற்போது தரப்பட்டுவரும் ஊதியங்கள் பற்றிக் கூறப்பட்டதை முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். மேலும், நிலக்கரிச் சுரங்கங்களில் தொழிலாளர்களுக்குப் போதிய வசதிகள் செய்த தரப்படாதது பற்றியும் பல உறுப்பினர்கள் குறிப்பிட்டனர். இவற்றைப் பற்றி எல்லாம் என் உரையில் எனது கருத்துகளைக் கூறுவேன். எனினும் இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கும் கருத்துகளுடன் ஒப்பிடும்போது இவை அவை முடிவெடுக்க வேண்டியிராத அத்தனை முக்கியத்துவமற்ற விஷயங்கள்.

            இந்த முகவுரையுடன் என் உரையைத் தொடங்குகிறேன். பெண்களை பூமிக்கு அடியில் வேலை செய்வதைத் தடுக்கும் நடைமுறை ஒழுங்கை அரசாங்கம் ஒருபோதும் சரிவர கடைப்பிடிப்பதில்லை. இந்த நடைமுறை ஒழுங்கைப் பின்பற்ற 1939-ல் ஒப்புக்கொண்ட அரசாங்கம் நான்கு ஆண்டுகளுக்குள்ளாகவே அதிலிருந்து பின்வாங்கி விட்டது என்று மதிப்பிற்குரிய சில உறுப்பினர்கள் குற்றம் சாட்டினார்கள். ஐயா, இந்த விஷயத்தை சரியான கோணத்தில் அவையின் முன்வைக்கும் பொருட்டு சில கருத்துகளை இங்கு எடுத்துக் கூற விரும்புகிறேன். பூமிக்கு அடியில் பெண்கள் வேலை செய்வதைத் தடை செய்யும் கோட்பாட்டை இந்த மரபொழுங்கு நடைமுறைக்கு வருவதற்கு நீண்டகாலத்துக்கு முன்பே இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டது அவைக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன். எனக்குத் தெரிந்தவரை இந்த விஷயம் 1923ஆம் ஆண்டில் முதன் முறையாக விவாதிக்கப்பட்டது; அப்போது இந்திய நிலக்கரி சுரங்கங்கள் சட்டத்தைத் திருத்துவதற்கு இந்திய அரசாங்கம் ஒரு மசோதாவைக் கொண்டு வந்தது. இந்த மசோதாவின் ஆரம்ப நோக்கம் மிகவும் வரையறைக்குட்பட்டதாக இருந்தது என்பதை அவைக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். நிலக்கரிச் சுரங்கங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்துக் கொள்வதே அதன் நோக்கமாக இருந்தது. ஆனால் மசோதா தெரிவுக் குழுவுக்கு அனுப்பப்பட்டபோது, பூமிக்கு அடியில் பெண்கள் வேலை செய்வதைத் தடுப்பதற்கான அதிகாரத்தை இந்த மசோதா மூலம் பெறுவதற்கு இந்திய அரசாங்கம் துணிச்சலான நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவுக் குழு கருத்துத் தெரிவித்தது. பொறுக்குக் குழுவில் இந்திய அரசாங்கம் இந்தக் கோட்பாட்டை ஏற்றுக் கொண்டது.

இந்திய அரசாங்கம் இந்தக் கோட்பாட்டை ஏற்று கொண்டது மட்டுமன்றி மேலும் ஒரு படி மேலே சென்றது நிலத்துக்கு அடியில் பெண்கள் வேலை செய்வதைத் தடுக்கும் நோக்கத்தோடு அது திட்டவட்டமான சில நடைமுறைகளை வகுத்தது; பூமிக்கு அடியில் பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கையை வருடத்தோறும் குறைப்பதற்கு அது ஒரு தெள்ளத்தெளிவான திட்டத்தைத் தயாரித்தது. இதனால் இத்திட்டம் அவையில் அங்கீகரிக்கப்படுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே, இந்திய அரசாங்கங்கத்தின் கொள்கையின்படி, பூமிக்கு அடியில் வேலை செய்யும் பெண்கள் எவருமே இருக்கவில்லை. இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டு வந்துள்ள மதிப்பிற்குரிய உறுப்பினரே இந்த உண்மையை தமது உரையில் குறிப்பிட்டிருக்கிறார். அப்படியிருக்கும்போது, பூமிக்கு அடியில் பெண்கள் பணியாற்றுவதை அனுமதிக்கலாகாது என்ற மரபு ஒழுங்கு நடைமுறைக்கு வருவதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அதனைப் பின்பற்றிய இந்திய அரசாங்கம், சுரங்கங்களில் பெண்கள் பணியாற்றுவது கூடாது என்ற திட்டவட்டமான கருத்தின் அடிப்படையில் அதற்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு உறுதியான நடவடிக்கைகள் எடுத்துவந்த இந்திய அரசாங்கம் இப்போது இந்தத் தடையை நீக்க முன்வந்திருக்கிறது என்றால் அதற்கான காரணத்தை இந்த ஒத்திவைப்புத் தீர்மானத்தைக் கொண்டுவந்திருக்கும் மதிப்பிற்குரிய பெண் உறுப்பினர் புரிந்து கொள்ளாததற்காகப் பெரிதும் வருந்துகிறேன்.

            இதுவரை இருந்துவந்த இந்தத் தடையை எத்தகைய நியாயமுமின்றி இந்திய அரசாங்கம் அகற்றியிருக்கிறது என்று குற்றம் சாட்டப்படுகிறது. இத்தகைய ஒரு குற்றச்சாட்டு கூறப்படுவது குறித்து நான் மிகுந்த வியப்படைகிறேன். ஐயா, இது விஷயத்தில் இரண்டு அம்சங்களை அவையின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்; இந்த இரண்டு அம்சங்களும் நான் குறிப்பிடுகின்ற அவசர நிலையை உறுதி செய்பவையாக இல்லையா என்பதைப் பரிசீலித்துப் பார்க்குமாறு அவையைக் கேட்டுக்கொள்கிறேன். ஐயா, பூமிக்கு அடியில் பெண்கள் வேலை செய்வதற்கு இருந்துவந்த தடை நீக்கப்பட்டிருப்பது நிலக்கரியுடன் நேரடியாக சம்பந்தப்பட்டதாகும். இது எவ்வகையிலும் மறுக்க முடியாத உண்மை. தொழில் துறைக் கண்ணோட்டத்தில் நிலக்கரி ஒரு கேந்திரமான பொருள் இல்லையா என்று அவையைக் கேட்கிறேன; போக்குவரத்துத்துறைக் கண்ணோட்டத்தில் நிலக்கரி ஒரு கேந்திரப் பொருள் இல்லையா என்று அவையைக் கேட்கிறேன்; மக்கள் பயனீட்டுக் கண்ணோட்டத்தில் நிலக்கரி ஒரு கேந்திரப் பொருள் இல்லையா என்று அவையைக் கேட்கிறேன்.

நமது விருப்பப்படி நாம் பயன்படுத்துவதைத் தவிர்க்கக் கூடிய ஒரு பொருளைப் பற்றியல்ல இங்கு நாம் பேசிக்கொண்டிருக்கிறோம். நமது உணவுக்கு முன்னர், இன்னும் சொல்லப்போனால் வேறு எதற்கும் முன்னர் நாம் பெற்றிருக்க வேண்டிய பொருள் இது என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகிறோம். இது நமது அவை கவனத்திற் கொள்ள வேண்டிய முதல் அம்சமாகும். இந்த அவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள வேண்டிய இரண்டாவது அம்சம் ஒன்றும் உள்ளது. அது இதுதான்; நிலைமை சீரடையும் வரை இந்திய அரசாங்கம் காத்துக்கொண்டிருப்பது சாத்தியமல்ல. நிலக்கரியை வழக்கமான முறையில் உற்பத்தி செய்ய முடியும் என்பதை மதிப்பிற்குரிய பெரும்பாலான உறுப்பினர்கள் அறிவார்கள் என்பது எனக்கு நன்கு தெரியும். இவ்வாறு 1943-ல் உற்பத்தி செய்ய முடியவில்லை; 1944-ல் உற்பத்தி செய்ய முடியவில்லை; ஒருக்கால் 1945ல் இது சாத்தியமாகலாம். ஆனால் இங்கு அவை கவனத்திற்கொள்ள வேண்டிய கேள்வி என்னவென்றால், இது நாம் காத்திருக்கக்கூடிய நேரமா? வழக்கமான முறையில் நடைபெறட்டும் என்று நாம் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்து கொண்டிருக்கக்கூடிய விஷயமா இது? மிக அவசரமாக, உடனடியாக நடவடிக்கைகள் எடுத்துக் கொள்ளப்பட வேண்டிய பிரச்சினைகளில் இதுவும் ஒன்று என்று துணிந்து கூறுவேன்; நிலைமையை சீர் செய்ய துரிதகதியில் நடவடிக்கை எடுத்துக் கொள்ளாத ஒர் அரசாங்கம் தன்னை அரசாங்கம் என்று அழைத்துக்கொள்வதற்கே தகுதியற்றதாகும். ஆதலால், நாம் ஓர் அவசர நிலையைச் சமாளிக்க வேண்டியிருக்கிறது என்பதையும், நிலத்துக்கு அடியில் பெண்கள் வேலை செய்வதற்கு இருந்த தடையை அரசாங்கம் அகற்றியிருப்பது விவேகமற்ற செயலோ அல்லது பொறுப்பற்ற செயலோ அல்ல என்பதையும் நாம் மறந்துவிடக்கூடாது, மாறாக எதார்த்த நிலைமையையும் சந்தர்ப்ப சூழ்நிலைமைகளையும் கருத்திற்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு நியாயமான நடவடிக்கை என்பதை நாம் மனத்திற் கொள்ள வேண்டும். எனவே, ஐயா, அரசாங்கத்தின் செயல்பாட்டை தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமையைக் கருத்திற்கொண்டு மதிப்பிட வேண்டும். இந்த இரு சந்தர்ப்ப சூழ்நிலைமைகளை மட்டுமே கணக்கிலெடுத்துக் கொண்டு அரசாங்கத்தின் நடவடிக்கையை எடைபோட வேண்டும், மதிப்பிட வேண்டும் என்று மதிப்பிற்குரிய உறுப்பினர்களைக் கேட்டுக்கொள்கிறேன்; செய்ய வேண்டிய எதையேனும் அரசாங்கம் செய்யத் தவறிவிட்டதா? செய்ய வேண்டாததை எதையேனும் அரசாங்கம் செய்துவிட்டதா? நான் இங்கு குறிப்பிட்ட இரண்டு அம்சங்களின் பகைப்புலனில் பார்க்கும்போது, அரசாங்கத்தின் நடவடிக்கை முற்றிலும் நியாயமானதே என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை.

            இது மீறப்படக்கூடாத ஒரு மரபொழுங்கு என்று மதிப்பிற்குரிய என்னுடைய நண்பர் திரு.ஜோஷி கூறினார். தன்னைத் தானே கலைத்துக் கொள்ளும் விதியைக் கொண்டிராத எழுதாச் சட்டங்களில் இதுவும் ஒன்று என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் சில சந்தர்ப்பங்களில் ஒரு சர்வதேச மரபொழுங்கை அல்லது ஒரு சர்வதேச ஒப்பந்தத்தை மீறுவதற்கு ஒவ்வொரு தேசத்திற்கும் உரிமை உண்டு என்பதை எத்தகைய தயக்கமுமின்றிக் கூறுவேன். இது நன்கு நிலைநாட்டப்பட்ட ஒரு சர்வதேச நியதியாக இருந்து வருகிறது. ஜெனீவாவில் நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நடைபெற்ற விவாதத்தில் ஏறத்தாழ இதே கருத்துத்தான் நிலவியது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா, நாங்கள் இந்த முடிவுகளை மேற்கொள்ளாதபடித் தவிர்த்திருக்க முடியுமா? இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்துக்கொள்ள வேண்டியதேற்பட்ட சில சந்தர்ப்ப சூழ்நிலைகளை இங்கு விவரிக்க விரும்புகிறேன். நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கு என்ன காரணம் என்று அரசாங்கம் ஆராய்ந்ததில் மூன்று காரணங்கள் தெரிய வந்தன. முதலாவதாக, இந்திய அரசாங்கம் தொடங்கிய அதிக உணவு உற்பத்தி இயக்கத்தை இவ்வகையில் குறிப்பிட வேண்டும். படைக்கல உற்பத்தித் தொழிற்சாலைகளில் அதிகரித்துவரும் வேலைவாய்ப்பையும் இதேபோல் குறிப்பிடுவது அவசியம். அதிக உணவு உற்பத்தி இயக்கத்தின் விளைவாக வேளான் துறைக்கு அதிக ஆட்கள் தேவைப்படுவதுடனும் அதே போல் படைக்கலத் தொழிலில் வேலைவாய்ப்பு அதிகரித்திருப்பதுடனும் சுரங்கத்தொழிலின் வேலைவாய்ப்பைப் பாரபட்சமின்றி ஒப்புநோக்கும் எவரும் நிலக்கரிச் சுரங்கங்களில் ஆள் பற்றாக்குறை ஏன் ஏற்பட்டிருக்கிறது என்பதை எனிதாகப் புரிந்து கொள்வர்.

ஐயா, உணவு தானியங்களின் விலைகள் துரிதமாக அதிகரித்து வரும் இன்றைய சூழ்நிலைமையில், அதிக உணவு உற்பத்திக் கொள்கை வேளாண் துறைக்கு மக்களைப் பெருமளவு ஈர்ப்பது முற்றிலும் இயல்பே. நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் பணியாற்றுவோர் விவசாயிகள் என்பதால் அதிக உணவு உற்பத்திக் கொள்கை அவர்களைக் கவர்ந்து ஈர்ப்பதில் வியப்பேதும் இல்லை. அதேபோன்று அதிக ஊதியம் கிடைக்கக்கூடிய ஆயுத உற்பத்தித் தொழிற்சாலைகளும் இந்த மக்களை வெகுமாக ஈர்க்கின்றன. தவிரவும், நிலக்கரிச் சுரங்கத் தொழிலில் ஆள் பற்றாக்குறை ஏற்பட்டிருப்பதற்கு மற்றொரு காரணமும் உண்டு. எனக்கு முன் பேசிய மதிப்புமிக்க சில உறுப்பினர்கள் இந்தக் காரணத்தை குறைத்து மதிப்பிட்ட போதிலும், அலட்சியம் செய்தபோதிலும் எதார்த்த நிலையை மூடி மறைத்து விட முடியாது. நிலக்கரிச் சுரங்கங்களில் வேலை செய்வது ஆரோக்கியத்துக்கு உகந்ததல்ல என்பதையும், அபாயகரமானதும் கூட என்பதையும் அனைவருமே அறிவர். யாருமே இந்த வேலையை விரும்புவதில்லை. வேறு எங்கேயாவது வேலை கிடைத்தால் அடுத்த கணமே அங்கு பறந்தோடிவிடுகிறார்கள். அதிக உணவு உற்பத்தி இயக்கமும் சரி, ஆயுதத் தளவாடத் தொழில்களும் சரி சுரங்கத் தொழிலாளிகளுக்கு அளிக்கும வேலை குறைந்த அபாயமுள்ளதாகவும் மனதுக்கு ஒத்ததாகவும் அமைகிறது. இரண்டாவதாக, அதிக உணவு உற்பத்தி இயக்கத்திலும் அயுதத் தளவாடத் தொழிற்சாலையிலும் நிலக்கரிச் சுரங்கத் தொழிலாளி தனக்கு மட்டுமன்றி தன்னுடைய குடும்பத்தைச் சேர்ந்த இதர உறுப்பினர்களுக்கும் சேர்த்துச் சம்பாதிக்கிறான்.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): மாண்புமிகு உறுப்பினருக்கு இன்னும் ஒரு நிமிடம் தான் பாக்கி இருக்கிறது.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மிகவும் வருந்துகிறேன். ஐயா.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): இது விஷயத்தில் நான் வேறு எதுவும் செய்வதற்கில்லை. மாண்புமிகு உறுப்பினர் தமது உரையை முடிக்க வேண்டும்.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அவ்வாறே செய்கிறேன். சுரங்க வேலைக்கு ஆள் பற்றாக்குறை என்று சொன்னேன் அல்லவா.

            இந்த அவை பரிசீலிக்க வேண்டிய மேலும் இரண்டு விஷயங்களை இங்கு குறிப்பிட விரும்புகிறேன், முதலாவதாக, இந்தப் பிரச்சினை அத்தனை முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்ற நோக்கோடு அவசரப்பட்டு கண்மூடித்தனமாக இந்த நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துக் கொள்ளவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிகுந்த முன்னெச்சரிக்கையோடு தான் அரசாங்கம் செயல்பட்டுள்ளது என்பதையும் கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்தத் தடை நீக்கம் முதலில் மத்திய மாகாணத்தில்தான் நடைமுறைப்படுத்தப்பட்டது; நிலக்கரிப் பிரதேசம் முழுவதிலும் செயல்படுத்தப்படவில்லை. இந்த அறிவிப்பை வங்காளத்துக்கும் பீகாருக்கும் விஸ்தரிப்பது அவசியம் என்பதை நவம்பரில்தான் அரசாங்கம் கருதிற்று. பிறகு டிசம்பரில்தான் அறிவிப்பு ஒரிசாவுக்கு விஸ்தரிக்கப்பட்டது. ஆண்களுக்கு அளிக்கப்படும் அதே ஊதியம் பெண்களுக்கும் வழங்கப்பட வேண்டும் என்பதில் நாங்கள் கவனமாக இருந்தோம்; இது ஒரு முக்கியமான விஷயமாகும். பால் பாகுபாடின்றி சம வேலைக்குச் சம ஊதியம் என்னும் கோட்பாடு வேறு எந்தத் தொழிலிலும் இல்லாதவாறு இத்தொழிலில்தான் முதல் முறையாக நிலைநாட்டப்பட்டது எனக் கருதுகிறேன். (இந்த வாசகங்களுக்கு அழுத்தம் தந்தது நாம் - ஆசிரியர்) 51/2 அடிக்குக் குறைவான ஊடுவழியுள்ள இடத்தில் பெண்கள் வேலை செய்யக்கூடாது என்பதிலும் நாங்கள் உறுதியாக இருந்தோம். இந்த அறிவிப்புகள் எல்லாம் மிகவும் தற்காலிகமானவை என்பது அவைக்கு நினைவிருக்கலாம்; இந்த விஷயத்தை இங்கு வலியுறுத்திக் கூற விரும்புகிறேன்.

யுத்தகாலம் வரை இந்த அறிவிப்புகள் நீடிக்கும் என்று நாங்கள் கூறவில்லை; சிலவற்றை முற்றிலும் நெகிழ்வுடையவையாகவே வைத்திருக்கிறோம்; நாங்கள் விரும்பும்போது எப்போது வேண்டுமானாலும் மாற்றக் கூடியவையாகவே இவற்றை வைத்துள்ளோம்; இவ்வாறு செய்ய எங்களால் முடியும். இதனை முற்றிலும் அவசரமான, தற்காலிகமான நடவடிக்கையாகவே நாங்கள் கருதுகிறோம் என்பதை இந்த அவைக்குக் கூறிக்கொள்ள விரும்புகிறேன். இந்த அறிவிப்புக் காலத்தை குறைப்பதற்கும் நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். உதாரணமாக, நாங்கள் ஒரு தொழிலாளர் முகாமை ஏற்பாடு செய்து வருகிறோம்; நிலக்கரிச் சுரங்கங்களுக்கு அனுப்புவதற்கு இந்த முகாம் மூலம் ஆண் தொழிலாளர்களைத் திரட்டிக் கொண்டிருக்கிறோம். அறிவிப்புக் காலத்தைக் குறைப்பதற்கு நாங்கள் மற்றொரு நடவடிக்கையும் எடுத்து வருகிறோம்; அதாவது ராணுவ தளவாடத் தொழிற்சாலைகளுக்கு ஆட்களைத் திரட்டிவரும் ஒப்பந்தக்காரர்களின் உதவியை நாடி நிலக்கரிச் சுரங்களில் வேலை செய்வதற்குத் தொழிலாளர்களை அனுப்பிவைப்பதற்கான தகவல்களை அவர்களுக்கு வழங்குவதற்கு தொழிலாளர் உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): மாண்புமிகு உறுப்பினருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, ஒரு நிமிடம் பேச அனுமதிப்பீர்களா….

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): நான் எதுவும் செய்ய இயலாதவனாக இருக்கிறேன். அவையின் விதிகள் மீற வொண்ணாதவையாக உள்ளன.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: எனவே இது முற்றிலும் ஓர் அவசர நடவடிக்கை என்பதையும், தேவைக்கும் அதிகமாக ஒரு நிமிடம்கூட அதனை நீடிக்கும் உத்தேசம் அரசாங்கத்துக்கு இல்லை என்பதையும் அவை உணரும் என்று நம்புகிறேன்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

(1.இந்தியத் தகவல் ஏடு, நவம்பர் 15, 1943, பக்கங்கள் 279-81)

          யுத்தப் பிற்காலத்தில் இந்தியாவில் மின்விசை வளர்ச்சி குறித்த பிரச்சினைகள் அக்டோபர் 25ஆம் தேதி புதுடில்லியில் நடைபெற்ற மறுசீரமைப்புக் கொள்கைக் குழுவில் விவாதிக்கப்பட்டன. வைசிராய் கவுன்சிலில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக உள்ள மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் கூட்டத்துக்குத் தலைமை வகித்தார். மத்திய அரசாங்கத்தின் அழைப்பின் பேரில் மாகாண அரசாங்கங்களிலிருந்தும், பெருமளவுக்கு மின் விசை உற்பத்தி செய்யும் மாகாணங்களிலிருந்தும், பொறியியல் வட்டாரங்களிலிருந்தும் ஏராளமான பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

            குழுவின் கூட்டத்தில் மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் பேசும்போது கூறியதாவது:

          ambedkar 381  பெருந்தகையாளர்களே, 3 சி எண் சீரமைப்புக் குழுவின் இந்தக் கொள்கைக் குழுக் கூட்டத்திற்கு வருகை தந்திருக்கும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். கூட்டத் தலைவருக்கு துவக்க உரை ஆற்றும் கடமையும் சலுகையும் உண்டு. எனக்குள்ள கடமைப் பொறுப்பை ஏற்கிறேன். ஆனால் நீண்டதொரு சொற்பொழிவாற்றி எனது சலுகையை துஷ்பிரயோகம் செய்ய நான் விரும்பவில்லை. நான் இப்போது செய்யப்போவதெல்லாம் நாம் பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ள விஷயம் சம்பந்தமான சில மெய்ம்மைகளை முன்னிலைப்படுத்தி அவற்றின்மீது நமது கவனத்தை ஒருமுகப்படுத்துவதுதான்.

            மறுசீரமைப்பு குறித்த பல்வேறு பிரச்சினைகளை ஆராய்வதற்காக இந்திய அரசாங்கம் வைசிராய் நிர்வாக சபையின் சார்பில் மறுசீரமைப்புக் குழு ஒன்றை அமைத்துள்ளது. இக்குழு அமைக்கப்பட்டது பற்றித் தெரியாதவர்கள் பலர் இங்கு இருக்கின்றனர். இத்தனைக்கும் இந்தப் பணியில் அவசியம் பங்கெடுத்துக் கொள்ள வேண்டியவர்கள் இவர்கள். எனவே, இவர்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு இந்த மறுசீரமைப்புக் குழு மேற்கொண்டுள்ள பணியையும், அதனைச் சிறப்பாகவும் துரிதமாகவும் நிறைவேற்றும் பொருட்டு வகுக்கப்பட்டிருக்கும் வேலைத் திட்டத்தையும் பற்றி இங்கு இரத்தினச் சுருக்கமாக கூறலாம் என்றிருக்கிறேன்.

ஐந்து குழுக்கள்

            பண்பும் நேயமுமிக்க என் நண்பரும் சகாவுமான மாண்புமிகு சர் ஜே.பி. ஶ்ரீவஸ்தா தலைமையில் நிர்வாக சபையின் மறுசீரமைப்புக் குழு ஒன்றை அமைக்க முன்னாள் வைசிராய் லின்லித்கோ பிரபு கடந்த மார்ச் மாதம் முடிவு செய்தது உங்கள் அனைவருக்கும் நினைவிருக்கும். நிர்வாக சபையின் இந்த மறு சீரமைப்புக் குழு ஐந்து வெவ்வேறு சீரமைப்புக் குழுக்களை அமைத்தது. இவற்றில் குழு எண்: I மறு குடியமர்வு, மறு வேலைவாய்ப்புப் பிரச்சினைகளைக் கவனித்துக்கொள்கிறது. குழு எண் II பைசல்கள், ஒப்பந்தங்கள், அரசாங்கக் கொள்முதல்கள் முதலியவற்றுக்கு பொறுப்பு ஏற்றிருக்கிறது. குழு எண். III-ன் பணி மூன்று குழுக்களிடையே பிரித்துத் தரப்பட்டிருக்கிறது – குழு எண் 3 ஏ போக்குவரத்தைக் கவனித்துக் கொள்கிறது; குழு எண் 3 பி அஞ்சல், தந்தி, விமானப் போக்குவரத்தை மேற்பார்க்கிறது; குழு எண். 3 சி பொதுப்பணித்துறை, மின்விசை போன்றவற்றுக்குப் பொறுப்பு ஏற்கும். குழு எண் IV வாணிகம் மற்றும் தொழில் துறையைக் கவனித்துக் கொள்ளும். குழு எண் V வேளாண் துறையில் ஈடுபாடு கொள்ளும்.

            இந்தக் குழுக்களில் ஒவ்வொன்றும் ஒரு கொள்கை வகுக்கும் குழுவைப் பெற்றிருக்கும். வைசிராய் நிர்வாக சபையின் உறுப்பினர் ஒருவர் இதன் தலைவராக இருப்பார். மத்திய அரசாங்கம், மாகாண அரசாங்கங்கள், வாணிகம், தொழில் முதலான துறைகளின் பிரதிநிதிகள் இதில் அங்கம் வகிப்பர். மேலும் இந்தக் குழுக்கள் ஒவ்வொன்றும் பணித்துறைக் குழுவைக் கொண்டிருக்கும். இலாகா செயலாளர் இதன் தலைவராக இருப்பார். சம்பந்தப்பட்ட இதர இலாக்காக்களின் செயலாளர்களும் இதில் இடம் பெற்றிருப்பர்.

            இந்த இருவகையான குழுக்களைத் தவிர சில மறுசீரமைப்புக் குழுக்கள் தத்தமது துறைகள் சம்பந்தப்பட்ட மூன்றாவது குழு ஒன்றையும் கொண்டிருக்கின்றன. துறைசார்ந்த குழு என்று அழைக்கப்படும் இக்குழு தனது செயல் எல்லைக்குள் எழும் தொழில்நுட்பப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவுகிறது. இவை தவிர, சமூக சேவைகள் குழு ஒன்றும், பொருளாதார ஆலோசனைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கின்றன. இத்தகையதுதான் மறுசீரமைப்புப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கு மத்திய அரசாங்கம் வகுத்துள்ள வேலைத் திட்டமாகும். நமது இப்போதைய கூட்டம் மறுசீரமைப்புக் குழுஎண். 3 சியின் கொள்கைக் குழுக் கூட்டமாகும். மின்விசை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதும், அவற்றிற்குச் சிறந்த முறையில் தீர்வு காணுவதற்கான பரிந்துரைகளை வழங்குவதும்தான் இந்தக் குழுவின் பணி.

            இந்தப் பிரச்சினைகள் யாவற்றையும் பற்றி ஆராய்வதற்கு முன்னதாக ஒரு விஷயத்தை இங்கு ஆரம்பத்திலேயே குறிப்பிட விரும்புகிறேன்; அவ்வாறு செய்வது நிலைமையைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்வதற்கு உதவிகரமாக இருக்கும். மின்விசை உற்பத்தி செய்வதற்குத் தேவையான எந்திர சாதனங்கள், கருவிகள், தொழிற்கூடங்கள் முதலியவற்றை கொள்முதல் செய்வது சம்பந்தப்பட்டது இந்த விஷயம். இந்த எந்திர சாதனங்களை வெளியிலிருந்துதான் அதிலும் பிரதானமாக பிரிட்டனிலிருந்துதான் வாங்க வேண்டும். இத்தகைய எந்திர சாதனங்களை வாங்குவதில் சிரமம் இல்லாமலில்லை. பிரிட்டனில் உற்பத்தி செய்யப்படும் மின் எந்திர சாதனங்களில் பெரும் பகுதி அதன் சொந்த தேவைகளுக்கே வேண்டியிருக்கிறது.

            மேலும், தங்களுக்குத் தேவையான எந்திர சாதனங்களையும் தொழிற்சாலைகளையும் பிரிட்டிஷ், அமெரிக்க சந்தைகளில் வாங்கும் பல ஐரோப்பிய, ஆசிய நாடுகளும் இருக்கின்றன. இந்தப் போட்டியில், இந்தியா தனக்கு வேண்டிய சாதனங்களை வாங்குவது கடினமாக இருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில்,, இந்தியா தனது நிலைமையைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கூடிய மட்டிலும் முன்கூட்டியே ‘ஆர்டர்களை’ப் பதிவு செய்து முன்னுரிமை பெறுவது மிகவும் உகந்ததாக இருக்கும். இவ்வாறு முன்னுரிமை பெறுவதில் பெரும் சிரமம் ஏதும் இருக்காது. இந்த யுத்தத்தில் இந்தியா செய்துள்ள மகத்தான உதவியையும் தியாகத்தையும் கருத்திற்கொண்டு பார்க்கும் போது, இது விஷயத்தில் இந்தியாவுக்கு முன்னுரிமை பெற்றுத் தருவதற்கு மன்னர் பிரான் அரசாங்கத்தை நம்பலாம் என்று உறுதியாகக் கருதுகிறேன். எனினும் நமக்குத் தேவையான எந்திர சாதனங்கள், கருவிகள் முதலியவற்றுக்கான மதிப்பீடுகளை முறையாகத் தயாரித்து சம்பந்தப்பட்ட உற்பத்தி நிறுவனங்களிடம் ‘ஆர்டர்கள்’ தருவது போன்ற வேறு சில சிரமங்கள் இருக்கின்றன.

            முதலாவதாக, மின்விசை முற்றிலும் மாகாணம் சம்பந்தப்பட்ட விஷயம். எனவே, தேவையான கருவிகள், எந்திரங்கள் முதலியவை சம்பந்தப்பட்ட மதிப்பீடுகள் மாகாணங்களிலிருந்துதான் வர வேண்டும். மத்திய அரசாங்கம் இவற்றை எல்லாம் கொண்டு தொகுத்துத்தான் தர முடியும்.

            இரண்டாவதாக, எந்த வகையான எந்திரங்கள் தேவைப்படும் என்பது சம்பந்தப்பட்டவர்கள் எண்ணெய், நீரோட்டம் போன்றவற்றில் எவற்றின் உதவியைக் கொண்டு மின்விசை தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்திருக்கிறது.

            யுத்தத்திற்குப் பிறகு அமையும் அரசாங்கங்களின் போக்கு எப்படியிருக்கும் என்ற நிச்சயமற்றத் தன்மை மூன்றாவது இடர்ப்பாடாகும். இப்போதைய அரசாங்கம் வகுத்தளிக்கும் திட்டங்களை எதிர்கால அரசாங்கம் ஏற்குமா? இப்போதைய அரசாங்கம் தனது திட்டங்களை நிறைவேற்றுவதற்கு விதிக்கும் வரிகளை எதிர்கால அரசாங்கங்கள் தொடருமா? இவற்றைப் பற்றி எல்லாம் எதுவும் நிச்சயமாகக் கூறுவதற்கில்லை. எனினும் யுத்தம் முடிவுற்றதும் மின்மயமாக்கத்துக்குத் தேவையான எந்திர சாதனங்களையும் கருவிகளையும் வாங்குவதற்கு ஏற்பாடு செய்யவில்லை என்றால் இந்த அரசாங்கம் தனது கடமையைச் செய்வதிலிருந்து பிறழ்ந்த குற்றச்சாட்டுக்கு ஆளாக நேரிடும்.

கொள்கை வகுக்கும் குழுவின் பணிகள்

          இந்த விஷயம் அவசரமானதும் முக்கியமானதும் என்று குறிப்பிட்டேன். ஆனால் இந்த விஷயம் இந்தக் குழு சம்பந்தப்பட்டதல்ல என்பதை நீங்கள் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன். இது கொள்கை வகுக்கும் குழு. மின்விசை உற்பத்தி, விநியோகம், நிர்வாகம் இவை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைக் கையாள்வதும், எதிர்கால அரசாங்கத்துக்கு வழிகாட்டக்கூடியவை என நாம் கருதும் கோட்பாடுகளைப் பரிந்துரைப்பதுமே நமது பிரதான பணியாகும். தங்களது கருத்துகளைத் தெரிவிப்பதற்கு தங்களுடைய பிரதிநிதிகளை இக்கூட்டத்துக்கு அனுப்பும்படிக் கேட்டுக் கொள்ள நமது கொள்கை வகுப்புக் குழுவின் இந்தக் கூட்டத்தை நாம் பயன்படுத்திக் கொண்டோம்.

            பொது அக்கறைக்குரிய விஷயம் என்ற முறையில் மின்விசைப் பிரச்சினையைக் கையாளும் முறை பல மாற்றங்களுக்கு உள்ளாகி வந்திருக்கிறது. இந்திய அரசாங்கம் இந்தப் பிரச்சினையை முதன் முதலில் 1905 ஆம் ஆண்டில்தான் கவனத்தில் எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. அப்போது அது மாகாணங்களுக்கு ஒரு சுற்றுக் கடிதத்தை அனுப்பியது. அதன் பிறகு மாகாண அரசாங்கங்களும் மத்திய அரசாங்கமும் நித்திரையில் ஆழ்ந்துவிட்டன. 1918-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்தியத் தொழில் துறை ஆணையத்தின் அறிக்கையும், இதற்கு ஓராண்டுக்குப் பிறகு வெளியிடப்பட்ட இந்தியப் படைக்கல வாரியத்தின் அறிக்கையும் மின்விசைத் துறையில் தீவிர அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய பிறகே அவை விழித்துக் கொண்டு செயலில் ஈடுபடத் தொடங்கின.

            இந்தியாவில் நீர்நிலைப் பரப்பாராய்ச்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இந்தப் பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்காமல் அரசாங்கமே மேற்கொள்ள வேண்டும் என்றும் தொழில்துறை ஆணையம் பரிந்துரைத்தது. இந்தப் பரிந்துரையை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொண்டு, இந்த ஆராய்ச்சிப் பணிக்குப் பொறுப்பாளராக அச்சமயம் ஐக்கிய மாகாணங்களில் பாசனத்துறையின் தலைமைப் பொறிஞராக இருந்த ஜி.டி.பார்லோ, சி.ஐ.இ.யை நியமித்தது; இந்த ஆய்வில் அவருக்குத் துணைபுரிய இந்திய அரசாங்கத்தின் மின்விசை ஆலோசகராக இருந்த திரு.ஜி.எம். மியரல், எம்.ஐ.சி.இ.யை நியமித்தது. ஆனால் விரைவிலேயே திரு.பார்லோ காலமாகிவிட்டார். அவர் விட்டுச் சென்ற பணியை திரு.மியரஸ் மேற்கொண்டார். 1919-1922 ஆம் ஆண்டுகளுக்கு இடையே அவர் மிகச் சிறந்த மூன்று அறிக்கைகளைச் சமர்ப்பித்தார். மின்விசை வழங்கீடு சாத்தியக்கூறுகள் சம்பந்தமான மாகாண ரீதியான முக்கிய தகவல்கள் பின்கண்ட ஐந்து தலைப்புகளில் அடங்கியிருந்தன – (1) ஏற்கெனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள நீர்மின்விசை நிலையங்கள், (2) தற்போது கட்டப்பட்டுவரும் மின் நிலையங்கள், (3) ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்ட ஆனால் இன்னமும் வளர்ச்சியுறாத பிரதேசங்கள், (4) விரிவான ஆய்வுக்கு உகந்தவை என்று தெரியவந்துள்ள இடங்கள், (5) ஆய்வு செய்யப்படாத இடங்கள்.

மின்விசைமாகாணத்தின் பொறுப்பிலுள்ள துறை

            1919-ஆம் வருடச் சட்டத்தின் விளைவாக இந்திய அரசாங்க அமைப்பில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. துரதிர்ஷ்டவசமாக இதனைத் தொடர்ந்து மின்விசை மாகாணத்தின் பொறுப்பிலுள்ள துறையாகி விட்டது. அதுமட்டுமல்ல, தனது நிர்வாக வரம்புக்கு வெளியே உள்ள விஷயங்களில் தகுதியானவை, உகந்தவை எனத்தான் கருதுபவற்றுக்கு மத்திய அரசாங்கம் நிதி ஒதுக்கலாம் என்று இப்போதுள்ள சட்டத்தில் இருப்பது போன்று அச்சமயம் இருந்த சட்டத்தில் துரதிர்ஷ்டவசமாக வழிவகை ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை. இதனால் நீர்நிலைப் பரப்பாராய்ச்சிக்கு இந்திய அரசாங்கம் நிதி ஒதுக்க முடியாது போயிற்று, இவ்வாறு, இந்தியாவுக்கு மின்விசை வழங்குவதற்குத் துணைபுரியும் ஒரு சிறந்த, அத்தியாவசியமான, மாபெரும் பணி முடிவுக்கு வந்தது.

            இந்தியாவில் மின்விசை உற்பத்தியைப் பெருக்குவதற்குப் பொறுப்பான அதிகாரி எவரும் மத்திய அரசாங்கத்தில் இல்லை. இதன் விளைவாக இந்தியாவில் மின்விசை உற்பத்தி, விநியோகம், நிர்வாகம் சம்பந்தமான தகவல்கள் எதுவும் மத்திய அரசாங்கத்திலுள்ள எங்களுக்கு அண்மைக் காலம் வரை கிடைக்கவில்லை.

            எனவே, இந்தியாவில், மின்விசைத் துறை மீண்டும் மிகுந்த அக்கறைக்கும், ஆர்வத்துக்கும், கவனத்துக்கும் உரியதாகி இருப்பது குறித்து நான் பெரிதும் மகிழ்ச்சி அடைகிறேன். எனக்குத் தெரிந்த வரை மின்விசை சம்பந்தமான பின்கண்ட கேள்விகளுக்கு இந்தக் குழு விடை காண வேண்டும் என்று கருதுகிறேன்:-

 • மின்விசைத் துறை தனியார் பொறுப்பில் இருக்க வேண்டுமா, அல்லது அரசாங்கப் பொறுப்பில் இருக்க வேண்டுமா?
 • அது தனியார் வசம் இருக்கும் பட்சத்தில் பொது மக்களின் நலன்களைப் பாதுகாக்கும் பொருட்டு விதிக்க வேண்டிய நிபந்தனைகள் ஏதும் உண்டா?
 • மின்விசைத் துறையை வளர்த்து மேம்படுத்தும் பொறுப்பு மத்திய அரசாங்கத்திடம் விடப்பட வேண்டுமா, அல்லது மாகாண அரசாங்கத்திடம் விடப்பட வேண்டுமா?
 • இந்தப் பொறுப்பை மத்திய அரசாங்கத்திடம் விடும்பட்சத்தில், மலிவாகவும் பெருமளவிலும் மின்விசை வழங்கீடு செய்வதற்கும், மூல வளங்கள் வீணடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கும் தடுப்பதற்கும் எத்தகைய தேர்ந்த, உகந்த, பயனுறுதியுடைய நிர்வாக முறைகளை மேற்கொள்ள வேண்டும்?
 • இவ்வாறில்லாமல் இந்தப் பொறுப்பு மாகாணங்களிடம் ஒப்படைக்கப்படும் பட்சத்தில், இது விஷயத்தில் மாகாணங்களின் நிர்வாகம் ஆலோசனை கூறும் அதிகாரங்களையும், ஒருமுகப்படுத்தும் அதிகாரங்களையும் கொண்ட மாகாணங்களுக்கு இடையிலான ஒரு வாரியத்தின் மேற்பார்வைக்கு உட்பட்டதாக ஆக்கப்பட வேண்டுமா?

மூன்று அம்சங்கள்

              இந்தக் கேள்விகள் ஒவ்வொன்றுக்கும் இரண்டு கோணங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு கோணமும் தனது ஆதரவாளர்களைப் பெற்றுள்ளது. இந்தக் கட்டத்தில் என் கருத்தை வெளியிட நான் விரும்பவில்லை. நான் திறந்த மனமுடையவனாக இருக்கிறேன்; ஆனால் அது வெற்று மனமல்ல. மின்விசை உற்பத்தியைப் பெருக்குவதற்கு எது சிறந்த மார்க்கம் என நாம் முடிவுக்கு வருவதற்கு முன்னர் பின்வரும் மூன்று அம்சங்களை நாம் மனத்திற் கொள்ள வேண்டும்:-

 • இவை இரண்டில் எது மலிவான விலையில் அல்லாமல் மிகமிக மலிவான விலையில் நமக்கு மின்விசை வழங்கும்,
 • இவை இரண்டில் எது போதுமானது மட்டுமல்லாமல் அபரிமிதமாக நமக்கு மின்விசை வழங்கும்,
 • இவற்றில் எது கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த ரயில்வேயைப் போல் கருதப்பட்டு அதாவது உடனடி லாப நோக்கமில்லாமல் தொடங்கப்படும் ஒரு தொழில் முயற்சியைப் போல் கருதப்பட்டு இந்தியாவின் மின்மயமாக்கத்தைச் சாத்தியமாக்கும்.

மலிவான அதேசமயம் அபரிமிதமான மின்விசை வழங்கீடு உத்தரவாதம் செய்யப்பட வேண்டும் என்று இந்தியா விரும்புகிறது; இதனால்தான் இந்த மூன்று அம்சங்களை இங்கே வலியுறுத்துகிறேன்.

இவை அடிப்படையான கேள்விகள், இவற்றில் பெரும்பாலானவை அரசியலமைப்புச் சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும் பிரச்சினையை எழுப்பக்கூடும் என்ற ஐயம் இருந்துவரும் காரணத்தால் உங்களில் சிலர் இவற்றைப் பற்றி முடிவு எடுப்பதற்குத் தயங்கலாம். என்னைப் பொருத்தவரையில் இத்தகைய தயக்கம் ஏதும் இல்லை ஓர் அரசியலமைப்புப் பிரச்சினையைத் தீர்மானிப்பதற்கும் அது குறித்து அபிப்பிராயம் தெரிவிப்பதற்கும் இடையே வேறுபாடு உண்டு. அரசியலமைப்புப் பிரச்சினைகளை இங்கு நாம் தீர்மானிக்கப் போவதில்லை. அவை சம்பந்தமான நமது கருத்தைத் தான் வெளியிடுகிறோம். அவை அரசியலமைப்புச் சட்ட இயல்பு கொண்டிருக்கும் காரணத்தால் அவற்றைப் பரிசீலிப்பதிலிருந்து நாம் எவ்வகையிலும் தடை செய்யப்படவில்லை. நம் பொறுப்பில் விடப்பட்டிருக்கும் துறையிடம் நாம் நேர்மையோடு நடந்து கொள்ள வேண்டுமானால் இவற்றை நாம் தவிர்க்க முடியாது என்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.

மின்விசை இலாகா

          இந்த முக்கியமான பிரச்சினைகள் தவிர எவ்வகையிலும் இரண்டாந்தரமானவை அல்லாத வேறு பிரச்சினைகளும் இருக்கின்றன. மின்விசையமயமாக்கம் வெற்றிபெற வேண்டுமாயின் இந்தப் பிரச்சினைகளை நம் கவனத்திலிருந்து அகற்றி விட முடியாது. இப்பிரச்சினைகள் வருமாறு:

 • மின்விசை உற்பத்திக்கு அவசியமான நிலக்கரி, பெட்ரோல், எரி சாராயம், நீரோட்டம் முதலியவற்றைப் பற்றி முறையாக ஆய்வு செய்வதற்கும், மின் விசை உற்பத்தி அற்றலை அதிகரிப்பதற்கான வழி துறைகளைப் பரிந்துரைப்பதற்கும் மத்தியில் ஒரு மின்விசை இலாகாவை உருவாக்குவது அவசியமா?
 • கிடைக்கக் கூடிய மின்விசையை மிகத் திறமையோடு பயன்படுத்திக் கொள்ளும் பொருட்டு மின்விசை ஆதாரங்களுக்கும் எந்திர சாதனங்களுக்கும் இடையே உள்ள உறவுகளுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை ஆராய்வதற்கு மத்தியில் ஒரு மின்விசை ஆராய்ச்சி மையத்தை அமைப்பது அவசியமா?
 • இந்தியாவில் மின்விசை நிலையங்கள் மற்றும் எந்திர சாதனங்களை உருவாக்குவதற்கும், பராமரிப்பதற்கும், மேம்படுத்துவதற்கும் திட்டமிடவும் அத்திட்டங்களைச் செயல்படுத்தவும் மின் விசைத் தொழில் நுட்பத்தில் இந்தியர்களைப் பயிற்றுவிக்கும் வழி துறைகளைக் காணுவது அவசியமா?

என் உரையை முடித்துக் கொள்வதற்கு முன்னர் இந்தியாவில் மின்விசை உற்பத்தியைப் பெருக்குவதன் முக்கியத்துவத்தையும், அதன் இறுதிக் குறிக்கோளையும் சுட்டிக்காட்டக்கூடிய சில கருத்துகளை இப்போது உங்கள் முன்வைக்கலாமா? ஏனென்றால் இத்துறைக்குப் பொறுப்பேற்பவர்கள் இந்த முக்கியத்துவத்தையும் இறுதிக் குறிக்கோளையும் முழு அளவுக்கு உணர்ந்து தெளிந்தவர்களாக இருப்பது அவசியம். இது விஷயத்தில் நீங்கள் என்னுடன் உடன்படுவீர்களானால் உங்களை நீங்களே பின்வரும் கேள்வியைக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன்; ‘இந்தியாவில் நமக்கு ஏன் மலிவான, ஏராளமான மின்விசை தேவை?’ மலிவான, ஏராளமான மின்விசை இல்லாமல் இந்தியாவைத் தொழில்மயமாக்கும் முயற்சி வெற்றிபெற முடியாது என்பதே இந்தக் கேள்விக்கான பதிலாக இருக்க முடியும். இந்தக் குழு மேற்கொள்ள வேண்டியிருக்கும் பணியின் முக்கியத்துவத்தின் ஒரு பகுதியையே இந்தப் பதில் வெளிப்படுத்துகிறது எனக் கூற வேண்டும்.

பின்வரும் மற்றொரு கேள்வியையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள்: ‘தொழில்மயமாக்கம் ஏன் அவசியம்?” அப்போது இந்த முழு முக்கியத்துவமும் உடனே உங்களுக்குப் புலனாகும்; ஏனென்றால் கொத்தியெடுக்கும் கோர வறுமை என்னும் நிரந்தர சுழல் வட்டத்தில் சிக்கித்தவிக்கும் கோடானுகோடி ஏழை எளிய மக்களை அதன் இரும்புப் பிடியிலிருந்து மீட்கும் உறுதியான, நிச்சயமான மார்க்கமாக இந்தியாவில் தொழில்மயமாக்கம் இருக்க வேண்டுமென நாம் விரும்புகிறோம். எனவே இந்தியாவின் தொழில்மயமாக்கத்தில் நாம் உடனடியாக ஈடுபடுவது அவசியம்.

இந்தியாவின் தொழில் வளர்ச்சி

            இந்தியாவின் தொழில் வளர்ச்சி குறித்துப் பல ஆண்டுகளாகவே நாம் பேசி வருகிறோம். ஆனால் தொழில் வளர்ச்சியைச் சாத்தியமாக்குவதற்கு, சாதிப்பதற்கு எத்தகைய உருப்படியான முயற்சியும் மேற்கொள்ளப்பட்டதை நாம் காணவில்லை. இது விஷயத்தில் உதட்டு சேவை செய்வதுடன்தான் இன்னமும் சிலர் இருந்து வருகின்றனர். வேறு சிலரோ இது விஷயத்தில் எதிர்க்கோடிக்கு சென்று, மட்டுமீறிய வெறி ஆர்வம் காட்டுகின்றனர். இது இவ்வாறு என்றால் வேறுபலர் முற்றிலும் மாறுபட்டதொரு போக்கைக் கடைப்பிடிக்கின்றனர்; இந்தியா முழுக்க முழுக்க ஒரு விவசாய நாடு, எனவே வேளாண்மையை மேம்படுத்துவதில் நமது முழு முயற்சியையும் ஈடுபடுத்துவதுதான் மிகச் சிறந்தது என்று உபதேசம் செய்வதில் இவர்கள் ஒருபோதும் சலிப்பதோ, சளைப்பதோ இல்லை. இந்தியா பிரதானமாக ஒரு வேளாண் நாடு என்று யாரும் சொல்ல வேண்டிய அவசியமில்லை. எல்லோருக்குமே இது தெரியும். ஆனால் இது எத்தகைய ஒரு மாபெரும் அவப்பேறு என்பதை உணர்ந்திருப்பவர்கள் வெகு சிலரே இருப்பது வியப்பூட்டுவதாக இருக்கிறது. இது ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது என்பது எனக்குத் தெரியும். வங்காளத்திலும் இந்தியாவின் இதர பகுதிகளிலும் பஞ்சம் கோர நர்த்தனமாடி வருகிறது; அங்கு ஒரு சாண் வயிற்றுக்கு உண்ண உணவின்றி அல்லது உணவை வாங்க சக்தியின்றி மக்கள் கொத்துக் கொத்தாக மாண்டு மடிந்து வருகின்றனர்; அந்த கொடிய பஞ்சத்தை விடவும் இது அவப்பேறானது என்பதை மெய்ப்பிக்க மேற்கொண்டு என்ன சான்று வேண்டும்?

            என் அபிப்பிராயத்தில் இந்தியாவின் வேளாண் துறை மிக மிகப் பரிதாபகரமாக தோல்வியடைந்து விட்டது என்பதைக் காட்டுவதற்கு பெரிய சான்று எதுவும் தேவையில்லை; ஏனென்றால் கைப்புண்ணுக்கு யாராவது கண்ணாடியைத் தேடுவார்களா? இந்தியா உணவைத் தவிர வேறு எதையும் உற்பத்தி செய்வதில்லை. அந்த உணவும் மக்களைப் போஷிக்கும் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம்? நாடு முழுக்க முழுக்க வேளாண்மையைச் சார்ந்திருக்கும்படிச் செய்யப்பட்டிருப்பதே, நம்பியிருக்கும்படி நிர்ப்பந்திக்கப்பட்டிருப்பதே இந்தியாவின் படுபயங்கர வறுமைக்கு முற்றிலும் காரணம் என்பது என் திட்டவட்டமான கருத்து.

            இந்தியாவின் மக்கட்தொகை ஆண்டுக்கு ஆண்டு, வாரத்திற்கு வாரம், நாளுக்கு நாள், மணிக்கு மணி அதிகரித்து வருகிறது. இவ்வாறு மக்கட் தொகை எல்லையற்று பெருகிவரும் அதே வேளையில் சாகுபடிக்குக கிடைக்கும் நிலம் மிக மிகக் குறைவு; அந்த மிகக் குறைந்த நிலத்தின் வளப்பமோ வருடத்துக்கு வருடம் தேய்பிறையாகக் குன்றி வருகிறது. இந்தியா ஒரு குறடின் இரு பக்கங்களுக்கு இடையே சிக்கிக் கொண்டிருக்கிறது. ஒரு பக்கத்தில் மக்கட் தொகை வரைமுறையின்றிப் பெருகி வருகிறது; மற்றொரு பக்கத்திலோ மண்ணின் வளம் கிடுகிடுவென்று சரிந்து வருகிறது.

விநாசகாலம் சூழ்ந்து கொண்டிருக்கிறது

            இதன் விபரீத விளைவு என்ன? ஒவ்வொரு பத்தாண்டின் இறுதியிலும் மக்கட்தொகைப் பெருக்கத்துக்கும் வேளாண் உற்பத்திக்கும் இடையே ஒரு படு பயங்கர அதல பாதாளம் தோன்றி விடுவதைப் பார்க்கிறோம்; வாழ்க்கைத்தரம் நாளுக்கு நாள் கூனிக் குறுகி வருவதைக் காண்கிறோம். ஒவ்வொரு பத்தாண்டுக் காலத்திலும் மக்கட் தொகைக்கும் உற்பத்திக்கும் இடையேயான இந்த இடைவெளி மிகுந்த அச்சம் கொள்ளும் வகையில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியா படுபயங்கர வறுமைப் படுகுழியில், மீளமுடியாத கெபியில் மேலும் மேலும் தள்ளப்பட்டு வருகிறது. உண்மையில் ஒரு விநாசகாலம் இந்தியாவைச் சூழ்ந்து கொண்டிருக்கிறது. நாடுகளெங்கும் பட்டிதொட்டிகளெங்கும் வேளாண் பொருட் காட்சிகளையோ அல்லது விலங்குகள் கண்காட்சிகளையோ நடத்தி விடுவதனாலோ, சிறந்த உரத்தைப் பயன்படுத்துவது பற்றிப் பிரசாரம் செய்துவிடுவதாலோ இந்த விநாசத்தைத் தடுத்து நிறுத்திவிட முடியாது. வேளாண்மை ஆதாயம் தரக்கூடியதாக ஆக்கப்பட்டால்தான் இத்தகைய விபரீத நிலைக்கு, அவலநிலைக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியும். தொழில் வளர்ச்சிக்கு ஆதரவாக தொடர்ந்து பல தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலொழிய இந்தியாவில் விவசாயத்தை லாபகரமானதாக்குவது சாத்தியமில்லை. தொழில் வளர்ச்சி ஒன்றுதான் நிலத்தை முழுக்க முழுக்க நம்பியுள்ள அளவுக்கு அதிகமான மக்கட் தொகையில் ஒரு பகுதியினரை வேளாண்மையல்லாத இதர ஜீவனோபாயத் தொழில்களில் ஈடுபடும்படிச் செய்ய முடியும்.

            சுருக்கமாகக் கூறினால், நமது மறுசீரமைப்புக் குழுக்கள் நோக்கத்திலும் சரி, செயல்பாட்டிலும் சரி பெரும்பாலான ஐரோப்பிய நாடுகளிலுள்ள மறுசீரமைப்புக் குழுக்களின் அடிப்படையில் அமைக்கப்பட்டுள்ளன; ஏனென்றால் இந்நாடுகளில் எல்லாம் தொழில்துறை அமைப்புகளை ஜெர்மானியர்கள் அழித்தொழித்து நாசப்படுத்திவிட்டபோது இத்தகைய சீரமைப்புக் குழுக்கள்தான் அங்கு தொழில்துறைக்குப் புத்துயிரும் புத்தாக்கமும் அளித்தன. மறுசீரமைப்புப் பிரச்சினைகள் நாட்டுக்கு நாடு வேறுபடுகின்றன, வேறுபடவே செய்யும். சில நாடுகளில் மறுசீரமைப்புப் பிரச்சினை பத்தாம் பசலியாகிவிட்ட தொழில் நிலையங்களையும் எந்திர சாதனங்களையும் புனரமைக்கும் பிரச்சினையாக அமைந்திருக்கிறது.

இந்தியாவிலுள்ள நிலைமை

            வேறு சில நாடுகளில் மறுசீரமைக்கும் பிரச்சினை போரில் நிர்மூலமாக்கப்பட்டுவிட்ட கருவிகளையும் எந்திரங்களையும் தொழில் நிலையங்களையும் புதுப்பிக்கும் பிரச்சினையாக உருவெடுத்திருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரையில், அதன் மறுசீரமைப்புப் பிரச்சினையில் போரில் ஈடுபட்டுள்ள இதர நாடுகளுக்கு இவ்வகையில் ஏற்பட்டுள்ள அனைத்து அனுபவங்களையும், அவற்றின் சகல அம்சங்களையும் கணக்கிலெடுத்துக் கொள்ள வேண்டும்.

            ஆனால் அதே சமயம் இந்தியாவின் மறுசீரமைப்புப் பிரச்சினை இதர நாடுகளின் மறுசீரமைப்புப் பிரச்சினையிலிருந்து அடிப்படையிலேயே மாறுபட்டது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. ஏனைய நாடுகளில் மறுசீரமைப்புப் பிரச்சினை ஏற்கெனவே உள்ள தொழில் துறையைப் புதுப்பிக்கும் பிரச்சினையாக இருந்து வருகிறது.

            இந்தியாவின் மறுசீரமைப்புப் பிரச்சினையோ ஏற்கெனவே உள்ள தொழில்களைப் புனரமைக்கும் பிரச்சினையாக அல்லாமல் பிரதானமாக இந்தியாவின் தொழில் வளர்ச்சிப் பிரச்சினையாக, முடிவில் காலகாலமான, நாட்பட்ட கொடிய வறுமையை ஒழித்துக்கட்டும் பிரச்சினையாக இருந்து வருவதை நான் காண்கிறேன்.

            எனவே, மத்திய அரசாங்கமும் மாகாண அரசாங்கங்களும் போட்டி போட்டுக்கொண்டு உரிமை கொண்டாடுவதைக் கருத்திற்கொள்ளாமல், மனித வாழ்க்கையை மனத்திற்கொண்டு மின்விசை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஆழ்ந்த அக்கறையுடனும் மெய்யார்வத்தோடும் அரசியல் மேதகைமையுடனும் நாம் தீர்வு காண முடியும் என்று நம்புகிறேன்.

            மறுசீரமைப்பு சம்பந்தமாக கடந்தகாலத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பரிதாபகரமாக தோல்வியடைந்த கசப்பான நினைவுகள் இருந்தபோதிலும் நம்பிக்கை இழந்த உணர்வோடு என் உரையை முடிக்க விரும்பவில்லை. அவசியத்திலிருந்து புதுமை தோன்றும் என்பார்கள்; அல்லல்களிலிருந்து ஆண்டவன் பக்தி தோன்றும் என்று கூறுவது உண்டு. அதே போன்று மறுசீரமைப்புக்கான உத்வேகத்தை யுத்தம் அளிப்பதாகத் தோன்றுகிறது. ஆனால் இதில் பரிதாபத்துக்கும் வேதனைக்குமுரிய விஷயம் என்னவென்றால், போரிலிருந்து தோன்றும் உந்துதல் சமாதானம் ஏற்பட்டதும் மடிந்து விடுவதாகத் தெரிகிறது. கடந்த யுத்தத்திற்குப் பிறகு இந்தியாவில் இதுதான் நிகழ்ந்தது; அப்போது இந்தியத் தொழில்துறை ஆணையமும், இந்தியப் படைக்கல வாரியமும் முன்வைத்த மறுசீரமைப்புத் திட்டத்திற்கு இதே கதிதான் ஏற்பட்டது. ஆனால் இம்முறை மறுசீரமைப்புத் திட்டம் வாடிவதங்கி உதிர்ந்து போகாது என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. ஏனென்றால் வில்லியம் ஜேம்ஸ் குறிப்பிட்டது போன்று “இந்தியாவின் வறுமை எத்தகையது என்பதை சென்ற யுத்தகால ராஜியவாதிகள் அறிந்திருக்கவில்லை. ஆனால் அந்த இந்திய வறுமையின் கண்கண்ட எதார்த்தம் பற்றிய கூரிய உணர்வை” இந்த யுத்தம் தோற்றுவித்திருப்பதை நாம் இப்போது காண்கிறோம்.

*           *           *

1ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கும் இந்திய அகதிகளுக்கும் உதவி

நிரந்திர நிதிக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பரிந்துரைகள்

(1.இந்தியத் தகவல் ஏடு, டிசம்பர் 15, 1943, பக்கம் 337)

            விஞ்ஞான, தொழில் நுட்பக் கல்வி பயிலும் ஷெட்யூல்டு வகுப்பு மாணவர்களுக்கு உபகாரச் சம்பளங்கள் வழங்குதல், யுத்த பிராந்தியங்களிலிருந்து வரும் அகதிகளுக்கும் அங்கு காவலில் வைக்கப்பட்டிருப்போரை சார்ந்து வாழுபவர்களுக்கும் ஆகும் செலவை ஏற்றல் ஆகிய இரு முக்கியமான பரிந்துரைகள் 1943 நவம்பர் 20 ஆம் தேதி புதுடில்லியில் இந்திய அரசாங்கத்தின் நிதித்துறை உறுப்பினரான மாண்புமிகு சர் ஜெரிமி ரய்ஸ்மான் தலைமையில் நடைபெற்ற நிரந்தர நிதிக்குழு கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டன.

            முந்திய பரிந்துரையைச் செயல்படுத்துவதற்கு ஐந்தாண்டு காலத்துக்கு வருடம் ரூ.3 லட்சமும் பிந்திய பரிந்துரையைச் செயல்படுத்துவதற்கு 1944-45ல் ரூ.225 லட்சமும் செலவாகும்.

உபகாரச் சம்பளங்கள்

            உயர்நிலைப் பள்ளிக் கல்வியை முடித்த ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மேற்கல்வி பெறுவதற்கு வருடம் ரூ.3 லட்சம் வீதம் 5 ஆண்டுக் காலத்திற்கு வழங்கப் பரிந்துரைக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் விஞ்ஞான, தொழில்நுட்பக் கல்வி பெறுவதற்கு இந்த உபகாரச் சம்பளங்கள் வழங்கப்படும்.

            குழு இந்தப் பரிந்துரையை ஏற்றுக்கொண்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

(இந்தியத் தொழிலாளர் சம்மேளனத்தின் சார்பில் 1943 செப்டம்பர் 8 முதல் 17ஆம் தேதி வரை டில்லியில் நடைபெற்ற அகில இந்தியத் தொழிற்சங்க பயிற்சி முகாமின் இறுதிக் கூட்டத்தொடரில் நிகழ்த்தப்பட்ட உரை)

(இந்திய தொழிலாளர் சம்மேளனம் பிரசுரித்த உரை, 30, பெய்ஸ் பஜார், டில்லி, பிரதி வழங்கி உதவியவர் பம்பாயைச் சேர்ந்த திரு.ஆர்.டி.ஷிண்டே)

            ambedkar in bombayஇன்று மாலை உங்களிடையே வந்து உரையாற்றுமாறு எனக்கு அன்பான அழைப்பு விடுத்தமைக்காக உங்கள் செயலாளருக்கு என் பாராட்டுக்கள். இந்த அழைப்பை ஏற்க முதலில் நான் தயங்கினேன். அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முதலாவதாக அரசாங்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நான் கூறக் கூடியவை மிகவும் குறைவு. இரண்டாவதாக நீங்கள் பெரிதும் ஆர்வம் கொண்டுள்ள தொழிற்சங்க இயக்கத்தைப் பற்றி நான் கூறக்கூடியதும் மிகச் சொற்பமே. “இல்லை, என்னால் வர இயலாது” என்று நான் கூறுவதை உங்கள் செயலாளர் ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதாலேயே இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டேன். மேலும், இந்தியத் தொழிலாளர்களின் ஸ்தாபன அமைப்புப் பிரச்சினை எப்போதுமே என் சிந்தனையில் தலையாய இடம் பெற்று வந்திருக்கிறது, எனவே இது குறித்து என் கருத்துகளை வெளியிடுவதற்கு இது ஓர் அருமையான வாய்ப்பு என்று நான் உணர்ந்தேன். தவிரவும், தொழிற்சங்க இயக்கத்தில் பிரதானமாக ஆர்வம் கொண்டிருப்போரையும் என் கருத்துகள் ஈர்க்கும் என்றும் கருதினேன்.

            மனித சமுதாயத்தின் அரசாங்கம் சில மிகவும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் அடைந்துள்ளது. கொடுங்கோல் மன்னர்களின் எதேச்சதிகார வடிவத்தை மனித சமுதாயத்தின் அரசாங்கம் எய்தியிருந்த காலம் ஒன்று இருந்தது. இரத்தக் களறியான நீண்ட நெடும் போராட்டத்திற்குப் பிறகு, இந்த சாபக்கேடான அமைப்பு தூக்கியெறியப்பட்டு, நாடாளுமன்ற ஜனநாயகம் எனப்படும் ஒரு புதிய அரசமைப்பு அதன் இடத்தில் அமர்ந்தது. அரசாங்கக் கட்டமைப்பில் இதுதான் முடிந்த முடிவு என்று கூடக் கருதப்பட்டது. ஒவ்வொரு மனித ஜீவனுக்கும் சுதந்திரத்தையும், சொத்துரிமையையும், இன்பவாழ்வையும் நல்கும் பொற்காலத்தை இது கொண்டுவரும் என்றும் நம்பப்பட்டது. இத்தகைய நம்பிக்கைகளுக்கு போதிய ஆதார அடிப்படைகள் இருந்து வரவே செய்தன. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் மக்களின் குரலை எதிரோலிக்க சட்டமன்றம் இருக்கிறது; அந்த சட்டமன்றத்திற்குக் கீழ்ப்பட்டதாக, அதன் ஆணைக்கு உட்பட்டதாக ஆட்சித்துறை இருக்கிறது. சட்டமன்றத்திற்கும் ஆட்சித்துறைக்கும் மேலே அவை இரண்டையும் கண்காணிக்கவும், நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்குள் அவற்றை வைத்திருக்கவும் நீதித்துறை இருக்கிறது.

நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு மக்கள் அரசாங்கத்துக்குரிய எல்லா அம்சங்களையும் பெற்றுள்ளது; அதாவது மக்களால் மக்களைக் கொண்டு மக்களுக்காக நடத்தப்படும் அரசாங்கம் என்ற தகைமையை அது கொண்டிருக்கிறது. இவ்வாறு இருக்கும்போது, அது அகிலம் எங்கும் ஏற்றுக் கொள்ளப்பட்டு ஒரு நூற்றாண்டு முடிவதற்குள்ளாகவே அதனை எதிர்த்துக் குரல் எழுப்பப்பட்டு வருவது ஓரளவு வியப்பளிக்கக்கூடிய விஷயமாக இருந்து வருகிறது. இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் அதற்கு எதிராகக் கலகக் கொடி தூக்கப்பட்டிருக்கிறது. இன்னும் சொல்லப் போனால் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக அதிருப்தி தலை தூக்காத நாடுகள் வெகு சிலதான் என்றுகூடக் கூறலாம். நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக இவ்விதம் அதிருப்தியும் மனக்குறையும் தோன்றியிருப்பது ஏன்? இது பரிசீலனைக்குரிய ஒரு கேள்வியாகும். இந்தப் பிரச்சினையைப் பரிசீலிக்க வேண்டிய அவசர அவசியம் வேறு எந்த நாட்டையும் விட இந்தியாவில்தான் அதிகம் உணரப்படுகிறது. இது ஏன்? ஏனென்றால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை எய்துவதற்கு இந்தியா முயற்சி செய்துவருகிறது. “நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பற்றி எச்சரிக்கையாக இருங்கள்; வெளிக்குத் தோன்றுவது போல் அது அப்படி ஒன்றும் மிகச் சிறந்த சரக்கல்ல” என்று இந்தியர்களிடம் கூறுவதற்குப் போதிய துணிச்சல் கொண்ட யாரேனும் ஒருவர் பெரிதும் தேவைப்படுகிறார்.

            நாடாளுமன்ற ஜனநாயகம் ஏன் தோல்வியடைந்தது? சர்வாதிகாரிகள் நாட்டில் அது தோல்வியடைந்ததற்கு மிகவும் மெதுவாக இயங்கக் கூடியதாக அது இருந்து வந்ததே காரணம். எத்தகைய விரைவான, துரிதமான நடவடிக்கை எடுப்பதையும் அது தாமதப்படுத்துகிறது. நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ஆட்சித்துறைக்கு சட்டமன்றம் முட்டுக்கட்டைப் போடக்கூடும்; ஆட்சித் துறை விரும்பும் சட்டங்களை நிறைவேற்ற அது மறுக்கக்கூடும். அப்படியே சட்டமன்றம் அட்சித்துறையின் பாதையில் குறுக்கிடாவிட்டாலும் நீதித்துறை குறுக்கிட்டு அதன் சட்டங்களை செல்லாதவை என்று அறிவிக்கக்கூடும். இதேசமயம், சர்வாதிகாரம் சுதந்திரமாக செயல்பட நாடாளுமன்ற ஜனநாயகம் அனுமதிப்பதில்லை. சர்வாதிகாரிகள் ஆளுகின்ற இத்தாலி, ஸ்பெயின், ஜெர்மனி போன்ற நாடுகளில் இதனால்தான் நாடாளுமன்ற ஜனநாயகம் மதிப்பிழந்த ஒரு கோட்பாடாகக் கருதப்படுகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தை சர்வாதிகாரிகள் மட்டுமே எதிர்த்தால் அது அப்படி ஒன்றும் கவலைப்படக் கூடிய விஷயமல்ல. ஏனென்றால் நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிரான அவர்களது சாட்சியம் உண்மையில் ஒரு சாட்சியமே அன்று. உண்மையைக் கூறினால் நாடாளுமன்ற ஜனநாயகம் சர்வாதிகாரத்துக்கு ஒரு வலுவான தடையரணாக இருக்கக்கூடுமாதலால் அது வரவேற்கப்படவே செய்யும். எனினும் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் மக்கள் வாழும் நாடுகளில் கூட துரதிர்ஷ்டவசமாக நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக மிகுந்த அதிருப்தி நிலவுகிறது. நாடாளுமன்ற ஜனநாயகம் குறித்து பெரிதும் வருந்தத்தக்க விஷயமாகும் இது. அதிலும் நாடாளுமன்ற ஜனநாயகம் எவ்வகையிலும் ஸ்தம்பித்துப் போய் நிற்காத நிலையில் இது மிகவும் இரங்கத்தக்க ஒன்றாகும். அது மூன்று திசைகளில் முன்னேறியிருக்கிறது. சமத்துவ அரசியல் உரிமைகள் என்னும் கருத்தை விரிவுப்படுத்தி அது முன்னேறியிருக்கிறது. வயது வந்தோர் வாக்குரிமையைப் பெற்றிராத நாடாளுமன்ற ஜனநாயகத்தை தன்னகத்தே கொண்ட நாடுகள் மிகச் சிலவே இருக்கின்றன. சமூக, பொருளாதார சமத்துவ வாய்ப்புக் கோட்பாட்டை அது அங்கீகரித்திருக்கிறது. மூன்றாவதாக, சமூக விரோத நோக்கம் கொண்ட கூட்டுரிமைக் கழகங்கள் அரசை முடமாக்கி செயலற்றதாக்க முடியாது என்பதை அது ஏற்றிருக்கிறது.

இவ்வாறெல்லாம் இருந்தும் ஜனநாயகத்தைப் பாதுகாக்க உறுதிபூண்டுள்ள நாடுகளில் கூட நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு உருவாகி இருக்கிறது. ஆனால் இத்தகைய நாடுகளில் நிலவும் அதிருப்திக்கான காரணங்கள் எதேச்சதிகார நாடுகளில் நிலவும் அதிருப்திக்கான காரணங்களிலிருந்து வேறுபட்டவையாக இருக்கக்கூடும் என்பது தெளிவு. இது குறித்து இங்கு விவரிக்க நேரம் இல்லை. எனினும் ஒன்றை மட்டும் பொதுப்படையான முறையில் கூறலாம்; அதாவது சுதந்திரத்துக்கும் சொத்துரிமைக்கும், சுபிட்ச வாழ்வுக்குமான உரிமையை பெருந்திரளான மக்களுக்கு உத்தரவாதம் செய்ய அது தவறிவிட்டதே இந்த அதிருப்திக்கு முக்கிய காரணம் என்று கூறலாம். இது உண்மையாயின், இந்தத் தோல்விக்கான காரணங்களைத் தெரிந்து கொள்வது முக்கியமாகும். இந்தத் தோல்விக்கான காரணங்களைத் தெரிந்து கொள்வது முக்கியமாகும். இந்தத் தோல்விக்கு தவறான சித்தாந்தமோ, அல்லது தவறான அமைப்பு முறையோ அல்லது இவை இரண்டுமோ காரணமாக இருக்கக்கூடும். இவை இரண்டுமே காரணமாக இருக்கும் என்பதுதான் எனது கருத்து.

நாடாளுமன்ற ஜனநாயகத்தைச் சிதைத்து சீர்குலைத்து விட்ட தவறான சித்தாந்தத்துக்கு இங்கு இரண்டு எடுத்துக்காட்டுகளைக் கூறினால் போதும் என்று நினைக்கிறேன். முதலாவதாக, ஒப்பந்த சுதந்திரம் என்னும் கருத்து நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பாழ்படுத்திவிட்டது என்பதில் எனக்கு எந்த ஐயமுமில்லை. இந்தக் கருத்து சட்டத்தின் ஒப்புதலைப் பெற்றதோடு, சுதந்திரத்தின் பெயரால் அது நிலைநாட்டப்படவும் செய்தது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நாடாளுமன்ற ஜனநாயகம் கணக்கிலெடுத்துக் கொள்ளவில்லை; அதுமட்டுமல்ல, ஒப்பந்த சுதந்திரத்தின் விளைவாக ஏற்படக்கூடிய ஏற்றத்தாழ்வைப் பரிசீலிப்பதிலும் அது கவனம் செலுத்தவில்லை. ஒப்பந்த சுதந்திரம் வலுமிக்கவர்கள் வலுவற்றவர்களை ஏமாற்றுவதற்கும் வஞ்சிப்பதற்கும் வாய்ப்பளிப்பது பற்றியும் அது கவலைப்படவில்லை. இதன் விளைவு என்ன? சுதந்திரத்தின் பாதுகாவலனாக இருக்க வேண்டிய நாடாளுமன்ற ஜனநாயகம் ஏழை எளிய மக்களுக்கு, அடிமட்டத்தில் அமிழ்ந்து கிடக்கும் மக்களுக்கு, சொத்துரிமை பறிக்கப்பட்ட வர்க்கத்துக்கு மேன்மேலும் பொருளாதார தீங்குகளை, சீர்கேடுகளை, துன்ப துயரங்களை இழைத்து வந்தது. நாடாளுமன்ற ஜனநாயகத்தை சின்னாபின்னப்படுத்திய இரண்டாவது தவறான சித்தாந்தம் சமூக, பொருளாதார சுதந்திரம் இல்லாத இடத்தில் அரசியல் ஜனநாயகம் வெற்றிபெற முடியாது என்பதை நாடாளுமன்ற ஜனநாயகம் உணரத் தவறியதாகும். இந்தக் கூற்றை சிலர் ஏற்க மறுக்கக்கூடும். இத்தகைய சந்தேக பிராணிகளிடம் ஓர் எதிர்கேள்வி கேட்க விரும்பிகிறேன். இத்தாலி, ஜெர்மனி, ரஷ்யா ஆகிய நாடுகளில் நாடாளுமன்ற ஜனநாயகம் ஏன் அவ்வளவு எளிதாக வீழ்ச்சியடைந்தது? அதேசமயம் இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் அது ஏன் அத்தனை எளிதாகத் தகர்த்துவிடவில்லை?

என் அபிப்பிராயத்தில் இதற்கு ஒரே ஒரு பதில்தான் உள்ளது: முன்னர் குறிப்பிட்ட நாடுகளைவிட பின்னர் குறிப்பிட்ட நாடுகளில் பொருளாதார ஜனநாயகமும் சமூக ஜனநாயகமும் அதிக அளவில் இருந்ததே இதற்குக் காரணம். சமூக ஜனநாயகமும் பொருளாதார ஜனநாயகமும் அரசியல் ஜனநாயகத்தின் நரம்பும் நாளமும் ஆகும்; இந்த நரம்பும் நாளமும் உறுதியாக இருந்தால்தான் உடல் வலுமிக்கதாக, ஆரோக்கியமானதாக இருக்கும். ஜனநாயகம் என்பது சமத்துவத்துக்கு மற்றொரு பெயர். நாடாளுமன்ற ஜனநாயகம் சுதந்திர தாகத்தை, விழைவை கிளர்த்தி விட்டு விட்டது என்பதில் ஐயமில்லை. ஆனால் சமத்துவத்துக்கு ஆதரவாக அது ஒருபோதும் தலையசைத்தது கூட இல்லை. சமத்துவத்தின் முக்கியத்துவத்தை அது உணரத் தவறிவிட்டது. அதுமட்டுமல்ல, சுதந்திரத்துக்கும் சமத்துவத்துக்கும் இடையே ஒரு சமநிலையைத் தோற்றுவிப்பதற்குக் கூட அது, எத்தகைய முயற்சியையும் எடுத்துக் கொள்ளவில்லை. இதன் விளைவாக சுதந்திரம் சமத்துவத்தை விழுங்கி ஏப்பம் விட்டு விட்டது; அது மட்டுமன்று, இன்னும் எத்தனை எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள் தோன்றவும் வழிவகுத்து விட்டது.

            நாடாளுமன்ற ஜனநாயகம் தோல்வியடைந்ததற்கு தவறான கோட்பாடுகள் ஒரு காரணம் என்ற என் கருத்தை இதுவரை எடுத்துரைத்தேன். ஆனால் அதேசமயம் ஜனநாயகம் தோல்வியடைந்ததற்கு தவறான கோட்பாட்டை விடவும் மோசமான அமைப்பு முறை ஒரு காரணம் என்பதிலும் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. எல்லா அரசியல் சமுதாயங்களும் இரண்டு வர்க்கங்களாகப் பிரிந்துள்ளன: ஆளும் வர்க்கம் ஆளப்படும் வர்க்கம் என்பவையே அவை. இது ஒரு தீமையாகும். இந்தத் தீமை இத்துடன் நின்றிருந்தால் பரவாயில்லை. ஆனால் இதிலுள்ள மிகவும் துரதிர்ஷ்டவசமான அம்சம் என்னவென்றால், இந்தப் பிரிவினை ஒரே மாதிரியானதாகவும், படிநிலையில் அமைந்திருப்பதுமாகும்; இதனால் ஆளுபவர்கள் எப்போதும் ஆளும் வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவும், ஆளப்படுபவர்கள் ஒருபோதும் ஆளும் வர்க்கமாக மாற முடியாதவர்களாகவும் இருந்து வருகின்றனர். இதன் காரணமாக மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதில்லை; அவர்கள் ஓர் அரசாங்கத்தை அமைத்து அது தங்களை ஆள்வதற்கு விட்டுவிடுகின்றனர்; இது தங்கள் அரசாங்கம் இல்லை என்பதையும் மறந்துவிடுகின்றனர். இத்தகைய நிலைமையில், நாடாளுமன்ற ஜனநாயகம் மக்களது அரசாங்கமாகவோ அல்லது மக்களால் நடத்தப்படும் அரசாங்கமாகவோ ஒருபோதும் இருப்பதில்லை; இதன் காரணமாக அது மக்களுக்கான அரசாங்கமாகவும் எக்காலத்திலும் இருப்பதில்லை.

நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு மக்கள் அரசாங்கத்துக்குரிய அம்சங்களைக் கொண்டிருந்தபோதிலும், உண்மையில் அது வழிவழியான ஓர் ஆளப்படும் வர்க்கத்தை வாழையடி வாழையான ஓர் ஆளும் வர்க்கம் ஆளுகின்ற ஓர் அரசாங்கமாகவே எப்போதும் இருந்து வருகிறது. அரசியல் வாழ்க்கை இவ்விதம் நேர்மைக்கேடாக, ஒழுக்கக்கேடாக நெறிபிறழ்வாக உருவாக்கப்பட்டிருப்பதுதான் நாடாளுமன்ற ஜனநாயகம் இவ்வாறு படுதோல்வியடைந்திருப்பதற்குக் காரணமாகும். மேலும் இதன் காரணமாகவே, சுதந்திரம், சொத்துரிமை, சுபிட்ச வாழ்வு ஆகியவற்றை சாமானிய மனிதனுக்கு உத்தரவாதம் செய்வதாக தான் அளித்திருந்த வாக்குறுதியை நாடாளுமன்ற ஜனநாயகத்தால் நிறைவேற்ற முடியவில்லை.

            இதற்கு யார் பொறுப்பு? இக்கேள்வி இயல்பாகவே இங்கு எழுகிறது. வறுமையிலும் வெறுமையிலும் வாடும் வர்க்கங்களுக்கு, ஓயாது ஒழியாது உழைக்கும் வர்க்கங்களுக்கு, அடக்கி ஒடுக்கப்பட்ட வர்க்கங்களுக்கு நலம் செய்ய, நன்மை புரிய நாடாளுமன்ற ஜனநாயகம் தவறிவிட்டது என்றால் அதற்கு இந்த வர்க்கங்களே பிரதானமாக பொறுப்பாகும். முதலாவதாக, மனிதர்களின் வாழ்க்கையை உருவாக்குவதில் பொருளாதார அம்சத்துக்குள்ள முக்கிய பங்கை இந்த வர்க்கத்தினர் மிகப்பெருமளவுக்கு அலட்சியப்படுத்தி விட்டனர். ‘பொருளாதார மனிதனின் முடிவு’ என்ற தலைப்பில் யாரோ ஒருவர் அண்மையில் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். பொருளாதார மனிதன் ஒருபோதும் பிறப்பதில்லை என்ற ஒரே காரணத்திற்காக பொருளாதார மனிதனின் முடிவு பற்றி உண்மையில் நாம் எதுவும் பேச முடியாது. மனிதன் ரொட்டியைக் கொண்டு மட்டுமே வாழ்வதில்லை என்று மார்க்சுக்கு பொதுவாக அளிக்கப்படும் மறுப்புரையில் துரதிர்ஷ்டவசமாக உண்மை பொதிந்துள்ளது என்றே கூற வேண்டும். பன்றிகளைப் போன்று மனிதர்களைக் கொழுக்க வைப்பதே நாகரிகத்தின் குறிக்கோள் அல்ல என்று கார்லைல் கூறியிருப்பதில் எனக்கு உடன்பாடு உண்டு. ஆனால் இந்த கட்டத்திலிருந்து நாம் வெகு தொலைவில் இருக்கிறோம். உழைக்கும் வர்க்கத்தினர் பன்றிகளைப் போல் தின்று கொழுத்திருக்கவில்லை; மாறாக அவர்கள் கவ்வும் குடலை இறுகப் பிடித்துக் கொண்டு பசிபட்டினியால் வாடிக்கொண்டிருக்கின்றனர். எனவே, முதலில் ரொட்டி மற்றவை எல்லாம் பின்னர்தான் என்று அவர்கள் கூறுவதில் நியாயம் இல்லாமலில்லை.

            வரலாற்றைப் பொருளாதாரக் கண்ணோட்டத்தில் விளக்கும் சித்தாந்தத்தை மார்க்ஸ் முன்வைத்தார். இதன் தகைமை குறித்து காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றுவருகிறது. மார்க்ஸ் இதனை ஒரு சித்தாந்தமாக அன்றி தொழிலாளர்களுக்கு ஓர் அறிவுரையாகக் கூறினார் என்றே எனக்குத் தோன்றுகிறது; உடைமை வர்க்கத்தினரைப் போன்றே உழைக்கும் வர்க்கத்தினரும் பொருளாதார நலன்களுக்குத் தலையாய முக்கியத்துவம் அளிப்பார்களேயானால், வாழ்வின் பொருளாதார அம்சங்களை இப்போதுவிடப் பெரிதும் பிரதிபலிப்பதாக வரலாறு அமைந்திருக்கும் என்று அவர் கருத்துத் தெரிவித்தார். வரலாற்றைப் பொருளாதார நோக்கில் காணும் இந்த சித்தாந்தம் முழு அளவுக்கு எதார்த்தமாகவில்லை என்றால், கூட்டு சமுதாய வாழ்க்கையைத் தீர்மானிப்பதில் பொருளாதார அம்சங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்க உழைக்கும் வர்க்கம் தவறியதே அதற்குக் காரணமாகும். மனித வர்க்க அரசாங்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள உழைக்கும் வர்க்கங்கள் தவறிவிட்டன. உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் தற்கால சமூக, அரசாங்க ஒழுங்கமைப்பு குறித்த அடிப்படையான செயல்முறை ஆவணங்களை அவசியம் பரிச்சயம் செய்து கொள்ள வேண்டும். ரூசோவின் சமூக ஒப்பந்தம், மார்க்சின் கம்யூனிஸ்டு அறிக்கை, தொழிலாளர்களின் நிலை குறித்த போப்பாண்டவர் பதின்மூன்றாம் லியோவின் சுற்றுக் கடிதம், சுதந்திரம் பற்றிய ஜான் ஸ்டூவர்ட் மில்லின் நூல் ஆகிய நான்கையும் இவ்வகையில் முக்கியமாகக் குறிப்பிட வேண்டும். ஆனால் உழைக்கும் வர்க்கங்கள் இந்த ஆவணங்களின் பால் உரிய கவனம் செலுத்தத் தவறிவிட்டன. இதற்கு மாறாக, பண்டைய மன்னர்களையும் ராணிகளையும் பற்றிய புனை சுருட்டான கட்டுக் கதைகளைப் படிப்பதில் தொழிலாளர்கள் இன்பம் காணுகின்றனர்; இந்தக் கெட்டப் பழக்கத்திற்கு அடிமைகளாகி விட்டனர்.

            மற்றொரு மாபெரும் குற்றத்தையும் அவர்கள் தங்களுக்குத் தாங்களே இழைத்துக் கொண்டுள்ளனர். அரசாங்கத்தைக் கைப்பற்றும் ஆர்வ விருப்பம் எதையும் அவர்கள் கொண்டிருக்கவில்லை. தங்களது நலன்களைப் பாதுகாத்துக்கொள்ளும் ஒரு வழிமுறையாக அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது அவசியம் என்பதையும் கூட அவர்கள் உணர்ந்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் அரசாங்கம் குறித்து அவர்கள் எத்தகைய அக்கறையையும் கொண்டிருக்கவில்லை. மனித குலத்துக்கு நேர்ந்த எல்லா அவலங்களிலும் இதுதான் மிகப் பெரிதும், மிகமிக வருந்தத்தக்கதுமாகும். அவர்கள் எத்தகையதொரு அமைப்பை வரித்துக் கொண்டிருந்தாலும் அது தொழிற்சங்க வடிவத்தையே எய்திற்று. இதை வைத்து நான் தொழிற்சங்கங்களை எதிர்ப்பவன் என்று எண்ணிவிட வேண்டாம். அவை மிகவும் பயனுள்ள நோக்கத்தை நிறைவேற்றுகின்றன என்பதில் ஐயமில்லை. ஆனால் தொழிலாளர்களுக்கு நேர்ந்துள்ள எல்லாக் கேடுகளுக்கும் தொழிற்சங்கங்கள் சர்வரோக நிவாரணி, சஞ்சீவி மருந்து என்று நினைப்பது தவறாகும். தொழிற்சங்கங்கள் என்னதான் சக்தி மிக்கவையாக இருந்தாலும் முதலாளித்துவத்தை நேர்மையான வழியில் இட்டுச் செல்லும்படி முதலாளிகளை நிர்ப்ந்திக்கும் ஆற்றல், வலிமை அவற்றுக்கு இல்லை. அவை நம்பி இருக்கும்படியான ஒரு தொழிலாளர் அரசாங்கம் அவற்றுக்குப் பின்னால் இருந்தால் தொழிற்சங்கங்கள் இன்னமும் மிகவும் சக்தி படைத்தவையாக இருக்க முடியும். அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே தொழிலாளர்களின் குறிக்கோளாக இருக்க வேண்டும் அரசாங்கத்தைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதை தொழிற்சங்க இயக்கம் தனது நோக்கமாகக் கொண்டிருந்தாலொழிய தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு அதிக நன்மை ஏதும் செய்துவிட முடியாது; தொழிற் சங்கத் தலைவர்கள் தங்களுக்குள் ஓயாது சண்டை போட்டுக்கொண்டு சிண்டு பிடித்துக்கொள்ளும் ஒரு களமாகவே அவை இருந்துவரும்.

            உழைக்கும் வர்க்கங்களைப் பீடித்திருக்கும் மூன்றாவது பிணி தேசிய கோஷத்துக்கு மிக எளிதாக மயங்கிவிடுவதாகும். தொழிலாளர் வர்க்கத்தினர் எல்லா வகைகளிலும் வறியவர்களாக இருக்கின்றனர்; தங்களுடைய மிகக் குறைந்தபட்சத் தேவைகளையே நிறைவேற்றிக் கொள்ள இயலாதவர்களாக இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது தேசியம் என்று கூறப்படும் லட்சியத்துக்காக தங்களிடமிருக்கும் சகலவற்றையும் பல சந்தர்ப்பங்களில் தியாகம் செய்து விடுகின்றனர். தாங்கள் இவ்வளவு தியாகம் செய்யும் அந்த தேசியம் வெற்றி பெற்றுவிடும்போது அது தங்களுக்கு சமூக சுதந்திரத்தையும் பொருளாதாரச் சுதந்திரத்தையும் உத்தரவாதம் செய்யுமா என்று அறிய அவர்கள் ஒருபோதும் அக்கறை எடுத்துக்கொள்வதில்லை. அதுமட்டுமல்ல, தேசியம் வெற்றிவாகை சூடி அதிலிருந்து உதயமாகும் ஒரு சுதந்திர அரசு, இவர்களது எண்ணற்ற தியாகங்களால் கருவாகி உருவான அரசு இவர்களது எசமானர்களின் ஆதிக்கத்துக்கு உள்ளாகி இவர்களுக்கே பகையானதாக மாறிவிடுவதைப் பல சந்தர்ப்பங்களில் பார்த்திருக்கிறோம். தொழிலாளர்கள் தங்களை இலக்காக்கிக் கொள்ளும் மிக மிகக் கொடிய சுரண்டல் வகையைச் சேர்ந்ததாகும் இது.

            எனவே, ஒரு நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பின்கீழ் உழைக்கும் வர்க்கங்கள் வாழ நேரிடுமாயின் அதனை தங்கள் நலன்களுக்குச் சேவை செய்யக்கூடியதாக மாற்றுவதற்கான வழிமுறைகளை அந்த வர்க்கங்கள் வகுத்துக்கொள்ள வேண்டும். இந்தக் குறிக்கோளை எய்த வேண்டுமானால் இரண்டு காரியங்களை அது செய்ய வேண்டும் என்பது என் கருத்து. முதலாவதாக தொழிற்சங்கங்களை அமைப்பதை மட்டுமே இந்தியாவில் தொழிலாளர்களின் இறுதி லட்சியமாக, குறிக்கோளாகக் கொள்வதைக் கைவிட வேண்டும். அரசாங்கம் தொழிலாளர் கைகளுக்கு வருவதை தனது இலட்சியமாக அது பிரகடனப்படுத்த வேண்டும். இதன் பொருட்டு ஒரு தொழிலாளர் கட்சியை அரசியல் கட்சியாக உருவாக்க வேண்டும். இத்தகையதொரு கட்சி தொழிற் சங்கங்களையும் தனது அமைப்புக்குள் கொண்டிருக்கும் என்பதில் ஐயமில்லை. ஆனால் இத்தகைய கட்சி தொழிற்சங்க இயக்கத்தின் குறுகிய, இடுங்கிய கண்ணோட்டத்திலிருந்து விடுபட்டதாக இருக்க வேண்டும். ஏனென்றால் பொதுவாக தொழிற்சங்கங்கள் இறுதி நலன்களை விட உடனடி நலன்களையும், தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப்படுத்த தொழிற்சங்கத் தலைவர்களுக்குள்ள உரிமையையும் வலியுறுத்துபவையாகவுமே இருக்கும். மேலும் தொழிலாளர்களின் இந்தக்கட்சி இந்து மகாசபை அல்லது காங்கிரஸ் போன்ற வகுப்பு வாத அல்லது முதலாளித்துவக் கட்சிகளிலிருந்தும் விலகி இருக்க வேண்டும்.

காங்கிரசோ அல்லது இந்து மகா சபையோ இந்தியாவின் சுதந்திரத்திற்காகப் போராடி வருவதாக உரிமை கொண்டாடிவரும் கட்சிகள் என்பதற்காக அவற்றில் சேர வேண்டிய அவசியமோ அல்லது அக்கட்சிகளின் பரிவாரத்தினராக இருக்க வேண்டிய கட்டாயமோ தொழிலாளர்களுக்கு இல்லை. மாறாக, தொழிலாளர்களே தங்களது சொந்த அணிகளைக் கொண்ட ஒரு தனியான அரசியல் அமைப்பாக உருவாகி இந்த இரு நோக்கங்களுக்காகவும் பாடுபட முடியும். காங்கிரஸ் மற்றும் இந்து மகாசபையின் உடும்புப் பிடிகளிலிருந்து விடுபடுவதன் மூலம் அது இந்தியாவின் விடுதலைக்காக சிறந்த முறையில் போராட முடியும். அதேசமயம் தேசியத்தின் பேரால் தான் ஏமாற்றப்படுவதிலிருந்தும் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள முடியும். இதை எல்லாம் விட முக்கியமாக இந்திய அரசியலில் நடைபெற்றுவரும் திருகுஜாலங்களுக்கு அது முற்றுப் புள்ளி வைக்க முடியும். இந்திய அரசியலில் இன்று எத்தகைய காட்சியைக் காண்கிறோம்? காங்கிரஸ்தான் ஒரு புரட்சிகர கட்சி என்று கூரை மீது ஏறி நின்று கூவி வருகிறது. அதனைப் பின்பற்றுபவர்கள் பெரும் எண்ணிக்கையில் இருப்பதற்கு இதுவே காரணம். ஆனால் அதேசமயம் காங்கிரஸ் அரசியல் ஏமாற்றத்தைத் தவிர வேறு எதையும் கொண்டுவரவில்லை என்பது மறுக்க முடியாத உண்மை. காங்கிரஸ் அரசியல் பகுத்தறிவுக்கு ஒவ்வாது இருப்பதே இதற்குக் காரணம். அக்கட்சிக்கு சரியான போட்டி இல்லாததாலேயே அது தறிகெட்டுத் தாண்டவமாடுகிறது.

இந்நிலைமையில் இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி உதயமாகுமானால், கடந்த இருபதாண்டுகளாக இந்திய அரசியலில் கொட்டமடித்துவரும் அராஜக நிலைக்கு அது முடிவுகட்டும் இந்தியாவிலுள்ள தொழிலாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய இரண்டாவது விஷயம் அறிவாற்றல் இல்லையேல் அதிகாரம் இல்லை என்பதாகும். இந்தியாவில் ஒரு தொழிற்கட்சி அமைக்கப்படுமானால், ஆட்சி பீடத்தில் தன்னை அமர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை அது வாக்காளர்களிடம் முன் வைக்குமானால், தொழிலாளர்கள் ஆட்சி செய்யத் தகுதியானவர்கள்தானா என்ற ஒரு கேள்வி எழும் என்பது நிச்சயம். மற்ற வர்க்கங்களைவிட தொழிலாளர்கள் மோசமாக ஒன்றும் ஆட்சி செய்யமாட்டார்கள் அல்லது உள்நாட்டு விவகாரங்களிலோ, அயல்நாட்டு விவகாரங்களிலோ அப்படி ஒன்றும் ஓட்டாண்டிகளாக நடந்து கொள்ள மாட்டார்கள் என்று நொண்டிச் சமாதானம் கூறுவது இக்கேள்விக்கு சரியான, முறையான, நேரிய பதிலாக இருக்க முடியாது. மாறாக, தொழிலாளர்கள் சிறப்பாக, திறம்பட ஆட்சி செய்ய முடியும் என்பதைத் திட்டவட்டமாக மெய்ப்பித்தாக வேண்டும். அதேசமயம் இதர வர்க்கங்களின் அரசாங்க பாணியைவிட தொழிலாளர்களின் அரசாங்க பாணி மிகவும் கடினமானது என்பதையும் மறந்துவிடக்கூடாது.

தொழிலாளர்களின் அரசாங்கம் வரைமுறையற்ற, கட்டுப்பாடற்ற அரசாங்கமாக இருக்க முடியாது. அது முக்கியமாக ஒரு கட்டுப்பாட்டு முறையில் அமைந்த அரசாங்கமாகவே இருக்கும். ஒரு சிறந்த கட்டுப்பாட்டு முறையை உருவாக்குவதற்கு அதிகளவு அறிவாற்றலும் பயிற்சியும் தேவை. இந்தியாவில் உள்ள தொழிலாளர்கள் படிப்பின் முக்கியத்துவத்தை உணரத் தவறிவிட்டது துரதிர்ஷ்டவசமானதாகும். இந்தியாவிலுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள் செய்திருப்பதெல்லாம் தொழிலதிபர்கள்மீது எவ்விதம் வன்மையோடு உக்கிரத்தோடு வசைபாட முடியும் என்பதைக் கற்றுக் கொண்டிருப்பதுதான். திட்டுவது, மேலும் மேலும் திட்டுவதுதான் ஒரு தொழிற்சங்கத் தலைவனது முழு முதல் கடமையாகி விட்டது.

            ஆகவே, இந்தியத் தொழிலாளர்கள் சம்மேளனம் இந்தக் குறைபாட்டை உணர்ந்து கொண்டிருப்பதையும், தொழிலாளர் வர்க்கங்களுக்காக இந்தப் பயிற்சி முகாம்களைத் தொடங்க முன்வந்திருப்பதையும் அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன் ஆட்சி புரிவதற்கு தொழிலாளர்களைத் தகுதியுடையவர்களாக ஆக்க இந்தப் பயிற்சி முகாம்கள் சிறந்த சாதனங்களாக விளங்கும் என்பதில் ஐயமில்லை. ஒரு தொழிற்கட்சியைத் தொடங்க வேண்டிய அவசியத்தை சம்மேளனம் மறந்துவிடாது என்றும் நம்புகிறேன். இது செய்யப்படுமானால், ஆளும் வர்க்கத்தின் அந்தஸ்துக்குத் தங்களை உயர்த்தியமைக்காக தொழிலாளர் வர்க்கங்கள் சம்மேளனத்துக்குப் பெரிதும் நன்றிக்கடன் பட்டிருக்கும்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதி IV, நவம்பர் 13, 1943, பக்கங்கள் 252-254)

          மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் (தொழிலாளர் நலத்துறை உறுப்பினர்):

            “1926 – ஆம் வருட இந்தியத் தொழிற்சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தக் கோரும் இந்த மசோதாவை பொதுமக்களின் கருத்தறிய சுற்றுக்கு விட வேண்டுமென்று முன்மொழிகிறேன்.”

          ambedkar law இந்த மசோதா குறித்து பொதுமக்களின் கருத்து அறியும் பொருட்டு சுற்றுக்கு விடுவதே இதன் நோக்கமாகும். எனவே, இந்த மசோதாவில் அடங்கியுள்ள விதிகள் குறித்து எவ்வகையிலும் விரிவான விவாதம் நடத்தி அவையின் நேரத்தை எடுத்துக் கொள்வது அவசியமற்றது என்று எனக்குத் தோன்றுகிறது. இந்த மசோதாவின் பிரதான அம்சங்கள் என்ன, இதனை அரசு ஏன் கொண்டுவருகிறது என்பதை அவைக்குக் கூறினால் போதுமானது என்று கருதுகிறேன்.

            இந்த மசோதா மூன்று பிரதான அம்சங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக, தொழிற்சங்கத்தை தொழிலதிபர் அங்கீகரிப்பதை இந்த மசோதா கட்டாயமாக்குகிறது. இரண்டாவதாக, இவ்வாறு தொழிலதிபரால் அங்கீகரிக்கப்படும் தகுதியைப் பெறுவதற்கு தொழிற்சங்கம் சில நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டுமென்று மசோதா கோருகிறது. மூன்றாவதாக, இம்மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கும் எல்லா நிபந்தனைகளையும் முறையாக நிறைவேற்றி, அங்கீகாரத்துக்குத் தகுதிபெற்ற தொழிற்சங்கத்தை தொழிலதிபர் அங்கீகரிக்க மறுப்பதை சட்டப்படி தண்டிக்கப்படத்தக்க ஒரு குற்றமாக மசோதா அறிவிக்கிறது.

             நான் ஏற்கெனவே குறிப்பிட்டது போன்று, இந்த மசோதாவின் தகுதிகள் குறித்து இப்போது விரிவாக விவாதிக்க வேண்டிய அவசியம் ஏதுமில்லை. இந்த மசோதா தற்போது சுற்றுக்கு விடப்படுவதால் இப்போதைய கட்டத்தில் அதில் அரசாங்கம் முன் வைத்திருக்கும் ஷரத்துகள் தற்காலிகமானவையே என்பது தெளிவு. இவை இறுதியானவை அல்ல. தொழிலாளர் தலைவர்கள், தொழிலதிபர்கள், மாகாண அரசாங்கங்கள், மற்றும் இந்த நடவடிக்கையுடன் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினர் போன்றோரின் கருத்துகளைப் பெறும் வரை இந்த ஷரத்துகளை இறுதியானவையாக்கும் உத்தேசம் ஏதும் அரசாங்கத்துக்கு இல்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். எனவே, மசோதா சுற்றுக்கு விடப்படுவதன் விளைவாக பெறப்படும் பல்வேறு பரிந்துரைகளையும், யோசனைகளையும் கருத்திற்கொண்டு அரசாங்கம் செயல்படும்போது இம்மசோதா இப்போதிலிருப்பதற்கு முற்றிலும் மாறுபட்டதாக இருக்கக்கூடும்.

            திரு.என்.எம்.ஜோஷி (அதிகார சார்பமற்ற நியமன உறுப்பினர்): இதுவே சரியான நடைமுறை.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அனைவரது கருத்தும் இவ்வாறே இருக்கும் என்று நம்புகிறேன். எனவே, இப்போது அவைக்கு நான் சொல்ல விரும்புவதெல்லாம் இந்திய அரசாங்கம் இந்தப் பொறுப்புகளை ஏன் ஏற்றுக்கொண்டது என்பதைத்தான்.

            இந்த விஷயம் ஏற்கெனவே பரிசீலிக்கப்பட்டது என்பதையும், தொழிற்சங்கங்களை தொழிலதிபர்கள் அங்கீகரிக்கும் பிரச்சினை சம்பந்தமாக மிகுந்த கவனம் செலுத்தப்பட்டது என்பதையும் அவை அறியும். தொழிலாளர்கள் பிரச்சினையை ஆய்வு செய்து அறிவதற்கு மன்னரால் ராயல் கமிஷன் அமைக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். தொழிற்சங்கங்கள் ஆரோக்கியமான முறையில் வளர்ச்சியுறுவதற்கும், தொழிலதிபர்களுக்கும் தொழிலாளர்களுக்கும் இடையே நேச உறவுகளைக் கட்டி வளர்ப்பதற்கும் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பது எவ்வளவு முக்கியமானது என்பதை ராயல் கமிஷன் பெரிதும் வலியுறுத்தி இருந்ததை அது வெளியிட்ட அறிக்கையைப் படித்த மதிப்பிற்குரிய உறுப்பினர்கள் அறிந்திருப்பார்கள். சட்ட நடவடிக்கைகள் ஏதுமின்றி, தொழிலதிபர்களின் விருப்பார்வ சம்மதத்தோடு தொழிற்சங்க அங்கீகாரத்தைப் பெற முடியுமானால் அது மிகவும் உகந்ததாகவும், விரும்பத்தக்கதாகவும் இருக்கும் என்று அப்போதைய கட்டத்தில் ராயல் கமிஷன் தெரிவித்த கருத்தும் அவைக்கு நினைவிருக்கும். அது மட்டுமல்ல, தொழிற்சங்கங்களை தாமே முன்வந்து அங்கீகரிக்க தொழிலதிபர்கள் தயாராக இல்லை என்பதை 1929-ல் 12 ஆண்டுக் காலத்திற்குப் பிறகு – ராயல் கமிஷன் அறிவித்ததும் கூட அவைக்கு நினைவிருக்கும். இன்னும் சொல்லப்போனால் தொழிற்சங்கங்களை அங்கீகரிப்பதை எதிர்த்து ராயல் கமிஷன் முன் தொழிலதிபர்கள் என்ன ஆட்சேபனைகளைத் தெரிவித்தார்களோ அதே ஆட்சேபனைகளைத் தான் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க மறுப்பதற்கு இப்போதும் கூறுகின்றனர். எனவே, நிலைமை எவ்வகையிலும் மேம்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

            1937-ல் மாகாண சுயாட்சி உதயமாகி, புதிய சட்டத்தின்படி பெரும்பாலான மாகாண அரசாங்கங்கள் பதவியேற்ற பிறகு இந்தப் பிரச்சினை மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதை மதிப்பிற்குரிய அவை உறுப்பினர்கள் நினைவில் வைத்திருப்பர் என்று நம்புகிறேன். தொழிற்சங்கங்களைத் தொழிலதிபர்கள் அங்கீகரிப்பது சம்பந்தமாக பல தனிநபர் மசோதாக்களும் அமைச்சரவைகளின் மசோதாக்களும் அப்போது கொண்டுவரப்பட்டன. இது குறித்து தனியார் மசோதா ஒன்றும், அப்போதைய அமைச்சரவையின் மசோதா ஒன்றும் சென்னையில் தாக்கல் செய்யப்பட்டதை இதற்கு உதாரணமாகக் கூறலாம். இதே போன்று பம்பாயில் பம்பாய் தொழில் தகராறுகள் மசோதாவை அரசாங்கம் கொண்டுவந்தது. மத்திய மாகாணங்களில் இதே மாதிரியான ஒரு மசோதாவைக் கொண்டுவர உத்தேசிக்கப்பட்டு, அதற்கான நகல் ஒன்றும் தயாரிக்கப்பட்டது. ஐக்கிய மாகாணங்களிலும் இவ்வாறே செய்யப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக பம்பாயில் தவிர ஏனைய மாகாணங்களில் இந்த மசோதாக்கள் சட்டமாவதற்கு முன்பே அங்கிருந்த அமைச்சரவைகள் பதவி விலகி விட்டன. எனினும், மாகாண சுயாட்சி நடைமுறைக்கு வந்த பிறகு மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தும் பொருட்டு இந்திய அரசாங்கம் பல நடவடிக்கைகளை எடுத்து கொண்டது. இத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று அவ்வப்போது தொழிலாளர் நலத்துறை மாநாடுகளை நடத்துவதாகும். இத்தகைய முதல் மாநாடு 1940ல் நடைபெற்றது. அப்போது இந்தப் பிரச்சினை மத்திய அரசாங்கத்துக்கும் மாகாண அரசாங்கங்களுக்கும் இடையே விவாதிக்கப்பட்டது. இந்த விஷயத்தில் ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வருவதற்கு மாநாட்டின் முன் போதிய தகவல்கள் இல்லை என்பது அப்போது உணரப்பட்டது. எனவே இந்த விஷயம் குறித்து மாகாண அரசாங்கங்கள், தொழிலாளர் தலைவர்கள், தொழிலதிபர்கள் போன்றோரின் கருத்தறிவதற்காக மாகாண அரசாங்கங்களுக்கு இதனை அனுப்பி வைக்கும்படி மத்திய அரசாங்கத்தை மாநாடு கேட்டுக் கொண்டது. இவ்வாறு சேகரிக்கப்பட்ட கருத்துகள் 1941-ஆம் ஆண்டில் கூட்டப்படவிருக்கும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் மாநாட்டின் இரண்டாவது கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் அது தெரிவித்தது. எனவே இதன் பேரில், இது விஷயம் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துகளைச் சேகரித்து அனுப்பும்படி மாகாண அரசாங்கங்களுக்கு மத்திய அரசாங்கம் கடிதம் எழுதிற்று. அவ்வாறே பல்வேறு மாகாண அரசாங்கங்களும் ஏராளமான விவரங்களையும் கருத்துகளையும் சேகரித்து மத்திய அரசாங்கத்துக்கு அனுப்பிவைத்தன. இவை யாவும் 1941ல் நடைபெற்ற தொழிலாளர் நலத்துறை அமைச்சர்களின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. அப்போது பின்கண்ட முடிவு எடுக்கப்பட்டது: இது விஷயம் குறித்து மத்திய அரசாங்கம் ஒரு சட்டம் இயற்ற வேண்டும் என்றும், அது முற்றிலும் மாகாண ரீதியிலானதாக இருத்தலாகாது என்றும், மாகாண அரசாங்கங்களிடமிருந்தும், பிரச்சினையில் சம்பந்தப்பட்ட எல்லாத் தரப்புகளிலிருந்தும் வரும் பதில்களை அடிப்படையாகக் கொண்டு அந்தச் சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டது. இதன் விளைவாக மத்திய அரசாங்கம் இப்பணியை மேற்கொண்டது. பல்வேறு மாகாணங்களிலிருந்து பெறப்பட்ட தகவல்களையும் சம்பந்தப்பட்ட பலதரப்பட்ட தரப்பினர் தெரிவித்த கருத்துகளையும் அடிப்படையாகக் கொண்டே இப்போதைய இந்த மசோதா தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த மசோதாவின் பிறப்பு மூலம். தொழிலாளர்கள் சம்பந்தமாக சட்டம் இயற்றுவது மாகாண அரசாங்கத்தின் பொறுப்பு என்றாலும் மத்திய அரசாங்கம் இப்பணியை தானே மேற்கொண்டதற்கு இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகள்தான் காரணம்.

            இந்த மசோதா குறித்து மேற்கொண்டு எதுவும் கூறுவது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. நான் ஏற்கெனவே கூறியது போன்று இந்தப் பிரேரணைகள் எல்லாம், முன்மொழிவுகள் எல்லாம் தற்காலிகமானவையே, முடிவானவை அல்ல. இந்த நகல் மசோதா பற்றிப் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் கருத்துகள் பெறும் வரை இது விஷயத்தில் முடிவு ஏதும் எடுப்பதற்கில்லை. நான் இப்போது சொல்ல விரும்புவதெல்லாம் இந்த சட்டமன்றம் எதிர் நோக்கிய மிக முக்கியமான சட்ட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்றாகும் என்பதே ஆகும். மேலும் இது ஒரு தனிச் சிறப்பு வாய்ந்த மசோதாவாகும். அமெரிக்காவையும் சுவீடனையும் தவிர மற்ற நாடுகளில் எல்லாம் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்கும் விஷயம் சுயவிருப்பத்துக்கு விடப்பட்டிருக்கிறது. இது ஒரு சர்ச்சைக்குரிய மசோதாவாக இருக்காது என்று நம்புகிறேன். மசோதாவிலுள்ள எந்த ஒரு ஷரத்தையும் பற்றி நான் முடிவு எடுப்பதற்கு முன்னர் பொது மக்களின் அபிப்பிராயத்தைக் கேட்டறிய விரும்புகிறேன். எனவே, அது சம்பந்தமான பிரேரணையை முன்வைக்கிறேன்.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): பிரேரணை முன்மொழியப்படுகிறது:

            “1926-ஆம் வருட இந்தியத் தொழிற்சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தக் கோரும் இந்த மசோதாவை பொதுமக்களின் கருத்தறிய சுற்றுக்கு விட வேண்டுமென்று முன்மொழிகிறேன்.”

*           *           *

            1திரு.பி.ஜே.கிரிபித்ஸ் (அசாம்: ஐரோப்பியப் பிரதிநிதி): தலைவர் அவர்களே, பொது மக்களின் கருத்தறிய மசோதாவைச் சுற்றுக்கு விட வேண்டும் என்பதே இப்போதைய முன் மொழிவாகும்… தொழிற்சங்கங்களுக்குப் பல பகைவர்கள் இருக்கிறார்கள் என்பதை மாண்புமிகு நண்பருக்கு நினைவூட்டுகிறேன்.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: தொழிலதிபர்கள் அவர்களில் ஒருவர்.

*           *           *

(1.மத்திய சட்டமன்ற விவாதங்கள், தொகுதிகள் IV, நவம்பர் 13, 1943, பக்கம் 256)

            1மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: ஐயா, சுற்றுக்கு விடுவதற்கு நான் முன்வைத்திருக்கும் மசோதா சர்ச்சையைக் கிளர்த்தி விட்டிருக்கிறது. இது எதிர்பாராததாகும். நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல் இந்த மசோதா சர்ச்சைக்குரியது என்பதில் ஐயமில்லை. ஆனால் அதேசமயம் எத்தகைய சர்ச்சையிலும் ஈடுபட நான் விரும்பவில்லை என்பதையும், பல்வேறு சந்தேகங்களுக்கும் பதிலளிக்கத் தயாராக இருக்கிறேன் என்பதையும் தொடக்கத்திலேயே தெளிவுபடுத்தினேன். இந்த விவாதத்தில் பங்கு கொண்டு தங்கள் கருத்துகளைத் தெரிவித்த மதிப்பிற்குரிய உறுப்பினர்களை எவ்வகையிலும் அவமதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதனை நான் செய்யவில்லை. அவர்கள் தெரிவித்துள்ள கருத்துகளைக் கணக்கிலெடுத்துக் கொள்வேன் என்பதையும், உரிய சந்தர்ப்பம் வரும்போது அவற்றைப் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்வேன் என்பதையும் அவர்களுக்கு உறுதி கூறுகிறேன்.

            இப்போது நான் எழுந்து பேசுவது சபையின் முன் வைக்கப்பட்டுள்ள பல்வேறு வாதங்களுக்குப் பதில் கூறுவதற்காக அல்ல. எனினும் அதே சமயம் என்னுடைய நண்பர் திரு.கிரிபித்ஸ் முன்வைத்துள்ள சில விமர்சனங்களுக்கு நான் பதில்கூறக் கடமைப் பட்டிருக்கிறேன். அவர் தெரிவித்துள்ள ஒரு கருத்து மிகவும் நியாயமற்றது என்று கருதுகிறேன். ஒரு வகையில் தெளிவற்றதும், அவருடைய சொற்களிலேயே கூறுவதானால் பொருளற்ற ஷரத்துகளைக் கொண்டதுமான ஒரு மசோதாவை நான் கொண்டு வந்திருப்பதாக அவர் கூறினார். இத்தகைய தெளிவற்ற, பொருளற்ற ஷரத்துகளைக் கொண்ட ஒரு மசோதாவை பரிசீலிக்க வேண்டுமென்று அவையை நான் கேட்டுக் கொண்டிருப்பது நேர்மையற்றது, நியாயமற்றது என்பது அவரது வாதம். இந்த வாதத்தை நான் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்தக் குற்றச்சாட்டு முற்றிலும் தவறானது, ஆதாரமற்றது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதலாவதாக இந்த மசோதாவின் நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாத அளவுக்குத் தெளிவற்ற அல்லது அர்த்தமற்ற எந்த விதிகளும் இதில் இருப்பதாக நான் ஒப்புக்கொள்ள மாட்டேன். அப்படியே ஒரு சில ஷரத்துகள் தெளிவற்றவையாகவும், வேறு சில ஷரத்துகள் இன்னும் அதிக விளக்கம் தேவைப்படுபவையாகவும் இருப்பதாக ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும்கூட இந்தக் குற்றச்சாட்டை நேர்மையானதாக நான் கருதவில்லை. இப்போது சபையின் முன் வைத்துள்ள இந்த மசோதாவை இப்போதைய அதன் வடிவத்தில் அப்படியே சட்டமாக்க வேண்டுமென்று அவையை நான் கேட்டால் அதை குறைகூறுவதை என்னால் புரிந்து கொள்ள முடியும்; ஆனால் நான் அவ்வாறு கேட்கவில்லை. மாறாக, பொது மக்களின் அபிப்பிராயத்தை அறிவதற்கு மசோதாவைச் சுற்றுக்கு விடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என்று தான் கேட்கிறேன். இவ்வாறு சுற்றுக்கு விடப்படுமானால் பல்வேறு தரப்பினரின் வழிகாட்டுதலை அரசாங்கம் பெற முடியும்; இத்தகைய வழிகாட்டுதலின் மூலம் மசோதாவில் விடப்பட்ட இடைவெளிகளை முடிவில் நிரப்புவதும், தெளிவற்ற ஷரத்துக்களை திட்டவட்டமானவையாக ஆக்குவதும் சாத்தியமாகும். எனவே, திரு.கிரிபித்ஸ் தெரிவித்துள்ள குற்றச்சாட்டுக்கு எத்தகைய ஆதாரமும் இல்லை என்பதைக் கூறிக்கொள்கிறேன். இந்த மசோதாவை கோட்பாட்டளவில் தவறானதாகத் தாம் கருதுவதாகவும் திரு.கிரிபித்ஸ் கூறினார். இது அவரவர்களது அபிப்பிராயத்தைப் பொறுத்தது. இந்த மசோதா கோட்பாட்டளவில் முற்றிலும் ஆரோக்கியமானது, சட்டமாக்கப்படுவதற்கு அறவே தகுதியானது என்று இன்னொரு புறத்தில் பலர் கருத்துத் தெரிவித்ததையும் நாம் செவிமடுத்துக் கேட்டோம். எனவே, அவரது இந்தக் குற்றச்சாட்டை இங்கு நான் கணக்கிலெடுத்துக் கொள்ளப் போவதில்லை.

            அவர் எழுப்பியிருக்கும் இரண்டாவது பிரச்சினை பிரதிநிதித்துவம் வாய்ந்த ஒரு தொழிற் சங்கம் என்பது என்ன என்பதை நான் விளக்கவில்லை என்பதாகும். இப்போது நான் கூறப்போவதை அவர் தமது மனத்தைப் புண்படுத்துவதாக எடுத்துக்கொள்ளவில்லை என்றால் ஒன்றைக் கூறுகிறேன்: ஒன்று அவர் இந்த மசோதாவின் ஷரத்துக்களை படித்திருக்க மாட்டார் அல்லது அப்படியே படித்திருந்தாலும் அவற்றைப் புரிந்து கொண்டிருக்க மாட்டார். இந்த மசோதாவில் இரண்டு பிரதான நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதை அதன் ஷரத்துக்களிலிருந்து தெள்ளத் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். முதல் நிபந்தனை – ஒரு தொழிற்சங்கம் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் அது சில கட்டுப்பாடுகளை, வரையறைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும். இரண்டாவது நிபந்தனை – இத்தகைய கட்டுப்பாடுகளையும் வரையறைகளையும் அது பூர்த்தி செய்வது மட்டும் போதாது, ஒரு குழுமம் நடத்தும் தேர்வுக்குள்ளாகி அதன் தகுதிச் சான்றிதழையும் பெற வேண்டும். உண்மையில், இன்னும் சொல்லப்போனால், தொழிலாளர்கள், அரசாங்கம், தொழிலதிபர்கள் ஆகியோர் அடங்கிய ஒரு முத்தரப்பு குழுமம் வழங்கும் சான்றிதழில் குறிப்பிடப்படும் இதர நிபந்தனைகளைப் பொறுத்துத் தொழிற்சங்கத்தின் பிரதிநிதித்துவ இயல்பு அமைந்திருக்கும்; இது இந்த மசோதாவின் பிரதான கோட்பாடாக, அடிப்படை அம்சமாக இருக்கும். இது ஒருபுறமிருக்க, நிர்ணயிக்கப்படும் வேறு சில நிபந்தனைகளையும் தொழிற்சங்கம் பூர்த்தி செய்ய வேண்டும் என்று கூறும் 28 (டி) ஷரத்தின் (ஜி) உப ஷரத்தையும் என்னுடைய நண்பர் பெரிதும் ஆட்சேபித்திருக்கிறார். இந்த ஷரத்தின் நோக்கத்தை திரு.கிரிபித்ஸ் எவ்வாறு முற்றிலும் தவறாகப் புரிந்து கொண்டார் என்பதையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. இதில் அரசாங்கத்தின் நிலை என்னவென்றால்….

            திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: இங்கு ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த உப ஷரத்து (ஜி) பற்றி நான் குறிப்பிடவே இல்லை.

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: மதிப்பிற்குரிய உறுப்பினரை நான் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அதற்காக மிகவும் வருந்துகிறேன். மேலே கூறியபடி அவர் பேசியதாகத்தான் நான் எடுத்துக்கொண்டேன். நான் கூற விரும்புவதெல்லாம் இதுதான். இது விஷயத்தில் அரசாங்கத்தின் நிலை முற்றிலும் தெளிவாக இருக்கிறது. அதனை இரத்தினச் சுருக்கமாகக் கூற முடியும். 1941ல் எங்களுக்குத் தெரிவிக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையிலும், தொழிலாளர்களையும் முதலாளிகளையும் அரசாங்கத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பல்வேறு அமைப்புகள் எங்களுக்குத் தெரிவித்த கருத்துகளின் அடிப்படையிலும் அரசாங்கம் ஐயத்துக்கிடமற்ற ஒரு முடிவுக்கு வந்தது; அதாவது தான் விதித்துள்ள நிபந்தனைகள் போதுமானவை என்ற தீர்மானத்துக்கு அது வந்தது. எனினும் இது குறித்து பிடிவாதப் போக்கைக் கடைப்பிடிக்க அரசாங்க விரும்பவில்லை. அங்கீகாரம் அளிப்பதற்கு முன்னர் மாகாண அரசாங்கமோ அல்லது முதலாளிகளோ இந்த மசோதாவில் சில நிபந்தனைகளைச் சேர்ப்பது அவசியம் எனக் கருதக்கூடும் என்பதை அரசாங்கம் உணர்ந்துள்ளது. இவ்வகையான ஒரு நிலைமை ஏற்படலாம் என்பதைக் கருத்திற் கொண்டே இந்த ஷரத்து சேர்க்கப்பட்டிருக்கிறது; மேற்கொண்டு நிபந்தனைகளை விதிப்பதற்கு இந்த ஷரத்து வகை செய்கிறது. நாங்கள் பெறக்கூடிய எந்த ஆலோசனைகளையும், பரிந்துரைகளையும் இணைத்துக் கொள்வதற்காக இவ்வாறு செய்துள்ளோம். மற்றபடி பிரதிநிதித்துவத்தின் இயல்பு என்ன என்பதைப் பொறுத்த வரையில் இந்த மசோதா எவ்வகையிலும் நிச்சயமற்றதாகவோ, தெளிவற்றதாகவோ இல்லை என்பதை என்னால் நிச்சயமாகக் கூற முடியும்.

            திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: எனக்கு ஒரு விஷயம் தெரிய வேண்டும். புதிய ஷரத்து 28 (டி)யின் உபஷரத்தான (இ)ல் “அது பிரதிநிதித்துவம் வாய்ந்த தொழிற்சங்கமாக இருக்க வேண்டும்” என்று குறிப்பிடப் பட்டிருக்கிறது. இந்த வாசகத்தின் பொருளை அவைக்கு விளக்கிக் கூறுவீர்களா?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: பிரதிநிதித்துவம் வாய்ந்த தொழிற்சங்கம் என்று குழுமத்தால் சான்றிதழ் வழங்கப்பட்ட தொழிற்சங்கத்தை அது குறிக்கிறது.

            திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: சுயவிருப்பத்தின் பேரிலா?

                மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: குழுமம் ஒரு விசாரணையை மேற்கொள்ளும். இது பற்றி என் நண்பர் திரு.ஜோஷி அபிப்பிராயம் தெரிவிக்கும்போது, தனிப்பட்ட உறுப்பினர்களின் கருத்துகள் உட்பட எல்லாவிதமான தகவல்களையும் கோரிப் பெறுவதற்கு குழுமம் அதிகாரம் பெற்றிருக்கிறது என்று கூறினார்.

            திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: “பிரதிநிதித்துவம்” என்பதற்கு என்ன பொருள் என்பது குறித்து குழுமத்துக்கு ஏதேனும் வழிகாட்டுதலை அளிக்க வேண்டும் என்பது இதன் உத்தேசமா?

                மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அவ்வாறுதான் நினைக்கிறேன். எந்த விஷயம் குறித்து எவ்வகையான நெறிமுறைகளை குழுமத்துக்கு வழங்க தாங்கள் விரும்புகிறார்கள் என்பது பற்றி பல்வேறு தரப்பினரிடமிருந்து ஆலோசனைகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

            திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: ஆக, இந்த விஷயத்தில் நீங்கள் வெறுமையான மனத்தோடு இருக்கிறீர்கள்.

                மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: வெறுமையான மனமல்ல, திறந்த மனம்: எனவேதான் என் நிலையை சரி நுட்பமாக வரையறுத்துக் கொள்ள விரும்புகிறேன்.

            மசோதா பற்றி உரையாற்றிய திரு.கிரிபித்சும் ஏனைய உறுப்பினர்களும் ஒரு விஷயத்தைக் குறிப்பிட்டனர்: அதாவது ஷரத்து Jயைப் பயன்படுத்துவதில் இந்த மசோதாவின் செயற்பாட்டிலிருந்து அரசு தொழில் நிலையங்களுக்கு தவறான முறையில் அரசாங்கம் விதி விலக்கு அளித்துள்ளது என்று குற்றம் சாட்டினார்; அவர்களது சொற்களிலேயே கூறுவதானால், இது விஷயத்தில் அரசாங்கம் தருக்க முரணாக நடந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்டனர்.

            நல்லது, ஐயா, முதல் வாதத்துக்கு நான் அளிக்க விரும்பும் பதில் தருக்கவியல் எப்போதுமே வாழ்க்கையாக இருப்பதில்லை என்பதுதான். தருக்க முரண்பாடு நம்மை அதிதீவிரவாதத்தை நோக்கிப் பிடித்துத்தள்ளும் பல சந்தர்ப்பங்கள் உண்டு. தருக்க முரண்பாட்டுக்குப் பதில் அதிதீவிரவாதத்தை எந்த மனிதனும் விரும்புவான் என்று நான் நினைக்கவில்லை. ஷரத்து 28 (ஜே) யைப் பற்றி தனிப்பட்ட முறையில் நான் ஏதேனும் சொல்லுவதானால் அரசாங்கம் பயங்கொள்ளி அல்ல, அரசாங்கம் தருக்க முரணாக நடந்து கொள்ளவில்லை, அரசாங்கம் விவேகமாகவே செயல்படுகிறது, அரசாங்கம் எச்சரிக்கையாகவே இருக்கிறது என்றுதான் கூறுவேன். இந்த ஷரத்து ஓரளவு தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றே கருதுகிறேன். இந்த மசோதாவிலிருந்து அரசாங்கத்துக்கு விதிவிலக்கு அளிக்கும் உத்தேசம் ஏதுமில்லை. இந்த மசோதாவின் ஷரத்துகள் அரசாங்க நிறுவனங்கள் விஷயத்தில் எப்போது செயல்படுத்தப்படும் என்பதற்கு ஒரு தேதி நிர்ணயிக்கப்படும் என்றுதான் கூறப்பட்டிருக்கிறது, அவ்வளவுதான். எனவே, அரசாங்க நிறுவனங்கள் விஷயத்தில் ஏதேனும் சலுகை காட்டப்பட்டிருக்கிறது என்றால் அது இந்த மசோதாவின் ஷரத்துக்களை அவற்றின் விஷயத்தில் செயல்படுத்துவது சம்பந்தமானதல்ல, மாறாக அரசாங்க நிறுவனங்களுக்கு அவற்றை எந்தத் தேதியிலிருந்து செயல்படுத்துவது என்பது சம்பந்தப்பட்டதேயாகும்.

            திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்?

                மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: அதற்கு அவசியம் இருக்கக்கூடும்.

                திரு.பி.ஜே.கிரிபித்ஸ்: அப்படி என்ன அவசியம்?

            மாண்புமிகு டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்: நான் ஏற்கெனவே கூறியது போல் இந்தக் கட்டத்தில் நான் எத்தகைய சர்ச்சையிலும் ஈடுபட விரும்பவில்லை. ஊழியர்களை பணிக்கமர்த்திக் கொண்டிருக்கும் அரசாங்கம் இலாகாக்கள் அவர்களுடைய தொழிற் சங்கங்களை அங்கீகரிக்கப் போதிய ஏற்பாடுகளைச் செய்திருப்பதாக அஞ்சல் மற்றும் தந்தித் துறைச் செயலாளர் கூறியிருக்கிறார். தனியார் துறைகளைவிடத் தொழிற்சங்கங்களை அங்கீகரிக்க அரசாங்கம் தயாராக இருப்பதால் இந்த மசோதாவை அதன் விஷயத்தில் செயல்படுத்தும் தேதியைத் தள்ளிப்போடுவதன் காரணமாக ஊழியர்களின் நலன்கள் பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. ஐயா, இதற்கு மேல் நான் கூறுவதற்கு எதுவுமில்லை.

            திரு.தலைவர் (மாண்புமிகு சர் அப்துல் ரஹீம்): ஆக, பின்வருமாறு பிரரேபிக்கப்படுகிறது:

            “1926 ஆம் வருட இந்தியத் தொழிற்சங்கங்களின் சட்டத்தை மேலும் திருத்தக் கோரும் இந்த மசோதா பொதுமக்களின் கருத்தறிய சுற்றுக்கு விடப்படுகிறது.”

            பிரேரணை ஏற்கப்பட்டது.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It

(1.இந்திய தகவல் ஏடு, செப்டம்பர் 15, 1943, பக்கங்கள் 143-144)

            விரிவடைந்த தொழிலாளர் மாநாட்டின் முதல் கூட்டத்தொடர், செப்டம்பர் 6-ஆம் நாளன்று திங்கட்கிழமை புதுடில்லியில் நடைபெற்றது. வைசிராய் கவுன்சிலில் தொழிலாளர் நலத்துறை உறுப்பினராக (இப்பதவி அமைச்சர் பதவிக்கு சமமானது – மொழி பெயர்ப்பாளர்) பணியாற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இக்கூட்டத் தொடரில் சொற்பொழிவாற்றினார். அவரது உரையின் முழு வாசகம் வருமாறு:-

           ambedkar 266 இந்த விரிவடைந்த தொழிலாளர் மாநாட்டின் முதல் கூட்டத் தொடரில் கலந்து கொள்ளும் உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன். டில்லியில் நடைபெறவிருக்கும் ஒரு முத்தரப்பு தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்கும்படி மாகாண அரசாங்கங்கள் மற்றும் இந்திய சமஸ்தானங்களின் பிரதிநிதிகளுக்கும், அவ்வாறே தொழிலாளர் மற்றும் தொழிலதிபர்களின் பிரதிநிதிகளுக்கும் பதின்மூன்று மாதங்களுக்கு முன்னர் அதாவது சென்ற ஆண்டு ஆகஸ்டு 7-ஆம் தேதியன்று இந்திய அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது.

            நீண்டகாலமாகவே பின்வரும் கருத்து நிலவி வந்தது: அரசாங்கம், தொழிலாளர்கள், தொழிலதிபர்கள் ஆகிய முத்தரப்பினருமே பரஸ்பரம் ஒருவர்பால் ஒருவர் பொறுப்பு உணர்வை வளர்த்துக் கொள்ள வேண்டும்; ஒருவர் மற்றவர்களின் கருத்துகளுக்கு உரிய மதிப்பு அளிக்க வேண்டும்; ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுக்கும் மனோபாவத்தோடு செயலாற்ற வேண்டும்; இவ்வாறு செய்யவில்லை என்றால் தொழில்துறை சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும், தொழிலாளர் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கும் தீர்வு காண முடியாது என்ற கருத்து மேலோங்கி வந்தது. ஆனால் இந்த முத்தரப்பினருமே ஒன்றுகூடி மனம் விட்டுப் பேசினாலொழிய இத்தகைய பொறுப்பு உணர்வும் பரஸ்பர மரியாதை உணர்வும் வளர்ந்தோங்குவதற்கு அதிக வாய்ப்பு இல்லை. எனவே, இந்த நோக்கத்தோடு இவர்களை ஒன்றுகூடச் செய்வதும், அவர்கள் தத்தமது பிரச்சினைகளை முன்வைத்து விவாதிக்கச் செய்வதும் அவசியம் என்பது உணரப்பட்டது.

            இத்தகைய ஒரு முத்தரப்பு அமைப்பை உருவாக்கும் யோசனை நீண்ட காலமாகவே இருந்து வந்தபோதிலும், தொழிலாளர்களின் மன உறுதியையும், உத்வேகத்தையும், விடா முயற்சியையும் வளர்த்து வலுப்படுத்துவதை யுத்தம் அவசர அவசியமாக்கி இருக்கவில்லை என்றால், இந்த யோசனை இவ்வளவு விரைவில், இத்தனை துரித கதியில் ஸ்தூல வடிவம் பெற்றிருக்குமா என்பது ஐயமே. முத்தரப்பு அமைப்பை உருவாக்கும் பணியை யுத்தம் மற்றொரு வகையிலும் துரிதப்படுத்திற்று.

துணிகரமான கொள்கை

          போரின் தாக்கம் காரணமாக, தொழில்துறைப் பிரச்சினைகளிலும், தொழிலாளர் நலப் பிரச்சினைகளிலும் மிகப் பெருமளவில் அக்கறையும் கவனமும் செலுத்தும்படியான அவசரம் இந்திய அரசாங்கத்துக்கு ஏற்பட்டது. இவ்வகையில் மிகவும் துணிகரமான நடவடிக்கை எடுத்துக்கொள்ள அரசாங்கம் எவ்வகையிலும் தயக்கமோ மயக்கமோ காட்டவில்லை என்பதை மகிழ்ச்சியோடு கூறிக்கொள்கிறேன்.

            தேர்ச்சி பெறாத தொழிலாளர்களைத் தேர்ச்சி பெற்ற தொழிலாளர்களாக ஆக்கும் பணியை அரசாங்கம் மேற்கொண்டது. அவர்களுக்கு தேர்ந்த, சிறந்த தொழில் பயிற்சி அளித்தும், எண்ணற்ற தொழில் பயிற்சிப் பள்ளிகளை உருவாக்கியும் இப்பணியை சிறப்புற ஆற்றிற்று.

            தற்போதைய தொழிலாளர் சட்டத்தில் அது இரண்டு புதிய கோட்பாடுகளை அறிமுகப்படுத்திற்று. இவை இரண்டுமே மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவை; வழக்கமான பாரம்பரியத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டவை, மாறுபட்டவை.

            நியாயமான ஊதியங்களையும் நேரிய வேலை நிலைமைகளையும் வகுத்துத் தரும் உரிமையை தனது கடமையாகவும் பொறுப்பாகவும் அது ஏற்றுக்கொண்டுள்ளது.

            தங்களுக்கு இடையே உள்ள தகராறுகளை மத்தியஸ்துக்கு விடும்படி தொழிலாளர்களையும் தொழிலதிபர்களையும் நிர்ப்பந்திப்பதை தனது கடப்பாடாகவும் பொறுப்பாகவும் அது வரித்துக் கொண்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், தொழிலாளர்களின் சேமநலனை உத்தரவாதம் செய்யும் பொறுப்பினையும் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. தொழிலாளர்களின் நல்வாழ்வுக்காக என்ன செய்ய வேண்டும் என்று ஆணைகள் பிறப்பிப்பதோடு அரசாங்கம் நின்று கொள்ளப்போவதில்லை; அந்த ஆணைகள் முறையாக, சரிவர நிறைவேற்றப்படுகின்றனவா என்பதைக் கண்காணிப்பதற்கு ஓர் அமைப்பையும் அது நியமிக்க இருக்கிறது.

            இந்த துணிகரமான கொள்கையை தனது சொந்த முயற்சியின் பேரிலும், மதிப்பீட்டின் பேரிலும், பகுத்தாய்வின் பேரிலுமே இந்திய அரசாங்கம் வகுத்துக் கொண்டிருக்கிறது. எனினும் ஒரு விஷயம்; தன்மீது சார்ந்துள்ள இந்தப் புதிய கடமைகளை, பொறுப்புகளை உறுதியோடு, தன்னம்பிக்கையோடு நிறைவேற்றுவதற்கு மாகாண அரசாங்கங்கள், தொழிலாளர்கள், தொழிலதிபர்களின் ஆலோசனையைப் பெறுவது உகந்ததாக இருக்குமே என்று அரசாங்கம் உணர்ந்தது; இதன் பொருட்டு ஓர் அமைப்பைத் தோற்றுவிப்பது அரசாங்கத்தின் தொழிலாளர் கொள்கை மேம்படவும் சிறக்கவும் துணைபுரியும் என்றும் அது கருதிற்று.

இரண்டு அமைப்புகள் உதயம்

          இந்த இரட்டை நோக்கத்துக்காகவே முத்தரப்பு தொழிலாளர் மாநாடு கூட்டப்பட்டது. தொழிலாளர் நலம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை அவற்றின் சட்ட மற்றும் நிர்வாக அம்சங்களின் பகைப்புலனில் விவாதிப்பதற்கும், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணுவதில் மிகவும் திருப்திகரமான நடவடிக்கைகள் எடுத்துக்கொள்வது சம்பந்தமாக இந்திய அரசாங்கத்துக்கு தக்க ஆலோசனை கூறுவதற்கும் ஒரு நிரந்தரமான, பிரதிநிதித்துவம் வாய்ந்த அமைப்பினை உருவாக்குவதற்கு காலம் கனியவில்லையா என்பதை ஆழ்ந்து பரிசீலித்து உகந்த முடிவை எடுக்குமாறு மாநாடு கேட்டுக்கொள்ளப்பட்டது. அப்போது அங்கு குழுமியிருந்த பிரதிநிதிகள் இந்த யோசனையை ஏகமனதாக, முழுமனதோடு ஏற்றுக்கொண்டனர்; இது சம்பந்தமாக இரு அமைப்புகளை உருவாக்கவும் தீர்மானித்தனர். இவற்றில் ஒர் அமைப்பு பெரியது; அது விரிவடைந்த தொழிலாளர் மாநாடு என்று அழைக்கப்பட்டது. மற்ற அமைப்பு சிறிது; தொழிலாளர் நிலைக்குழு என்பது அதன் பெயர்.

            யுத்த நிலைமைகளே முத்தரப்பு தொழிலாளர் மாநாடு கருவாகி உருவாவதற்கு அடிப்படைக் காரணமாகும். எனினும் யுத்தம் முடிந்த பிறகும் இது நீடிக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டின் பொருளாதாரக் கட்டமைப்பில் ஒரு நிலையான, நிரந்தரமான இடம் வகிக்கும் ஓர் அமைப்பாக அது திகழப்போகிறது.

            தொழில் துறைப் பிரச்சினைகளையும் தொழிலாளர் பிரச்சினைகளையும் பற்றி விவாதிப்பதற்கு இத்தகைய ஒரு பிரதிநிதித்துவம் வாய்ந்த அமைப்பை உருவாக்குவது சம்பந்தமாக மேற்கொண்ட முடிவு மிகவும் விவேகமானது என்பதில் எவருக்கும் ஐயம் இருக்க முடியாது. கடந்த 13 மாதங்களாக நடைபெற்றுள்ள பணியை ஆய்வுசெய்தாலே இத்தகைய ஐயமெல்லாம் பறந்தோடி விடும் என்பது திண்ணம்.

            இந்த இரு அமைப்புகளும் 1942 ஆகஸ்டு 7-ஆம் தேதி தோன்றின. அதற்குப் பிறகு இதுவரை தொழிலாளர் நிலைக்குழு மூன்று முறை கூடியுள்ளது. முதல் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் பின்கண்ட விஷயங்கள் இடம்பெற்றிருந்தன: யுத்தகால தொழிலாளர் சட்டங்கள், அனுமதியின்றித் தொழிலாளர்கள் வேலைக்கு வராமல் இருத்தல், தொழில் தகராறுகள், வேலைநேரம், மிகை உழைப்பால் தொழிலாளர்கள் சோர்வடைதல், சுகாதார ஆராய்ச்சி வாரியங்கள், உழைப்பாளர்களின் ஊதியங்கள், அகவிலைப்படி, ஆதாயப்பங்கு ஊதியங்கள், சேமிப்புகள், ஆக்கநல நடவடிக்கைகள், அடக்கவிலை தானிய விற்பனைக் கடைகள், ஏ.ஆர்.பி.க்கும் சேமநலப்பணிக்கும் கூட்டுக் குழு அமைத்தல், சில்லறை நாணயங்கள் பற்றாக்குறை ஏற்படும்போது ஊதியங்கள் வழங்குவதை பின்னமில்லாமல் முழுமையாக்குதல் முதலியவை.

            இரண்டாவது கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் பின்கண்ட விஷயங்களைக் கொண்டதாக இருந்தது: தொழிலாளர்களுக்கு அத்தியாவசியப் பொருள்கள் வழங்கீடு, இந்தியப் பாதுகாப்பு விதி 81-ஏ.யின் படி கட்டாய மத்தியஸ்த தீர்ப்பு, குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு அளிக்கப்படும் போனசுகள்.

            மூன்றாவது கூட்டத்தில் பின்கண்ட விஷயங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன: நியாயமான கூலியை உத்தரவாதம் செய்யும் ஒரு விதியை அரசாங்க ஒப்பந்தங்களில் சேர்த்தல், கூட்டு உற்பத்திக் குழுக்களை அமைத்தல், தொழில் நிறுவனங்களில் தொழிலாளர் நல அதிகாரிகளை நியமித்தல், இந்தியப் பாதுகாப்பு விதி 81-83 முறையாக செயல்படும்படிப் பார்த்துக் கொள்ளுதல், வேலை வாய்ப்பு நிலையங்களை நிறுவுதல், தொழில்துறை புள்ளி விவரத் தொகுப்புச் சட்டத்தின்படி புள்ளி விவரங்களைச் சேகரித்தல் முதலியவை.

            தொழிலாளர் நிலைக் குழுவில் எவ்விதம் மிகப் பல்வேறுபட்ட விஷயங்கள் விரிவாக விவாதிக்கப்பட்டன என்பதை இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம். எனினும் இவ்வாறு விவாதிக்கப் பட்ட பல விஷயங்களில் ஒருமனதாக முடிவுக்கு வருவது சாத்தியமில்லாது போயிற்று.

மிகவும் பயனுள்ளவை

            ஆயினும் இந்த விவாதங்கள் மிகவும் பயனுள்ளவையாக அமைந்திருந்தன; இவற்றால் இந்திய அரசாங்கம் பெரிதும் அனுகூலமடைந்தது. விவாதிக்கப்பட்ட பெரும்பாலான விஷயங்களில் ஒருமித்த கருத்து நிலவாததன் காரணமாக அவற்றின் மீது இந்திய அரசாங்கம் ஆக்கபூர்வமான நடவடிக்கை ஏதும் எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனால் ஒருமித்த கருத்து நிலவிய முடிவுகளை ஏற்றுக்கொள்வதிலோ, அவற்றை நடைமுறைப்படுத்துவதிலோ இந்திய அரசாங்கம் எத்தகைய தயக்கத்தையும் மெத்தனப்போக்கையும் கடைப்பிடிக்கவில்லை. போரில் காயமடைவோர்களுக்கு நஷ்டஈடு தரும் சட்டத்தையும், தேசிய சேவை (தொழில்நுட்ப ஊழியர் திருத்த) அவசர சட்டத்தையும் இதற்குச் சான்றாகக் கூறலாம். இதல்லாமல், தொழில்துறைப் புள்ளிவிவரச் சட்டத்தையும், வேலை வாய்ப்பு நிலையங்களை அமைக்கும் திட்டத்தையும் இவ்வகையில் மேலும் உதாரணமாக சொல்லலாம். இவ்விரண்டு விஷயங்களிலும் மாநாட்டின் முடிவுகளுக்கே இணங்க விரைவிலேயே உரிய நடவடிக்கைகள் எடுத்துக்கொள்ளப்படும். 

கண்ணோட்டத்தில் அடிப்படை மாற்றம்

            இந்த முன்னேற்றம் பலருக்கு அற்பமானதாகத் தோன்றக்கூடும். அவர்களது இந்த நோக்கும் போக்கும் தவறானது என்று அவர்களுக்கு எடுத்துக்காட்ட விரும்புகிறேன். முன்னேற்றத்துக்குக் குறுக்குப் பாதைகள் எவையும் இல்லை, அப்படியே குறுக்குப் பாதைகள் இருந்தாலும் அவை சரியானவையாக இருக்கும் என்று கூற முடியாது. அமைதியான முறையில் முன்னேற்றம் காண்பது எப்போதும் மெதுவான இயக்க நிகழ்வாகவே இருக்கும்; அதிலும் என் போன்ற அவசரக்குடுக்கைகளுக்கு இந்த மெதுவான முன்னேற்றம் சில சமயங்களில் ஓரளவு வேதனை அளிப்பதாகவே இருக்கும். கூட்டு நடவடிக்கை மேற்கொள்ளும் பாரம்பரியமோ, சமூக உணர்வோ இல்லாத இந்தியா போன்ற ஒரு பண்டைய நாட்டில் முன்னேற்றம் மெதுவாக இருப்பது முற்றிலும் இயல்பே. இது குறித்து எவரும் சோர்வடைய வேண்டியதில்லை. ஏனென்றால் எனது அபிப்பிராயத்தில் கண்ணோட்டத்தின் இயல்புதான் முக்கியமானதே தவிர முன்னேற்றத்தின் வேகம் முக்கியமானதல்ல.

            இந்த நோக்கில் பார்க்கும்போது, தொழிலாளர் பிரச்சினைகள் சம்பந்தமாக அரசாங்கம், தொழிலதிபர்கள், ஊழியர்கள் ஆகியோரின் கண்ணோட்டத்தில் அடிப்படையான மாற்றத்தைத் தோற்றுவித்திருப்பதை இந்த முத்தரப்பு மாநாடு புரிந்துள்ள மகத்தான சாதனை என்று கூறுவதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. இந்த மாநாடுகளில் பங்கு கொண்ட எவருமே இத்தகைய உணர்வைப் பெறாமல் இருக்க முடியாது. நமது கண்ணோட்டத்தில் இவ்விதம் ஆரோக்கியமான, அடிப்படையான மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலைமையில், நமது முன்னேற்றத்தின் வேகத்தைத் தீவிரப்படுத்த முடியும் என்று நாம் உறுதியாக நம்பலாம்.

நிகழ்ச்சி நிரல்

          இந்த விரிவடைந்த தொழிலாளர் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் எட்டு விஷயங்கள் அடங்கியுள்ளன. அவை வருமாறு:

 • நிலக்கரி, மூலப்பொருள்கள் போன்றவற்றின் பற்றாக்குறைகாரணமாக தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்தல்
 • சமூகப் பாதுகாப்பு; குறைந்தபட்ச ஊதியம்.
 • அகவிலைப்படியை நிர்ணயிக்கும் கோட்பாடுகள்.
 • பெரிய தொழில் நிலையங்கள் சம்பந்தமாக பம்பாய் தொழில் தகராறுகள் சட்டம் இயல் V ல் இடம் பெற்றுள்ள விதிகளின் அடிப்படையில் நிலை ஆணைகள் பிறப்பிக்க வழிவகை செய்தல்.
 • விரிவடைந்த மாநாடுக்கான நடைமுறை விதிகளை வகுத்தல்.
 • மாகாணங்களில் முத்தரப்பு அமைப்புகளை நிறுவுதல்.
 • சட்டமன்றங்களிலும் ஏனைய அமைப்புகளிலும் தொழிலாளர்களுக்குப் பிரதிநிதித்துவம் அளித்தல்.
 • சேம நிதிக்கான முன்மாதிரியான விதிகள்.

இவற்றில் இரண்டு விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகும்; இவற்றை நீங்கள் கவனித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். சமூகப்பாதுகாப்பையும் தொழிலாளர் பிரதிநிதித்துவத்தையும்தான் இங்கு குறிப்பிடுகிறேன். இவை பிரிக்க முடியாதபடி ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தவை. இன்னும் சொல்லப் போனால் இவை தவிர்க்க வொண்ணாதவை என்பதுதான் இவற்றின் தனிச் சிறப்பு எனக் கூற வேண்டும். இந்த இரண்டு விஷயங்களும் உலகெங்கும் ஆழ்ந்து ஆய்ந்து பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. உலகம் முழுவதிலும் இவை மிகுந்த ஆர்வத்தையும் அக்கறையையும் கிளர்த்தி விட்டிருக்கின்றன என்பதற்கு பீவரிட்ஜ் அறிக்கை ஒரு நிதர்சன சான்றாக அமைந்துள்ளது. இவ்வாறிருக்கும்போது இந்தியாவிலுள்ள நாம் இவற்றைப் பற்றிக் கண்களை மூடிக்கொண்டு இருக்க முடியாது; அலட்சியமாக, பாராமுகமாக இருந்துவிட முடியாது. இவை சம்பந்தமாக நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும், இவை விஷயத்தில் எத்தகைய போக்கை மேற்கொள்வது உசிதமானதாக, உகந்ததாக இருக்கும் என்று நான் உங்களுக்குச் சொல்ல வேண்டியதில்லை. ஆனால் இந்தப் பிரச்சினைகளுடன் நெருங்கிய சம்பந்தமுடைய இரண்டு கருத்துகளைக் கூறுவதற்கு என்னை அனுமதிப்பீர்கள் என்று நம்புகிறேன். இவற்றில் முதல் கருத்து வருமாறு:

இரு முரண்பாடுகள்

முதலாளித்துவத் தொழில்துறை அமைப்பிலும், நாடாளுமன்ற ஜனநாயகம் எனப்படும் அரசியல் அமைப்பிலும் வாழ்ந்து வருபவர்கள் தமது அமைப்புகள் இரண்டு முரண்பாடுகளைக் கொண்டுள்ளன என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். மலைமலையாகக் குவிந்துள்ள செல்வத்துக்கும் பிணந்தின்னிக் கழுகுகளைப் போல் கொத்தியெடுக்கும் கோர வறுமைக்கும் இடையே உள்ள படுபாதாளம் முதல் முரண்பாடாகும். அதிலும் இந்த முரண்பாடு சாதாரணமானதல்ல; மிகவும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள முரண்பாடாகும். இதன் விபரீத விளைவாக இன்று நாம் என்ன பார்க்கிறோம்? ஒரு சொட்டு வியர்வைக் கூடச் சிந்தி உழைக்காமல் உல்லாசபுரியில் வாழ்பவர்கள் கோடீஸ்வரக் கோமான்களாக இருப்பதையும் அதேசமயம் நெற்றி வியர்வை நிலத்தை நனைக்க மாடாக உழைத்து ஓடாகத் தேய்பவர்கள் கொடிதினும் கொடிதான வறுமையில் வாடுவதையும் காண்கிறோம்.

இனி அடுத்து, இரண்டாவது முரண்பாடு அரசியல், பொருளாதார அமைப்புகளுக்கிடையே பொதிந்துள்ளது. அது என்ன? அரசியலில் சமத்துவம்; பொருளாதாரத்திலோ அசமத்துவம், ஒருவருக்கு ஒரு வாக்கு, ஒரு வாக்குக்கு ஒரே மதிப்பு – இது நமது அரசியல் கோட்பாடு. ஆனால் பொருளாதாரத்தில் நமது கோட்பாடு நமது அரசியல் கோட்பாட்டையே மறுதலிப்பதாகும், உதாசீனம் செய்வதாகும். இந்த முரண்பாடுகளைக் களையும் விஷயத்தில் கருத்து வேறுபாடு இருக்கக்கூடும். ஆனால் இந்தக் கொடிய முரண்பாடுகள் இருந்து வருகின்றன என்பதில் கருத்து வேறுபாட்டுக்கு எள்ளளவும் இடமில்லை.

இந்த முரண்பாடுகள் கண்ணை உறுத்தும்படியாக, முனைப்பானவையாக இருந்தபோதிலும், கடந்த காலத்தில் பெரும்பான்மையான மக்கள் இந்தக் கொடுமையை, அவலத்தைக் கவனிக்காமல் விட்டுவிட்டனர். ஆனால் இன்று நிலைமை அடியோடு மாறிவிட்டது. மிகவும் கூரறிவு படைத்தவர்களே முன்னர் ஏனோதானோ என்று நோக்கிய இந்த முரண்பாடுகள் இப்போது மிகவும் மந்தமான, மழுங்கலானவர்களுக்கே வெட்டவெளிச்சமாகி விட்டன.

இரண்டாவதாக நான் கூறவிரும்பும் கருத்து இதுதான். சமூக வாழ்க்கைக்கான அடித்தளமானது அந்தஸ்திலிருந்து தொழில் ஒப்பந்தத்துக்கு மாறியதிலிருந்தே வாழ்க்கையின் பாதுகாப்பு இன்மை ஒரு சமூகப் பிரச்சினையாகி விட்டது; மனித வாழ்வின் உய்வில், உயர்வில், மேம்பாட்டில் நம்பிக்கை கொண்ட அனைவரது சிந்தனைகளுமே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காணுவதில் ஈடுபட்டு கொண்டன. மனிதனுக்குள்ள உரிமைகளையும் அவனுக்குள்ள பல்வேறு சுதந்திரங்களையும் நிர்ணயித்துக் கூறுவதற்கு மிகப்பெரும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது; இவை யாவும் அவனுடைய பிறப்புரிமையாகக் கருதப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. மிக மிக நல்லது. இவற்றைப் பற்றி எல்லாம் அறியவரும்போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது; உள்ளம் உவகை அடைகிறது. ஆனால் இங்கு ஒரு முக்கிய விஷயத்தைக் குறிப்பிட்டுக் கூற விரும்புகிறேன்; பசிபிக் உறவுகள் மாநாட்டின் பொருளாதாரக் குழுவின் அறிக்கையில் சுட்டிக்காட்டியிருப்பது போல், இந்த உரிமைகள் எல்லாம் சாமானிய மனிதனுக்கு அமைதியான வாழ்க்கையாக , குடியிருக்கும் இல்லமாக, உடுத்தும் உடையாக, கல்வி வசதியாக, ஆரோக்கியமாக உருவெடுக்க வேண்டும்; எல்லாவற்றுக்கும் மேலாக உலகின் அகல்பெரும் நெடுஞ்சாலைகளில் தட்டுத் தடுமாறி விழுவோம் என்ற அச்சமின்றி, தலை உயர்த்தி, நெஞ்சு நிமிர்த்தி, கம்பீரமாக நடைபோடும் உரிமை அவனுக்கு இருக்க வேண்டும். இவை எல்லாம் இல்லை என்றால் சமூகப் பந்தோபஸ்து என்பது முற்றிலும் அர்த்தமற்றதாக, வெறும் ஏட்டுச் சுரைக்காயாகவே இருக்கும்.

விழுமிய வாழ்க்கைக்கு

இந்தியாவிலுள்ள நாம் இந்தப் பிரச்சினைகள் இருந்து வருவதை உணரத் தவறுவதோ அல்லது உதாசீனம் செய்வதோ கூடாது. நிலைமைகளை மறுமதிப்பீடு செய்யத் தயாராக இருக்க வேண்டும். இந்தியாவின் தொழில் வளர்ச்சியை நமது குறிக்கோளாகக் கொண்டிருப்பது மட்டும் போதாது. இத்தகைய எந்தத் தொழில் வளர்ச்சியும் சமூக ரீதியில் விரும்பத்தக்க அளவிலேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தியாவில் மேன்மேலும் அதிகமான செல்வத்தை உற்பத்தி செய்து குவிப்பதில் நமது ஆற்றல்களை, முயற்சிகளை ஒருமுகப்படுத்துவது மட்டும் போதாது. அனைத்து இந்தியர்களுக்கும் இந்த செல்வத்தில் பங்கு கொள்ள உரிமை உண்டு என்பதை நாம் ஏற்க வேண்டும். அப்போதுதான் அவர்கள் தகைமை மிக்க, ஏற்றமிகு வாழ்க்கை வாழ்வது சாத்தியமாகும். மேலும், அவர்களுக்குப் பாதுகாப்பற்ற அவல நிலைமை ஏற்பட்டு விடாதபடி தடுப்பதற்கான வழிவகைகளையும் நாம் காண வேண்டும்.

என் உரையை முடிப்பதற்கு முன்னர் ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். நமது கூட்டங்களில் நடைபெறும் விவாதங்கள் சில சமயங்களில் சுற்றி வளைத்துச் செல்லுபவையாகவும் காரியார்த்த ரீதியற்றவையாகவும் அமைந்து விடுகின்றன.

இந்த விஷயத்தில் எவர் மீதும் குற்றம் சாட்டும் எண்ணம் ஏதும் எனக்கு இல்லை. எனினும் இரத்தினச் சுருக்கமாகப் பேசுமாறும், சொல்லவந்த விஷயத்தை நறுக்குத் தெறுக்காக எடுத்துரைக்குமாறும் பிரதிநிதிகளைக் கேட்டுக் கொள்கிறேன். எந்த ஒரு பிரதிநிதியும் விவாதத்தில் பங்கு கொள்வதைக் கட்டுப்படுத்தும் உத்தேசம் எதுவும் எனக்கு இல்லை. ஒவ்வொரு பிரதிநிதியின் கருத்தையும் நாம் தெரிந்து கொள்வது அவசியம். அவர் தமது கருத்தை தெரிவிப்பதை நாம் வரவேற்போம். ஆனால் அவர் நீண்ட, விரிவான தர்க்க நியாயங்களுடனும் வாத ஆதாரங்களுடனும் பேச வேண்டும் என்பதில்லை. அவர் முன்வைக்கும் வாதம் மனத்தில் படும்படியாக, தெள்ளத் தெளிவாக இருக்க வேண்டும். நமது மாநாட்டு நடவடிக்கைகள் முற்றிலும் காரியார்த்த ரீதியில் அமைந்திருக்க வேண்டும் என்று என்னைப் போலவே நீங்களும் விரும்புவீர்கள் என்று நம்புகிறேன். காமன்ஸ் சபைக்கு எதிராக கார்லைல் சாட்டியது போன்ற குற்றச்சாட்டுக்கு ஆளாகிவிடாதபடி நாம் பார்த்துக் கொள்ள வேண்டும்.

(டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் : பேச்சும் எழுத்தும் நூல் தொகுப்பு, தொகுதி 18)

Pin It